(Reading time: 23 - 45 minutes)

 

ஜெனியின் கண்களில் கண்ணீர் இதோ இதோ என்று வழிய தயாராக இருந்தது.

அதை கண்டவரின் மனதில் இருந்த வருத்தம் அவரின் முகத்தில் தெரிந்தது.

“ஜெனி இன்னைக்கு நாம ஒப்பனா பேசிடலாம்ன்னு நினைக்கறேன். நான் சின்ன வயசுல இருந்தே இப்படி தான். யார் கிட்டவும் என்னால ரொம்ப க்ளோஸா, சாப்ட்டா, அன்பா எல்லாம் பேச வராது. ஆனா நீ பிறந்த உடனே என் கிட்ட இருந்த அன்பு மொத்தத்தையும் உன் கிட்ட காமிச்சேன். எனக்கே கூட அது ஆச்சரியம் தான், என்னால கூட இப்படி எல்லாம் பேச முடியுமான்னு. ஆனா குழந்தை கிட்ட நாமளும் ஒரு குழந்தையா தானே பேச முடியும். நானும் அப்படி தான் இருந்தேன். ஆனா அது உன் கிட்ட மட்டும் தான் முடிஞ்சிது.  அப்ப எல்லாம் நீ பெரிய மனுசி மாதிரி என்னை மிரட்ட கூட செய்வ” என்றவரின் முகத்தில் என்றும் இல்லாத கருணை நிரம்பி இருந்தது. அவர் அந்த நிமிடத்திற்கே போய் விட்டார்.

பிறகு அதிலிருந்து களைந்து வந்தவர், “அப்படியே தான் போய் கிட்டு இருந்தது. எப்ப எப்படி எல்லாம் மாறுச்சின்னு எனக்கு தெரியலை. நான் மத்தவங்க கிட்ட பேசறது, பழகறதை பார்த்து நீ என் கிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமா தொலைவா போயிட்ட. எனக்கு அது அப்ப புரியலை. அது புரிஞ்சதுக்கு அப்புறம் அதை மாத்தறது அவ்வளவு ஈஸியா இல்லை. நானா வந்து பேசுனா கூட உன் முகத்துல ஒரு பயம். கொஞ்ச நாள் கழித்து நானும் அப்படியே இருக்கட்டும்ன்னு விட்டுட்டேன். என்னோட உண்மையான குணம் உள்ளே அப்படியே தானே இருக்கு. நானும் அப்படியே மாறிட்டேன். ஆனா உன் மேல இருக்கற அன்பு மட்டும் மாறலைம்மா. அது நாளுக்கு நாள் வளர்ந்திட்டு தான் இருக்கே தவிர, குறையல.”

“நாங்க இருந்ததுக்கும் இந்த தலைமுறைக்கும் நிறைய வித்தியாசம். அது ஓரளவுக்கு நல்லது தான்னு எனக்கு புரிஞ்சாலும், அதுல இருக்கற தப்பு தான் எனக்கு தெரியுது. இந்த காலத்து பசங்க எதை சுதந்திரம்ன்னு நினைச்சிட்டு தப்பு பண்றாங்களோ, அதை என் பொண்ணு செய்யக் கூடாதுன்னு நான் நினைச்சேன். அது தப்பா? சொல்லு.”

“ஆண், பெண் நட்பை நான் தப்பு சொல்ல வரலை, காதலை கூட நான் தப்பு சொல்லலை. பட் இந்த காலத்து பசங்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்குன்னு தெரிய மாட்டேங்குது. அவங்களுக்கு எல்லைகள் எல்லாமே தடையா தெரியுது. அதை ஒரு வித சந்தோசத்தோட தாண்டி போக நினைக்கறாங்க. எல்லைகள் எல்லாம் தடைகள் இல்ல. அங்க நிக்கணும்ன்னா நிக்கணும். அதை வீர சாகசமா நினைச்சி தாண்டக் கூடாது.”

“இந்த பதினெட்டு வயசுல காதல் பண்ணிட்டு, இருபத்தைந்து வயசுல கல்யாணம்ன்னு வரும் போது எத்தனை பேர் அவங்க காலேஜ்ல லவ் பண்ணவங்களையே கல்யாணம் பண்ணிக்கறாங்க.”

“இதை எல்லாம் பேசிட்டு போனா போயிட்டே இருக்கலாம். இதை விடு. இந்த காலத்து பசங்க எப்படின்னா போகட்டும். எல்லா அப்பா அம்மாக்கும் தான் பசங்க நல்லா இருக்கணும்ன்னு எண்ணம் இருக்கும். அதே எண்ணம் தான் எனக்கும் இருக்கு. அது தப்பா சொல்லு?” என்று சொல்லி விட்டு அவள் முகத்தையே பார்த்தார்.

இல்லை என்பதாய் தலை அசைத்தாள் ஜெனி.

“என்னால உன் கூட உட்கார்ந்து நீ பேசறதை கேட்டு ரசிக்க எல்லாம் முடியலை. சின்ன வயசுல வந்த இடைவெளி அப்படியே வளர்ந்துடுச்சி. ஆனா நீ உன் அம்மா கூட உட்கார்ந்து பேசி சிரிக்கறதை கேட்டு நான் ரசிப்பேன். நீ செய்யற சேட்டைகளை எல்லாம் பார்த்து ரசிப்பேன். நீ உன் அம்மா கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவ. உன் ப்ரண்ட்ஸ் எல்லாற பத்தியும் எனக்கு அப்படி தான் தெரியும். நான் உன் கிட்ட ஸ்ட்ரிக்ட்டா இப்படி தான் இருக்கணும், அப்படி தான் இருக்கணும்ன்னு சொல்லிடுவேன். ஆனா நீ அதுல என்ன எல்லாம் என்னை ஏமாத்திட்டு செஞ்சன்னு உன் அம்மா கிட்ட சொல்லி சிரிப்ப, நானும் அதை கேட்டுட்டு தான் இருப்பேன். ஆனா அதை பத்தி எல்லாம் உன் கிட்ட என்னைக்குமே கேட்டதில்லை. ஏன்னா நீ உன் அம்மாவுக்கு உண்மையா இருக்கற. ”

“உன்னோட ப்ரண்ட்சை நான் குறை சொல்ல வரலை. எனக்கு என்னவோ அந்த பையனை பார்த்ததுல இருந்து பிடிக்கலை. அவன் தான் ஏதோ உன்னை என் கிட்ட பொய் சொல்ல வச்சிட்டான்னு தோணுது. அப்படி இல்லாம கூட இருக்கலாம். இப்ப இப்படி போன் வருது. அன்னைக்கு உன் போன்ல உன் ப்ரண்ட் பேசி நான் உன் கிட்ட கோபமா பேசினதாலையோ என்னவோ என்னால இந்த முறை உன் கிட்ட கோபமா கூட பேச முடியலை.”

“சின்ன வயசுல இருந்து உனக்கு எல்லாம் நான் பார்த்து செஞ்சா தான் பிடிக்கும். என்ன தான் உன் அம்மா கிட்ட அப்படி பேசினாலும், உனக்கு ஏதாச்சும் வேணும்னா நான் அதை செலக்ட் செஞ்சா தான் உனக்கு திருப்தியா இருக்கும். எனக்கும் என் பொண்ணுக்கு இது நல்லா இருக்குமா, அது நல்லா இருக்குமான்னு தேடி தேடி வாங்கி கொடுத்த சந்தோஷம் இருக்கும். உன் ப்ரண்ட்சை கூட நான் தான் சூஸ் பண்ணுவேன்னு சொல்ல வரலை. பட் இந்த பையனை மட்டும் எனக்கு பிடிக்கலை”

ஜெனி ஏதாவது பேசுவாளா என்று அவர் எதிர்ப்பார்த்திருக்க, அவள் நெடு நேரம் ஏதும் பேசாமல், “டைம் ஆகிடுச்சி டாடி, நான் காலேஜ் போயிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

ல்லூரிக்கு வந்தவள் அன்று மாலை கவினை சந்தித்து எல்லா விசயத்தையும் கூறினாள்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டவன், “ஜெனி உங்கப்பா சொல்றதும் கரெக்ட் தான். இப்ப மோஸ்ட்லி அப்படி தானே எல்லாரும் இருக்காங்க. நம்மளை பெத்தவங்க நினைக்கறதுலயும் தப்பு இல்ல. காலேஜ் டேஸ் ல லவ் பண்ணிட்டு அவங்களையே மேரேஜ் பண்ணிக்கறவங்க ரொம்ப கம்மி தானே” என்றான்.

ஜெனிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“நீ என்ன கவின் சொல்ல வர”

“நம்ம எல்லாரும் எப்பவுமே பேரன்ட்ஸ் நம்மளோட இடத்துல இருந்து யோசிக்கலைன்னு சொல்றோம். பட் நாமளும் அவங்களோட இடத்துல இருந்து யோசிக்கறதில்லை இல்ல ஜெனி. நல்லா யோசிச்சோம்ன்னா அவங்க சொல்றது கரெக்ட் தான்னு புரியும். நாம ஒன்னும் நாளைக்கே மேரேஜ் பண்ணிக்க போறதில்லையே. சோ இப்ப நாமளே நம்மளை செக் பண்ணிப்போம், இது உண்மையான லவ் தானான்னு.”

“உன்னால உங்கப்பாவை மீறி எதையும் செய்ய முடியாது. அது எனக்கு நல்லாவே தெரியும். அவங்களுக்கு நம்மளை ப்ரூப் பண்றதுக்கு முன்னாடி நமக்கு நாமளே ப்ரூப் பண்ணிப்போம். இப்போதைக்கு நாம பேசிக்க வேண்டாம் ஜெனி. அது எவ்வளவு நாளுக்குன்னு எனக்கு சொல்ல தெரியலை. ஒரு வேலை காலேஜ் முடியற வரைக்கும் கூட இருக்கலாம். இல்ல இடைலையே நாம பேசிக்கற சூழ்நிலை வந்தா பேசிக்கலாம். பட் இன்கேஸ் இந்த லவ் வெறும் இன்பாக்டுவேஷன் தான்னு உனக்கோ இல்லை எனக்கோ தோணினா அதை பிரான்க்கா சொல்லிடலாம்”

அந்த நிமிடம் ஜெனியின் முகத்தில் தெரிந்த வலியை கவினால் பார்க்க இயலவில்லை. திரும்பிக் கொண்டான்.

“இதை நான் உன்னை கஷ்டப் படுத்த சொல்லலை ஜெனி. நமக்கே நாம ப்ரூப் பண்ணிக்க வேண்டியது முக்கியம்ன்னு நான் நினைக்கறேன். இனி நீ என் கிட்ட பேசாத ஜெனி. நானும் உன் கிட்ட பேசலை” என்று கவின் சொல்லிக் கொண்டிருக்கும் போது தான் அனு, ஆரு என்று எல்லோரும் வந்தனர்.

தீப்தியும் வந்து விட்டதால் அதற்கு மேல் எதுவும் பேசாமல் கவின் சென்று விட்டான். அந்த கடைசி வார்த்தைகளை தான் அவர்கள் கேட்டது.

(சாரி குட்டி பிளாஷ் பேக்ன்னு சொல்லிட்டு இவ்வளவு பெருசா போயிடுச்சி.)

தை எல்லாம் ஜெனி சொல்லி முடித்தும், அனு குழப்பத்தில் தான் இருந்தாள். ஆனால் ஆருவுக்குமே இது குழப்பத்தை தான் தந்தது.

“அவன் நல்லவனா கெட்டவனா” என்றான் அருண்.

அனு அவனை முறைத்து “இங்க இவ்வளவு பெரிய பிரச்சனை போயிட்டிருக்கு. உனக்கு காமெடி கேட்குதா” என்று அவன் முதுகில் ஒன்று போட்டாள்.

“ஹேய் இல்லம்மா. நிஜமாவே அப்படி யோசிச்சா, நீ என்ன நான் ஏதோ காமெடி பண்றேன்னு சொல்லுற. உனக்கு எங்களை அடிக்க இதெல்லாம் ஒரு சாக்கு”

“போதும். ரெண்டு பேரும் நிறுத்துங்க. உருப்படியா ஏதாச்சும் யோசிங்க. இல்லைன்னா விடுங்க. சும்மா இப்படி டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்றாள் ஆரு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.