(Reading time: 30 - 59 minutes)

ஞ்சரி வந்து பார்த்த போது வள்ளி அழுதுகொண்டிருக்க, “என்னடி என்னாச்சு?..” என்று கேட்டதும், கண்களைத் துடைத்துக்கொண்ட வள்ளி, ஒன்னுமில்லை என்றாள்…

“இப்போ நீ சொல்லப்போறியா இல்லையா?... எதுக்கு நீ அழற?... ஆமா இந்து எங்க?...”

“மஞ்சு… இந்து எங்கன்னு தெரியலை… அவ அப்பவே போயிட்டா…”

“சரி அவ போனதுக்கு நீ ஏன் அழற?...” என்றவள் அப்போது தான் வள்ளியின் உடையிலிருந்த கிழிசலை கவனித்தாள்..

“ஹேய்… என்னாச்சுடி…” என்று மஞ்சு கேட்க, வள்ளி சொன்னாள்… தன் உடை காணாமல் போனதையும், நல்ல வேளையாக அப்போது வந்த ஒரு பெண் தன் ஆடையை முள்ளிலிருந்து எடுத்து கொடுத்து காப்பாற்றியதாகவும்…

கேட்டு முடித்த மஞ்சுவிற்கு கோபம் தலைக்கேறியது…

“எவ்வளவு திமிர் இவளுக்கு… நல்ல வேளை உனக்கு உதவி பண்ண ஒரு ஆள் கடவுள் அனுப்பினார்… இல்லன்னா, அந்த நேரத்துல வேற யாரும் இங்க வந்திருந்தா?... என்ன ஆகியிருக்கும்?... என்னால நினைச்சேப் பார்க்க முடியலை வள்ளி… நீ வா… நாம போகலாம்…”

“போகலாம்… ஆனா, இந்து மேல தப்பு சொல்லாத… பாவம் அவ… இங்க வச்சிட்டு தான் போனா, காத்துக்கு பறந்து போயிட்டுன்னா அதுக்கு அவ என்ன பண்ணுவா மஞ்சு…” என அந்த நிலையிலும் இந்துவிற்கு ஆதரவாய் பேசிய வள்ளியை மஞ்சு திகைப்புடன் பார்த்தாள்…

“நானா யார்கிட்டயும் சொல்லமாட்டேன்…. போதுமா?... நீ வா…” என்றபடி அவளை அழைத்துக்கொண்டு செல்ல, அங்கிருந்த மரங்களின் இடையில் இருந்து வெளிவந்தாள் சித்ராங்கி…

தெரிந்த பெண்ணிடம் சென்று இவள் பற்றவைக்க, அவள் நேரே கஸ்தூரியிடம் சென்று, “நல்லா பொண்ணை வளர்த்த போ… யாரோ ஒரு மகராசி வந்து வள்ளிக்கு டிரெஸ் கொடுத்து காப்பாற்றினா… அந்த இடத்துல ஆள் நடமாட்டம் வேற கம்மி…  சினிமாவுல நடக்குற மாதிரி யாரும் அங்க போயிருந்தா வள்ளி நிலைமை என்ன ஆகியிருக்கும்???... இனியாச்சும் பார்த்து நடந்துக்க சொல்லு பாலாவை…” என்றபடி வந்தவள் போட்டுகொடுத்துவிட்டு சென்றுவிட,

பாலா வந்ததும், அவளின் கன்னத்தில் ஒரு அறைவிட்டார் கஸ்தூரி…

கன்னத்தைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்தவளை, பதறி அடித்துக்கொண்டு தூக்கி விட்டனர் உமையாளும், சிவநாதனும்…

“என்ன காரியம் செஞ்சிட்ட கஸ்தூரி?..” என்று சிவநாதன் மிகுந்த கோபத்துடன் கேட்க,

“ஏன் கஸ்தூரி இப்படி செஞ்ச?... நம்ம பொண்ணை இப்படி கைநீட்டி அடிச்சிட்டியே… எதுக்குடி இப்படி அடிச்ச?... சொல்லுடி…” என்று உமையாளும் கோபத்துடன் கேட்க…

“இரண்டு பேரும் கேட்குறாங்கல்ல… பதில் சொல்லு கஸ்தூரி…” என இந்திரனும் கேட்க..

“இவ செஞ்ச காரியத்துக்கு வேற என்ன சொல்லுறீங்க…” என்றவர், நடந்ததை  அனைவரிடத்திலும் கூற, அனைவருக்கும் அதிர்ச்சிதான்…

இருந்தாலும் பாலாவை விட்டுக்கொடுக்க அவர்களுக்கு மனமில்லாது, “எதாவது அவசர வேலை வந்திருக்கும்… அதான் போயிருப்பா… அதுக்கு நீ அடிப்பியா?..” என்று உமையாள் குரல் உயர்த்த…

“அப்படி என்னக்கா இவளுக்கு அவசர வேலை?... கடவுள் புண்ணியத்துல நம்ம பொண்ணுக்கு எதுவும் ஆகலை… காலம் கெட்ட காலத்துல இவ வள்ளியை அப்படி தனியா விட்டுட்டு வரலாமா?..”

“நீ என்ன சின்னப்பிள்ளையா கஸ்தூரி?... சினிமாவையும் வாழ்க்கையையும் சம்மந்தப்படுத்தி பேசுற… கோவிலுக்கு நம்ம உறவுக்காரங்க தான் வந்திருக்காங்க… யார் அங்க போயிருந்தாலும் நம்ம பொண்ணுக்கு உதவி தான் செஞ்சிருப்பாங்க…”

“அத தான் நானும் சொல்லுறேன்… நம்ம நல்ல நேரத்துக்கு எதுவும் ஆகலை… ஆனா, அந்த உதவியும் இவ தான செஞ்சிருக்கணும்… இவ துணிமாத்துற வரைக்கும் வள்ளி வெளியே நின்னு துணியை எடுத்து கொடுத்தால்ல… இவளும் அதுமாதிரி தான எடுத்து கொடுத்திருக்கணும்… அதை விட்டுட்டு இவளுக்கு என்ன வேலை அதும் அவசர வேலை… அதுதான் என் கோபமே…”

“நடந்து முடிஞ்சதை பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல கஸ்தூரி… பாலா மேல எந்த தப்பும் இல்லை… நீ அதைப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணு…”

“விடுங்க பெரியம்மா… அடிக்கட்டும்… விடுங்க… எப்பவும்… என் அம்மாவுக்கு என்னைவிட வள்ளிதானே பிடிக்கும்… அவங்களுக்கு மட்டும் இல்லை… எல்லாருக்கும் அப்படித்தானே… அவ தான் மூத்தப்பொண்ணு… அவ தான் உங்க வீட்டு மகாலக்ஷ்மி… அவ தான் ராசி உள்ள பொண்ணு… அதனால அவ தான் எதும் செய்யணும்… எதும் சொல்லணும்… அவ தான் எல்லாத்துக்கும் முன்னாடியும் நிக்கணும்… அவ கையால தட்டை எடுத்து கொடுத்தா தான் சாமி ஏத்துக்கும்… அவ பொறந்த பின்னாடிதான் நீங்க எல்லாரும் பணக்காரங்க ஆனீங்க… அதனால அவ தான் உங்க எல்லாருக்கும் உசத்தி… அதும் என் அம்மாவுக்கு அவ தான் பொண்ணு… நான் இரண்டாவது தான… எப்பவும் எங்கயும் அவதான் ,முதலில்.. நான் இரண்டாவது… அப்படி அவதான் முதலும் கடைசியுமா இருக்கணும்னு ஆசைப்பட்டா என்னை ஏன் பெத்துக்கணும்?... ஏன் இப்படி என்னை தினமும் சாகடிக்கணும்?... நானா உங்களை பெத்துக்க சொன்னேன்?... இல்ல நான் தான் ராசி இல்லாதவளா பொறக்க வரம் வாங்கி வந்தேனா?... அப்படி ராசி இல்லாதவன்னு தெரிஞ்ச நிமிஷமே கொஞ்சம் விஷம் வைச்சு என்னைக் கொன்னுருக்க வேண்டியது தான?... எதுக்கு இப்படி என்னை உயிரோட சாகடிக்கிறீங்க… வள்ளி வள்ளி… வள்ளி… நீங்க அவளை தூக்கி வைக்க வைக்க தான்… எனக்கு அவ மேல வெறுப்பே வருது… எனக்கு அவளைப் பிடிக்கலை… என்னைப் பெத்த அம்மாவான உங்களையும் எனக்கு பிடிக்கலை… பிடிக்கலை… பிடிக்கலை…” என்றவள் கதறி அழ ஆரம்பித்த போது,

அங்கே மூச்சு விடும் சப்தம் கூட கேட்கவில்லை…

அனைவரும் வாயடைத்துப்போய் உச்சகட்ட அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போனவராய் நின்றிருந்தனர்…

பாலாவின் மனதில் இவ்வளவு ஆதங்கம் இருக்கும் என்று அறியாத நால்வரும் என்ன பேசுவது என்று புரியாமல் இருந்தனர்…

பாலா பேசிய வார்த்தைகளின் தாக்கத்திலிருந்து வெளிவருவதற்கு அனைவருக்கும் சில மணித்துளிகள் பிடித்தது…

உமையாள் பேச வாயெடுத்த நேரம், வள்ளி மஞ்சரியுடன் அங்கே வந்தாள்… பாலா அழுவதைப் பார்த்துவிட்டு, அவளிடம் வேகமாக சென்றாள்…

“இந்து என்னாச்சுடா… இந்து… சொல்லு… ஏன் அழற?... என்னாச்சு?... இந்திரா கேட்குறேன்ல சொல்லுடா…” என வள்ளி பாலாவிடம் கேட்க,

“இனி நீ என்னை அப்படி கூப்பிட்ட நான் செத்துடுவேன்…” என்றாள் பாலா சட்டென்று…

பாலா உதிர்த்த வார்த்தைகளின் வீரியத்திலிருந்து வெளிவர வள்ளி சிரமப்பட்டாள் மிக… என்ன வார்த்தை சொல்லிவிட்டாள்… என்ற துடிப்புடன் வள்ளி கண்ணில் நீரோடு நிற்க…

“இன்னைக்கு நடந்ததை என் வாழ்நாள் உள்ள வரை நான் மறக்கமாட்டேன்… மறக்கவும் முடியாது என்னால்… வாழ்க்கையிலே பிறந்தநாள் அதுவுமா இவ்வளவு துயரம் யாருக்கும் நேரக்கூடாது…” என்றவள், இந்திரனிடம், “இனி நான் அவ இருக்குற வீட்டுல இருக்கமாட்டேன்… ஆனா அதே நேரம் என் பெரியம்மா பெரியப்பாவையும் நான் விட்டுகொடுக்க மாட்டேன்… இனி எனக்கும் அவளுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது… அவள் சம்மந்தப்பட்ட எந்த விஷயத்திலும் நான் தலையிடமாட்டேன்… அவளும் தலையிடக் கூடாது…” என்றாள் அழுத்தம் திருத்தமாக…

பின்னர் கோபமாக சென்றவள், வள்ளியின் அருகே வந்து, “இன்னைக்கு உன்னைப் பார்க்காம போற மாதிரி இனி வரப்போற என் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் என் முகத்தில நீ விழிக்காத… விழிக்கணும்னு கூட நினைச்சிடாத… இன்னைக்கு எனக்கு ஏற்பட்ட இந்த காயம் என்னைக்கும் ஆறாது… வாழ்க்கையில எல்லாமே உனக்கே முதலில் கிடைக்கட்டும்…” என்று கண்ணீருடன் பேசிவிட்டு சென்றுவிட்டாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.