(Reading time: 24 - 47 minutes)

12. என்னைத் தந்தேன் வேரோடு - Anna Sweety

வியனுக்கு சமீப காலமாக ஒருவித தவிப்பு. மிர்னாவுடன் இப்படி உடன் பயணம் செய்ய வேண்டிய சூழலில் காதலை பகிர்ந்து கொள்வதால் தேவையற்ற மன சலனங்கள் ஏற்படும் அது இருவருக்கும் எந்த வகையிலும் நன்மை செய்ய போவதில்லை என்ற நம்பிக்கை பலமாக இருந்தாலும், மிர்னா இப்பொழுதெல்லாம் இவனை அவ்வப்பொழுது கிண்டலாகத்தான் எனினும் வியன் சார் என்று அழைப்பதும், தன் திருமணத்திற்கு ஆயத்தமாவதாக சொல்லி சமையல் கற்க சென்றதும், உங்களுக்கு வேலைக்கு ஆள்வைக்க முடியும், என்னால் முடியாதே என்று இவர்களது வாழ்க்கையை இரண்டாக பிரித்து கூறியதும், முன்பு போல் அந்த யாசக பார்வையற்ற அவள் விழி மொழிகளும், இவன் நிறைவேற முடியாத காதல் என்பதாய் அவள் உணர்ந்து தன்னை விலக்குகிறாளோ என்ற சிந்தனையை இவனுக்குள் விதைத்துக்கொண்டு இருந்தது.

இவர்களது காஃபி பிஸினஸில் கலோன் சிட்டி அலுவலகம் முக்கிய இடம். இவன் திடுமென பொறுப்பிலிருந்து விலகியதால் இங்கு பல குளறுபடிகள்.

 இவன் தந்தை எத்தனையைத்தான் கவனித்துக்கொள்வார்? அதுவும் இதுவரை இவன் பார்த்துக்கொண்டிருந்தது இது. அவருக்கு பெரிய தொடர்பு எதுவுமின்றி நடந்து கொண்டிருந்த தொழில், வயதான காலத்தில் திடீரென அவர் தலையில் ஏற்றி வைத்தால் அப்பா எவ்வளவுதான் சமாளிப்பார்?

Ennai thanthen veroduஅதனால் வந்ததிலிருந்து இவன் ஒஃபிலியா வழியாக தன் தந்தையின் தொழிலுக்கு உதவ முயன்று கொண்டிருந்தான். ஒஃபிலியா பள்ளி காலம் முழுவதும் இவனது க்ளாஸ்மேட். ஃப்ரெண்ட். அதன்பின்பும் இவர்களது கலோன் நிறுவனத்தில் பெரிய பொறுப்பிலிருப்பவள்.  மிகவும் நம்பிக்கைக்கு உறியவள் மேலும் இவனது நன்மையை நாடுபவள்.

ஆக இவனது பெரும் பொழுதுகள் ஒஃபிலியாவின் லாப்டாப்போடு கழிய, மிர்னாவை பார்க்கும் தருணங்களே குறைந்து போக, அதோடு அவளது இந்த விலகல்களும் சேர்ந்து அவனுக்குள் காதலின் வலி அலைகள்.

ஒருவகையில் வியன் சராசரி அனைத்து ஆண்மக்களையும் போல அம்மா பிள்ளை. கல்லூரி படிபிற்கென முதலில் தாயை பிரிந்த நாளிலிருந்து இந்த ஊர் கட்டுபாடு இடையில் வரும் வரையும் அவன் தன் தாயிடம் தினமும் அரைமணி நேரமாவது அலைபேசியில் அரட்டை அடிக்காமல் இருந்தது இல்லை.

இப்பொழுதும் கவினிடம் தன் அம்மாவை பற்றி பேசுவான்தான், ஆனாலும் இப்பொழுது சில நாட்களாக அவனுக்கு அவன் அம்மாவை மனம் தேடியது. அதுவும் குறிப்பாக மிர்னா சமையல் கலையில் கைவைத்த நாளிலிருந்து. உங்க அம்மா செய்த மாதிரி இருக்குதா என்று அவள் கேட்பது ஒரு காரணமென்றால், சில நேரங்களில் அவள் சமையல் அவன் தாயினுடையது போலிருக்கிறதும் காரணம்.

வினிடம் தன் மன ஓட்டங்களை பகிர்ந்தபோது, அவன் அம்மா அப்பாவுடன் ஈரோப் ட்ரிப் போயிருப்பதாய் சொன்னான். அந்த வகையில் வியன் கலோன் அலுவலகத்திற்கு தந்தை வருவார் என்று எதிர்பார்த்தான்.

ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. ஒஃபிலியா தான் உள்ளே நடப்பது அத்தனையும் சொல்கிறாளே, அவர் அங்கு வரவே இல்லை.

அப்படியே வந்தால் மட்டும் இவன் போய் பார்க்கமுடியுமா என்ன? வார்த்தை மீறுவதை தந்தையே விரும்ப மாட்டார். இவனுக்கும் அதில் உடன்பாடு இல்லை.

உண்மையில் வியனின் தாய் நீலா கலோன் வந்திருக்க, தந்தை மனோகர் ஈரோப்பிலிருந்த மற்ற அலுவலகங்களை பார்வையிட சென்றிருந்தார்.

ஒஃபிலியா மூலம் அலுவலக தகவல்கள் அனைத்தும் வியனுக்கு செல்லும், இவ்வளவு அருகிலிருந்தும் பார்க்க முடியவில்லையே என்று அவனுக்கு தோன்றும் என்றுதான் மனோகர் கலோன் வராமல் மற்ற நாடுகளுக்கு சென்றது.

இப்படி ஒருவருக்கொருவர் உதவி செய்வதாக நினைத்து பல திசைகளில் பிரிந்திருக்க, அதில் அவன் அறிந்த விஷயங்களை ஆற்றின் நீர் பரப்பை பார்த்தபடி  வியன் மனதுள் அலசிக்கொண்டிருக்க,

வழக்கம் போல் இவன் அருகில் நின்றுகொண்டு ஒஃபிலியாவிடமும் மிஹிரிடமும் எதையோ பேசி சிரித்துக்கொண்டிருந்த மிர்னா தண்ணீருக்குள் விழுவாள் என்று இவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அதை இவன் உணர்ந்த நொடி மிர்னாவை காப்பாற்றவென மிஹிரும் ஆற்றிற்குள் குதித்திருந்தான்.

அவ்வளவுதான் வேகமாக அந்த பெரிய ட்ரோலர் வகை படகின் போர்சுகீஸ் ப்ரிட்ஜிலிருந்து லைஃப் போட் இருந்த பகுதிக்கு ஓடினான் வியன். அவனும் இப்பொழுது நீருக்குள் குதித்தால் மூன்று பேரையும் வெளியே கொண்டுவரப்போவது யாராம்?

மிர்னாவிற்கு நன்றாக புரிந்தது தன்னை யாரோ வேண்டுமென்று தள்ளிவிட்டார்கள் என. ஆனால் யார்? ஏன்?

நம்மளபோய் இந்த ரேஞ்சுக்கு தேடி தேடி வந்து லவ் பண்றது யாருப்பா...? மூஞ்ச கொஞ்சம் காமிங்களேன்...க்யூரியாசிட்டி தாங்க முடியலை பாருங்க... நம்ம பாட்ட கேட்ட யாராவதா இருப்பாங்களோ...?

விழுந்து கொண்டிருந்தபோது அவளது நினைவு இப்படித்தான் இருந்தது.

அதற்க்குள் நீர் தொட்டது அவள் தேகம். ஓராயிரம் ஊசி குத்தல்கள் ஒரே நேரத்தில். சட்டென மூச்சு நின்றுவிடுவது போல் ஓர் நெஞ்சடைப்பு. உடல் உதறத்தொடங்கியது. படுவேகமாக அவள் உடலின் உயிர்பிடிப்பை, உறுதியை, சக்தியை உறிஞ்சியது கொடுங் குளிர் நீர்.

நீரும் ஆறும் அவளுக்கு புதிதல்லதான். ஆனால் இந்த குளிர்ந்த நீர் அவள் நினைவிற்கும் மேலாய் கொடூரமாய்..........

நீந்த முடியும் என்று தோன்றவில்லை. ஃப்ளோட்டிங் ஜாக்கெட் என்னவாயிற்று? இவளை மிதக்க வைக்க வேண்டிய அது அவளுடன் மூழ்க மும்முரபடுவது எதனால்?

 கைகால்கள் மரத்துபோக தொடங்க, அருகில் வந்திருந்தான் மிஹிர்.

 மிர்னா நிச்சயமாக வியனை எதிர்பார்த்திருந்தாள்.

“ஜ...ஜஸ்ட் ஹோ...ஹோல்ட் ஆ...ஆன் மி..மிர்....வி..வியன் எ..எப்டியும் வ....வந்துடுவார்...” அவன் உதடுகளும் குளிருடன் கூத்தாடிக்கொண்டு இருக்க,  இவள் மூழ்காதவாறு, மரக்க தொடங்கி இருந்த இவளது கையை  பிடித்த மிஹிர்...

“ஃப்..ஃப்ளோட்டிங் ஜா...ஜாக்கெட்...??” என்றவன் இவளை தன் முழுபலம் கொண்ட மட்டும் இரு கைகளால் தூக்கி தன் தலைக்கு மேல் பிடித்தான்.

அது எத்தனை அசாத்தியம் என்பது மிர்னாவிற்கு நன்றாக புரிகிறது. காரணம் குளிர் நீர் மனு தேகத்தின் அத்தனை வல்லமைகளையும் எத்தனை இலகுவாய் கொள்ளையாடி விடுகிறது என்பதை அவளும் உணர்ந்து கொண்டிருக்கிறாள் தானே...

மிஹிர் செயல் முழுவதும் ஆன்ம பலம்...உள்ளத்தின் உறுதி..

கமான் எம் எம் ....பக் அப்.....யூ கேன் டூ இட்...

“வி..விடுங்க மி..மிஹிர் ஐ...ஐ கே...கேன் மே...மேனேஜ்...உ...உங்களுக்கும்....க..கஷ்டம்....”

“யூ...ஹவ் டூ சர்வைவ்... தண்ணியவிட்டு வெளிய இருந்தாதான் பாடில இருந்து ஹீட் லாஸ் ஆகுறது குறையும்...”

அவன் சொன்ன விதத்தில் அதைப் பற்றி பேசுவது ப்ரயோஜனமற்றது என்று தோன்றிவிட்டது மிர்னாவிற்கு.

இது ஒன்று விளையாட்டு வீர்ர்களின் இந்த போர்குணம்....இயற்கையை கூட வென்றுவிடும் வல்லமை கொண்டது.... அல்லது அப்படி பட்ட அசாத்தியர்கள் தான் விளையாட்டில் ஜொலிக்கிறார்களோ...?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.