(Reading time: 22 - 44 minutes)

வள் வகுப்பு மாணவிகளும் ஒவ்வொருவராக வர, உணவு முடியவும் சைட் சீயிங் கிளம்பினர். மதுரன் காரில் வராமல் இவர்களுடன் வந்தான்.

துபாரே எலிஃபன்ட் கேம்ப் போனார்கள். சிலர் யானை பார்க்கப் போனால் சிலர் காவேரியில் குளித்தனர். ஆக மொத்தம் அனைவரும் அவரவர் வேலையில் கவனமாய் இருக்க மரங்களும் புதர்களுக்கும் இடையில் நெடுந்தூரமாய், நீண்ட காலமாய் ஓடிக் கொண்டிருக்கும் காவேரியின் உள் பகுதிக்கு அதாவது சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இவர்கள் இருவரும் நகர்ந்து போய் கால்களை தண்ணீரில் இட்டபடி அமர்ந்து கொண்டனர். நிழல் தந்தது ஒரு மரம்.

முதலில் அங்கு நிலவியது மானுட மௌனமே. நீரும் பறவைகளும் இன்ன பிற விலங்கினமும் மட்டுமே ஒலி செய்து உயிரோட்டம் சேர்த்தன சூழலுக்கு.

அவன் அருகில் அமர்ந்திருந்தவளுக்கு எதுவும் பேசவே தோன்றவில்லை. அவன் ப்ரசன்னம் போதும். அதே போன்ற நிலையில்தான் இருந்தான்போலும் மதுரனும்.

ஆனால் திடீரென மிகவும் குளிர்ந்த ஒரு மென் காற்றுவீச எதையோ உணர்ந்தவனாக எழுந்தவன் “கிளம்பலாம் குட்டிமா நம்ம பஸ் இருக்ற பக்கம் போயிடலாம்…எதோ சரி இல்லை….” இன்னுமாய் அமர்ந்திருந்தவளுக்கு எழும்பும்படி கை கொடுத்தான். அவ்வளவுதான் இயற்கை அவர்களுக்கு தந்த நேரமும்.

நெய்யுருகும் நேரத்தில் பெருகி வந்திருந்தது பொன்னி நதி. இவர்களுக்கு முன்னும் பின்னும் பாய்ந்தது பெரும் தண்ணீர். எதையும் நினைக்க கூட நேரமில்லை. இவள் கையை இறுக்கி பிடித்தபடி இழுத்து சேர்த்தபடி உயரமான பகுதி என உள்ளுணர்வு சுட்டிய திசை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான் மதுரன். அவன் பின் இவள்.

எங்கெங்கோ கேட்கும் கூக்குரல்கள். நீர் இரைச்சல், எதுவோ எதனுடனோ மோதும் ஒலி வெடிப்பு.

நல்லிசை மனம் முழுவதும் ஒன்றே ஒன்றில் ஒரேடியாய் உடைந்து போயிருந்தது. இதுதானோ அவள் கனவின் பொருள்? பிரியப்போகிறேனோ ப்ரியமானவனை? இழக்கப்போகிறேனோ என்னவனை நிரந்தரமாய்? ‘கடவுளே வாழ்றதா இருந்தா நாங்க சேர்ந்து வாழனும் போறதா இருந்தாலும் சேர்ந்தே போய்டனும்….தயவு செய்து பிரிச்சு வச்சு பார்த்துடாதீங்க…ப்ளீஸ்’

இதைத்தான் அவள் மனதில் மன்றாடிக்கொண்டிருந்தாள் இடைவிடாது.

நின்றிருந்தான் மதுரன். அதனால் இவளும். இப்பொழுதுதான் மெல்ல உறைக்கிறது ஒரு குன்று போன்ற பாறை மீது அவனுடன் இவள். எப்பொழுது ஏறினாள்? எப்படி ஏறினாள் எதுவும் மனதில் இல்லை.

“ஐ திங்க் வி ஆர் சேஃப்..தேங்க் காட்…” அவன் குரலில் மடை திறந்த வெள்ளமென உடைந்து கதற  ஆரம்பித்தாள் அவள் மௌனத்தை முடித்தவளாய். இறுக்கி அணைத்திருந்தாள் அவனை. அவனுக்கு வந்த ஆபத்து, அவனை அவளிடமிருந்து திருடிக் கொண்டு போக இருந்த சாத்தானின் சதி முறிந்துவிட்டதாய் தோன்றியது நல்லிசைக்கு.

“குடும்பத்தை பார்த்துகிடுற மாதிரி வேலைக்கு போறதுக்கு முன்னால ஒரு மனுஷனுக்கு காதல் வரவே கூடாது…அப்டியே வந்தாலும் அதை அந்த பொண்ணுட்ட சொல்லவே கூடாது….பிரிஞ்சி இருக்றது கஷ்டம் தான் ஆனாலும் அது சேர்றதுக்கு தடையா வராது.…இப்ப பாரு….நாம ரெடியாகாமலே உங்க வீட்டை ஃபேஸ் செய்ய போறோம்…..சூழ்நிலை எப்டி போனாலும் ஐ’ல் ஆல்வேஸ் கம் ஃபார் யூ…அதை மட்டும் மறந்துடாதே….”

வெள்ளத்தை உணர்ந்த உடன் இவர்கள் இருவரும் தப்பிக்க என ஓடி வந்தது காட்டு பகுதிக்குள். இப்பொழுதோ இவர்கள் இந்த ஆற்றை கடந்து சாலைப் புறம் சென்றால்தான் மற்றவர்களை சந்திப்பதும், பெங்களூரு திரும்புவதும் சாத்தியம். காடு மொபைல் சிக்னலின்றி விரிந்திருந்தது.

ஆக வெள்ளம் சமநிலை பட்டது உறுதியான பின்பு, மிக கவனமாக பாதுகாப்பாக காத்திருந்துதான் இவர்கள் காவேரியை கடக்க முடியும் என்ற நிலை.

கால தாமதம் கட்டாயம். வெள்ள விஷயமும் காணமல் போன மகள் நிலையும் அறிந்தவுடன் நல்லிசையின் தந்தை தேடி இங்கு மடிக்கேரி வந்துவிடுவார்தானே. மகள் மடிக்கேரி சுற்றுலா வந்திருப்பது அவருக்கு தெரியுமே…அப்புறம் இவர்கள் இருவருமாய் சென்று நின்றால் காதல் விஷயம் தானாக வெளியாகிவிடுமே…

அதை உணர்ந்ததும் தான் மதுரன் இப்படி சொன்னான். மதுரனின் எண்ணப் போக்கு அப்போதைக்கு அர்த்தம் அற்றதாகத்தான் தோன்றியது நல்லிசைக்கு. அவள் அப்பா மகள் விருப்பத்தை புறக்கணிக்க போவது இல்லை.அதோடு இப்பொழுது மகளின் உயிரைக் காப்பாற்றியவன் என்ற கூடுதல் நல்லெண்ணம் வேறு இருக்கும்.

வெள்ளமும் சற்று சீக்கிரமே வடிந்து இவர்களும் பத்திரமாக ஆற்றை கடந்து மற்றவர்களை மாலைக்குள் அடைந்துவிட்டனர். சில உயிர் சேதம் என்றாலும், இவர்கள் குழுவில் யாவரும் நலாமாகவே இருந்தனர். இவர்களைத்தான் காணாமல் எல்லோரும் எதிர்மறை எண்ணத்தில் தவித்துக் கொண்டு இருந்தனர்.

துரன் ஹாஃஸ்டலில் தங்கி படிப்பவன் என்பதால், அவன் மடிக்கேரி வந்தது அவன் வீட்டிற்கு  தெரியாதாகையால் அவர்கள் வீட்டிலிருந்து எந்த தேடல் அழைப்புகளும் இல்லை. ஆனால் நல்லிசையின் தந்தை செல்வநாதனோ கல்லூரி நிர்வாகம்,  சக மாணவர்கள் என அனைத்து தரப்பினரையும் அழைக்க, அவளை காணவில்லை என்ற தகவல் அவருக்கு கிடைத்திருந்தது. உயிர் துடிக்க அவர் மடிக்கேரி நோக்கி பயணமாகிக் கொண்டிருந்தார்.

ஆதலால் முதல் வேலையாக தான் சுக பத்திரமாய் இருக்கும் தகவலை அலைபேசி மூலம் தன் தந்தைக்கு தெரிவித்தாள் நல்லிசை.

“உங்க காலேஜ்ல இருந்து இன்னொரு ஃஸ்டூடண்டையும் காணோம்னு சொன்னாங்களேமா?” அப்பாவின் கேள்விக்கு பதிலாக மதுரனை பற்றி நல்லபடியாக ஒரு அறிமுகத்தை செய்து வைத்தாள் நல்லிசை.

“எங்க சீனியர்பா…மதுரன்னு நேம், அவங்கதான்பா எனக்கு ஹெல்ப் செய்தாங்க…அவங்க இல்லனா நான் இந்த ஃப்ளட்ல இருந்து தப்பிச்சுறுக்கவே மாட்டேன்…”

அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மதுரனோ அவளை விதமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

செல்வநாதனும் உடனடியாக மொபைலை மதுரனிடம் கொடுக்க சொல்லி அவனிடம் தன் நன்றிகளை மிகுந்த தன்மையாக தெரிவித்துக் கொண்டார்.

இவர்கள் உடை மாற்றி உணவு உண்டு சற்று ஆசுவாசப் பட்ட நேரம் வந்தே சேர்ந்துவிட்டார் செல்வநாதன்.

அவர் வந்த நேரம் மதுரன் ஆண்களுடன் அவர்கள் தங்கி இருந்த பகுதியில் இருந்தான். செல்வநாதன் முன்பு அவர் சொல்லாமல் நல்லிசை இவனிடம் குறுஞ்செய்தி கூட அனுப்ப கூடாது என சொல்லி வைத்திருந்தான்.

ஆக அவர் வந்துவிட்ட செய்தி பிற மாணவர்கள் வழியாகத்தான் இவனை அடைந்தது. அன்று பகலில் வெள்ளம் கண்டிருந்ததால் இரவு மழை அதிகமாக இருக்கலாம் என்ற காரணத்தால் மலைப் பாதையில் சாலை போக்குவரத்து வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு மறுநாள் காலை இவர்கள் பெங்களூரு திரும்பலாம் என திட்டமிடப்பட்டிருந்தது.

ரவு உணவுக்கு மாணவர்கள் ரெஃஸ்டரண்ட் பகுதிக்கு செல்லும் போது உடன் சென்ற மதுரனை முதன் முறையாக பார்த்தார் செல்வநாதன்.

மகளுடன் சாப்பிட வந்திருந்தார் அவர். காலைதான் அவரும் கிளம்ப வேண்டும். நல்லிசையை மீண்டும் கல்லூரியில் விட்டுப் போவாரா என்பதே மதுரனுக்கு கேள்வியாக இருந்தது.

அவர் மதுரனிடம் மீண்டும் ஒரு முறை நன்றி சொன்னதோடு சரி, தன் மகளிடம் உரையாடுவதில் கவனத்தை செலுத்த தொடங்கிவிட்டார். அவருக்கு எந்த சந்தேகமும் வந்தது போல் தெரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.