(Reading time: 30 - 59 minutes)

சிவநாதன்-இந்திரனுக்கு பெண் கொடுக்க நிறைய பேர் முன் வந்தனர்… இருந்தும் அவர்களின் தாய் தந்தையர் தங்கள் மகன்கள் இருவருக்கும் பெண் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் காட்டினர்…

அப்போது தான் சித்ராங்கி என்ற பெயர் கொண்ட பெண்ணைப் பற்றிய தகவல் சிவநாதன்-இந்திரனின் பெற்றோருக்கு கிடைத்தது…

ஏனோ அவர்களுக்கு அவள் அவர்களின் குடும்பத்திற்கு அதுவும் அண்ணன்-தம்பி குடும்பத்தில் வாழ, அனுசரணை அவளுக்கு கொஞ்சம் குறைவோ என்று தோன்றிவிட, வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.. மேலும் அவள் வசதி படைத்தவள்… அந்த வசதிக்கு நாம் வளரவும் இல்லை இன்னமும்…. ஏதோ நமக்கேற்ற நம் வசதிக்கேற்ற பெண்ணாக பார்த்து நம் பையன்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவெடுத்து உமையாளையும், கஸ்தூரியையும் மணமுடித்து வைத்தனர் பெரியவர்கள்…

வசதி படைத்த என்னையே வேண்டாம் என்று, சாதாரண குடும்பத்தில் இருந்து மருமகள்கள் எடுத்து உங்கள் மகன்களுக்கு கட்டி வைத்துவிட்டால், அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து விடுவார்களா?... அதையும் தான் நான் பார்க்கிறேன்…. என குரோதம் கொண்ட சித்ராங்கி அவர்களின் மேல் பகை கொண்டாள்…

அந்த நேரத்தில் தான் அவர்கள் ஊரை விட்டு வெளியேறி, வெளியூருக்குப் போய், வசதியாக சந்தோஷமாக வாழ்வது அவளின் காதுக்கு எட்டியது…

இந்த சந்தோஷத்தை எப்படி கெடுக்கலாம் என்று எண்ணமிட்டுக்கொண்டிருந்தவளுக்கு தோதுவாக சிவநாதன் குடும்பம் குலதெய்வம் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த பல வருடங்கள் கழித்து வருவதாக தகவல் கிடைத்ததும் அவளின் விழிகளில் கொடும்பகையும், வன்மமும் தாண்டவமாடியது…

அப்போது தான் பாலாவிடம் நெருங்கி பேச்சுக்கொடுத்தாள்… அவளும் வள்ளிமேல் பாசமாக பேச, வருடம் வருடம் தன் பணியை செவ்வனே செய்தாள்… பாலாவின் மனதை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில்… ஆனால், எது செய்த போதும், பாலா மனதை அசைக்க முடிந்ததே தவிர, அதில் அதிகம் நஞ்சை விதைக்க அவளால் முடியவில்லை…

இப்போதோ அதற்கான வாய்ப்பு கிடைத்ததும், சித்ராங்கி பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தாள்…

“அழாத பாலா.. அழாத… நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல… இந்த வள்ளியோட திட்டமே இதுதான்.. பார்த்தியா உனக்கு எப்படி ஒரு பேரு வாங்கிக்கொடுத்திருக்கான்னு… ஹ்ம்ம்… எனக்கே கஷ்டமா இருக்கு… உன்னை இனி எல்லாரும் ராசி இல்லாதவன்னு சொன்னா உன் மனசு தாங்குமா?...” என வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஒட்டுமொத்த தன் பகையையும் தீர்த்துக்கொள்ள பாலாவின் மனதில் கொடிய நஞ்சை கலந்தாள் முழுவதும்…

மனதில் கவலையுடன் ஊருக்கு திரும்பிய பாலாவின் நடவடிக்கை வள்ளிக்குப் புதிதாய் தெரிந்தது… அது பற்றி வள்ளி பாலாவிடம் கேட்டபோது, ஒன்னுமில்லை… என்று சொல்லி சமாளித்துவிட்டாள் பாலா…

வள்ளியும் கவலையுடன் அமர்ந்துவிட, அந்த நேரம் அவளுக்கு கைகொடுத்து உதவ வந்தாள் மஞ்சரி…

“என்னடி ஏன் டல்லா இருக்குற?...”

“அது மஞ்சு…” என்று இழுத்த வள்ளி… கோவிலில் நடந்ததை மஞ்சரியிடம் சொல்லிமுடித்த போது,

“வள்ளி அப்போ இந்து ஒருமாதிரி இருக்குறதுக்கு காரணம் கோவிலில் நடந்த நிகழ்வு தானா?...”

“தெரியலை மஞ்சு… நான் அங்கதான் இருந்தேன்… ஆனா இந்து அங்க இல்ல அப்போ… நான் அப்படித்தான் நினைச்சிட்டு இருக்கேன்…”

“அப்போ இந்து கேட்கலைன்னு சொல்லுறியா?... அப்போ ஏன் இந்து டல்லா இருக்குறா சரியா உங்கிட்ட கூட பேசாம?...”

“அதுதான் மஞ்சு என்னை யோசிக்க வைக்குது… இந்த 5 வருஷமா கோவிலுக்கு போயிட்டு வந்த ஒரு வாரம் பாலா ஒருமாதிரி தான் இருக்குறா… அதுக்குப்பிறகு அவ நார்மலா ஆயிடுறா… ஆனா, கோவிலில் எதுவோ ஒரு விஷயம் அவளை அவ மனசை வருத்தப்பட வைக்குது மஞ்சு… அது என்னன்னு முதலில் நாம கண்டுபிடிக்கணும்…”

“ஓகே வள்ளி… இந்த வருஷம் அதிசயமா, எங்க வீட்லயும் கோவிலுக்குப் போகணும்னு முடிவு பண்ணியிருக்காங்க… சோ, நானும் வரேன்… என்னதான் அவளை கலங்கடிக்குதுன்னு தெரிஞ்சிக்கலாம்…”

இவர்கள் திட்டமிட்டு எண்ணிக்கொண்டு அந்த வருட திருவிழாவிற்கு சென்ற போது, வள்ளி தட்டை எடுத்துக்கொடுக்க மறுத்துவிட, பாலாவை அவள், எடுத்துக்கொடுக்க சொன்னாள்… பாலாவும் முடியாதென்று சாதித்துவிட, கடைசியில் அதை சிவநாதனே எடுத்துக்கொடுக்கும்படி ஆயிற்று…

“ஏன் இந்து நீ தட்டை எடுத்துக்கொடுக்கலை…” என்ற வள்ளியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்றுவிட்டாள் பாலா…

“நீ ஏன்ம்மா, தட்டை எடுத்துக்கொடுக்கலை…”என்ற சித்ராங்கியின் கேள்விக்கு

“எப்படி ஆன்ட்டி நான் எடுத்துக்கொடுப்பேன்?... மறுபடியும் என்னை ராசி இல்லாதவன்னு சொல்லுறதுக்கா?... என்னால முடியாது ஆன்ட்டி… நான் இனி ஜென்மத்துக்கும் அந்த தட்டை தொடமாட்டேன்…” என்றாள் உறுதியுடன்…

“ஹ்ம்ம்… அதுவும் சரிதான்மா… ஆனா, வள்ளி ஏன் உன்னை இந்த வருஷமும் தட்டை எடுத்துக்கொடுக்க சொன்னான்னு தான் எனக்கு தெரியலை…” என்றவள்,

சற்று நேரத்திற்குப்பிறகு, “உன்னை இந்த வருஷமும் எடுக்கவிட்டு, உன் மேல ராசி இல்லாதவன்னு இன்னொரு தடவை பழி தூக்கி போடுறதுக்கா இருக்குமோ…?...” என்று வஞ்சத்துடன் கூற, பாலா வள்ளியை வெறுக்க ஆரம்பிப்பதற்கான விதை அவளின் நெஞ்சில் விழுந்தது ஆழமாய்…

சித்ராங்கியுடன் அவள் பேசுவதைக் கவனித்த வள்ளிக்கும், மஞ்சரிக்கும், இதுதான் இந்துவின் மனமாற்றத்திற்கு காரணமா என்ற கேள்வி எழ, அவர்களின் பேச்சுவார்த்தையைக் கேட்ட இருவரின் முகத்திலும் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது…

சித்ராங்கி எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் இந்துவின் மனதில் வள்ளியை விரோதியாய் ஆக்கிவிட்டு செல்ல, அதை பார்த்துக் கேட்டுக்கொண்டிருந்த வள்ளியின் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருந்தது…

“ஹேய்… லூசு வள்ளி… அழாதடி… எல்லாம் இந்த பொம்பளையால வந்த வினை தான் போலடி… வா இப்பவே அந்த லேடியை உண்டு இல்லைன்னு பண்ணலாம்…” என்று மஞ்சு அவளை அழைக்க,

வள்ளியோ அவள் கைப்பிடித்து தடுத்தாள்..

அவள் செயலைக்கண்டு புரியாமல் நின்ற மஞ்சரியிடம், “அவங்களை குறை சொல்லி இனி எதும் ஆகப்போறது கிடையாது… என் இந்து மனசில கலந்த நஞ்சை அகற்றணும்…. முதலில்…” என்றாள் வள்ளி தெளிவாக…

ஆனால், அகற்றவேண்டும் என்று சொன்ன வள்ளிக்கு அது எளிதாக இருக்கவில்லை…

தொட்டதெற்கெல்லாம், வள்ளியை குறை சொல்ல ஆரம்பித்தாள் இந்திரபாலா…

வள்ளியிடமிருந்து எவ்வளவு விலக முடியுமோ அவ்வளவு விலக ஆரம்பித்தாள் அவள்…

இப்படியே ஒருவருடமும் வேகமாக சென்றுவிட, திருவிழாவும் வந்தது… பாலாவிற்கு அப்போது வயது பதினாறு…

பாலாவை சித்ராங்கியிடம் பேசவிடாது அவர்கள் இருவரும் சந்திக்க இடமளிக்காது, மஞ்சரியும் வள்ளியும் பாலாவுடனே இருந்தனர்…

சென்ற வருடம் போல் சிவநாதனையே தட்டை எடுத்துக்கொடுத்துவிடும்படி வள்ளி வீட்டில் இருந்து கிளம்பும்போதே சொல்லிவிட, அவரும் அதை அச்சுப்பிசராமல் செய்தார்…

இந்த வருடம் என்ன சொல்லி, பாலாவின் மனதை மாற்ற என்று சித்ராங்கி யோசித்தபோது அவளுக்கு கைமேல் பலன் கிட்டியது நடந்த சில நிகழ்வினால்…

பம்பு செட்டில் குளிக்க சென்றுவிட்டு, உடைமாற்ற அருகிலிருந்த சின்ன மோட்டார் அறைக்குள் செல்லலாம் என முடுவெடுத்தனர்…

அதன்படி, மஞ்சு முதலில் ஆடைமாற்றும் அறைக்குள் செல்ல, குளித்துமுடித்து ஈர உடையுடன் நின்ற வள்ளி, மஞ்சரி கலைந்து கொடுத்த ஈர ஆடைகளை வெளியே திண்ணையில் வைத்துவிட்டு, அவள் மாற்றுவதற்கு ஒவ்வொரு ஆடையாக வெளியிருந்து தாழ்ப்பாள் இல்லாத கதவின் சின்ன ஓரம் வழியாக கொடுத்தாள்…

பின் மஞ்சு வெளியே வர, பாலா சட்டென்று உள் சென்றாள்… அவளுக்கும் மாற்ற ஆடைகளை கொடுத்துவிட்டு காத்திருந்தாள் வள்ளி…

வள்ளி உள்ளே சென்று அவள் ஈர ஆடையை கலைந்து கொடுத்த நேரம், “நான் போய் இந்த ஈரத்துணியை எல்லாம் வெயிலில் புல் மேல் போட்டு விட்டு வரேன்… கொஞ்ச நேரமாச்சும் காயும்ல…” என்றபடி மஞ்சு சென்றுவிட,

பாலா அவளுக்கு ஒவ்வொரு ஆடையாக எடுத்து கொடுத்துக்கொண்டிருந்தாள்… அப்போது, வள்ளியின் மாராப்பை அவள் கொடுக்க முனைந்த நேரம், அங்கு வந்த குட்டி முயல் பாலாவின் கவனத்தை ஈர்க்க, அவள் வள்ளியின் கைகளில் ஆடையை கொடுக்காமல், அங்கிருந்த திண்ணையின் மீது வைத்துவிட்டு உன் டிரெஸ் இங்க இருக்கு… எடுத்துக்கோ… நான் வந்துடுறேன்… என்றபடி சென்று விட,

“இந்து இரு…” என்ற வள்ளியின் வார்த்தையை கேட்க பாலா அங்கு இல்லை… முயலைப் பிடிக்க அதன் பின்னே பாலாவும் ஓடிக்கொண்டிருந்த நேரம், இங்கு திண்ணையின் மீதிருந்த வள்ளியின் ஆடை காற்றுக்குப் பறந்து சென்றுவிட்டது…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.