(Reading time: 37 - 74 minutes)

 

தேஜு மீண்டும் கல்லூரிக்கு செல்ல துவங்கிருந்தாள், மனம் எதிலும் ஒட்டாத நிலைதான். முன்பு அவனோடு சுற்றிவந்த இடங்கள் ஆயிற்றே... கண்கள் கலங்க தான் செய்தது. அவளது பெற்றோர்கள் மறுப்பர் என்று அவள் சிறிதும் எண்ணியதில்லை. நிரஞ்ஜனிடம் பேசவும் மனம் வரவில்லை, பெற்றோரின் மறுப்பை எதிர்த்து பேசவும் அவளுக்கு இஷ்டம் இல்லை. இந்த வாரம் வீட்டிற்கு செல்லும் பொழுது அவர்களுடன் பேசிப்பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தாள். அவர்கள் மறுக்கும் காரணமாவது தெரிந்துகொள்ளலாம் இல்லையா என்று தோன்றியது. தொடர்ந்து யோசித்தவளுக்கு ஒருவேளை அவர்கள் மறுத்தால் தன் மனதை மாற்றிக்கொள்ள முடியுமா என்ன?! என்று குழப்பமும் வந்தது. இத்தனையையும் மீறி ஒரு நம்பிக்கை ஏதோ மூலையில் இருக்கத்தான் செய்தது.

வயிற்று பசி சரியாக மதிய உணவை நினைவு செய்ய, தங்கிருக்கும் விடுதி சென்றாள் தேஜு. வேக வேகமாக நடக்க துவங்கினாள். அவளுக்கு தெரியும் அவள் நேரம் கடந்து உணவருந்தினாள் என்ன ஆகும் என்று... அவள் விடுதியில் நுழையவும் அனுவிடம் இருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

“ஹலோ ஹலோ இதோ hostel வந்திட்டேன். சாப்பிடப் போறேன்” என்று அவசர அவசரமாக கூறினாள்.

“ம்ம்ம்ம் அது... அந்த பயம்... அது சரி என்ன இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு கிளாஸ் இருந்ததா?” என்று ஆக்கரையாக பேசினாள் அனு.

“யாரு உன்கிட்ட பயமா? அதுசரி ஏதோ கெஞ்சி கேட்டியேனு கொஞ்சம் மரியாதை தரேன் அவ்வளவு தான்” என்று நக்கல் அடித்துவிட்டு, “ஆமாடா அந்த professor கொஞ்சம் சின்சியரா நிறைய நேரம் எடுத்துட்டாங்க” என்று அவளிடம் குறைகூறிக்கொண்டே சாப்பிட்டாள்.

இதுதான் அனுவுக்கும் தேஜுவுக்கும் கடந்த 4 மாதங்களாக நடக்கும் வழக்கம். என்னதான் விடுதியில் தோழிகள் இருந்தாலும் பெரும்பாலும் அனுவே அவளை எழுப்புவதில் இருந்து தொடர்ந்து சரியான நேரத்திற்கு அழைத்து பேசுவாள். சாப்பிட்டியா? படிச்சியா? என்ன பண்ணுற? தூங்கினியா? என்று நேரம் தவறாத கவனிப்பு.(அனுக்கு இதுதான் எப்பவும் வேலையானு நீங்க குதர்க்கமா கேட்க கூடாது பிரிண்ட்ஸ்) தோழியின் கவனிப்பில் உச்சிகுளிர்ந்துதான் போகும் அவளுக்கு... ஆனால் வெளியே காட்டிகொள்ளாமல் கிண்டல் செய்வாள் தேஜு. அனுவும் தேஜுவின் மனநிலையை மாற்றத்தான் இந்த முயற்சி, அவள் சோர்ந்து போக கூடாதே ஒழுங்காக இந்த வருடத்தை முடிக்க வேண்டும், தொடர்ந்து நல்ல நிலைக்கு வரவேண்டுமே அதற்கான முதற்கட்டம் தான் இப்படி தொடர்ந்து அவளை தொல்லை செய்வது... மறந்தும் இருவரும் சோகமாக பேசுவதில்லை போதும் கண்ட சோகமெல்லாம் என்று தோன்றியது இருவருக்கும். பள்ளியில் படிக்கும் போது கூட இப்படி ஒன்றி போவார்கள் என்று நினைத்ததில்லை.

வாரங்கள் சில கடந்து வார விடுமுறைக்கு தேஜு அவளது வீட்டிற்கு வந்தாள். லதா, ரவி தேஜு மூவரும் எப்போதும் ஏதேனும் பேசிக்கொண்டே சாப்பிடுவது வழக்கம் ஒருவரை ஒருவர் மாறி மாறி கிண்டல் செய்துக்கொள்வர். இப்படி பேசி பேசி சிறித்தே வயிறு நிறைந்துவிடும் ஆனால்... என்று நிரு வந்து பேசிசென்றானோ அன்றில் இருந்து அந்த மகிழ்ச்சி காணாமல் போனது. சிறிது நேரம் அமைதியாக சாப்பிட்ட தேஜுவுக்கு உணவு தொண்டையில் இறங்குவதாக இல்லை. பேசியே ஆகவேண்டும் என்று மெதுவாக பேச்சை துவங்கினாள்.

“அப்பா...”

“...”

“உங்க கூட கொஞ்சம் பேசணும்....”

லதா அமைதியாக தட்டை பார்த்துக்கொண்டிருக்க, “உங்க கூடையும் தான்ம்மா.”

“....”

“ஏதாவது பேசுங்கப்பா...” என்று அவள் கெஞ்சிக்கொண்டிருந்தாள். கண்ணில் லேசாக நீர் சேர, வார்த்தை தடுமாற அமர்ந்திருந்தாள் தேஜு. அவள் கண்ணில் நீர் சேருவதை பார்க்கும் தைரியம் இன்றி பெற்றோர் தலை திருப்பி அமர்ந்திருக்க, “சாரிப்பா...” என்றாள்.

அவள் குரலில் உள்ள சோகம் மனதை வலிக்க செய்ய, “தயவுசெஞ்சு அழாத தேஜு... என்னால உன்கிட்ட நார்மலா பேச முடியாது. முன்பே மனசு வலிக்குது அதை இன்னமும் காயப்படுத்தாத... உனக்கு எப்போவாது இது தான் எல்லைன்னு சொல்லிருக்கேனா? இல்லை கெடுபிடியாய் இருந்தேனா? ஏன்னா எல்லாம் உனக்கு தெரியும் புரிந்து நடந்துக்குற பக்குவம் இருக்கும்னு தான்... ஆனால் அதுலயும் எங்களை ஏமாத்திட்ட.... உனக்கு தேவையானது என்னனு பார்த்து பார்த்து நாங்க செய்யும் போது. உனக்கு வருங்காலத்துக்கு என்ன வேணும்னு எங்களுக்கு தெரியாதா?” என்று மனதில் உள்ள வருத்தத்தை எல்லாம் இருக்க முயன்றவர் மேலும் பேச முடியாமல் எழுந்து சென்றுவிட்டார்.

வர் சென்றபின்னும் தேஜு அங்கேயே அமர்ந்து அழுதுக்கொண்டிருக்க, லதா எழுந்து அவளிடம் வந்தார். மெதுவாக தலையை கோதியவர். “எனக்கும் உன்மேல கோவம் இருக்கு தேஜு இருந்தாலும் என்னால இந்த செய்தியை ஓரளவு தாங்கிக்க முடியும். ஆனால் அப்பாவ நினைச்சு பாரு, ரொம்பவே எதிர்பார்த்திருத்தாங்க... இந்த விஷயத்தை எர்த்துக்க கொஞ்ச நாள் ஆகும் தேஜு. அதுக்காக இந்த விஷயத்துல உனக்கு நான் சப்போர்ட் பண்றேன்னு அர்த்தம் இல்லை. நடப்பது தான் நடக்கும் மனதை இப்போ குழப்பிக்காத... அவ்வளவுதான் சொல்லுவேன். எல்லா பெற்றோருக்கும் இருக்கும் எதிர்பார்ப்பு தானே ஒரே பொண்ணு பார்த்து பார்த்து தேர்வுசெய்து கல்யாணம் பண்ணிவைக்கனும்னு... வேற எதுவும் உங்ககிட்ட நாங்க இந்த காலத்துல எதிர்பார்க்கலையே... அப்படியே உனக்கு பிடிக்காத பையனையா பார்த்திட போறோம்???” என்று இடைவெளிவிட்டவர் “சரிவிடு இப்போ இதை பேசி என்ன பயன்?” என்று கூறிவிட்டு பேச்சை முடிக்கும் விதம் தெரியாமல் சென்றுவிட்டார் லதா.   

இருவரும் சென்றுவிட, அமைதியாக கண்ணீர் வடித்தவளுக்கு தன் மீதே வெறுப்பாக இருந்தது. இது என்ன மாதிரி ஒரு நிலைமை, காதலிக்க துவங்கும் பொழுது பெற்றோர் கண்ணுக்கு தெரிவதில்லை, பெற்றோரின் மனம் வலிப்பதை உணரும் போது காதல் கண்ணுக்கு தெரிவதில்லை. எந்த பக்கம் தான் சாயும் பாவம் அந்த மனது. நிருவையும் விட முடியாமல் பெற்றோரையும் விட முடியாமல் உள்ளுக்குளேயே குமுறியது. கை நீட்டி அடித்தோ திட்டவோ செய்திருந்தால் கூட மனதில் இருக்கும் குற்றவுணர்வு குறைந்திருக்கும்... ஆனால் இத்தனை நாள் பார்த்து பார்த்து வளத்தவர்களின் மனம் வலிக்க காண்பது கொடுமை அல்லவோ? படுக்கையில் சாய்ந்து அழுதவளுக்கு தலை வலிக்க துவங்கிவிட்டது. சிரமப்பட்டு தயாராகி அனுவின் வீட்டிற்கு சென்றாள். அங்கு சென்றவளுக்கு அழுகை நின்றபாடில்லை. தன் மடியில் படுத்து அழும் தோழி தானாக ஓயும்வரை அழுகட்டும் என்று முதுகை தடவியவாறு அமர்ந்திருந்தாள் அனு.

“தேஜு...”

“....”

“அழாதேடா..”

“...”

ஒரு கையால் அவள் முகத்தை ஏந்தியவள், மறுகையால் அவள் கண்ணீர்ரை துடைத்தவாறே  “இங்க பாரு, அம்மா அப்பா ஒன்னும் நிருவை பிடிக்கலைன்னு சொல்லவில்லையே அவங்க பொண்ணுக்கு அவங்களால மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க முடியலையேன்னு வருத்தம்... அவங்களா பார்த்து தேர்ந்தேடுக்குற மாதிரி வருமான்னு ஒரு வருத்தம்.. கொஞ்சம் ஏமாற்றம்... அந்த கோவத்துல தான் பேசிருக்காங்க... கொஞ்ச நாள் இப்படியே போகட்டும் விடுமா... கண்டிப்பா நல்லதே நடக்கும்... நீ வேணா பாரு அம்மா அப்பாவே இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு ஜாம் ஜாம்னு நடக்கும்... கண்ண தொடச்சுக்கோம்மா...” அவள் பேசியதெல்லாம் அடிப்பட்ட மனதிற்கு மருந்தாய் மாற, அவள் கூறியபடி அழுகையை நிறுத்தினாள்.

“ம்ம்ம்ம்... குட் கேர்ள்... தேஜு...”

அவள் எதுவும் சொல்லாமல் முகத்தை பார்க்க, “நான் ஒன்னு கேட்டா கோச்சிக்க மாட்டியே???”

“ச்சே ச்சே எப்படிடி உன்மேல கோவம் வரும்??? சொல்லு”

“இல்லை... நீ நிருகிட்ட பேசிட்டு இருக்கியா?”

அவள் கேள்வியில் கொஞ்சம் விசிரத்திரமாக நோக்கி, இல்லை என்பதுபோல் தலையாட்டினாள். “எனக்கு இப்படி அம்மா அப்பாகிட்ட பகச்சுகிட்டு பேச மனசுவறளை அனு. எல்லாம் ஒரு நாள் கண்டிப்பாக சரியாகும் அப்போ பேசிக்குறேன்” என்று நம்பிக்கையாக கூறினாள் அவள். அவள் பேசுவதை திருப்தியோடு பார்த்த அனு, “அதுதான் தேஜு நானும் சொல்ல வந்தேன். இப்போ அவங்க கோவமா இருக்காங்க இதுல நீ இன்னும் பேசுறன்னு தெரிஞ்சால் அவங்களை மதிக்கலைன்னு இன்னும் கோவப்படுவாங்க... சோ கொஞ்ச நாளைக்கு இப்படியே இரு, சீக்கரமே சரியாகிடும்” என்று நம்பிக்கை அளித்தாள் அனு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.