(Reading time: 20 - 39 minutes)

02. சிறகுகள் - பாலா

தேன்மொழி புத்தகத்தில் ஆழ்ந்து இருந்த சிறிது நேரத்திலேயே ஒருவர் ஒருவராக வர ஆரம்பித்தார்கள்.

முதலில் வந்தது தௌலத் தான். முழு பெயர் தௌலத்துனிஷா. நாற்பது வயது மதிக்கத் தக்கவர்.

Siragugal

அங்கு அவர் எகனாமிக்ஸ் எடுப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டு நன்றாக பேச ஆரம்பித்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் ஏதோ நெருங்கிய தோழி போல பேச ஆரம்பித்து விட்டார்.

தேன்மொழிக்கே கூட ஆச்சரியம் தான். அவள் இவ்வளவு சீக்கிரத்தில் யாரிடமும் இந்த அளவுக்கு நெருங்கி பேசியதில்லை. ஆனால் தௌலத் அதற்கு விதி விளக்காக அவளிடம் நெருங்கி விட்டார்.

அவளுக்கு அந்த இன்ஸ்டிடியூட் பற்றியும், தேர்வு பற்றியும் அவளுக்கு எடுத்துக் கூறினார்.

சிறிது நேரம் கழித்து, “எனக்கு உன்னை பார்த்தா ரொம்ப ஆச்சரியமா இருக்கு. நீயே ஏதோ ஸ்டுடென்ட் மாதிரி இருக்க. என்னடான்னா நீ கிளாஸ் எடுக்க போற” என்று சிரித்தார்.

தேன்மொழி புன்னகைத்தவாறு அமைதியாக இருந்தாள்.

தௌலத்திற்கு போனில் அழைப்பு வர அவர் வெளியில் சென்று பேச ஆரம்பித்தார்.

தேன்மொழியின் பார்வை கௌதமிடம் சென்றது. தௌலத், கௌதம் இருவரை பற்றியும் மனதில் எண்ணிக் கொண்டிருந்தாள்.

ஒருவரோ ஆற்று வெள்ளம் போல பேசிக் கொண்டிருக்க, ஒருவனோ வாய் திறக்க கூலி கேட்பவனை போல அமைதியாக இருந்தான்.

காதில் ஹெட் செட் இருக்க அவன் தீவிரமாக கேட்டுக் கொண்டிருந்தான். நிச்சயமாக இவன் ஏதோ பாட்டை கேட்டுக் கொண்டிருக்கவில்லை என்று தோன்றியது தேன்மொழிக்கு. பாடல் கேட்டுக் கொண்டிருப்பவனின் முகம் இப்படி இருக்காது என்று எண்ணிக் கொண்டாள்.

அவனின் செய்கை அவளை திரும்ப திரும்ப குழப்பிக் கொண்டிருக்க, ஆனால் அவனை பற்றி தவறாகவும் ஏதும் எண்ண இயலவில்லை.

தலையை உலுக்கியவாறு இந்த சிந்தனை தேவை இல்லாதது என்று எண்ணியவாறு திரும்ப, அதற்குள் தௌலத் வந்தார்.

அவருடனே வேறு ஒரு பெண்ணும் வந்தார். தௌலத் அவரை ஜமுனா என்று தேன்மொழிக்கு அறிமுகப் படுத்தி வைத்தார்.

ஜமுனாவும் நன்றாக பேச ஆரம்பித்தார். இருவரும் சேர்ந்து அவளுக்கு மேலும் பல அறிவுரைகளை வழங்கினர். இதற்கு முன்பு கல்லூரியில் வேலை பார்த்ததால் இது போன்று ஒரு இன்ஸ்டிட்யூட்டை பற்றி தெரிந்துக் கொள்ள அவளுக்கும் நிறைய இருந்தது.

ஜமுனா “என்ன கௌதம் சார். ரொம்ப பிஸி போல” என்று ஆரம்பித்தாள்.

ஹெட் செட்டை எடுத்து விட்டு அவர் புறம் திரும்பியவன் “என்ன மேடம் இன்னைக்கு யாரும் கிடைக்கலையா, நான் தானா” என்று சிரித்தான்.

“என்ன சார். இப்படி சொல்றீங்க. அதுவும் என்ன போய்.” என்று சோகமாக ஜமுனா இழுக்கவும் கௌதம் நன்றாக சிரித்தான்.

“என்ன சார். இப்படி சிரிக்கறீங்க. என்னை போய் எப்படி சார் நீங்க இப்படி கிண்டல் செய்யலாம். நீங்களே சொல்லுங்க மேடம்” என்று பிரச்சனையை தௌலத்திடம் எடுத்து சென்றாள்.

அவரும் சிரித்தவாறே இருவரையும் ஏதோ சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தார்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழிக்கு தான் எல்லாம் ஆச்சரியமாக இருந்தது. இது வரை ஸ்டுடென்ட்ஸ் போட்ட சண்டைகளை தான் அவள் பார்த்திருக்கிறாள்.

அவள் கல்லூரியில் லெக்சரர் எல்லோரும் ஓரளவு நன்றாக பேசிக் கொள்வார்கள் என்றாலும் இவர்களை போல ஏதோ பாமிலியை போல பேசிக் கொள்ள மாட்டார்கள். அதனால் அவளுக்கு இதெல்லாம் ஒரே வியப்பாக இருந்தது.

தேன்மொழிக்கு இங்கு தனக்கு ஒரு புதிய அனுபவம் காத்திருப்பதாக தோன்றியது.

இவளின் எண்ண ஓட்டங்கள் முடிந்திருக்க அதற்குள் அங்கும் ஓரளவுக்கு சமாதானம் ஆகி இருந்தார்கள்.

கடைசியில் கௌதம் “பார்த்து தௌலத் அக்கா. ஜமுனா பேசியே புதுசா வந்தவங்களை பயமுறுத்திட போறாங்க” எனவும்,

திரும்ப ஜமுனா ஒரு சண்டைக்கு ஆயத்தமானாள்.

ஆனால் அதற்குள் அங்கு கௌஷிக் வந்து கௌதமை காப்பாற்றினான்.

“என்ன இங்கே ஒரே சத்தமா இருக்கு” என்று சொல்லிக் கொண்டே வந்த கௌஷிக் “ஓ ஜமுனா நீ வந்துட்டியா. உன் லீவ் முடிஞ்சிடுச்சா. அதான் ஒரே சத்தமா இருக்கு” என்றான்.

“உன்னை” என்று ஜமுனா பேசுவதற்குள், “இப்ப எந்த பைட்ஸும் வேண்டாம். எனக்கு நிறைய வொர்க் இருக்கு” என்றான்.

தேன்மொழி ‘என்னடா நடக்குது இங்க’ என்ற ரேன்ஜ்க்கு இதை எல்லாம் விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளை பார்த்து சிரித்த தௌலத் “என்னம்மா அப்படி பார்க்கிற, என்னடா இவ இப்படி பேசறாளேன்னா. அது ஒன்னும் இல்லை. நம்ம ஜமுனா, கௌஷிக் எல்லாம் ஒன்னா படிச்சவங்க. அதான்” என்றான்.

கௌஷிக் அவளை பார்த்து புன்னகைத்தவாறே “அப்படி இல்லன்னா கூட அப்படி ஒன்னும் பெருசா டிபரன்ஸ் இருந்திருக்காது” என்றான்.

ஜமுனாவோ முறைக்க, கௌஷிக் அதை கண்டு கொள்ளாமல் தேன்மொழியிடம் “நீங்க என் கூட வாங்க. உங்களுக்கு நான் எல்லா டீடைல்ஸும் சொல்றேன், செகண்ட் கிளாஸ் நீங்க எடுக்க வேண்டி இருக்கும்” என்றான்.

அவளும் தலை அசைத்தவாறு அவன் பின்பு சென்றாள்.

இருவரும் கதவருகில் சென்றவுடன் கௌதம் “ஹே கௌஷிக், யூ சேவ்ட் மீ மேன்” என்றான்.

“தெரியும் தெரியும்” என்றவாறே அவன் செல்ல, திரும்ப ஜமுனா கௌதமை திட்டும் சத்தம் அவர்களை தொடர்ந்தது.

தேன்மொழி கிளாஸ் எடுக்க ஆரம்பித்தவுடன் வகுப்பே அமைதியாகி விட்டது. அவள் பாடத்தை கொண்டு போன விதமும், அதை விவரித்த விதமும் எல்லோரையும் கவர்ந்தது. அதிலும் இடையிடையில் பொதுவான விசயங்களையும் பேசி மாணவர்களையும் அதில் பேச வைத்து ஒரு வழியாக வகுப்பை உயிரோட்டமாக கொண்டு சென்றாள்.

இடை இடையில் அங்கு வேலை செய்யும் அனைவருமே வந்து வகுப்பை கவனிக்க ஆரம்பித்தனர் கௌஷிக் உட்பட.

ஆனால் தேன்மொழியோ எதையும் கண்டு கொள்ளாமல் பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தாள்.

அவள் கிளாஸ் எடுத்து முடித்த பின்பு “யாருக்கும் ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க. நான் கிளாஸ் எடுக்கறதுல ஏதாச்சும் சேன்ஜ் பண்ணணும்னாலும் சொல்லுங்க. மத்தவங்க லஞ்ச் பிரேக்கு போகலாம்” என்றாள்.

நிறைய மாணவர்கள் அவளை சுற்றி நின்று அவளுக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டும், அவள் நடத்தியதை தாங்கள் ஏற்கனவே படித்துள்ளோம், ஆனால் நீங்கள் அதில் இன்னும் நிறைய இன்பார்மேஷன் கூறினீர்கள் என்றும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

தேன்மொழி ஸ்டாப் ரூமிற்கு செல்ல, அங்கு ஜமுனா, தௌலத், கௌசிக், இன்னும் சிலர் நின்றுக் கொண்டு, காங்கிராட்ஸ் என்றார்கள்.

தேன்மொழியோ வியப்பாக பார்க்க “நீங்க கலக்கிட்டீங்க மேடம். அதான் காங்கிராட்ஸ்” என்றாள் ஜமுனா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.