(Reading time: 7 - 13 minutes)

11. நீரும் நெருப்பும் - ப்ரியா

ந்தேகமாக விஷ்ணுவை பார்த்த சுபாவின் மனதில் ஆயிரம் கேள்விகள். கவலை வேறு ஒரு புறம் மனதை அரித்தது.

இருந்தாலும் முகத்தில் எதையும் காட்டி கொள்ளாமல் சாதரணமாக இருப்பது போல் வைத்து கொண்டு விஷ்ணுவிடம் கேட்டாள்,

"யார் அந்த பொண்ணு?"

Neerum neruppum

"அதை ஏன் சுபாக்கா கேட்கறிங்க நீங்க?"

"இல்ல சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான்"

"அவரு யாரை கல்யாணம் பண்ண உங்களுக்கு என்ன?"

"அதானே எனக்கு என்ன?" என்று சொன்னாலும் உள்ளுக்குள் இந்த செய்தியை அவளிடம் சொன்னதுக்காக விஷ்ணுவிற்கும் சொல்லாமல் போனதுக்காக ரவிக்கும் அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.

விஷ்ணு அவளை கவனிக்கவில்லை என அவள் நினைத்தாலும் இந்த பேச்சை எடுத்தது முதல் அவள் சிறு அசைவை கூட துல்லியமாய் பார்த்து கொண்டிருந்தான் அவன்.

ரவியின் அப்பா சிவபிரகாஷம் மருதலிங்கபுரத்தில் இருந்து சுபாவை பெண் கேட்டு சென்ற அன்று ஹரியிடம் போனில்  இது குறித்து பாலாவும் கைலாஷமும் பேசினார்கள்.

 அப்பொழுது விஷ்ணுவும் அங்கு தான் இருந்தான். அந்த பேச்சில் அவன் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் பேசியது அனைத்தும் இவனுக்கு தெரியும்.

அவர்கள் பேசியதை வைத்தும் கோவிலில் ரவி தன் குடும்பதினருடன் வந்ததையும் அங்கே சுபா மீது அவன் தொடுத்த காதல் பார்வைகளையும் வைத்து ஓரளவிற்கு விஷயத்தை ஊகித்திருந்தான் விஷ்ணு.

அது சரி தானா என்று தெரிந்து கொள்ளவே சுபாவோடு தனியாக கிடைத்த இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தூண்டில் போட்டு பார்த்தான். மூடி வைத்தாலும் மணக்கும் பூக்களை போல் தான் காதல் என சும்மாவா சொல்லி வைத்தார்கள்.

அவன் நினைத்தது போலவே தூண்டிலில் கண கச்சிதமாக மாட்டி கொண்டு விட்டாள் சுபா. அவளை இன்னும் சீண்டி பார்க்க எண்ணினான் விஷ்ணு.

"பொண்ணு ரொம்ப அழகாம் சுபாக்கா, ஏதோ இந்த உலகத்துலேயே பார்க்காத ஒரு அழகியாம் அப்படி இப்படி ஓஹோ ஆஹான்னு பேசிக்கிறாங்க, உங்க கிட்ட ஒன்னு சொல்லுவேன் ப்ளீஸ் அண்ணி கிட்ட சொல்லிடாதீங்க ஹரி அன்னைக்கு கூட அந்த பொண்ணு பிடிச்சு போயிடுச்சுன்னா பாருங்களேன்"

அவன் மேல் சிறு சந்தேகம் இருந்தாலும் காதல் மனது தவிக்கும் தவிப்பில் விஷ்ணு ரவிக்கான அர்ச்சனையில் ஹரியையும் சேர்த்து கொண்டாள் சுபா.

'அவனுக்கும் இது தெரியுமா? படுபாவி நான் அவன் காதலுக்கு விசில் ஊதி தொடங்கி வைக்க ட்ரை பண்ணேனே ஆனா அவன் என் காதலுக்கு சங்கு இல்ல ஊதிகிட்டு இருக்கான்'

"அதை விடுங்க அழகு என்ன பெரிய அழகு, அவங்க குடும்பத்துக்கு ஏத்த பாரம்பரியம் பிடிச்ச பொண்ணாம், ரவிக்கு அண்ணாக்கு அவங்கள மாதிரி ஒரு ஜோடி எங்க தேடினாலும் கிடைக்க மாட்டாங்களாம் ஏன் உங்க லண்டன்ல தேடுனா கூட" அவளை நன்றாக சீண்டி விட்டு 'ஏதோ நம்மால முடிஞ்சது' என்ற பாணியில் ஒரு சிரிப்பை உதிர்த்தான் விஷ்ணு.

அவள் எதுவும் சொல்லாமல் அமைதி காக்கவும் ஒர பார்வை ஒன்றை வீசியவன் கண்டது சினந்து சிவந்திருந்த முகமும் அதையும் தாண்டி அதில் தெரிந்த கவலை கோடுகளும் தான். 'ரொம்ப தான் விளையாடி விட்டேனோ' என தன்னையே கடிந்து கொண்டு அதோடு பேச்சை நிறுத்தினான்.

அவர்கள் திருமணம் எப்படியும் நிச்சயம் ஆகிவிடும் என்பது அவன் கணிப்பு. அதை ரவியே அவளிடம் சொன்னால் நன்றாக இருக்குமே என்று விட்டு விட்டான். ஆனால் நிலைமை தலைகீழாக மாற போவது தெரியாமல்!!

வர்கள் வீட்டை அடைந்ததும் நேராக தான் தங்கி இருந்த அறைக்கு சென்று விட்டாள் சுபா. அவளாக சரி ஆகி விடுவாள் என விஷ்ணு தன் வேலையே பார்க்க சென்று விட்டான்.

அந்த புத்தகத்தில் இருந்து வந்து ஒளி குறைந்து அது பழைய நிலைக்கு திரும்பியதில் இருவருக்குமே கொஞ்சம் நிம்மதி பிறந்திருந்தது. ஹரியை விஷ்ணு வந்து அழைக்க அவன் அவனுடன் சென்று விட்டான்.

அபி அந்த புத்தகத்தை எடுத்து கொண்டு மீண்டும் தன்னறைக்கு சென்று அதை வைத்திருந்த மேஜையின் மேலே வைக்காமல். அம்மேஜையின் ஒரு அறையில் அதை பத்திரமாக வைத்து அதை யாரும் எடுக்காத வண்ணம் பூட்டி சாவியை பீரோவில் வைத்து விட்டு சென்று விட்டாள்.

பிரேமா வந்து அவளை அழைத்து சமையலில் உதவி செய்ய சொல்ல திருவிழாவிற்கான பதார்த்தங்கள் செய்யும் வேலையில் புத்தகத்தை பற்றி மறந்தே போனாள்.

ருடா வருடம் சித்ரா பௌர்ணமி அன்று சோலைபுரம் ஆதிபராசக்தி கோவிலில் திருவிழா களைகட்டும்.

பாலா கைலாசம் குடும்பம் 'பெரிய குடும்பம்' என்பதாலும் பரம்பரையாய் அவர்கள் கோவிலுக்கு செய்யும் நற்பணிகள் காரணமாகவும் கோவில் திருவிழா அவர்கள் வீட்டின் ஒரு விழா போலவே ஆகி விட்டிருந்தது.

அலங்கரிக்க பட்ட வீடு உறவுகளால் நிரம்பி வழிய,அவர்களுக்கு உணவு, திருவிழாவுக்கென இனிப்புகள், மாவிளக்கு எடுப்பதற்க்கான ஏற்பாடுகள், அம்மனுக்கு சாத்த வேண்டிய வஸ்திரங்கள், நெய்வேத்தியங்கள் என அனைத்தும் தயாராகி கொண்டிருந்தன.

இதற்கு இடையில் விஷ்ணு தியாவுடன் அவ்வபோது வம்பிழுத்து கொண்டிருந்தான். அனைவரும் வந்திருந்த படியால் தியாவின் பெற்றோரும் கூட வந்திருந்தனர்.

பாலா சோழனையும் அழைத்திருந்தார். அதனால் அவனும் அவன் அம்மாவும் கிளம்பி அப்போது தான் வந்து சேர்ந்தனர். சோழன் தன் திட்டத்தை அவன் அம்மா விசாலத்திடம் சொல்ல முதலில் பயந்த அவள் பின் தயங்கி தயங்கி மகனுக்காக அதை ஒப்புக் கொண்டாள். அந்த திட்டத்தை நிறைவேற்றவே திருவிழா வேலைகளை கூட கவனியாமல் இங்கே வந்திருந்தாள்.

அக்கம் பக்கத்தினரும் பிரேமாவின் வீட்டில் வந்து விழாவுக்கான வேலைகளை செய்தனர். இது வருடம் தவறாமல் நடக்கும் ஒன்றே. தெய்வத்திற்கும்  செய்யும் நற்காரியங்களை இவ்வாறு உறவுகளுடனும் சுற்றதுடனும் சேர்ந்து செய்தலில் தான் எத்தனை சுகம் .

வீடே உறவுகளாலும் மகிழ்ச்சியாலும் நிரம்பி இருக்க ஹேமாவை நினைத்து வருந்தியவர்கள் சிலரே. அதிலும் கைலாஷமும் அபியும் மனம் முழுக்க அவள் நினைவுடன் வளைய வந்து கொண்டிருந்தனர்.

ஹரியிடம் கேட்டு அத்தையிடம் ஒரு முறை போனில் பேசலாம் என்று அவள் தேட அவன் அங்கு இல்லை. விசாரிப்பதற்காக விஷ்ணுவை தேடி பிடித்து அவனிடம் கேட்டாள். அவனும் தனக்கு தெரியவில்லை எதாவது வேலையாக போயிருப்பார் என்ற பதில் மட்டும் கொடுத்து விட்டு தியாவை பார்க்கும் வேலையே தொடர்ந்தான்.

ஏனோ இப்பொழுதே ஹரியை பார்க்க வேண்டும் ஹேமாவிடம் பேச வேண்டும் என்ற எண்ணங்கள் அவள் மனதை சூழ்ந்து இம்சிக்க, இதனூடே அந்த புத்தகத்தின் நினைவும் சட்டென வந்து போனது.

மனதின் ஓரத்தில் ஏதோ ஒன்று எதையோ அவளுக்கு உணர்த்த முயல, உணர முடியாமல் போனதால் அது அவசியம் இல்லையென ஒதுக்கி வைத்து விட்டு பிரேமாவிடம் போனாள்.

'ஸ்ரீ.. சீக்கிரம் என்கிட்ட வா.......' காற்றில் அவளை தொடர்ந்தது அவ்வார்த்தைகள்..!!

புன்னகை மாறாமல் அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தாள் அந்த ஆதிபராசக்தி.

நீரும் நெருப்பும் வாசகர்களுக்கு.. இத்தொடருக்கு உங்களை போலவே நானும் ஒரு ரசிகை.. மோகனா அவர்கள் இக்கதையை எழுதியிருந்த விதம் என்னை மிகவும் ஈர்த்தது. எல்லா வாசகர்களை போலவே எனக்கும் இக்கதையின் அடுத்தடுத்த நிகழ்வுகள் இப்படி இருக்கலாமோ? அப்படி இருக்கலாமோ? என்ற பல கற்பனைகள் இருந்தன. இருந்தாலும் படைப்பாளியின் எண்ணத்தில் உருவாகி வளர்ந்து கொண்டிருக்கும் கதை வாசகர்களின் கற்பனைகளை விடவும் ஏதோ ஒரு வகையில் சிறந்தது என்றே தோன்றுகிறது.ஆனாலும் வாசகர்கள் இல்லாமல் படைப்பாளி உயரவும் முடியாது. வாசகர்களே ஒரு கதையின் தலைஎழுத்தை நிர்ணயம் செய்பவர்கள் ஆவர். இப்போது இந்த கதையை ஒரு வாசகியாகவே தொடர விரும்புகிறேன். நான் தொடர போகும் இக்கதையின் பிற்பாதி உங்கள் வரவேற்ப்பை பெற்றால் அதை விட சிறந்து ஒன்று நிச்சயம் இல்லை...

நான் இது வரை முயற்சி செய்யாத ஒன்றை சில்சீ குழுவின் துணையோடும் உங்கள் மீதுள்ள நம்பிக்கையோடும் தொடங்குகிறேன்.. கதையில் உள்ள நிறை குறை அனைத்தையும் என் கவனத்திற்கு கொண்டு வருமாறு வேண்டிகொள்கிறேன்..  இக்கதை குறித்த என் கற்பனைகளின் எதிர்பார்ப்புகளின் வெளிபாடு இதோ உங்கள் பார்வைக்கு... இதை என்றேனும் மோகனா அவர்கள் படிக்க நேர்ந்து அவர்கள் முகத்தில் ஒரு புன்னகை அரும்பினாலே போதும்.. மிக்க மகிழ்ச்சி அடைவேன் .. நன்றி... 

Go to Episode # 10

தொடர்ந்து பாயும்.......

{kunena_discuss:685}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.