(Reading time: 23 - 46 minutes)

ன்ன தேவிம்மா… நீ… இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்… வா போகலாம்னு… நீ கேட்டியா??... இப்ப பாரு… உனக்கு முடியலை…” என்றவன், “சரி… விடு… என் தேவிம்மாவை நான் பார்த்துப்பேன்…” என்றபடி அவரை கைகளில் தூக்கிக்கொண்டு சென்றான்…

“நீ ரெஸ்ட் எடு தேவிம்மா… எதும் வேணும்னா என்னைக்கூப்பிடு…” என்றபடி அவரை கட்டிலில் படுக்கவைத்துவிட்டு நகர முயன்றவனின் கையை தேவி பிடித்து தடுக்க…

“என்ன தேவிம்மா… எதும் வேணுமா?...”

அவனின் கேள்விக்கு பதில் சொல்லாது, “என் வேலன் எங்கூட இன்னைக்கு ஒருநாள் தூங்குவானா???...” என கேட்ட மாத்திரத்தில், “தூங்குன்னு ஆர்டர் போடாம, இதென்ன புதுசா எங்கிட்ட பெர்மிஷன் எல்லாம் கேட்குற நீ?... இனி இப்படி எல்லாம் கெஞ்சக்கூடாது நீ எங்கிட்ட… சரியா?...” என்றபடி மிரட்டிவிட்டு தாயின் அருகே படுத்துக்கொண்டான்…

தாயின் கையைப் பிடித்த வண்ணம் அவன் தூங்கி விட, மெல்ல அவனைத் தட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தவரின் விழிகளில் இருந்து நீர் வழிந்தது… மௌனமாக அதை துடைத்துவிட்டு யுவியையேப் பார்த்துக்கொண்டிருந்தார் அவர்…

யுவிக்கு இருபது வயது இருக்கும்போது, ஒரு பெண்ணிடம் தன் மனதை தொலைத்துவிட்டதாக வந்து கூறினான் அவன்…

“யாரு வேலா??... அந்த பொண்ணு?... பேரென்ன?...” என்று தேவி கேட்டதற்கு

“அவ யாரு என்னன்னு எல்லாம் தெரியாதும்மா… ஆனா பேரு த்வனி… அழகா இருக்குல்லம்மா…” என்றான் அவன் காதலில் விழுந்த சந்தோஷத்துடன்…

“என்னடா சொல்லுற???... யாரு என்னனே தெரியாதா?...”

“ஆமா தேவிம்மா… எனக்கு தெரியாது… ஆனா சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவேன்… அவளுக்கு சொந்த ஊர் நம்ம ஊர் தான்…” என்றான் அவனும் அந்த சந்தோஷம் மாறாமல்…

“நம்ம ஊரா?...” என்று யோசனையில் இருந்தவரிடம்,

“நீ ரொம்ப யோசிக்காத தேவிம்மா… எல்லாம் நான் பார்த்துக்கறேன்…” என்றபடி சென்றுவிட்டான் யுவி…

ஒருவருடம் வரை த்வனியைப் பற்றிய எந்த தகவலும் அவனுக்கு கிடைக்கவில்லை… அவளை சந்தித்த நாளில் மீண்டும் சந்திக்க சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தான் யுவி..

மகனின் முக வாட்டத்தை கண்டு கொண்ட தேவி என்ன வென்று கேட்க, அவன் அவளை பார்க்க முடியாத தன் வருத்தத்தினை சொன்னான்…

எல்லாம் சரியாகிடும் வேலா… என்ற தாயின் வார்த்தை மட்டுமே அவனுக்கு பற்றுகோலாய் இருந்தது மூன்று வருடங்கள் வரை…

மூன்று வருடங்களாக அவளது நினைவில் அவன் கரைந்தாலும், படிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை அவன்… அவன் அவளை சந்தித்த போது, கல்லூரி மூன்றாம் ஆண்டில் இருந்தான்… அதன் பின், என்ஜினியரிங்க் முடித்துவிட்டு, தந்தையின் தொழிலை கையிலெடுத்தான் தனது இருபத்து ஒன்றாவது வயதில்… அனுபவமும் இல்லை… அதே நேரத்தில் வயதும் இல்லை…

இருந்தாலும் அனைத்தையும் தகர்த்தெறிந்தான் அவன்… தொழிலில் ஒரே வருடத்தில் முன்னேறினான்…  அதே நேரம் மேற்கொண்டு எம்.பி.ஏ வும் படித்து முடித்தான்… கல்லூரி சென்று விட்டு வந்து அலுவலக வேலையைப் பார்ப்பான்… இடையில் அவளை சந்தித்த நாள் வரும்போது வருடம் தவறாமல் அவளைப் பார்க்க சென்று விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி வர ஆரம்பித்தான்… அவனது இருபத்தி இரண்டாவது வயது வரை…

அதுவரை பொறுமையாக இருந்த அவனது தாய் தேவி… மகனின் இந்த ஏமாற்றத்தை பொறுக்கமாட்டாது, அவனின் மனதை மாற்ற ஆரம்பிக்க வேண்டும் என முடிவெடுத்தார்… ஆனால் அது விபரீதமாக போகும் என்று அவரே பின்னாளில் தான் அறிந்து கொண்டார்…

“வேலா… மூணு வருஷமாச்சு… இன்னும் அவ வரலை… உன்னை நேசிச்சிருந்தா கண்டிப்பா அவளும் வந்திருப்பா, இந்த மூணு வருஷத்துல ஒருதடவையாச்சும்… அது மட்டும் இல்லாம அவ வர்றதுக்கு அவ உயிரோடவும் இருந்திருக்கணும்…” என்றதும்,

“தேவிம்மா…………………………..” என்று அலறிவிட்டான் யுவி..

“என் த்வனிக்கு எதுவும் ஆகியிருக்காது தேவிம்மா… ப்ளீஸ் விளையாட்டுக்குக்கூட அப்படி சொல்லாத… ப்ளீஸ்…” என்று அவன் கெஞ்ச…

வலியில் துடிப்பதை பார்த்தால், நிச்சயம் எந்த காயத்திற்கும் மருந்திட முடியாது என்பதை புரிந்து கொண்ட தேவி, தனது முடிவை செயல்படுத்த துவங்கினார்…

“அம்மாவுக்கும் ஆச இல்ல வேலா… அப்படி சொல்ல… ஆனா, நடக்குறதை எல்லாம் வச்சி யோசிச்சுப் பார்த்தா எனக்கு அப்படித்தான் ஆகியிருக்கும்னு நினைக்கத்தோணுது…” என்றவர், “சரி இன்னும் உனக்கு ஒரு வருஷம் டைம் தரேன்… நீ அவளை பார்த்துட்டா அம்மாவுக்கும் சந்தோஷம்… அப்படி இல்லன்னா, அம்மா சொன்னதுதான் நடந்திருக்கும்னு நீ முடிவுக்கு வரணும்… சம்மதமா?...” என கேட்க அவனிடத்தில் பதில் என்ன அசைவு கூட இல்லை..

“வேலா… அம்மா உங்கிட்ட தான் கேட்குறேன்பா… சொல்லு… அம்மா உனக்கு கெட்டது நினைப்பேனா?...” என்று கேட்க…

“எப்படியும் இந்த வருடம் அவளை பார்த்துவிடுவேன் நான்…” என்ற நம்பிக்கையுடன் தாயிடத்தில், “சரிம்மா….” என்றான் அவனும்…

தன் மகன் இன்னும் இப்படியே இருந்திடக்கூடாதே என்றெண்ணி தான், ஆரம்பத்திலேயே அவள் இறந்துபோயிருப்பாள் என்று ஒரு பொய் சொல்லி அவனின் மனதை மாற்ற முயற்சித்தார் துர்காதேவி…

ஆனால், அதற்கு பலன் சற்றே கிட்டியது போல், த்வனி இறந்துவிட்டாள் என்ற தாயின் வார்த்தைகள் நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் திணறி கடைசியாக தாயின் வார்த்தைகளுக்கு செவிகொடுத்தான்…

ஆனால் விதி நான்காவது வருடமும் அவன் அவளைப் பார்க்கவிடாது செய்ய, நொந்து போய் வந்தவனை அரவணைத்துக்கொண்டார் தேவி…

“தேவிம்மா… நீ சொன்ன மாதிரியே நான் இந்த வருஷம் அவளைப் பார்க்கலை… நீ வந்த முடிவுக்கே நானும் வரேன்…” என்று கடினப்பட்டு கூறியவன்,

பின், தெளிவான மனதுடன், “என் த்வனிதான் எனக்கு மனைவி… அது இப்போன்னு இல்ல… நாலு வருஷத்துக்கு முன்னாடியே நான் முடிவு பண்ணிட்டேன்… இப்போ அவ இறந்துட்டான்னு என் மனசை நான் மாத்திக்க முடியாது தேவிம்மா… அதனால இனி என் வாழ்க்கையில கல்யாணம்னு ஒன்னு இல்லவே இல்ல… என்னைப் புரிஞ்சிப்பன்னு நம்புறேன்..” என்றவன் சொன்ன வார்த்தையில் ஸ்தம்பித்து போனார் தேவி..

“கடவுளே… நான் நினைத்தது என்ன?... நடந்தது என்ன?... அவள் நினைவில் உருக்குலைந்து போகிறானே என்று தானே அவனிடம் அப்படி ஒரு பொய்யை சொல்லி நம்ப வைக்க படாத பாடு பட்டேன்… அவனே சரி என்று நம்பிய தருவாயில் நான் கொண்ட நிம்மதியை இப்படி கல்யாணமே வேண்டாம் என்ற வார்த்தையில் காணாமல் போகசெய்து விட்டாயே… எதற்கு இப்படி செய்தாய் நீ?... என் பிள்ளை பாவம்… இனி அவளின் நினைவில் கூட கொஞ்சம் வாடி போவானே… நான் என் செய்வேன்…???...” என்று அவர் துடித்துப்போனார்…

அதன் பின் ஒருவருடம் அவள் இறந்துவிட்டாள் என்பதை எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு முயன்று தன் மனதினை நம்ப வைக்க அவன் அரும்பாடு பட்டான்… ஆனாலும் மனதின் ஓர் மூலையில் அவள் உயிரோடு தான் இருப்பாள் என சொல்லியது அவனது ஆழ்மனம்…

அந்த நேரம், தொழிலை விரிவுபடுத்த வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் உருவானது… அப்போது சட்டென்று நான் செல்கிறேன்… என கிளம்பத் தயாரானவனுடன் தேவி கிளம்ப, வில்வ மூர்த்தி அண்ணனுக்குத் துணையாக இந்தியாவிலே இருக்க விரும்புவதாக கூறிவிட, யுவி, தேவியுடனும், மையனுடனும் வெளிநாட்டிற்கு கிளம்பி சென்றான்…

அதன் பின், மூன்று வருடங்கள் அவன் இந்தியா வரவில்லை… வருடத்தில் ஒருநாள் வீதம் மூன்றே மூன்று நாட்கள் மட்டும் அவன் இந்தியா வந்தான்… அதுவும் அவன் அவளை சந்தித்த நாள்… அவளைப் பார்த்திட மாட்டோமா என்ற ஏக்கம் மட்டும் அவனுள் கொஞ்சமும் குறையவில்லை… இந்த எட்டு வருடத்தில் சிறிதும்…

அது தேவிக்கு தெரிந்தும், அவர் எதுவும் சொல்ல முடியாத நிலையில் மௌனமானார்…

எட்டு வருடங்கள் கழிந்தும் மகனின் மனநிலையில் யாதொரு மாற்றமும் இல்லாதிருந்து திடீரென வள்ளியைப் பார்த்ததும் கொண்ட மாற்றம் பற்றி அவன் கூறியதும் பூரித்துதான் போனார் தேவி…

வள்ளியால் தன் வேலனின் வாழ்வில் மாற்றம் வரும் என்று நம்பியிருந்தவருக்கு மகனின் வாய்மொழி வார்த்தைகள் மேலும் நம்பிக்கை கொடுத்தது…

துரோகம் அது இது என்று பேசிய மகனை சமாதானப்படுத்தி தூங்க வைத்தவருக்கு ஒன்று மட்டும் புரிந்தது… அது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ யுவிக்கு அவ்வளவு சீக்கிரம் வள்ளியுடன் திருமணம் நடத்தி வைத்திட வேண்டும் என்று…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.