(Reading time: 32 - 63 minutes)

" ம்ம்ம்ம் ஆமாங்க .,.ரொம்ப நல்ல பொண்ணு "

" அடடே பழகின ஒரு நாள்லயே நல்ல பேரு வாங்கிட்டாளா  அந்த பொண்ணு ! " என்று மனைவியை ஆராயும் படி பார்த்தார்  நாராயணன்..

" என்ன அப்படி பார்க்கறிங்க ?"

" உன்னைத்தான் பார்க்கிறேன் .. நீ என்ன யோசிக்கரன்னு யூகிக்க முயற்சிக்கிறேன் " கணவனின் முகம் பார்க்காமல் தலை குனிந்து கைகளில் இருந்த வளையலை உரசியபடியே பதில் அளித்தார் லக்ஷ்மி..

" என்னங்க, நமக்கு கல்யாணம் ஆகி 30 வருஷம் கிட்ட ஆச்சுல.. இத்தனை வருஷத்துல என்னை கேள்வி கேட்காமலேயே என்னை புரிஞ்சுகிட்டவர் நீங்க .. என் முகம் பார்த்துதான் என் மனசை நீங்க புரிஞ்சக்கனும்னு இல்லை .. பசங்க முன்னாடி இப்படி பார்த்து வைக்காம பேப்பர் படிங்க " என்று சொல்லிவிட்டு வெட்கப் புன்முறுவலுடன்  சமையலறைக்குள் நுழைந்தார்  திவ்யலக்ஷ்மி.

அங்கு சுவாரஸ்யமாய் கதிரை பேட்டி  எடுத்து கொண்டிருந்தாள் காவியா.. சமையல் அறையில் சுவரருகில் சாய்ந்து அமர்ந்து கொண்டு கேரட்டை மைக் போல அவனருகில் கொண்டு வந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்..

" சொல்லுங்க மிஸ்டர் கதிர் உங்களுக்கு சமையல் ஆர்வம் எப்படி வந்திச்சு ?" ..பக்கத்தில் நின்றிருந்த முகில்மதியை  ஓரக்கண்ணால் பார்த்தவன்,"என் அன்புத் தங்கச்சி மூலமாகத்தான் எனக்கு சமையலில் ஆர்வம் வந்திச்சு "  என்றான்..

" என்னடா இவனுக்கு அதிசயமா நம்ம மேல பாசம் வருதே ?" என்று யோசித்தபடியே இடுப்பில் ஒருகை வைத்துக் கொண்டு அவனையே தீர்க்கமாய் பார்த்தாள் ..அதை கவனித்தவன் நமட்டு சிரிப்புடன் மீண்டும் கூறினான் ..

" எஸ் என் சமையல் திறனுக்கு காரணமே என் அன்பு தங்கச்சிதான் "

" ஓஹோ அப்படியா செப் ?இதை இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன் "

" என் குரங்கு தங்கச்சி ஒரு நாள் சாம்பார் வைக்கிறேன் பேர்வழின்னு மஞ்ச கலர்ல எதையோ சமைச்சு எங்களை சாப்பிட வெச்சா "

" அய்யயோ அப்பறம் ?"

" அப்பறம் என்ன, அதை சமைச்சு ரெண்டு நாள் உடம்பு சரியில்லாமல் போயி , அப்போதுதான் ஒரு எதார்த்தத்தை உணர்ந்தேன் .. என் அம்மா சமையலில் புலி .. அவங்களுக்கு பிறந்ததே இவ்வளவு கேவலமா சமைக்கிதே, இதுல நான் கட்டிக்க போற மகாராணி எப்படி சமைப்பாளோன்னு  பயம் வந்துடுச்சு .. அதான்  தற்காப்புக்காக நானே  சமையல் கலையை கத்துகிட்டேன் " என்றான் .. காவியதர்ஷினியோ ரோஷமாய்

" அதெல்லாம் சமைக்க தெரியும் " என்றாள் .. அவள்  உளறுவதை சரியாய் கவனிக்காமல்

" உனக்கு சமைக்க தெரியலாம் காவியா, ஏன்னா நீ தனியா இருக்கியா உனக்காக  நீ சமைச்சுத்தான் ஆகணும் .. ஆனா இப்போ எல்லாம் சமையல்ன்னா அது பொண்ணுங்க வேலைதானான்னு போர்க்கொடி தூக்குற பொண்ணுங்க எவ்வளவு பேரு இருக்காங்க ? அவங்களில் ஒருத்தி எனக்கு மனைவியா ஆகிட்டா என் பொழைப்பு என்னாகுறது ? " என்றான் ..

" ம்ம்ம்கும்ம் மரமண்டை .. என்னை தவிர வேற எந்த கிறுக்கிடா உன்னை கட்டிக்க போறா ?" என்று மனதிற்குள் கேலி செய்தவள், பேச்சின் ஊடே அவனுக்கு பிடித்த சமையல் வகைகளை மனதில் குறித்து கொண்டாள் .. இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டே சமையலுக்கு உதவினார் லக்ஷ்மி.

சரியாய் மதியநேரம் வீடு வந்து சேர்ந்தான் அன்பெழிலன். அவன் ஷக்தியின்  வீட்டுக்குள் நுழையுமுன்னேஅவனது செல்போனே சிணுங்கியது ..

" ஹே ஷக்தி நான் இங்க தான் இருக்கேன் "

" தெரியும், அப்படியே மாடிக்கு வா " என்றான் ஷக்தி. மாடியில் வைஷ்ணவி, ஷக்தி இருவருடன் நின்று கொண்டிருந்தார் தேவசிவம் . ஏதோ சரியில்லை என்று உணர்ந்த எழில் அமைதியாய் இருக்க, மித்ரா எழுதிய கடிதத்தை  எழிலிடம் கொடுத்தார் தேவசிவம். அதை படித்து முடித்தவுடன் ஷக்தியிடம்  அவன் நீட்ட " படிச்சிட்டேன் " என்றான் ஷக்தி.

" மாமா, நான்  என் மனசுல மித்ரா இருக்கான்னு நான்தான் உங்ககிட்ட சொன்னேன் "

" ம்ம்ம்ம் ஆமா ஷக்தி .. ஆனா உங்க காதலுக்கும் வைஷ்ணவியின் சம்மததுக்கும் என்ன சம்பந்தம்"

" நிறைய சம்பந்தம் இருக்கு அப்பா " என்று பேச்சை தொடங்கினாள்  வைஷ்ணவி. மற்ற இருவரும் அமைதியாய் இருக்க  அவளே பேசினாள்..

"அப்பா இந்த விஷயத்தை பெரியவங்க கிட்ட மறைக்கணும்னு நாங்க யாருமே நினைக்கல.. ஒண்ணுமே இல்லாத ஒரு சின்ன விஷயம் இப்போ இவ்வளவு பெரிய விஷயம் ஆகும்னு நாங்க யாருமே நினைச்சு பார்க்கல .. "

" அப்படி என்னடா நடந்தது "

" ஆனா இதை கேட்டுட்டு நீங்க பொறுமையா யோசிப்பிங்கன்னு நான் எதிர்பார்கிறேன் அப்பா .. ஏன்னா இதுல நிச்சயமா ஷக்தி மாமா மேல எந்த தப்பும் இல்லை .. சொல்லபோனா இதில்  பெரியவங்க மேலயும் தப்பு இருக்குதான்.. "

" பெரியவங்க தப்பா ? "

" ஆமா ..ஷக்தி அத்தான் துபாய் போனதுக்கு நானும் மித்ராவும் தான் காரணம்!"

" என்ன சொல்லுற ?"

" ம்ம் ஆமா அப்பா .. நடந்ததை தான் சொல்லுறேன் .. அப்பா நம்ம வீட்டில் நான் தான் முதல் பிள்ளை..அதே மாதிரி தான் ஷக்தி அத்தான் .. அதுனாலையோ என்னவோ எங்க டீனேஜ் வரைக்கும் பெரியவங்க எல்லாரும் சேர்ந்து ஷக்தி அத்தானுக்கு நான்தான் .. அவர்தான் எனக்கு மாப்பிளைன்னு பேசினிங்க ! "

" அது ஏதோ விளையாடுக்கு "

" விளையாட்டு தான் அப்பா .. எதுவும் அளவோடு இருந்தாதானே விளையாட்டு ? ஏதோ ஒரு விதத்தில் அது ஷக்தி அத்தான்  மனசை பாதிச்சு இருக்கலாம் இல்லையா?அதுவும் இல்லாமல், அத்தான் மாதிரி நானும் அதிகம் பேச மாட்டேன் .. அந்த குணம் அவர் ஈர்த்ததுன்னு நினைக்கிறேன் .. ஒரு நாள் என்னை பிடிச்சிருக்குன்னு அவரே என்கிட்ட சொன்னாரு .. "

தேவசிவம் ஷக்தியை  பார்க்க, சக்தியோ உணர்ச்சி துடைத்த முகத்தில் இருந்தான் .. அதை கவனித்த வைஷ்ணவி " அதான் சொன்னேனே  அப்பா, ஷக்தி அத்தான் மேல எந்த தப்பும் இல்லைன்னு.. நம்ம வாழ்க்கை யாரோடு என்பதை முடிவெடுக்குற  அறிவுமுதிர்ச்சி அப்போ எங்க ரெண்டு பேருக்கும் இல்லை .. ஆனா எனக்கு மித்ராவையும்  தெரியும் அத்தானையும் தெரியும். ஒருத்தரை ஒருத்தர் எப்பவும் விட்டுகொடுக்காம, சில நேரம் எனக்கிது வேணும்னு  ஒருத்தர் சொல்லாமலே இன்னொருத்தர் புரிஞ்சுகிறது  இதெல்லாம் அவங்க கிட்எ நான் பார்த்து ரசிச்ச விஷயங்கள் .. அதுனாலே அத்தான்கிட்ட நான் ஒரு விஷயம் சொன்னேன் .. "  என்றபடி வைஷ்ணவி ஷக்தியை  பார்க்க அவன் இதழ்களில் லேசாய் புன்னகை தோன்றி மறைந்தது ..

" எனக்கும் சம்மதம் அத்தான்..  ஆனா நீங்க என் தங்கச்சிகிட்ட இனி பேசவே கூடாது .. இனி என்கிட்ட மட்டும்தான் நீங்க க்லோசா  இருக்கானும் .. அவ உங்களுக்கு ஒவ்வொரு விஷயமா பார்த்து செய்யுறதும், நீங்க அவளுக்கு பக்கதுணையா இருக்கறதும் நான் ஏற்றுக்க  முடியாது"ன்னு சொன்னேன் ..

" அத்தானுக்கு ரொம்ப கோவம் வந்தது .. பேச்சுக்கு கூட மித்ராவை விட்டு கொடுக்க அவர் தயாரா  இல்லை.. அதையே காரணமா காட்டி அவர் மனசுல உண்மையில் யாரு இருக்காங்கன்னு புரிய வெச்சேன். " என்றவள் கொஞ்சம் அமைதி காக்க

" வைஷ்ணவி சொன்னதும் கொஞ்சம் யோசிச்சேன் மாமா.. மித்ராவ விட்டு விலகி இருக்க நினைச்சேன் .. அதெப்படி  முதலில் வைஷ்ணவி இப்போ மித்ரான்னு  ?? அப்படி நினைக்கவே புடிக்கல  ! ஏதோ மனசுக்குள்ள ஒரு அழுத்தம் .. அதான் துபாய் போயிட்டென் .." அதுவரை அமைதியாய் இருந்த எழில் அப்போதுதான் பேசினான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.