(Reading time: 37 - 74 minutes)

 

வளது கிண்டலில் சுயநினைவுக்கு வந்தவன் மெல்லியதாக புன்னகைத்து பதில் தராமல் நின்றான். அவன் எதுவும் கூறாமல் இருக்க அவளே துவங்கினாள்.

“யாருக்காக அஸ்வத் இந்த நடிப்பு, உன்னால தான் அவளை மறக்க முடியுமா? இல்லை அவளாலதான் உன்னை மறக்க முடியுமா? எதுக்கு இந்த சண்டை” என்று கேட்டாள்.

அவள் கேட்ட கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை, ஆனால் மனதில் பட்டதை கூறினான். “இந்த சண்டை இந்த உறவுக்கு முறிவில்லையே தேஜு, என்னால எல்லாத்தையும் ரொம்ப சீக்கரமே மறக்க முடியலை அதுக்கு நான் எடுத்துக்குற நேரம்ன்னு சொல்லலாம்... என்னால அவள் கூட ஒண்ணுமே நடக்காதது போல பேசமுடியாது. பேசும் போது ஒழுங்கா பேசுறேன்” என்று பதில் தந்தான்.   

“ஹப்பாடா நீ சொன்னதை போய் முதல்ல அவள்கிட்ட சொல்லணும்...”

“ஏன்?”

“ஏனா? நீ திரும்ப பேசவே போறதில்லைன்ற மாதிரி இல்லை அவள் அழுகுறா? அதான்...” என்று கிண்டல் செய்தவள் தோழியின் வருத்தம் புரிந்து சீரியஸ்ஸாக கூறினாள்.

அவளை பார்த்து ஒரு புன்னகை பூத்தவன், “நீ சொல்லவேண்டிய அவசியமே இல்லை தேஜு அது அவளுக்கே தெரியும்.. வேணும்னா நீயே பேசிபாறேன் என்று கூறவும் அவளுக்கே ஆர்வம் தோன்றியது.

மெதுவாக அவனிடம் இருந்து விலகி அனுவிடம் வந்தாள். “அனு நான் ஒன்னு கேட்கவா?”

“ம்ம்ம்ம் சொல்லுடி”

“அஸ்வத்கிட்ட பேசினேன், அவன் இருக்குற கோவத்தை பார்த்தால் ஒருவேளை அவன் மறுபடியும் பேச மாட்டானோனு எனக்கு பயமாக இருக்கு அனு” என்று சோகமாக கூறுவது போல் கூறினாள். அவள் அஸ்வத்தின் பெயர் கூறிய நொடியே அவனை அவளது கண்கள் தேட, அவனை கண்டும் கொண்டது. அவள் பார்க்கும் நொடி மும்பரமாக நவீனோடு பேசுவது போல் பாவனை செய்தான். சிறிது நேரம் பேசாமல் இருந்தவள் எதிர்மறையாக தான் பதில் தர போகிறாள் என்று எதிர்பார்த்திருந்தாள் தேஜு. ஆனால் அவளோ “இந்த சண்டை இந்த உறவுக்கு முறிவில்லையே தேஜு, அவனால எல்லாத்தையும் ரொம்ப சீக்கரமே மறக்க முடியலை அதுக்கு அவன் எடுத்துக்குற நேரம் இது... இப்போ மனசுல நினைப்பை வச்சுக்கிட்டு வாய்வார்த்தைக்கு பேசுறதை விட, பேசும் போது ஒழுங்கா பேசுறதுதான் நல்லது..” என்று அவன் பேசியதையே கொஞ்சம் மாற்றி கூறவும் பதில் பேச முடியாமல் வாய் அடைத்துபோனாள் தேஜு.

இப்படியே சேர்ந்து சேர்ந்து பேசி கலாட்டா செய்து கிண்டல் செய்து என்று உறவுகள் எல்லாம் சேரும் பொழுது நடக்கும் அத்தனை கூத்தும் கதைகளும் நடந்தது. விபுன் நடுவில் புகைப்படம் எடுக்கவும் பரிசுகள் வாங்கவும் உணவு உண்ணவும் மட்டும் தான் தாய்தந்தையிடம் இருந்தான். மற்ற நேரத்தில் எல்லாம் அனு தான் அவன் அருகிலேயே இருந்தாள். கூட்டமெல்லாம் சென்றபின் அனைவரும் உறங்க சென்றுவிட, அன்றைய நாயகனுக்கு தூக்கமே வரவில்லை. அங்கும் இங்கும் ஆட்டம் போட, தான் பார்த்துகொள்வதாக சொல்லி அஹல்யாவை தூங்க சொல்லிவிட்டு விபுனை தூக்கிக்கொண்டு வரவேர்ப்பறையை ஒட்டி உள்ள சிட்டௌட்டிற்கு சென்றான் அர்ஜுன். அங்கு முன்பே அனு அமர்ந்து அமைதியாக பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாள் அரவம் கேட்டு கண்திறக்க, அங்கு அர்ஜுன் நின்றான்.

“என்ன அண்ணா இன்னும் தூங்கலையா?”

“எங்க உன் மருமகனை வச்சுக்கிட்டு தூங்குறது?”

“ஹா ஹா நல்லா வேணும்” என்று கூறியவாறு கை நீட்ட விபுன் அவள் கைகளில் வந்துவிட்டான்.

அர்ஜுனின் கண்களை வைத்தே அவனுக்கு தூக்கம் வருவது தெரிந்துவிட, “நீங்க போய் தூங்குங்க அண்ணா, நான் குட்டி தூங்கினதும் வந்து படுக்க வைக்கிறேன்” என்று கூறினாள். அது தான் சாக்கு என்று நினைத்தானோ அல்லது தூக்ககலக்கமோ அதற்கு மேல் அவனால் விழிக்க முடியவில்லை. அதன்பின் என்ன சத்தமுமே இல்லாத இரவில் மெல்லிய குரலில் விபுனுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.

அவளோடு விளையாடிக்கொண்டிருந்தவன் ஒரு உருவம் கடக்கவும் பயந்துபோய் அவளோடு ஒட்டிக்கொண்டான், அவன் பயத்தை போக்க யார் என்று பார்த்தால் அங்கு அஸ்வத் தண்ணீர் அருந்த வந்திருந்தான். “யாரும் இல்லைடா அஸ்வத் மாமா தான் பாரு சமத்தில்ல பயப்பிட கூடாது” என்று கூறிக்கொண்டிருந்தாள். அஸ்வத் என்று பேர் கேட்டதுமே அஸ்வத் அங்கும் இங்கும் தேட, சரியாக விபுன் வேறு அவனை அங்கு அழைத்தான். இருவரும் இந்நேரத்தில் அங்கு அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு எப்படி கேட்பது என்றும் புரியாமல்.

“என்னடா குட்டி தூக்கம் வரலையா? நேரம் ஆச்சு பாரு” என்று இருவருக்கும் பொதுவாக கூறினான்.

தனக்கும் தான் இந்த கேள்வி என்று புரிந்து போக, என்ன பதில் சொல்வது என்று முளித்துக்கொண்டிருந்தாள். பதில் தந்து அதற்கு அவன் உன்னையா கேட்டேன் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று அமர்ந்திருந்தாள். இருவரின் கவலை போக்க அந்த குட்டியே பதில் தந்தது. “ம்ம்ம் ஹ்ம்ம் துச்சம் வல...” என்று இடம் வலமாக தலையை ஆட்டினான். துணைக்காக அவனும் சிறிது நேரம் அமர்ந்துவிட வெகு நேரம் கடந்தும் விபுன் உறங்கிய பாடில்லை... பொறுமை இழந்து அஸ்வத்தோ “டேய் நீ இப்போ தூங்கலை நான் பாடிடுவேன்” என்று மிரட்டினான். பாட்டு என்றதும் விபுனுக்கு என்ன தோன்றியதோ “அத்த பாடு அத்த பாடு” என்று அவளை நோக்கி கை காட்ட துவங்கிவிட்டான். திடுமென பாட சொல்வான் என்று எதிர்பார்க்காமல் தடுமாறினாள் அதுவும் அஸ்வத்முன்...  அஸ்வத் செல்லவும் வழியில்லை அவன் கைகளை விபுன் பிடித்திருந்தான். அதட்டவும் மனமில்லை, வேறுவழியின்றி அவனுக்காக பாடினாள்.

“கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் என் செல்ல கண்ணனே வா

திதித்ததை சதிக்குள் என்னோடு ஆட வா வா...

அடிக்கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட

இடப்புறம் விரல் மடக்கி நீ ரூ காட்டிட

என் கண்ணனே வாடா வா, விஷம கண்ணனே வாடா வாஆஆ...”

என்று அவள் தன்னையும் மறந்து பாட அந்த குட்டி கண்ணன் அவள் மேல சாய்ந்து உறங்க ஆரம்பித்தான். இவள் கண்கள் மூடி பாட, அவள் குரலில் கலந்து மயங்கிபோனவன் அவளிடம் இருந்து கண்ணை அகற்றவே இல்லை. அமைதியான இரவில் அவள் குரல் மட்டும் சுற்றி சுற்றி வந்தது... பாடி முடித்து கண்ணை திறந்தவள் சட்டென அஸ்வத் கண்களை வேறுபுறம் மாற்றிகொள்வதை பார்த்து மெல்லியதாய் சிரித்தாள். விபுனை தூக்கிக்கொண்டு உள்ளே செல்ல நகர, அஸ்வத்தும் எழுந்து தனதறைக்கு சென்றான். பேசவேண்டும் என்று இருவருக்கும் தோன்றவில்லை பார்வைகளே போதுமானதாக இருந்தது. பேசவில்லை என்றாலும் இருவருக்குமே இனிமையான இரவு தான் அவர்களுக்கு. சின்ன பார்வை சின்ன புன்னகை அது போதும் என்றிருந்தது.

அதன்பின் சில மாதங்கள் கடந்திருக்க, அனுவிற்கு மறுபடியும் போர் அடிக்க, ரேடியோ வேலை மட்டும் பத்தாது என்று உணர்ந்து திருப்பூரிலேயே நல்ல கல்லூரியில் MBA சேர்ந்தாள். பிற்காலத்தில் HR ஆக வேலை சேர உதவும் என்று தோன்றியது அவளுக்கு. தேஜுவும் அதே சமயம் தன் கல்லூரியை முடித்திருந்தாள். கையோடு அடுத்து வந்த மருத்துவ நுழைவு தேர்வையும் எழுதி முடித்தாள் அதில் நல்ல மதிப்பெண் எடுத்தால் அவள் விரும்பியது போல், மேற்படிப்பை gynocology யில் பண்ணலாம் என்றிருந்தாள்.

துணியை துவைத்து மாடியில் காயவைத்துவிட்டு வந்தவளுக்கு தலை சுற்றியது.. “ச்சே என்னம்மா வெயில் அடிக்குது கண்ணே இருட்டுது” என்று நினைத்துக்கொண்டு வீட்டினுள் சென்றாள் அர்ச்சனா. சில அடிகள் எடுத்து வைத்ததுமே மீண்டும் தலை சுற்ற, தடுமாறி அருகில் இருந்த சுவரை பிடித்துக்கொண்டாள். இதை பார்த்துவிட்ட, அவள் மாமியார் அருகில் வந்து “என்னம்மா என்னாச்சு?” என்றார்.

“ஒண்ணுமில்லை அத்தை வெயில் அதிகமா இருக்கில்லை அதான், காலைல வேற சாப்பிடல அதுனால தலை சுத்துற மாதிரி இருக்கு...” என்று அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவாறு கூறினாள்.

ஆனால் வயதில் பெரியவராயிற்றே முதல் கேள்வியே “நாட்கள் தள்ளி போயிருக்கா?” என்றுதான். சட்டென சுதாரித்தது அவளின் உள்ளம் ஒரு நொடி மகிழ்ச்சியில் பொங்கி வலிந்தது மனம்... ஆமாம் என்று அவள் தலை அசைக்க, வீட்டில் அனைவருக்கும் அதன் பின் சந்தோஷம்தான், முறைப்படி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதிக்க, விடையும் அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. அவசர அவசரமாக தன் மகனை அழைக்க சென்ற மாமனாரை தடுத்து, “மாமா அவர்ட நானே சொல்லுறேனே” என்று கெஞ்சுதலாக இழுத்தாள்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.