(Reading time: 36 - 71 minutes)

செல்வி… நீ போய் பாரு… காவ்யாவையும் காணோம்… அனுவையும் காணோம்… இரண்டு பேரும் எங்கே போனாங்கன்னு தெரியலை…  நேரம் வேற ஆகுது… நீ கொஞ்சம் போய் பார்க்குறியா?... என்ற கோதையிடத்தில், இங்க நீங்க இவங்க இரண்டு பேரையும் காணோம்னு சொல்லுற மாதிரி, அங்கே மாப்பிள்ளைகளை ரெடி பண்ணுறேன்னு சொல்லிட்டு போன ஷ்யாமையும், தினேஷையும் பத்து நிமிஷமா காணோம்னு இப்போதான் சுந்தரம் மாமா சொல்லிவிட்டார்… என்றார் செல்வி…

செல்வி சொன்னதும், கோதைக்கும் புரிய… சின்னஞ்சிறுசுக தானே… சரி விடு… நாமே போய் தயார் பண்ணலாம் என்றபடி நகர்ந்த போது, நாங்களே பண்ணுறோம் அம்மா… என்றபடி வந்தனர் நால்வரும்…

சரி… சரி… நேரமாச்சு… சீக்கிரம் போய் தயார் பண்ணுங்க… என்றனர் கோதையும் செல்வியும்…

ஏண்டி… எருமை மாடே… நகருடி… நான் கண்ணுக்கு மை போடணும்… - மயூரி

ஏன் இதுவரை மை தீட்டிகிட்டது போதாதா?... இன்னும் தீட்டி என் அண்ணனை ஓட வைக்கிறதுக்காடி திட்டம் போடுற என்ற ஷன்வியை மயூரி நாலு அடி அடித்தாள்…

ஸ்… ஆ………. பிசாசே… வலிக்குதுடி… என்ற ஷன்வி மயூரியை அடிக்க… மைத்ரி இடையில் தலையிட்டு அவர்களை பிரித்து வைத்து விட்டு,

அவள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள்..

இவளுக்கு எவ்வளவு கொழுப்பு பாருடி… நாமளே அந்த கண்ணாடிக்கு தான் அடிச்சிட்டிருக்கோம்… இவ ஈசியா வந்து நம்மளை விலக்கி விட்டுட்டு என்ன திமிரா கண்ணாடியில முகம் பார்க்குறா பாரு.. இவளை என்ன செய்யலாம் என்று மயூரி கேட்க…

இதென்னடி கேள்வி… அடிச்சு நொறுக்கிட வேண்டியது தானே… என்ற ஷன்வி அவள் மேல் தலையணை எடுத்து அடிக்க, மயூரி விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாள்..

அடிப்பாவிகளா?... ஏண்டி விடிஞ்சா கல்யாணம்… இப்போ இந்த கூத்து பண்ணிட்டிருக்கீங்க?... யாராச்சும் பார்த்தாங்க… மானமே போயிடும்… ஏண்டி இப்படி படுத்துறீங்க… வந்து இந்த புதுதுணியை போட்டுக்கோங்க… சீக்கிரம்… என்றாள் காவ்யா…

அண்ணி… விடிஞ்சா கல்யாணம் தான்… நாங்க ஒன்னும் இல்லன்னு சொல்லலையே… கல்யாணம்னா சீரியஸா பயந்துகிட்டு அடக்க ஒடுக்கமா தான் இருக்கணுமா?.. எங்களால அப்படி எல்லாம் இருக்க முடியாதுப்பா… என்றாள் ஷன்வி இலகுவாக…

ஆமா… அண்ணி… ஷன்வி சொல்லுறது கரெக்ட்… ரொம்ப டயர்ட் ஆயிட்டேன் நான் சிரிச்சு… போய் எனக்கு ஜூஸ் கொண்டு வாங்க… போங்க… என்றாள் மயூரி…

நீ கெட்ட கேட்டுக்கு அது வேறயாடி குரங்கே… என்றபடி வந்த அனு, அவளின் காதைப் பிடித்து திருகி இப்போ நீங்க எழுந்து ரெடி ஆகலை… நேரா போய் அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துடுவேன்.. எப்படி வசதி… என்று கேட்க..

அச்சச்சோ… அண்ணி வேண்டாம்… சொல்லிடாதீங்க… நான் போய் புடவை கட்டிட்டு வரேன்… என்றபடி மைத்ரி வேகமாக அவளிடமிருந்து உடையை வாங்கி கொண்டு செல்ல,

சே… இவ ஒருத்தி… சரியான பயந்தாங்கொள்ளி… இவளை… என்றபடி மயூரி எழ, ஷன்வி, அவளின் காதோரம், வேண்டாம்டி… அண்ணிங்க வேற கொலைவெறியில் இருக்காங்க… நாம போய் ரெடி ஆகுறது நல்லது… மைத்ரியை ராத்திரி பார்த்துக்கலாம்… இப்போ போய் ரெடி ஆகலாம்… வா… என்றபடி அவளிடம் சொன்னவள், கொடுங்க அதை என்று அனுவிடமிருந்தும் காவ்யாவிடமிருந்தும் புது உடையை வாங்கிக்கொண்டு சென்றனர் திட்டிக்கொண்டே…

ஷ்… அப்பா… மழை அடிச்சு ஓய்ந்த மாதிரி இருக்கு காவ்யா… இவளுங்களை எப்படி தான் சமாளிக்கப்போறானுங்களோ நம்ம தம்பிங்க… தெரியலை… ஹ்ம்ம்…

எனக்கும் அதுதான் கவலையா இருக்கு அனு… பாவம் தான் நம்ம தம்பிங்க… என்றவள், ஹேய்… எங்கேடி சாகரி… அவளை ஆளையே காணோம்… அவ எங்கே போயிட்டா?... இவங்க ரெடி ஆகுறதுக்குள்ளே அவளை ரெடி பண்ணியாகணுமே… என்றபடி சொல்லிக்கொண்டிருக்கையிலே,

நான் ரெடி அண்ணி… என்றபடி அவளின் முன் வந்து நின்றாள் சாகரிகா… இளம் பச்சையில் லேசான மஞ்சள் நிற பூக்களும், தங்கநிற சரிகையும், சிவப்பு வண்ண உடலும் கொண்ட பட்டுப்புடவையில் பார்ப்பவர் மீண்டும் ஒரு முறை நின்று திரும்பி பார்க்கும் வண்ணம் வந்து நின்றாள் சாகரிகா…

என் கண்ணே… பட்டுடும் போல இருக்கு… என்ற இருவரும், அவளை அணைத்துக்கொண்டனர்… மேற்கத்திய முறையில் அவள் அணிந்திருந்த விதம் அவளுக்கு மேலும் அழகு சேர்க்க.. அமைதியாக நின்றிருந்தாள் சாகரி…

ஆதர்ஷ்… இப்போ மட்டும் பார்த்தான்னா அவ்வளவுதான் சாகரி… எதற்கும் நீ எங்க கூடவே இரு… உன்னை அங்கே கூட்டிட்டு போற வரைக்கும்… சரியா?... என்று காவ்யா கேட்க..

போங்க அண்ணி… என்று சிணுங்கினாள் அவள்…

ஹேய்… இது வேறயா?... போதும்டி… எங்களாலேயே முடியலை.. பாவம் தான் ஆதர்ஷ் நிலைமை… இப்படி சிலை மாதிரி பொண்ணை பக்கத்துல வச்சிகிட்டு… என்று அனு இழுத்த போது,

வாவ்வ்வ்வ்வ்வ்வ்… ரிகா………. ரொம்ப அழகா இருக்கடி… என்றபடி மூவரும் அவளை அணைத்துக்கொள்ள,

ஹேய்… வாண்டுகளா… விடுங்கடி… புடவை எல்லாம் கசங்குது… விடுங்கடி அவளை… என்று காவ்யாவும், அனுவும் அம்மூவரையும் சாகரியிடமிருந்து பிரித்தனர்…

அண்ணி… இதெல்லாம் டூ மச்… உங்களையா நாங்க கட்டிப்பிடிச்சோம்… எங்க தோழியை தானே கட்டிப்பிடிச்சோம்.. அதுல உங்களுக்கு என்ன பொறாமை… என்றபடி மயூரி கேட்க,

சரியா சொன்னடி… இவங்க கட்டிப்பிடிச்சா மட்டும் புடவை கசங்காதாம்… நாம கட்டிப்பிடிச்சா மட்டும் கசங்கிடுமாம்… இதெல்லாம் ரொம்ப ஓவர் அண்ணி… என்றாள் மைத்ரி…

அதானே… நல்லா கேளு மைத்ரி நீ… ரொம்ப தான் பண்ணுறாங்க… இவங்க அலம்பல் தான் தாங்கலைப்பா… என்றாள் ஷன்வியும் தன் பங்கிற்கு…

மூன்று பேரும் பேசியதை கேட்ட இருவரும், போச்சு என்றபடி மெத்தையில் அமர,

என்னாச்சு அண்ணி… என்றபடி சாகரி இருவரிடத்திலும் கேட்க…

இல்ல ஆதர்ஷ் நிலைமை தான் பாவம்னு நினைச்சோம்… இப்போ தான் தெரியுது நாலு பேரு நிலைமையும் ரொம்ப பரிதாபம் தான்… நிஜமாவே… என்றனர் கோரசாக அனுவும் காவ்யாவும்…

அவர்கள் இருவரின் பேச்சிலும் முகம் சிவந்தவர்கள், அதற்கும் மேல் வாயாடவில்லை…

சாகரி மூவரையும் அணைத்துக்கொண்டு, மூன்று பேரும், எதற்கும் ஜாக்கிரதையா இருங்கடி… சரியா? என்றவள்… அண்ணி நீங்க எதற்கும், இவங்க கூடவே இருங்க என்றாள் அனுவையும் காவ்யாவையும் பார்த்தபடி…

சீ… போடி… என்றபடி… மூவரும் வெட்கப்பட… அங்கே கல்யாணக்களை மணப்பெண்களின் முகத்திலும் குடிகொண்டது அழகாய்….

டேய்… ஒரு ஷெர்வானி போட்டுகிட்டு வருவதற்கு இவ்வளவு நேரமாடா?... சீக்கிரம் வாங்கடா… என்றபடி புலம்பிக்கொண்டிருந்தனர் ஷ்யாமும், தினேஷும்…

அடடா… வந்துட்டோம்… வந்துட்டோம்… ஏன் இப்படி கூப்பாடு போடுறீங்க மாமா?... என்றபடி வந்தான் அவ்னீஷ்…

அதானே… நாங்க என்ன சின்ன குழந்தையா?... ரெடி ஆகி வரமாட்டோமா?... அதற்குள் இப்படி கத்தி ஏன் ஊரைக்கூட்டிறீங்க… என்றான் அங்கே தயாராகி வந்த முகிலன்…

டேய்… எதுக்குடா மாற்றி மாற்றி மாமாவை திட்டிட்டிருக்கீங்க?... என்னாச்சு மாமா?... என்றபடி சாவகாசமாக அங்கே வந்தான் ஹரீஷ்…

அப்ப்பா… மாப்பிள்ளைகளா… பரவாயில்லைடா… நேரமாச்சேன்னு நினைச்சதென்னவோ உண்மைதான்… ஆனா, பார்த்த உடனே பிடிக்குற மாதிரி ஜம்முன்னு இருக்கீங்கடா மூன்று பேரும்… மாப்பிள்ளை களை வந்துட்டுடா… சூப்பர் என்றபடி அணைத்துக்கொண்டனர் தினேஷும், ஷ்யாமும்…

சரி சரி… ட்ரெஸ் கசங்குது… போதும் விடுங்க… உங்களை விட நாங்க அழகா இருக்கோம்னு பொறாமைப்பட்டே வேணும்னே எங்களை புகழ்ந்து எங்க ட்ரெஸை கசக்க நீங்க போட்ட திட்டமெல்லாம் போதும்… போங்க…. என்றான் முகிலன் அவர்களை விலக்கிவிட்டு…

ஆமாண்ணா… சரியா சொன்னீங்க… இவங்க அப்படி பட்ட ப்ளானோட தான் இருக்காங்க என்றான் அவ்னீஷும்…

லூசுப் பயல்களா… உங்களை எல்லாம் திருத்தவே முடியாது.. என்ன கொடுமைனாலும் நினைச்சு தொலைங்க… என்றான் தினேஷ்…

ஆமாடா.. இவனுங்க போடுற ஃபிலிம் தாங்கலைடா உண்மையிலேயே… ரொம்ப தான் பண்ணுறானுங்க… என்றான் ஷ்யாமும்…

அடடா… சண்டை இழுத்து விட்டுட்டாணுங்களா? இவனுங்க… ஏண்டா டேய்… சும்மா தான் இருந்து தொலைங்களேன்டா… என்ற ஹரீஷ்…

இவனுங்களை விடுங்க மாமா… ஆதி ரெடி ஆகிட்டானா?... நேரமாச்சு தானே… அவனைத் தேடலாம் வாங்க என்றான்…

நீ சொல்லுறது தான் ஹரி சரி… வா போகலாம் என்றனர் தினேஷும், ஷ்யாமும்…

யாரைத் தேடி போறீங்க… என்றபடி அங்கே வந்த ஆதர்ஷை மூன்று பேரும் விடாமல் அணைத்துக்கொண்டனர் பட்டென்று…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.