(Reading time: 36 - 71 minutes)

மாவிலையும் வாழையும் தோரணங்களாய் வாசலில் வந்தவரை பார்த்து சிரித்த வண்ணம் வரவேற்க…  

சந்தனமும், பன்னீரும் தன் வாசனையால் வருபவரை ஈர்த்து தன் வசம் வைத்துக்கொள்ள…

மழலைக்கே உரிய மொழியில் பேசி, சிரித்து அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த சிறுவர்கள்…

யாரும் பார்க்கிறார்களோ, என்று அஞ்சினாலும் தயங்காது காதல் வேலையை தொடர்ந்து கொண்டிருந்த இளம் வயதினர்….

இங்கே என்ன நின்னுகிட்டு வேடிக்கைப் பார்த்துக்கிட்டிருக்குற?... அதோ அங்கே என்னாச்சுன்னு போய் பாரு… என்ற ஆண்களின் குரலும்,

அந்த பட்டுசேலை எங்க வச்சீங்க மதினி?... அந்த பாக்கியம் கல்யாணத்துக்கு இன்னுமா வரலை… என்று அங்கலாய்த்துக்கொண்ட பெண்களும்,

மொத்தத்தில் கல்யாண வீட்டிற்கே உண்டான களையுடன் காட்சியளித்தது கோதை-சுந்தரத்தின் இல்லம்…

நந்தும்மா… இங்கே யாரைத் தேடுற?... என்றபடி அலங்காரம் செய்யப்பட்ட மேடையின் அருகே நின்று கேட்டான் சித்து…

அபியை தான் தேடுறேன் அண்ணா… என்றாள் நந்து….

அபி?... அவ இன்னும் ரெடி ஆகி வரலையாடா?...

இல்லண்ணா… வரலை…

சரி… நீ இரு… நான் போய் பார்த்துட்டு வரேன் என்றவன், இரண்டடி எடுத்து வைத்தப்பிறகு, என்ன நினைத்தானோ தங்கையின் அருகே சென்று அவளைப் பார்த்தான்…

என்ன அண்ணா?... என்று கேட்ட தங்கையின் முகம் பற்றி, இரு கைகளையும் காற்றில் அசைத்து திருஷ்டி கழித்தான் அந்த பாசக்கார தமையன்….

அவன் செய்கையில் சிரித்தவளின் கைப்பிடித்து, இழுத்துச் சென்றான் சித்து…

ஹேய்… சீக்கிரம் ரெடி ஆகுங்கடி… நேரமாகுது… உங்களை கிளப்புறதுக்குள்ளே நான் ஒரு வழி ஆகிடுவேன் போல… என்று நொந்து கொண்டிருந்த காவ்யாவின் மீது கை வைத்தாள் அனு…

என்ன காவ்யா?... இவங்க இன்னும் ரெடி ஆகலையா?... இவளுங்களை எல்லாம் திருத்த முடியாது… நீ போய் ரெடி ஆகு முதலில்… இவளுங்களை நான் பார்த்துக்கறேன்… என்றாள் அனு…

இல்ல அனு… நீ எப்படி தனியா சமாளிப்ப?... பரவாயில்லை… இவங்களை ரெடி பண்ணிட்டு நான் போய் ரெடி ஆகுறேன்…

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நீ போ… என்று அவளை விரட்டினாள் அனு…

நீயும் தான் ரெடி ஆகலை… அனு… வா நாம ரெண்டு பேரும் போகலாம்… இவளுங்களா தயார் ஆகிடுவாளுங்க… என்று காவ்யா சொல்லிக்கொண்டிருந்த போது,

அவங்க தயார் ஆகுறது இருக்கட்டும்… முதலில் என் தங்கையை தயார் பண்ணுங்க ஒழுங்கா… என்றபடி அங்கே வந்தான் சித்து…

என்னடா.. தயார் பண்ணனும்?... அதான் நல்லா அழகா தானே ரெடி ஆகிருக்கா நந்து… இன்னும் என்ன பண்ணனும்னு சொல்லுற?... என்று முறைத்தபடி கேட்டாள் காவ்யா…

அம்மா… என் நந்து அழகா தான் இருக்குறா… அவளை யாரும் அழகா இல்லன்னு சொல்லலை… என்றான் சித்துவும் அதே முறைப்புடன்….

அடடே… சித்து கண்ணா… இப்போ என்ன செய்யணும்னு சொல்லு… நான் செய்யுறேன்… என்றபடி சித்துவிடம் வந்தாள் அனு…

ஒன்னுமில்ல அத்தை… இதோ இந்த பூ தான் கொஞ்சம் சரிஞ்சிருக்கு… அதை நேரா வச்சி விடுங்கன்னு சொல்லதான் இங்கே வந்தேன்…

ஹ்ம்… இவ்வளவுதானே… சித்து… இதுக்குப்போய் எதுக்கு அம்மாவைத் தேடுற?... அத்தையே வச்சி விடுறேன்… என்ற அனு, இங்கே வாடா நந்து என்றழைத்தாள்…

அவளது தலையில் இருந்த பூவை சரி செய்த அனு, இப்போ ஓகேயா பாரு சித்து கண்ணா… என்று கேட்க…

ஒகே தான் அத்தை… ஆனா, ஏதோ ஒன்னு குறையுதே… அதுதான் என்னன்னு யோசிக்கிறேன் என்றவன், சற்று நேரம் யோசனை செய்துவிட்டு, ஆ…….. நியாபகம் வந்துட்டு அத்தை… நந்துக்கு திருஷ்டி பொட்டு வைங்க என்றான் அவன்…

நந்துவுக்கு திருஷ்டி பொட்டு வைத்தவள், அவனின் கன்னம் வழித்து அவன் காதுக்குப் பின்னாடி தன் கண்களில் இருந்து எடுத்த மையை வைத்துவிட்டு சிரித்தாள்…

புரியாமல் பார்த்த சித்துவிடத்தில், அண்ணா, நீ ரொம்ப அழகா சூப்பரா இருக்கல்ல… அதான் அத்தை உனக்கு திருஷ்டி பொட்டு வைக்கிறாங்க… என்றாள் நந்து…

அய்யோ… அத்தை… எனக்கு அதெல்லாம் வேண்டாம்… நந்துவுக்கு மட்டும் வைங்க… போதும்… என்ற சித்துவிடத்தில்,

இது நல்லாயிருக்கே… உன் தங்கைக்கு நீ வைக்க சொன்ன… வச்சேன்… இப்போ என் சித்து கண்ணாவுக்கு நான் வைக்கிறேன்… உனக்கென்ன என்று கேட்டாள் அனு…

அதுசரி… என்னமோ பண்ணுங்க… ஆனா, நாலு பொண்ணுங்க பார்த்து சிரிக்குற மாதிரி செஞ்சிடாதீங்க அத்தை அது போதும்… என்ற சித்துவை

படவா… இப்போவே, பொண்ணுங்க என்ன சொல்வாங்கண்ணு கவலையா?... உன்னை என்றபடி காவ்யா நெருங்க…

குறுக்கே புகுந்து காவ்யாவை நிறுத்திய நந்து, அம்மா… சும்மா சும்மா அண்ணனை எதாவது சொல்லாத… நானே அண்ணனுக்கு திருஷ்டி பொட்டு வைக்க சொல்லி கேட்கணும்னு நினைச்சிட்டிருந்தேன்… அதற்குள் அத்தையே வச்சி விட்டுட்டாங்க… என்று சொல்ல…

ஆமா… உன் அண்ணனை இப்போ யாரு கண்ணு வச்சாங்களாம்?... என்று கேட்டாள் காவ்யா…

அது உனக்கு தெரியாதுல்லம்மா… இங்கே வா… காட்டுறேன்… என்ற நந்து, அவளை அந்த அறையின் கதவருகே அழைத்துச் சென்று அங்கிருந்த சிறுமிகளை கைகாட்டி, அங்கே பாரு அங்கே இருக்குற அத்தனை பேரும் என் கூட தான் விளையாடுறாங்க… சித்து நீயும் வா, வான்னு அண்ணனை கூப்பிடுறாங்க… உன் அண்ணனுக்கு இந்த ட்ரெஸ் நல்லாயிருக்குன்னு எங்கிட்டேயே சொல்லுறாங்க… அவங்க அத்தனை பேர் கண்ணும் என் அண்ணன் மேல தான்… அதான் அவனை விட்டு அகலாம இருக்கேன் அவன் கூடவே… அதனால தான் சொன்னேன் திருஷ்டி பொட்டு வைக்க சொல்லி… என்று தாயிடத்தில் கூறியவள்,

தேங்க்ஸ் அத்தை… என்று அனுவிடம் சொல்லிவிட்டு அபி எங்க அத்தை இருக்குறா?... என்று கேட்டாள்…

பாட்டிகிட்ட இருப்பா நந்தும்மா… நீ போய் அங்கே பாரு… என்று சொன்னாள் காவ்யா…

சரிம்மா… நான் போய் பார்க்குறேன்… என்றவள், நீ வா அண்ணா, நாம போகலாம்… என்றபடி சித்துவின் கைப்பிடித்து அழைத்துச் சென்றாள் நந்து…

சரி…. நீ வா… அனு… நாம போகலாம்… என்றபடி முன்னே நடந்து சென்றவள், இன்னும் அனு அங்கிருந்து அகலாததைக் கண்டு அவளிடத்தில் சென்றாள் காவ்யா…

என்னாச்சு அனு… என்ற காவ்யாவிடத்தில், என் கண்ணே பட்டுடும் போல இருக்கு காவ்யா… இரண்டு பேருக்கும் இப்போ திருஷ்டி சுத்தி நான் போட்டே ஆகணும், என்றவள் வேகமாக சமையலறைக்குள் சென்று கொஞ்சம் வற்றலையும் உப்பையும் அள்ளிக்கொண்டு சித்து, நந்துவைத் தேடிச் சென்று திருஷ்டி கழித்துவிட்டு வந்து அதனை அடுப்பில் போட்டாள்….

ஹேய்… அனு… என்னடி பண்ணுற?... என்ற காவ்யாவின் கேள்விக்கு

இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுக்காம இப்படியே என்னைக்கும் இருக்கணும் காவ்யா… குழந்தைங்களை நல்ல முறையில் வளர்த்திருக்க… ரொம்ப பெருமையா இருக்கு எனக்கு… உன்னை நினைச்சு… என்றவள் காவ்யாவின் கைப்பிடித்துக்கொள்ள

காவ்யாவோ, வெள்ளந்தியாய் சிரித்தாள்…

எனக்கு மட்டும் பையன் இருந்திருந்தா இப்போவே வெற்றிலை, பாக்கு மாற்றி நந்துவை என் வீட்டு மருமகளா நிச்சயம் பண்ணியிருப்பேன்…

ஓஹோ… அந்த அளவுக்கு போயாச்சா?... சரிதான் அனுவிற்கு குட்டி பையன் வேணும்னு ஷ்யாம் அண்ணன் கிட்ட சொல்லிட வேண்டியதுதான்… என்று காவ்யா சொல்ல… அனுவோ சீ போடி… என்றபடி ஓட, ஹேய்… நில்லு அனு… என்றபடி காவ்யா அவளைப் பின் தொடர்ந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.