(Reading time: 37 - 74 minutes)

 

வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பாமல் கணினியின் திரையையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்த நிருவை பார்த்துவிட்டு ராம் அங்கு வந்தார். “என்ன ரஞ்சன்? என்ன யோசனை?”

“ஒன்னும் இல்லை சார்.” (என்னதான் அவரை தந்தையாக அழைக்கும்படி ராமே கூறினாலும் நிறுவனத்தில் அப்படி அழைக்க முடியாதே)

“அதுதான் உன்முகத்தில தெள்ள தெளிவாய் ஒட்டிருக்கே, தேஜு பத்தின கவலைதான்னு என்ன ஆச்சு?”

சிறிது நேரம் மௌனமாக இருந்தவன். “கவலை ஏதும் இல்லை சார், குழப்பம் தான்” என்று துவங்கியவன் அன்று நிரஞ்ஜன் சென்று தேஜுவின் பெற்றோரை சந்தித்ததை பற்றி கூறினான். பொறுமையாக கேட்டவர், “அவங்க சொல்லுறதும் கரெக்ட் தானே ரஞ்சன். அவங்க ஒன்னும் உன்னை பிடிக்கலைன்னு சொல்லலேயே அவங்களுக்கு உடனேயே ஒத்துக்க மனசு வரலை, சின்ன ஏமாற்றம். அது கண்டிப்பாக இருக்க தான் செய்யும். பொறுமையாய் இரு.. உனக்கும் உன் நிலைமையை உயர்த்திக்க கிடைத்த வாய்ப்பாக நினைச்சிக்கோ...”

“அப்படிதான் சார் நானும் பார்க்குறேன். ஆனால் இன்னும் எத்தனை மாதத்திற்கு இந்த பிரிதல்னு தான் புரியலை...” அவன் கூறியதை எண்ணி சிரித்தவர். இந்த பிரிதலே ஒரு புரிதலுக்கு தானே பொறுமையாக இரு...”

“சரி சரி உனக்கு ஒரு நல்ல செய்தியோட தான் நான் வந்திருக்கேன்.”

“என்னது சார்???”

“ம்ம்ம்ம்... நான் இந்த ப்ரொஜெக்ட்ல இருந்து ரிலீஸ் ஆகுறேன்” என்று பொறுமையாக கூறினார்.

“ஐயோ என்ன சார் இதை நல்ல செய்தின்னு சொல்லுரிங்க? நீங்க போயிட்டா? அடுத்து வரவர் எப்படி இருப்பாரோ?” என்று அவன் கலங்கி போய் வருந்த, “அது தெரிஞ்சுக்க நீ கண்ணாடி முன்னால போய் நின்னாலே போதுமே” என்று சுருக்கமாக கூறினார்.

அவன் புரிந்தும் அதன் அதிர்ச்சியில் இருக்க, “ஏன்டா இப்படி திருதிருன்னு முளிக்குற? எனக்கு தெரிஞ்சு இவ்வளவு சீக்கரம் மேனேஜர் ஆகுறது நீயாகத்தான் இருப்ப... அடிக்கடி நீ client கிட்ட நல்ல பெயர் வாங்கும் போதே தெரிஞ்சிது இப்படி ஏதாவது நடக்கும்னு.. வர, வாரத்தில் இருந்து நீ தான் மேனேஜர், நானும் எத்தனை நாள் தான் உங்க முகத்தையே பார்க்குறது... அதான் நிறைய பொண்ணுங்க இருக்க ப்ரொஜெக்டா பார்த்து சேர்ந்திடலாம்னு இருக்கேன்” என்று கண்ணடித்து கூறினார். அவர் கூறும் செய்தியெல்லாம் காதில் தேனாய் வந்து பாய, அவரது கடைசி வாக்கியத்தில் சிரித்தவன் “இருங்க இருங்க அம்மாகிட்டயே சொல்லுறேன்” என்று மிரட்டினான்.

“அய்யயோ டேய் சொல்லாத அவள் கோவை சரளாவுக்கு தங்கச்சி மாதிரி பறந்து பறந்து அடிப்பா...” என்று பயப்படுவது போல் கிண்டல் செய்தார்.

கோவமோ வருத்தமோ காலம் கடந்துபோக குறைந்து போகும், அப்படிதான் அஸ்வத்திற்கு இருந்த கோவமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது. முழுவதும் சென்றுவிட்டது என்று கூற முடியாது ஆனால் அனு இருக்கும் இடத்தில் அவனும் இருக்கும் அளவிற்கு குறைந்திருந்தது. இப்போதெல்லாம் அடிக்கடி அந்த பிஞ்சு பாலகனை காண வாரா வாரம் அஹல்யாவின் வீட்டிற்கு சென்றுவிடுவது வழக்கம். பெண்களை போல் கொஞ்ச தெரியாவிட்டாலும், குழந்தைகளை பார்த்து ரசிக்கும் உணர்வு பொதுதானே. அவன் பிஞ்சு கால்கள் உதைத்து ஆடுவதை பார்க்க ஆசையாக இருக்கும். இதோ இதோ என்று 8 மாதங்கள் கடந்துவிட்டது. ஒவ்வரு சனி ஞாயிறும் அஹல்யாவின் வீட்டில் இருக்கும் பொழுதெல்லாம் அனு அழைத்து குழந்தையுடன் பேசுவாள். அந்த குழந்தைக்கு அவளது குரலை கேட்க வைக்க, அழைப்பை வெளியே கேட்கும் படி மாற்றுவாள் அஹல்யா ( தம்பிக்காகவும் தான்)... அவனோடு சேர்ந்து அவளது குரலை அஸ்வத் ரசித்தான். அவள் கொஞ்சி கொஞ்சி பேசுவது. முத்தம் தருவது என்று சுவாரசியமாக செல்லும். அவள் குரலிலேயே நாட்கள் செல்ல செல்ல பழையபடி மயங்கிப்போனான். இருப்பினும் தயக்கம் விடுவதாக இல்லை. மனதின் மாற்றத்தை அவனே புரிந்துகொள்ள முடியாமல் சிரமபட்டான் அஸ்வத்.

குவிந்து கிடக்கும் பணத்திற்கு மதிப்பில்லை... அடிக்கடி உபயோகபடுத்தும் மன்னிப்பு வார்த்தைக்கும் அர்த்தமில்லை... அருகிலேயே இருக்கும் உறவுக்கும் மதிப்பில்லை... ஒருவேளை பிரிதல்,கோவம்,சோகம் போன்ற எதிர்மறைகள் இல்லையென்றால் நிஜங்களுக்கு அர்த்தம் இல்லாமல் போயிருக்குமோ என்னவோ மறுக்கமுடியா உண்மையை போகப்போக உணர்ந்தனர் நால்வரும்.

சில வாரங்கள் கடந்திருக்க, அஸ்வத் வேலை முடித்து வந்ததில் இருந்து என்ன செய்வது என்று புரியாமல் படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்தான். காலை முதல் அவனுக்கு நிரஞ்ஜனின் நினைவாக இருந்தது.

“டேய் போன் பண்ணா அட்டென்ட் பண்ண மாட்டியா?”

“....”

“ஆமா நீ பிஸியா இருக்க லட்சணம் எனக்கு தெரியாது, மிஞ்சி மிஞ்சி போனா உன் ஆளுகிட்ட கடலை போட்டிட்டு இருப்ப” என்று அவன் அருகில் இருந்த நண்பன் அவனது தோழனோடு பேசிக்கொண்டிருந்தான்.

“...”

“சரி சரி விஷயத்தை கேளு... வர ஞாயிற்றுகிழமை வீட்ல function இருக்குல சேர்ந்தே போகலாம் நான் டிக்கெட் புக் பண்ணிடுறேன்.”

“...”

“ஆமா இவர் பெரிய இவரு, தனியா தாம்பூலம் வச்சு அழைக்கணும்... ஒழுங்கா வந்து சேறு... இல்லை அம்மா உனக்கு செஞ்சு தரதா சொன்ன ஜாமுனும் உனக்கு கிடைக்காது...” என்று கூறி அவன் சிரிக்க... எதிர்முனையில் இருந்தவனோ அலறும் சத்தம் வெளியே கேட்டது.

இருவரின் உரையாடலையும் கேட்டவனுக்கு ஏக்கமாக இருந்தது... காதலி பேசவில்லை என்று  மட்டும் தான் ஏங்கவேண்டுமா என்ன? விவரம் அறிந்த வயதில் இருந்தே ஒரு வீட்டில் இல்லையென்றாலும் கூடவே வளந்தவனாயிற்றே பொருத்து பேசிருக்கலாமோ என்று வருந்தினான்.

என்னதான் சுற்றி நிறைய நண்பர்கள் இருந்தும் கடந்த சில நாட்களாக அவன் நினைவாக இருந்தது அஸ்வத்துக்கு. அவன் தான் கவலையில் பேசினான் என்றால் நானுமா கோவமாக பேசிவிட்டு வைப்பது என்று வருத்தமாக வந்தது. அவனது எண்ணிற்கு அழைக்கலாமா அழைத்தால் பேசுவானா? என்று மனம் குழம்பிக்கொண்டிருக்க, சரி நேரத்தை கடத்தினால் எங்கு மனம் மாறிவிடுமோ என்று அவனுக்கு அழைத்தான்

முதல் ரின்கிலேயே மறுமுனை எடுக்கப்பட்டது... சில நேர மௌனம் பிரவேசிக்க என்ன பேசுவது என்றே புரியாமல் இருவரும் அமைதியாக இருந்தனர். அஸ்வத்தின் அருகில் இருந்தவனோ என்னடா இவன் ரொம்ப நேரமா காதில வச்சுக்கிட்டு பேசாம இருக்கானே... என்று யோசித்துவிட்டு. “ஏய் என்னடா ஏதாவது பேசு? உன் ஆளுகிட்ட பேசுறதுக்கு இவ்வளவு கஷ்ட்டமா” என்று கூறவும் இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. சூழ்நிலை இலகுவாக மாற,”எப்படிடா இருக்க?” என்று கேட்டான் அஸ்வத்.

“ம்ம்ம்ம்... நல்லா இருக்கேண்டா... நீ?”

“நானும் தான்... ரொம்ப formalaa போகுதே... சரி இல்லையே... அப்பறம்? வேலையில ஏதாவது மாற்றம் இருக்கா?”

“ஆமாடா முதல்ல உனக்கு தான் சொல்லனும்னு உனக்கு போன் பண்ண வந்தேன் நீயே பண்ணிட்ட...” என்று மனதில் நினைத்தை கூறினான் நிரஞ்ஜன்.

“பாரா... நானே பண்ணிட்டேன்னு சும்மா ரீல் விடுறியா? சரி சொல்லு என்ன விஷயம்?”

“ச்சே போடா லூசு... நான் எதுக்கு மாத்தி சொல்லணும்... அதுவா... எனக்கு promotion கிடைச்சுருக்குடா...” என்று மகிழ்ச்சியுடன் கூறினான். அவன் எதிர் பார்த்ததை போலவே அஸ்வத் மகிழ்ந்துதான் போனான் மனம் நிறைந்துவிட்டது போல் ஒரு எண்ணம். “கலக்கு மாப்ள... சுப்பர் விஷயம் சொல்லிருக்க போ..” என்று கூறி மகிழ்ந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.