(Reading time: 30 - 59 minutes)

பாலாவின் பத்து வயதில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குலதெய்வம் கோவிலுக்கு சென்றிருந்தனர் சிவநாதன் குடும்பத்தினர் அனைவரும்

அண்ணன்-தம்பி மட்டும் ஒற்றுமையாய் இல்லாது அவர்களது மனைவிமார்களும் ஒற்றுமையாய் இருப்பது அங்கு கோவிலுக்கு வந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது மிக

வள்ளியும், பாலாவும் ஒருவர் இன்னொருவரின் கைப்பிடித்தபடி விளையாடிக்கொண்டிருந்தனர்

அப்போது கஸ்தூரி வள்ளியைக் கூப்பிட்டு சாமிக்கு உன் கையால இந்த தட்டை எடுத்துக்கொடு என்று கூற, வள்ளியும் சரி என்று எடுத்துக்கொடுத்தாள்

அப்போது தூரத்திலிருந்து பாலா அதைப் பார்த்துக்கொண்டிருந்த போது, அவளருகே வந்த ஒரு பெண்மணி, “பாப்பாஅந்த பொண்ணு யாரு?... உன் பேரு என்ன?...” என்று கேட்க,

அவங்க என் அக்கா வள்ளிநான் இந்திரபாலாநீங்க ஏன் இத கேட்குறீங்க?...”

இல்லம்மா சும்மாதான்…” என்ற அந்த பெண்மணி, “இந்த பொண்ணுதான் வள்ளியாஇவளைப் பத்திதான் உங்க அம்மா பெருமையா சொல்லிட்டிருந்தாங்கஇவ பொறந்த பின்னாடி தான் உங்களுக்கு வசதி வந்ததுன்னும், அதுக்கப்புறம் தான் நீங்க நல்லா வாழறீங்கன்னும் சொல்லிட்டிருந்தாங்க அங்க எல்லார்கிட்டயும்அதான் கேட்டேன் பாலாவேற ஒன்னும் இல்லை…” என்று கூற,

ஆமா ஆன்ட்டி, வள்ளியை எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்எனக்கும் வள்ளியைப் பிடிக்கும்ஆனா, வள்ளிக்கு என்னதான் ரொம்ப பிடிக்கும்…” என்றாள் புன்னகையுடன் பாலா

அவளின் புன்னகையை கண்டு குரோதம் கொண்ட அந்த பெண்மணி, “அப்படியாம்மாநல்லதுதான்எல்லாருக்கும் அவளைப் பிடிக்கும் சரிதான்ஆனா, வள்ளிக்கு உன்னைத்தானே பிடிக்கும்அப்போ அந்த தட்டை அவ உன்னையே எடுத்துக்கொடுக்க சொல்லியிருக்கலாமே…” என நஞ்சை விதைக்க ஆரம்பித்தாள் அவள்

இல்ல ஆன்ட்டிஅவ கொடுத்தா என்ன, நான் கொடுத்தா என்ன.. எல்லாம் ஒன்னு தானேஅதுமில்லாம அவளுக்கு கொஞ்ச நாள் முன்னாடி உடம்பி சரியில்லாம இருந்துச்சுஅவளுக்காக வீட்ல எல்லாரும் வேண்டிக்கிட்டோம்நானும் தான்அதான் இங்க கோவிலில் அவ கையால நேர்த்திக்கடன் செலுத்துறாங்க ஆன்ட்டி…” என பாலா சொன்னதும் அந்த பெண்மணி உள்ளே பொங்கிய கோபத்தை வெளிக்காட்டாமல், “சரிம்மாநான் போயிட்டுவரேன்அடுத்த வருஷம் நீ வருவல்லஅப்போ உனக்கே புரியும்…” என்றபடி சென்றுவிட, பாலாவும் அதை மறந்தே போனாள்

அதன் பின்னர், மறுவருடம் கோவில் திருவிழாவுக்கு வந்திருந்த போது பாலா அந்த பெண்மணியை மறுபடியும் சந்திக்க நேர்ந்தது

அந்த வருடமும், அவள் பாலாவின் மனதை கலைத்து நஞ்சை விதைக்கும் வண்ணம் வார்த்தைகளை விட, பாலா அப்போதும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லைஅவளின் வயதும் அதை அந்த அளவு ஆராய்ந்து பார்க்க விடவில்லை

தட்டை எடுத்துக்கொடு வள்ளி என்று கஸ்தூரி சொல்லிய போது, வள்ளி சட்டென்று, “இந்துவை வைத்து குடுக்கலாமே சின்னம்மா இந்த முறை…” என சொல்லியபோது

இல்ல வள்ளிகுடும்பத்தில் மூத்த பொண்ணு கையால தான் செய்யணும்அதனால் தான் உன் கையால செய்யுறோம்டா…” என்றார் கஸ்தூரி

அப்படின்னா சின்னம்மாஅப்பா-அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணுஅதே மாதிரி இந்துவும் உங்களுக்கு ஒரே பொண்ணுஅப்புறம் ஏன் அவ கையால கொடுக்கக்கூடாதுஅவ உங்களுக்கு மூத்தப்பொண்ணு தானே…” என்ற வள்ளியிடம்,

அவ எங்களுக்கு இரண்டாவது பொண்ணுதான்நம்ம குடும்பத்துக்கு மட்டும் நீ மூத்தப்பொண்ணு இல்லஎனக்கும் தான்…” என்ற கஸ்தூரியிடம் மேற்கொண்டு என்ன பேசுவது என்று பாசத்தில் திக்குமுக்காடி போனாள் வள்ளி

அதன் பின் அடுத்தடுத்த இரண்டு வருடங்களுக்கும் வள்ளியே தட்டை எடுத்துக்கொடுத்திட, பாலாவின் மனதில் கேள்வியை முதன் முதலில் உண்டாக்கி விட்டாள் அந்த பெண்மணி…

இந்திரபாலாவின் பதிநான்காம் வயதில் அந்த முதல் பொறாமை கோபத்தீ லேசாக பற்றிக்கொள்ள ஆரம்பித்தது அந்த சதிகார பெண்மணியால்…

அதுவும் வீட்டிலேயும் எந்த நல்லகாரியம் ஆரம்பித்தாலும், நடந்தாலும் வள்ளியை முன் நிறுத்தியே கஸ்தூரியும் பேச, அவள் தாயிடமிருந்து விலக ஆரம்பித்தாள்… உமையாளிடம் அதிக பாசமும், நெருக்கமும் பாலா காண்பிக்க ஆரம்பித்த அதே வேளை, வள்ளியிடமிருந்து விலகவும் அடி எடுத்து வைத்தாள்…

அந்த வருட திருவிழாவில், கஸ்தூரி சொன்ன மூத்தப்பொண்ணு தடையை தகர்த்து வள்ளி அவளின் இந்துவின் கையால் தட்டை எடுத்துக்கொடுக்க வைத்தாள்… அன்று பாலாவின் முகத்தில் தெரிந்த சந்தோஷம் வள்ளியை ஒருநிமிடம் என்றாலும் யோசிக்க வைத்தது…

“ஆன்ட்டி… பார்த்தீங்கள்ள… இந்த வருஷம் என்ன நடந்துச்சுன்னு… நான் தான் சொன்னேன்ல வள்ளிக்கு என்னைப் பிடிக்கும்னு… இப்ப அவளே என்னை செய்ய சொல்லிட்டா எல்லாத்தையும்…” என்று ஆர்ப்பரித்த பாலாவை என்ன செய்ய என்று கொலைவெறியோடு பார்த்தாள் அந்த பெண்மணி….

அதற்கு என்ன செய்யலாம் என்று அவள் யோசித்த போது, இந்திரன் கடைக்குச் சென்று காலில் அடியோடு கோவிலுக்குள் வர, இவள் மூளை இல்லாததையும் இழுத்து வைத்து சேர்த்து யோசித்தது… அதன் விளைவு ஒன்றுக்கு மூன்றாக மற்ற பெண்மணிகளிடம் சொல்லிவிட்டாள்…

“என்ன உமா… உன் கொழுந்தனுக்கு காலில் அடியாமே… பார்த்து வரக்கூடாதா?...” என்று கேட்ட உறவுக்கார பெண் சரளாவிடம்,

“என்ன சரளாக்கா செய்ய… தம்பி பார்த்து தான் போயிருக்கார்… ஆனா, எதிரே வந்த வண்டி தான் தம்பி மேல மோதி கீழே விழ வைச்சிட்டு…”

“நல்லா சொன்ன போ… வழக்கத்தை மாத்தினா இப்படித்தான்… மூத்தப்பொண்ணு கையால தான் சாமிக்கு தட்டை கொடுக்கணும்னு உனக்கு தெரியாதா என்ன?... அதுதானே நம்ம கோவிலில் காலம் காலமா எல்லாரும் செஞ்சிட்டு இருக்குறோம்… அப்படி இருக்கும்போது நீ இப்படி இந்திரன் மகளை வச்சு எல்லாத்தையும் செஞ்சா தெய்வகுத்தம் வராம வேற என்ன வரும்?..” என்று பட்டென்று சொல்லிவிட,

உமையாளும், கஸ்தூரியும் கடவுளே, இதென்ன சோதனை… இப்படி எல்லாமா நாக்கில் நரம்பில்லாமல் பேசுவார்கள்?... என்று நொந்துகொள்ள,

அந்த சரளா மேலும் தொடர்ந்தாள், “ஏதோ நீங்க செஞ்ச புண்ணியம்… மூத்த பொண்ணும் அவ கையால தட்டை தொட்டதால தான் உன் கொழுந்தன் இந்த மட்டுமாவது பிழைத்திருக்கிறார்… இனியாச்சும் சரியா செய்யுங்க எதையும்… நான் வரேன்…” என்று அவள் சென்றுவிட,

உமையாள் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார்…

“அக்கா… அவங்க தான் முட்டாள்தனமா சொல்லிட்டு போறாங்கன்னா, நீங்களும் ஏன் இப்படி உட்கார்ந்திருக்கீங்க… இதுக்கெல்லாமா வருத்தப்படுவீங்க.. விடுங்க அக்கா…”

“இல்ல கஸ்தூரி, நம்ம பொண்ணை பத்தி இப்படி பேசிட்டு போறாங்களே… என் பாலாவை பத்தி இவங்களுக்கு என்ன தெரியும்… அவ பச்சை மண்ணு… இப்படி கொளுத்திப்போட்டு போறாங்களே… இது மத்தவங்களுக்கும் தெரிஞ்சு அவங்க நாலு விதமா பேசினா பாலா மனசு தாங்குமா?... எனக்கு எதுவுமே சரியா படலை கஸ்தூரி… நாம உடனே கிளம்பலாம் இங்கிருந்து…”

“அட என்னக்கா… பாலா சின்னப்பிள்ளைதான்.. இருந்தாலும் அவளுக்கும் 14 வயசாகுது…. நல்லது கெட்டது எதுன்னு அவளுக்கு தெரியாமலா இருக்கும்.. பேசுறவங்க ஆயிரம் சொல்லுவாங்க… அதுக்காக நாம கவலைப்பட்டா அவங்க சொன்னதை நாமளே உண்மையாக்கின மாதிரி ஆயிடும்… விடுங்க அக்கா… நான் போய் பிள்ளைகளை கூட்டிட்டு வரேன்.. இருங்க…” என்றபடி கஸ்தூரி செல்ல,

அந்த நேரம், அங்கு வள்ளியைத் தேடி வந்த பாலாவும், பாலாவைத் தேடி வந்த வள்ளியும் அந்த உரையாடலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்…

பாலாவிற்கு அப்போது அந்த பெண்மணி சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்து, ஒன்றும் ஒன்றும் மூன்று என்று கணக்குப்போட்டது அவளின் பிஞ்சு மனம்….

வள்ளியோ, “கடவுளே, ஏன் இந்த மனுஷங்க இப்படி இருக்குறாங்க… வண்டிக்காரன் தப்பா வந்து சின்னப்பா மேல இடிச்சதுக்கு எப்படி என் இந்து பொறுப்பாவா?... இது என்ன அநியாயம்… கேட்ட என்னாலேயே இதை தாங்கிக்க முடியலையே… இந்து மட்டும் இங்க இருந்திருந்தா அவ மனசு என்னபாடு பட்டிருக்கும்...???.. கடவுளே… நல்ல வேளை அவ இங்க இல்லை… அந்த மட்டும் காப்பாத்தினப்பா…” என்று கடவுளை நினைத்துக்கொண்டாள்….

பாவம் அவள் அறிந்தாளா என்ன?... இவள் கேட்டதை போல் பாலாவும் அந்த உரையாடலைக் கேட்டாள் என்பதை??...

மேலும் பாலா இதை கேட்டால் தாங்க மாட்டாள் என்று வள்ளி நினைத்தது போலவே அவள் கேட்டு தாங்க முடியாமல் தான் அழுதாள்..

அந்த நேரம் அவள் தோள் மேல் கைவைத்து எரிகிற தீயில் மேலும் எண்ணெய் ஊற்றினாள் அந்த குரோத பெண்மணி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.