(Reading time: 23 - 46 minutes)

11. பிரியாத வரம் வேண்டும் - மீரா ராம்

பிரசவ வலி எடுத்த அம்பிகாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வெளியே தவிப்புடன் நின்றிருந்தார் ஏழு மாதமாக இருந்த துர்காதேவி…

குழந்தையின் அழுகுரல் கேட்டபிறகே ஆசுவாசமடைந்தார் துர்காதேவி…

தன் தமக்கையின் புதல்வனை ஆசைதீர கைகளில் வாங்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டவர் அம்பிகாவை சேர்த்திருந்த அறையினுள் நுழையும்போது, டாக்டர் அவரைத் தடுக்க புரியாமல் விழித்தார் துர்கா…

Piriyatha varam vendum

“உங்க அக்காவின் உடல்நிலை சரியாக இல்லை… பிரசவத்துல ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க… ஜன்னியும் வந்ததால பிழைக்க வைக்க ரொம்பவே சிரமப்படவேண்டியதா போச்சு… அதும் இல்லாம, இந்த சிசு இப்போ அவங்க அருகாமையில இருக்கறது அவ்வளவு நல்லது இல்ல இரண்டு பேருக்குமே… புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்… ஒரு மூணு மாசம் தாய்ப்பால் வேண்டாம் இந்த குழந்தைக்கு…” என டாக்டர் சொல்லிவிட்டு சென்றுவிட,

கைகளில் உறங்கிக்கொண்டிருந்த சிசுவைப் பார்த்தவருக்கு கண்களில் நீர் முட்டியது… அதன் பிறகு அந்த பச்சிளங்குழந்தையையும், அம்பிகாவையும் உடன் இருந்து கவனமாகப் பார்த்துக்கொண்டார் துர்கா…

மூன்று மாதங்களில், அம்பிகா சற்றே எழுந்து நடமாட ஆரம்பித்தாலும், சிசுவின் அருகில் அவர் செல்லவில்லை…

மூன்று மாதம் முடிவில், துர்காவிற்கு பிரசவ வலி வர, அவர் இரட்டைப் புதல்வர்களை ஈன்றெடுத்தார்…

கண் விழித்ததும், முதலில் அவர் பாலூட்டியது தனது அக்காவின் புதல்வனுக்கு தான்…

அம்பிகாவும் குணமாகி உடல்நிலை தேறிவிட, தங்கையைப் பார்க்க வந்த இடத்தில், தங்கை தன் புதல்வனுக்கு பசியாற்றுவதைப் பார்த்தவருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை…

கட்டிலின் அருகே தொட்டிலில் படுத்து கை கால்களை ஆட்டிக்கொண்டிருந்த பாலகர்களை கைகளில் ஏந்திக்கொண்டார் சட்டென…

சந்தோஷத்துடன், நிறைவுடன், முத்தங்களிட்டார் மெதுவாக கண்ணீருடன்…

பின்னே, தாய்மையடைந்தும், பிரசவித்தும், இன்னும் குழந்தையை கைகளில் ஏந்தியது இல்லையே அவர் இதுவரை…

அவர் மூச்சுக்காற்று பட்டு விழித்துக்கொண்ட துர்காவின் புதல்வன் ஒருவன் அழ ஆரம்பிக்க, சிரித்துக்கொண்டே அவனுக்கு பால் புகட்டினார் அம்பிகா…

செய்தி கேட்டு ஓடிவந்த விஸ்வமூர்த்தியிடம், அம்பிகா தன் கைகளில் இருந்த துர்காவின் புதல்வனைக்கொண்டு சென்று காட்டி,

“என்னை அம்மாவாக்கிட்டாங்க இவன்… என் பையன் இவன்… நம்ம பையன் இவன்…” என சந்தோஷத்தில் சொல்ல, அவரும் புன்னகையுடன் மனைவியை அணைத்துக்கொண்டார்…

துர்காவின் அருகே சென்ற வில்வமூர்த்தி, துர்காவின் மடியில் மூன்று மாதக்குழந்தையும், அவரருகில், இன்று பிறந்த பாலகனும் இருக்க, வில்வமூர்த்தி சிரித்தவண்ணம்,

“சரிதான்… இரண்டு பேரும்… வந்ததும் உங்கிட்ட ஒட்டிக்கிட்டாங்க போல… இனி இந்த இரண்டு பேரையும் சமாளிக்கவே உனக்கு நேரம் சரியா இருக்கும்…” என சொல்ல… அனைவரின் முகத்திலும் புன்னகை அழகாய் விரிந்தது…

அதன்பிறகு, விஸ்வமூர்த்தி-அம்பிகாவின் ஏகப்புதல்வனாய் வ்ருதுணன் வளர, வில்வமூர்த்தி-துர்காதேவியின் புதல்வர்களாய் யுவியும், மைவிழியனும் வளர்ந்தனர்…

நடந்ததை வள்ளியிடத்தில் அவர் ஒளிவுமறைவின்றி சொல்லிவிட, வள்ளியோ என்ன பேசுவது, என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றிருந்தாள்…

“பிறந்தது என் அக்கா வயிற்றில் தான்… ஆனால், வளர்ந்தது என் அரவணைப்பில், நான் புகட்டிய பாலில்… வேலன் என் பையன் தான்…. அத நான் பெருமையா சொல்லுவேன்… ஆனா, என் அடி மனசுல ஒரே ஒரு குறை தான்… அவன் என் வயிற்றில் பிறக்கலை… ஆனா, அத நினைச்சு நான் கவலைப் பட்டதே இல்ல வள்ளி…  இருந்தாலும், என் வேலனை நான் சுமக்கலையே அப்படிங்கிற ஆதங்கம் மட்டும் இன்னும் என்ன மனசுல இருந்துட்டே இருக்கு…” என்ற துர்காவின் விழிகளில் நீர் கோர்க்க ஆரம்பித்த வேளையில்,

சட்டென்று அதை துடைத்துவிட்டவள், “அழாதீங்க அத்தை… உங்க வயிற்றில் அவர் பிறக்கலைன்னா என்ன?... உங்க நெஞ்சில் அவர் மட்டும் தானே இருக்குறார்… அவரை மார் மேலயும் தோள் மேலயும் தூக்கி போட்டது வளர்த்தது நீங்க தான?... ஏன் நீங்க இப்போ கூட சொன்னீங்க தான… என் விரல் பிடிச்சிப்பான், என் மடியில படுத்துப்பான்னு… இதெல்லாமே உங்களுக்கு சொல்லலையா அத்தை?... அவர் முழுக்க முழுக்க உங்க பிள்ளை மட்டும் தான்னு… வயிற்றில் சுமந்தா கூட பத்துமாசம் தான் அத்தை… ஆனா, நீங்க அவரை நெஞ்சில சுமக்குறீங்க… இப்போவர… மடிதாங்குறீங்க… உங்க குழந்தையை குழந்தையா இருக்க விடுறீங்க உங்ககிட்ட… அவர் உங்க பிள்ளைதான் அத்தை… மனச போட்டு அலட்டிக்காதீங்க… இந்த விஷயம் எனக்கு தெரிஞ்ச மாதிரி நான் காட்டிக்கவே மாட்டேன் அத்தை… அவரை பொருத்தவரை நீங்க தான் அவர் அம்மா… அப்படி இருக்கும்போது எனக்கும் நீங்க தான் என் கணவரோட அம்மா… என் அத்தை…” என்று சொல்ல…

அவளின் முகம் பற்றி நெற்றியில் முத்தமிட்டார் துர்கா…

“என் பையன் குடுத்து வச்சவன் தான்மா… இப்படி ஒரு நல்ல பொண்ணு மனைவியா கிடைக்க அவன் நிஜமாவே குடுத்து வச்சிருக்கணும் தான்…” என்ற துர்காவிற்கு வாய் வரை வந்துவிட்ட பதிலை சொல்ல முடியாது உள்ளே அமிழ்த்தினாள் வள்ளி…

அவள் பதில் பேசாது இருப்பதைப் பார்த்தவர், “என் பையனைப் பத்தி நீ என்ன நினைக்குற வள்ளி?...”

சட்டென்று அவர் கேட்டுவிட்ட கேள்வியில், கைகளை பிசைந்தாள் அவள்…

“என்னடா இது… கல்யாணம் முடிஞ்சப்பிறகு இப்படி ஒரு கேள்வியைக் கேட்குறேன்னு நினைக்குறியாம்மா?...” என அவர் கேட்க… அவள் அமைதியாக இருந்தாள்…

“காரணம் இருக்கு வள்ளி… என் பையன் உன்னை எனக்குப் பிடிச்சிருக்கான்னு எங்கிட்ட கேட்டான்ம்மா…” என்று சொல்ல அவள் நம்பமுடியாது அவரைப் பார்த்தாள்…

அவர் மகனிடம் பேசின தருணங்களை அவளிடம் சொல்ல ஆரம்பித்தார்…

அதே நேரம்,

“திரபா… என்னடா… என்ன யோசனை???...”

“….”

“ஹேய்… திரபா… என்னாச்சு…” என வ்ருதுணன் பாலாவின் தோள் தொட்டு அசைக்க…

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “நான் அம்மாகிட்ட நடந்துகிட்டேனா விதுன்?...” எனக் கேட்டாள்..

“உனக்கு என்ன தோணுதுடா?...”

“நீங்க சொல்லுங்க விதுன்…. ப்ளீஸ்…”

“இங்க பாரு திரபா… உன் மனசைக் கேளு… நான் என்ன நினைக்கிறேன் அப்படிங்கிறது எல்லாம் முக்கியம் இல்ல… நீ என்ன நினைக்குற… அதை சொல்லு…”

“எனக்கு தப்புன்னு தான் தோணுது விதுன்… நாம நாளைக்கு அம்மாவ போய் பார்க்கலாமா விதுன்?... அவங்ககிட்ட பேசணும் நான்… கூட்டிட்டு போவீங்களா விதுன்???...” என சிறுபிள்ளையாய் கேட்டவளை கைகட்டி ரசித்தான் அவன் மிக…

‘என்ன விதுன்… நான் கேட்டுட்டே இருக்கேன்… எதுவும் சொல்லமாட்டிக்குறீங்க?...”

“சொல்லணும்னு தாண்டா நானும் நினைக்குறேன்… ஆனா, நீ எப்படி எடுத்துப்பன்னு தான் எனக்கும் தெரியலை…” என்றான் அவன் கேள்வியாக…

“எங்கிட்ட சொல்ல என்ன தயக்கம் விதுன்…. சொல்லுங்க… பரவாயில்லை…”

“ஹ்ம்ம்… அத்தை மேல தப்பு இல்லன்னு நீ உணர்ந்தது சந்தோஷம் தான்… ஆனா, அதே நேரம் வள்ளி மேல உனக்கு இருக்குற கோபம் நியாயமானதான்னு கொஞ்சம் யோசிடா… அவ உனக்கு செஞ்ச தப்பு தான் என்னன்னு கொஞ்சம் யோசிடா… யோசிப்பியா?...”

‘விதுன்…. அவளைப் பத்தி பேசாதீங்க… ப்ளீஸ்…” என்றாள் அவள் கோபத்துடன்…

அவள் கைகளைப் பற்றியவன். “நான் உன்னை அவகிட்ட பேச சொல்லலை திரபா… யோசின்னு தான் நான் சொல்லுறேன்… உனக்கு பிடிக்கலைன்னா செய்ய வேண்டாம்டா… ஆனா அதுக்கும் முன்னாடி நான் சொல்லுறதை நீ கேளு…” எனவும் அவள் அவன் சொல்வதை கேட்க தயாரானாள்…

“வள்ளி மேல உனக்கு நிறைய வெறுப்பு இருக்கு… அது புரியுது எனக்கு… நீ இரண்டாவதுன்னு நீயா நினைச்சிக்கிட்டு கஷ்டப்பட்டதும் எனக்கும் புரியுது… ஹ்ம்ம்… இந்த வீட்டை பொருத்தவரைக்கும் என் அம்மா முதல் மருமகள்… அதுவும் என் அம்மாவுக்கு நான் ஒரே பையன்…  அதனால என் அம்மாவுக்கும் நீ முதல் மருமகள் தான்…” என்று அவன் சொல்ல அவள் முகம் மலர்ந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.