(Reading time: 24 - 47 minutes)

ரு பெண்களின் மனமுமே இனிமை நிலைக்கும் வந்திருந்தது. அதோடு மிர்னா கோடிட்டு சொல்லாமலே வியனும் ஒஃபிலியாவும் தமிழில் பேசிக்கொள்ள ஆரம்பித்திருந்தனர்.

ரவேற்பறை, டைனிங், கிட்ச்சன் என அனைத்தும் இணைந்து இருந்த அந்த அறையின் ஒரு ஓரத்தில் ப வடிவில் உள்வாங்கி அமைந்திருந்த சிறு லாஞ்சில் இருந்தது கைகழுவும் வாஷ் பேசின்.

முதலில் கைகழுவ சென்றது ஒஃபிலியாதான். அவளை அடுத்து சென்று நின்ற வியனிடம் சொன்னாள் “சும்மா சொல்ல கூடாது பாம் ஷெல் தான் உன் ஆளு...ரிபண்டன்ஸ் பார்டி எனக்கு...  புரபோஸ் பண்ற பார்டி உனக்கா... இதுக்கு மேல அவ உன்ட்ட என்ன சொல்லனும்னு எதிர் பார்க்கிற...? பேசாம ப்ரோபோஸ் பண்ணிடேன் நீயும்....”

“ப்ச்.....அதெல்லாம் டைம் பார்த்து நாங்க பண்ணிப்போம்...நீ சும்மா இழுத்துவிடாத...இந்த பார்டிக்கு நான் ஒப்புக்கு சப்பாணினு அவளே தான் சொன்னா”

“அப்டியா...அப்ப  என்னை இம்ப்ரெஸ் பண்ணவா இந்த பாவடை தாவணி.....?”

அப்பொழுதுதான் அங்கு வந்த மிர்னா இருவருக்கும் நடுவில் தலையை மட்டும் நீட்டிக்கொண்டு அவர்களைப் போலவே ரகசியம் பேசும் சிறு குரலில் “இதுதான் உங்க டவ்ட்டா.....என்ட்ட இருக்கிறதுலயே இதுதான் புதூஊஊஊ ட்ரெஃஸ் அதான் போட்டேன்....” சொல்லிவிட்டு இருவருக்கும் இடையில் நுழைந்து வாஷ் பேசினில் சென்று கை கழுவினாள்.

குனிந்து வாய் பொத்தி சிரித்தபடி ஒஃபிலியா கிளம்பிச் செல்ல, கை கழுவி முடித்த மிர்னாவும் திரும்பி நடக்க தொடங்க வியனும் வந்த வேலையை முடித்துவிட்டு திரும்பினால் மிர்னா இன்னும் அங்கு தான் நின்று கொண்டிருந்தாள்.

ந்த உடை அவளுக்கு வாங்கி கொண்டு வந்திருந்தது வியனின் அம்மா நீலா. இன்றுதான் அதை இவள் அணிந்திருந்ததால் அவன் வாயால் அதை பற்றி ஒரு வார்த்தையாவது கேட்டுவிட வேண்டும் என்று ஒரு ஆசை இவளுக்குள்.

“என்ன வேணும் மிர்னா...?” 

மிர்னாவின் இன்றைய நடத்தையில் மிகவும் மனம் குளிர்ந்து போயிருந்தது யார் என்றால் அது வியன் தான்.

சமீப காலமாக தன்னை விட்டு விலகுகிறாளோ என்றிருந்த அவனின்  அத்தனை தவிப்புகளையும் துடைத்தெறிந்திருந்ததே அவளது நடவடிக்கை.

அதோடு தப்பென்று உணரும் நேரம் அதை உரியவரிடம் மனம்விட்டு நேரடியாக பேசும் அவள் தைரியம், அதை மாற்றிக்கொள்ள வகை தேடும் சுபாவம்...எல்லாம் அவனுக்குள் சர்க்கரை பொங்கலும்.. தேன்மழை சிந்தலும்...

ஆனாலும் மற்ற வகையில் ஒரு ஜாக்கிரதை உணர்வு...கண்ணறிவிப்பாய் மாத்திரம் இருந்த அவள் காதல் அறிவிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக  வெளியரங்கமாகி...இப்பொழுது இந்த நிலையில் வந்து நிற்கிறது. இதில் வாய்விட்டு இவனிடம் நேரடியாக அவள் கேட்டேவிட்டால்....??

மறுத்து அவளை வருத்தவும் இவனுக்கு பிரியமில்லை, மறுக்காமல் ஏற்கவும் இது தருணமில்லை.......

ஆக அவளது வால் தனங்களை இந்த விஷயத்தில் இதோடு அவளை நிறுத்த வைத்தாக வேண்டும்..

ஆக அஃபீஷியல் டோனிலேயே அவன் என்ன வேண்டும் மிர்னா என கேட்டான்.

அவன் டோனிலே அவளுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் வாய்விட்டே கேட்டாள்.

“இந்த ட்ரஸ் எப்டி இருக்குது...?”

இன்று வீட்டின் கதவை திறந்ததும் எதிரில் அந்த குறை ஒளியில், நின்ற அவளைப் முதன் முதலில் பார்த்த கணத்தில் அவன் மனதில் வந்த நினைவு ஞாபகம் வந்தது.  பெண்மையின் மொத்த பதிவாக அப்பொழுது தோன்றியவள் இந்த நிமிடம் முகமெங்கும் ஏக்கமும் ஆவலுமாக பலூன் கேட்க்கும் பட்டு பாப்பாவின் உடல் மொழியில்......மூன்று வயது சிறு குழந்தையின் முக மொழியில்.....

எப்படி கட்டுபடுத்துவதாம் இவளை? பெண் என்னும் பேரருவி, பொங்கும் மா கடல்....குழந்தையாகி குப்புற தள்ளி, குமரியாகி கோலேச்சும்....மாயரூபி....

“இதெல்லாம் லேடீஸ்ட்ட கேளுங்க மிர்னா....நான் என்ன சொல்றது...?”

“சரி எடுத்து கொடுத்த ஆண்டிட்டிடயே கேட்டுகிறேன்....அவங்க மகனை என்னை கல்யணம் செய்ய சொல்லி கேட்டாங்க....கஷ்டபட்டு சமாளிச்சு அனுப்பி வச்சிருக்கேன்...., இப்ப திரும்பவும் அவங்கள பார்த்தேன்னா.....பழையபடி கல்யாண பேச்சு பலமா எடுப்பங்களே....பேசாம அவங்க சொன்ன ஐடியாவையே கன்சிடர் பண்ணலாம்னு நினைக்கிறேன்....வாட் யூ சே?....”

வனது விலகலான பதிலில் அவனை வம்பிழுக்க தோன்றிய வேகத்தில் வியனை கிண்டல் செய்ய சொல்லிய வார்த்தைகள் தான் அவை. அதை வெறும் கிண்டலாக அவன் எடுத்துக்கொள்வான் என்றுதான் அவளும் நினைத்தாள். ஏனெனில் அவளுக்கு அதை பேசுவதில் எந்த மன உறுத்தலோ நெருடலோ இல்லை. உள்ளுக்குள் அவள் அவனைத்தானே நினைத்து பேசிக்கொண்டிருக்கிறாள்.....

ஆனால் அவள் எதிர்பாராத விதமாக அவளது கையைப் பற்றினான் வியன்.

முன்பு அவன் ஊரில் வைத்து இவள் கரம்பிடித்த அந்த உரிமைப் பிடி.

இவள் முகமுமே மாறிற்று...என்னவாயிற்று? இப்பொழுது இதன் அவசியம் என்ன?

அவன் நடக்க அந்த நடைக்கு ஈடாக இவள் கால்கள் நடக்க, மனம் மத்தளம்.

பக்கத்திலிருந்த அறைக்குள் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்த்தினான்.

இவள் முகம் பார்த்தபடி இவள் முன் சற்று கால் மடக்கி அமர்ந்தான். எல்லா செயலிலும் ஒருவித ஆளுமை.

“என்னாச்சு வியன்?”

இவள் கண்களை குத்தி கிழித்துக்கொண்டிருந்தது அவனது பார்வை.

“எனக்கு எல்லா நேரமும் சந்தோஷமா ஜாலியா இருக்றது பிடிக்கும்...தப்புதான் செய்ய கூடாது....  மத்தபடி எதுலனாலும் விளையாடலாம்... “

“ம்”

“அதே மாதிரி விளையாடக் கூடாத இன்னொரு விஷயம் இருக்குது....”

“ம்?”

“நம்பிக்கை.....ஃபெய்த்....”

“..............”

“நம்பிக்கைங்கிறது ஃப்ரீ கிஃப்ட் கிடையாது....அது அதாவே வந்துரும்னு சொல்றதுக்கு....அது நாம ஸ்டெப் பை ஸ்டெப் புல்ட் பண்றது....உனக்கு என் மேல நம்பிக்கையை நான் தான் எழுப்பி கட்டனும்...அதே மாதிரி....எனக்கு உன் மேல நம்பிக்கையை நீ தான் கட்டனும்.... அதை கட்றது பல நாள் வேலை... கலைக்கிறது ஒரு நொடி காரியம்...”

“சாரி....நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன்....” இவள் குனிந்து கொண்டு முனங்க,

“ என்ன விளையாட்டு இது....? நீ போட்டிருக்கிறது புது டிரஸ்....இங்க வாங்கி இருக்க வழி இல்ல....சோ உன் சமையல்கார ஆண்டி தந்திருக்கனும்.... அவங்கள மட்டும் தான எனக்கு தெரியாம பார்த்துகிட்டு இருக்க....அவங்க பையனுக்கு பொண்ணு கேட்டாங்கன்னு சொல்ற.... உன் முழியிலேயே தெரியுது அது உண்மைனு....நீ ஏதோ சொல்லி சமாளிச்சு அனுப்பி வச்சிருக்க.... எனக்கே தெரியாம என் வீட்டுக்கு வந்து எங்க வீட்டு பொண்ணை, பொண்ணு கேட்கிற அளவுக்கு அவங்களுக்கு தைரியம் வந்துட்டு என்ன...?

இதுல இத வந்து என்ட்ட ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்க.... இதுக்கு நான் சிரிக்கனும்னு வேற எதிர் பார்க்கிற...?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.