(Reading time: 23 - 45 minutes)

17. நினைத்தாலே  இனிக்கும்... - பாலா

ல்லோரும் கவின் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்க தீப்தி எங்கிருந்து வந்தாலென்றே தெரியவில்லை.

திடீரென்று வந்தவள் கவின் கையை பிடித்து “ஹேய் என்ன இங்க இருக்கியா, என் கூட வரேன்னு சொன்ன இல்ல, வா” என்றவள்,

எல்லோரையும் ஒரு முறை பார்த்த படியே அவனை இழுத்துக் கொண்டே “பாய் காய்ஸ்” என்றபடி சிரித்துக் கொண்டே சென்று விட்டாள்.

அனுவிற்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை எனலாம்.

ninaithale Inikkum

ஆரு ஜெனியின் பக்கத்தில் போய் அமர்ந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ஐ’ம் ஓகே ஆரு” என்றாள் ஜெனி. ஆனால் அவள் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.

அவளை முறைத்து விட்டு ஆருவிடம் “ஏன் ஆரு. நான் சொல்றதை ஏன் யாருமே கேட்க மாட்றீங்க. நீ அப்ப என்னெல்லாம் சொன்ன, கவின் அப்படி இல்லை, என்னவோ பிரச்சனை இருக்கு, அவன் நம்ம கிட்ட சொல்ல மாற்றான். அந்த ஒரு விசயத்துக்காக நாம அவனை முழுசா தப்பு சொல்லக் கூடாது, நாமளே கண்டு பிடிக்கலாம்ன்னு எல்லாம். எனக்கும் நீ சொன்னது சரின்னு கூட தோணுச்சி. பட் இப்ப என்ன சொல்றான். பார்த்தியா. இதுக்கு என்ன சொல்ல போற”

ஜெனி இடையில் பேச முயற்சிக்க, அனு அவளை பேச விடாமல் கவினை திட்டிக் கொண்டிருந்தாள்.

ஆருவும் ஏதோ சொல்ல, அதையும் காது கொடுத்து கேட்காமல், “இல்ல ஆரு. எனக்கும் ஏதோ சரியில்லைன்னு தோணுது. பட் அவன் எப்படி இவ கிட்ட இப்படி சொல்லலாம்” என்று கொதித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு வழியாக அனுவின் வாயை மூட வைத்து ஜெனி பேச ஆரம்பித்தாள்.

(ரு குட்டி பிளாஷ் பேக்)

ஜெனியின் தந்தைக்கு மனதே சரியில்லை. ஒரே மகள். அவர் மனதில் அவளின் வாழ்க்கை பற்றிய எத்தனையோ கனவுகளை சுமந்துக் கொண்டிருக்கிறார். இன்றைய காலத்தில் எல்லா பிள்ளைகளும் சுதந்திரம் என்ற பெயரில் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வதாக எண்ணினார் அவர்.

அது ஓரளவுக்கு உண்மையாக இருந்தாலும் கூட, அவர் சிறு வயதில் இருந்து வளர்க்கப் பட்ட விதம், எல்லாவற்றிலும் இயற்கையாகவே அவர் டிஸ்சிப்ளினாக இருப்பது, அதிலும் அவருடைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் இருக்கும் அசாத்திய மாற்றம், இவற்றாலெல்லாம் இன்றைய இளைஜர்கள் எல்லோருமே சரியில்லை என்று அவரின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

எங்கே அவர்களில் ஒருவளாக தன் மகளும் இருந்து விடுவாளோ என்று அவருக்கு ஒரு பயம். அதனாலேயே அவளை பார்த்து பார்த்து வளர்த்தார். அவளின் தேவைகள் எல்லாம் அவளுக்கு கிடைத்து விடும் படி பார்த்துக் கொள்வார் என்றாலும் அவளுக்கு கட்டுப்பாடுகள் அதிகமே.

அன்று அவள் அவரிடம் சொல்லாமல் மருத்துவமனைக்கு சென்ற நாளிலிருந்தே அவர் அவளிடம் பேசுவதில்லை. ஆனால் மகள் படும் வேதனையையும் அவரால் பார்க்க முடியவில்லை. எனவே அவளிடம் முழுமையாக பேசாவிட்டாலும், அவள் அவருக்காக செய்யும் வேலைகளை மெளனமாக ஏற்றுக் கொண்டார். பின்பு ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொண்டும் இருந்தார்.

இந்த சூழ்நிலையில் தான் ஜெனியின் மொபைலுக்கு கவின் போன் செய்து அவளை மாட்டி விட்ட சம்பவம் நடந்தது.

அவர் ஜெனியின் மொபைலை எடுத்த போது ஒரு ஆண் குரல் கேட்க, கோபமடைந்தவர் அப்போது அங்கு ஜெனி வரவும், அவளிடம் குரலை உயர்த்திய போது, ஜெனியின் முகம் காட்டிய பயம் இன்னமும் அவர் நினைவில் இருந்தது.

என்றுமே ஒரு கொடுமைக்கார தந்தையாய் அவர் இருக்க எண்ணியதில்லை. ஆனால் அவர் வளர்க்கப்பட்ட விதம், அவரின் வேலை என்று அவரின் சூழ்நிலை அவரை அவர் மகளிடம் இருந்து சற்று விலக்கியே வைத்து விட்டது.

ஆனால் அதுவும் எப்படி நடந்தது என்று அவருக்கு தெரியாமலே நடந்து விட்டிருந்தது.

அவருக்கு திருமணமான காலத்தில் எல்லோரும் ஆண் குழந்தை வேண்டுமென்றே வேண்டி கொண்டிருக்க, இவர் மட்டும் எனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தார். அவரின் மனைவி கூட ஆண் குழந்தை தான் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் கடவுள் அவரின் ஆசைக்கேற்ப பெண் குழந்தை கொடுக்க, அந்த ஊருக்கே விருந்து கொடுத்தார்.

அப்போது கூட அவர் உறவுக்காரர்கள் சிலர் “என்ன கிருபாகரா, எல்லாரும் பையன் பிறந்தா கூட இவ்வளவு விமர்சையா செய்ய மாட்டாங்க. நீ என்னடான்னா பொம்பளை பிள்ளை பிறந்ததுக்கு ஊருக்கே விருந்து கொடுக்கறியே” என்று,

“அட பொண்ணுன்னா என்ன பையன்னா என்ன, அதுலையும் நான் ஆசைப் பட்ட மாதிரியே கடவுள் எனக்கு பெண் குழந்தை குடுத்திருக்காரு.” என்று பெருமையாக கூறியவர்.

அவரின் மனைவியே இன்று வரை அவரிடம் சிறிது பயந்து பயந்து தான் பேசுவார். ஆனால் சிறு வயதில் ஜெனி இப்படி பயந்து பேச மாட்டாள். வீட்டில் அவள் வைத்தது தான் சட்டம் என்று இருந்தது.

ஜெனியின் ஒவ்வொரு பிறந்த நாளும் விமர்சையாக தான் கொண்டாடுவார். அப்போது ஜெனிக்கு ஐந்தாம் வயது பிறந்த நாள். அவள் பிறந்த நாளுக்கு நான்கு நாட்கள் முன்பாகவே ஒரு வேலையாக வெளியூர் சென்றவர், சொன்ன படி இரண்டு நாட்களில் வர இயலாமல் போய் விட்டது.

இப்போது போல் அப்போது போன் வசதியும் கிடையாது.

ஜெனியின் பிறந்த நாளும் வந்து விட்டது. ஆனால் அவள் தந்தை மட்டும் வரவில்லை. அவளின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அவர் தான் முதல் வாழ்த்து தெரிவிப்பார். அவர் தான் புது ட்ரெஸ் எடுத்து வருவார். அவள் அம்மா காட்டும் எந்த ட்ரெஸ்ஸையும் ஜெனி ஓகே சொல்லவே மாட்டாள். அவளுக்கு அவள் தந்தை தான் செலக்ட் செய்ய வேண்டும்.

அன்று அவள் அம்மா எடுத்து தந்த ட்ரெஸ்ஸையும் ஜெனி போட மறுத்து விட்டாள். “டாடி வருவார், டாடி வருவார். நாங்க போய் புது ட்ரெஸ் எடுத்துப்போம்” இதையே தான் கூறிக் கொண்டிருந்தாள்.

அன்று அவர் இரவு ஒன்பது மணிக்கு தான் வந்தார். காலிங் பெல் சத்தம் கேட்ட உடனேயே ஜெனி வாசலுக்கு விரைந்து சென்றாள்.

அவர் ஜெனியை தூக்கிக் கொண்டு உள்ளே வர, ஜெனியோ அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள், தந்தை தனக்கு விஷ் செய்வார் என்று. ஆனால் அவருக்கோ அது நினைவில்லை.

தந்தை வந்த பின் சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்த ஜெனிக்கு புரிந்து விட்டது, தந்தைக்கு தனது பிறந்த நாள் மறந்து விட்டது என்று.

அவள் வருத்தத்துடன் உள்ளே சென்று விட்டாள்.

அவர் திரும்ப ஜெனியை தேட, பின்பு தான் அவளின் அன்னை அவளின் பிறந்த நாள் என்பதை நினைவூட்டினார்.

அவருக்கு அப்போது தான் நினைவு வர, ஓடி உள்ளே சென்றால் ஜெனி அழுதுக் கொண்டிருந்தாள்.

இருவரும் அவளை எவ்வளவோ சமாதானம் செய்தும் அவள் சமாதானமாகவில்லை.

“ஜெனி செல்லம் இப்ப ஏன் டா அழற. டாடிக்கு கஷ்டமா இருக்கு இல்ல”

“டாடிக்கு ஜெனியோட பர்த்டே நியாபகமே இல்ல. நீங்க தானே டாடி எனக்கு எப்பவுமே ட்ரெஸ் செலக்ட் பண்ணி தருவீங்க. அம்மா எனக்கு ட்ரெஸ் எடுத்து தந்தாங்க. இருந்தும் நான் டாடி வருவார், நான் டாடி கூட போய் ட்ரெஸ் எடுத்துப்பேன்னு சொல்லிட்டிருந்தேன். பட் டாடிக்கு என்னோட பர்த்டே கூட நியாபகம் இல்லை” என்று சொல்லி அழுதாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.