(Reading time: 46 - 92 minutes)

ரீஷின் பார்வை அவளை வா என்று அழைக்க, உள்ளே வந்தவள் மெல்ல அவனருகில் வந்து அவன் காலில் விழப்போனாள்…

அவன் அவளைத் தடுத்து ஹேய்… ஸ்ரீ என்ன பண்ணுற?... என்று கேட்க… எல்லோரிடத்திலும் ஆசீர்வாதம் வாங்கிட்டேன்… என் புருஷன் கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கணுமே… அதான்…. என்றபடி அவனைப் பார்த்தவளை… காதலுடன் பார்த்தான் அவன்…

ஓ… எல்லாருடைய ஆசீர்வாதமும் உனக்கு இனியும் எப்பவும் இருக்குமடா… என்றவனைப் புரியாமல் பார்த்தாள் அவள் என்ன சொல்லுகிறான் இவன் என்று…

நாம எல்லோரும் இனி சேர்ந்தே இருக்கப்போகிறோம்… கல்யாண வீட்டில் இருந்த கலகலப்பு இனி நாம் அனைவரும் இருக்கப் போகும் வீட்டிலும் எப்போதும் இருக்கும்டா… என்றவனிடம்

நிஜமாவா சொல்லுறீங்க ஹரீஷ்… எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?... என்று பூரிப்பில் சொல்லியவளிடம், எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்குடி… உன்னை இப்படி அருகில் பார்க்க என்றான் அவன்…

அவன் வார்த்தைகளில் சிவந்தவள், அவனை விட்டு விலகி சற்று தள்ளி நின்றாள்…

ஏண்டி விலகிப்போற?... உனக்கு என்னைப் பிடிக்கலையா?... என்று அவன் கேட்க…

அவள் வேகமாக வந்து, உனக்கு கொஞ்சமாச்சும் எதாவது இருக்காடா?... இன்னைக்கு என்ன நாள், நம்ம கல்யாண நாள்… அதுவும் முதல் நாள்… கொஞ்சம் வெட்கப்பட்டு தள்ளிப் போனா பின்னாடியே வந்து வெட்கத்தைப் போக்கணும்… அதை விட்டுட்டு பிடிக்கலையான்னு என்னடா கேள்வி உனக்கு?... என்றவள் அவன் சட்டையை பிடித்து,

இனி இப்படி கேட்டுப்பாரு… அவ்வளவுதான்… ஆளைப் பாரு ஆளை… பிடிக்கலையாம்… நீ பார்த்தியா?... மூன்று நாளா எப்போடா உன் பக்கத்தில் வந்து உன் தோள் சாஞ்சிப்போம்னு நான் ஏங்கினது எனக்குத் தான் தெரியும்… அது தெரியுமாடா உனக்கு?... என்று முகம் சுருங்க கேட்டவளிடம்,

அப்போ தெரியாது தான்… ஆனா இப்போ தெரிஞ்சிட்டே என்றான் அவன் புன்னகைத்தபடி…

எதற்கு இவன் சிரிக்கிறான்… என்று கோபமாக முறைத்தவள், என்ன சிரிப்பு உங்களுக்கு இப்போ என்று கேட்க…

வெட்கத்தில் விலகிபோனியே… இப்போ எங்கே போச்சு அந்த வெட்கம், கூச்சம், எல்லாம்?... என்று எதிர் கேள்வி கேட்க… அவள் முகத்தில் மீண்டும் வெட்கம் குடிகொண்டது… அவன் சட்டையைப் பிடித்திருந்த கரங்களும் சற்று தளர,

அவன் கரம் அவளது கரத்தை இறுக பற்றியது… உன் வெட்கத்தைப் போக்கத்தான் நான் உனக்கு என்னைப் பிடிக்கலையான்னு கேட்டேன் என்று சொல்லியவன்

ஹ்ம்ம்… பிடிக்கலையான்னு கேட்டவுடனே எவ்வளவு கோபம் வருது என் ஸ்ரீக்கு?... என் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்குற… ஹ்ம்ம் இது இரண்டாவது தடவைல்ல… நீ என் சட்டையை இப்படி பிடிக்கிறது…

ஆமா… உண்மையிலேயே உனக்கு என் சட்டையைப் பிடித்திருக்கா?... இல்லை என்னைப் பிடித்திருக்கா?... என்று கேட்க அவள் கோபமாக முறைப்பது அவனுக்கு தெரிந்தது…

அவளை மேலும் சீண்ட எண்ணியவன்,

எனக்கென்னமோ உனக்கு என்னை விட, என் சட்டையை தான் ரொம்ப பிடிச்சிருக்குன்னு தோணுது… ஏன்னா, நீ அதை தான் ஆசையோட பிடிக்கிற… என்னைப் பிடிக்கலையே… என்று அவன் சொல்ல…

அவனின் அருகே விரைந்து வந்தவள், அவன் முகம் பற்றி அவன் இதழில் அழுத்தமாக முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு விலகியவள், எழுந்த வெட்கத்தை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு,

இப்பவும் சொல்லுங்களேன்… எனக்கு உங்களைப் பிடிக்கலை… உங்க என்று பேசிக்கொண்டிருந்தவளின் இதழை சட்டென்று சிறை செய்தான் ஹரீஷ்…

நீண்ட நேர முத்தத்திற்குப் பின் அவளை விடுவித்தவன், அவளது முகத்தைப் பார்க்க அவளோ அவனைப் பார்ப்பதற்கு வெட்கம் கொண்டாள்…

ஸ்ரீ என்னைப் பாரு… என்றவன் அவளை அருகே அழைக்க, அவள் மௌனமாக சென்றாள்…

இதற்கு முன் யாராவது இப்படி ஒரு பெண்ணின் மேல் பைத்தியமாய் ஆவாய் என்று சொல்லியிருந்தால், நான் ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன்… ஆனால், என்று உன்னைப் பார்த்தேனோ அன்றிலிருந்து உன்னிடம் என்னை தொலைத்துவிட்டேன்… என்று உன்னை அணைத்து முத்தமிட்டேனோ அன்றே உன்னில் கரைந்து விட்டேன்… இன்று உன்னில் முற்றிலும் என்னை இழந்து நிற்கிறேண்டி… ஐ லவ் யூ ஸ்ரீ…. ஐ லவ் யூ எ லாட்…. என்று அவன் அவள் விழி பார்த்து சொல்ல…

அவனை ஒரு கணம் கூட தாமதிக்காது அணைத்துக்கொண்டாள் மைத்ரி…

ஐ லவ் யூ டூ ஹரீஷ்… என்றவள் அவனில் புதைந்து விடுவது போல் அவனை அணைக்க, அதற்கு மேலும் பொறுமையைக் கட்டிக்காக்காமல் அவளை எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு முரட்டுத்தனமாக அணைத்தான் ஹரீஷ்…

நிலவு மங்கை தனது காதலனைத் தேடி வானில் உலவு வந்து கொண்டிருந்த அந்த இரவு வேளையில்,

சாகரி ஆதர்ஷின் அறைக்குள் நுழைந்து மெதுவாக கதவை தாளிட்டுவிட்டு, நிலம் பார்த்திருந்தவள், அவன் அரவம் தென்படாது மெல்ல முகம் நிமிர்த்தி பார்க்க, அவன் தூரத்தில் அந்த வானத்தைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான் பால்கனியில்…

அவள் அருகில் வருவதை அவள் கொலுசொலி தெரிவிக்க, சட்டென்று திரும்பியவன் அவளைப் பார்த்தான்…

விழிகளில் அலைப்புறும் காதலுடன் அவளை பார்க்க அவன் விழிகள் துடிக்க, அவள் சற்றும் நிமிரவில்லை…

சீதை என்று அவன் மௌனமாக அழைக்க…

நான்… நான்… உங்களிடம் ஒன்று கேட்கணும்… என்றாள்… அவள் சற்றே தயங்கியபடி…

என்னடா… கேளு… என்னிடம் என்ன தயக்கம் என்றான் அவனும் உடனேயே….

இல்ல… வந்து… நீங்க…. எனக்கு முதன் முதலில் கொடுத்த பரிசு வேண்டும் எனக்கு இப்போ… அதை நான் உங்களிடம் திருப்பிக்கொடுத்தது என் தவறுதான்… ஆனாலும் மனதார அந்த தவறை செய்யவில்லை… வேறு வழியில்லாமல் தான் செய்தேன்… எனக்கு அது வேண்டும் ராம்… ப்ளீஸ்… அதை தருவீங்களா?... என்று அவள் கேட்டு முடிக்கும்போது

இந்தாடா… குட்டிமா… வாங்கிக்கோ… உன்னோடதுதானே இது… உனக்கு உரியதை என்னிடம் கேட்க எதற்கு இத்தனை தயக்கம் என்றவன், நீ எதற்காகவும் என்னிடம் விளக்கம் கூற வேண்டாம்டா… எனக்கு உன் மனது புரியும்… என்னவளின் இதயம் பேசும் வார்த்தை எனக்கு கேட்கும்டா… என்று அவன் சொல்ல…

விழிகளில் நன்றியுடன் அவனை ஏறிட்டவளை, நன்றி நமக்குள் வேண்டாம்டா என்ற பதில் பார்வையுடன் அவன் அவளைப் பார்த்தான்…

அவள் கை நீட்ட, அவன் அவள் கேட்டதை அவளிடம் கொடுத்தான்…

இப்போ வந்திடுறேங்க…. என்றவள் அங்கிருந்த குளியலறைக்குள் நுழைந்தாள்…

பத்து நிமிடங்களுக்குப் பிறகு, குளியலைறையின் அருகிலிருந்த உடை மாற்றும் அறையிலிருந்து வெளிவந்தவள், கணவனைத் தேடினாள்…

அவன் மீண்டும் அந்த பால்கனியில் நின்றுகொண்டிருப்பதை கண்டு கொண்டவள், அவனருகில் சென்றாள்…

அவள் கால் கொலுசொலி அவள் வருகையைத் தெரிவிக்க, திரும்பியவன் ஸ்தம்பித்து போனான்…

சீதை…. நீ… என்றவனுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் கொஞ்சமும் வரவில்லை…

புன்னகை மட்டும் அவன் இதழ்களில் நிறைந்து நின்றது பரவி…

நான் செய்வதை தடுக்காதீர்கள் என்ற கெஞ்சுதல் அவள் விழிகளில் தெரிய, என்னடாம்மா… என்ற கேள்வியுடன் புன்னகை மாறாமல் அவளைப் பார்த்திருந்தான் அசையாது….

அவனருகில் வந்தவள், மெல்ல அவன் பாதம் பணிந்தாள்… அவளின் விழி நீர் அவனது பாதம் தொட, அவன் வேகமாக அவளை எழுப்ப முயன்ற நேரம், அவள் தலை நிமிர்ந்தாள்…

இந்த சிரிப்பை என் ராம் முகத்தில் பார்க்கணும்னு தான் இந்த புடவையை அணிந்தேன் இன்று… என்னவனுடன் வாழ்க்கையில் இணைந்து நிற்கும் இந்த முதல் நாளில் என்னவனுக்குப் பிடித்தமான புடவையை அணிய விரும்பினேன்… அதுவும் முதன் முதலில் என் ராம் எனக்கு கொடுத்த புடவையாகத்தான் இருக்க வேண்டுமென்று எண்ணினேன்… அதனால் தான் ராம்… என்றவள் விழிகள் மேலும் கலங்க…

அவன் வேண்டாம்டா என்று தலை அசைக்க… என்னை மன்னித்துவிடுங்க ராம்… உங்களை எவ்வளவோ கஷ்டப்படுத்திவிட்டேன்… என்னை மன்னிச்சிடுங்க… என்றவள் அழுவது என்னவருக்குப் பிடிக்காது தான்… ஆனாலும் என்னால் இன்று அழாமல் இருக்க முடியவில்லை என்று கூறியபடி அவனைப் பார்க்க, அவன் அதற்கு மேல் தாமதிக்காது அவளைத் தொட்டு எழுப்பினான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.