(Reading time: 22 - 44 minutes)

ரவு தன் தந்தை தூங்கியபின் இவனுக்கு நல்லிசை குறுஞ்செய்தியாவது அனுப்புவாள் என எண்ணி காத்திருந்தான் மதுரன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. முந்திய நாள் இரவு முழுவதும் தூங்காமல், இந்த நாளிலும் கடும் போராட்டங்களை சந்தித்திருந்த நல்லிசை தூங்கிப் போனாள் வெகு விரைவில். அவள் செய்திக்காக காத்திருந்த மதுரோ வெகு தாமதமாக துயில் கொண்டான்.

ஆனால் மறுநாள்  மதுரன் தூங்கி விழிக்கும் போதே அவன் மொபைல் சிணுங்கிக் கொண்டு இருந்தது. அழைப்பு நல்லிசை எண்ணிலிருந்து தான்.

“ஹலோ..”

“மதுர் அப்பா உங்களை மீட் செய்யனும்னு சொல்றாங்க….என்ன விஷயம்னு தெரியலை…எதுக்கும் பெர்ஃபெக்டா ரெடி ஆகி வாங்க…”

மதுரனுக்கு புரிந்துவிட்டது.

அவன் செல்வநாதனை சந்திக்க கிளம்பிச் சென்றான்.

அவரும் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

அந்த சந்திப்பில் நல்லிசை இல்லை.

“நீங்க வந்திருக்க கார் கூட உங்களோடது இல்லைனு கேள்விப் பட்டேன். ஆனால் நான் என் பொண்ணுக்கு 18 வயசில லைசன்ஃஸ் கிடச்சதும் கார் வாங்கி கொடுத்துட்டேன், அவளுக்கு எல்லா வசதியும் இருக்கனும்னு ஒன்னொன்னையும் பார்த்து பார்த்து செய்றவன் நான்….ஆனா அவ விரும்புற விஷயம் இல்லாம நான் மத்ததெல்லாத்தையும் வாங்கி கொடுத்து என்ன ப்ரயோஜனம்?

நேத்து நைட் தான் அவ மொபைலைப் பார்த்தேன்,” இவனுடனான அவளது உரையாடல் செய்திகளை காண்பித்தார்.

மிசஸ் நல்லிசை மதுரன் நீட்ஸ் யு என முடிந்திருந்தது அது.

அவனை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தார் அவர். அதில் நிச்சயமாய் கோப காரமும் கலந்திருந்தது. அவன் அவர் பார்வையை தாங்கி நிமிர்ந்தே நின்றான்.

“பார்த்ததும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, நைட்லாம் தூக்கமே கிடையாது. காலைல முத வேலை என் ஆட்களை வச்சு உங்களப் பத்தி விசாரிச்சதுதான். பண விஷயம் தவிர மத்த எல்லாமே நல்லாதான் சொல்றாங்க.

எந்த வம்பு தும்புக்கும் போகாத பாசமான குடும்பம், ஒரே தம்பி மட்டும் தான், நீங்க படிப்புல கெட்டி, ஐ ஏ எஸ் எழுதிகிட்டு இருக்கீங்க, ப்ரிலிம்ஃஸ் பாஃஸ் செய்தாச்சு, மத்த விஷயங்களும் எல்லாம் நல்லாதான் சொல்றாங்க…..ரொம்ப நியாயம் பார்ப்பீங்க போல…அதனால நாளைப் பின்ன என் பொண்ண விட்டுட்டு போயிட மாட்டீங்கன்னு நம்பலாம்னு தோணுது….”

இதெல்லாம் உண்மைதானே என்பது போன்று ஒரு பார்வை பார்த்தார் செல்வநாதன் இவனை நோக்கி.

அமைதியாய் அவரைப் பார்த்திருந்தான் மதுரன். இவனது பதிலை வைத்தெல்லாம் அவர் எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை என்பது அவனுக்கு தெரியுமே.

“ஆனா ஒரே ஒரு கண்டிஷன் என் வருமானத்துல தான் என் வீட்டுக்காரி குடும்பம் நடத்தனும்னு நீங்க மொட்ட பிடிவாதம் பிடிக்காத பட்சத்துல எனக்கு இந்த கல்யாணம் சம்மதம்தான்.”

அவனை படிப்பது போல் பார்த்தார் செல்வநாதன் இப்பொழுது.

இதற்கும் மதுரனிடம் எந்த பதிலும் இல்லை. மேல சொல்லுங்க என்றபடி ஒரு பாவனையுடன் தான் நின்றிருந்தான் அவன்.

“அதேநேரம் அவளுக்கு நான்கொடுக்கிற ஒன்னொன்னொன்னும் என் சுய முடிவாதான் இருக்கும். உங்க தலையீடு அதுல இருக்க கூடாது….அவளுக்கு தேவையான எல்லா வசதியும் செய்து கொடுப்பேன், அவ இன்னைக்கு போல ஒரு ஃஸ்டண்டர்டானா வாழ்க்கை வாழ தேவையான எல்லாம் செய்வேன்…..உதாரணமா ஃபாரின் டூர் போகனும்னு அவ ஆசைபட்டா கூட டிக்கெட் ஃஸ்டேன்னு எல்லாம் செய்வேன்….ஆனா என் சொத்து தொழில் பணம் எதுவும் நானும் என் வீட்டுக்காரியும் உயிரோட இருக்கிற வரைக்கும் உங்க கைக்கோ ஏன் என் மக கைக்கோ கூட தரமாட்டோம் ….. எங்க காலத்துக்கு பிறகு என் மகளுக்கும் அவ வாரிசுக்குமாத்தான் அத கொடுப்போம்…”

இப்பொழுது மீண்டும் இவன் முகத்தை ஒரு ஆழப் பார்வை…

“நீங்க வசதியில்லாதவங்கன்னு உங்கள அவமானபடுத்ற மாதிரி எதுவும் நடந்துக்க மாட்டேன்…..அதுவும் என் பொண்ணு மனசு கஷ்டபடக் கூடாதுங்கிறதுக்காகதான்….ஆனா அவ்ளவுதான் லிமிட்…அதுக்கு மேல நீங்க என் மனசுல மரியாதை சம்பாதிச்சுகிடுறது உங்க சாமர்த்தியம் …கல்யாணத்தை நீங்க வேலைக்கு போனதும்…ஏன் ஐஏஎஸ் க்ளியர் செய்த மறுநாளே கூட வச்சுகிடலாம்……மாப்ள”

“மேரேஜுக்கு சம்மதிச்சுருக்கீங்க சந்தோஷம்…..மாமா….என்ட்ட சொன்னதை இசைட்டயும் சொல்லிடுங்க….” தன் குரலில் எந்த உணர்வையும் காட்டாமல் சொன்னான் மதுரன்.

“ம்…கண்டிப்பா…இப்போ அவளை கூட கூட்டிட்டு போக போறனே…அங்க வீட்ல வச்சு எல்லாம் சொல்லிப்பேன்….”

“கூட வர அவ சரின்னு சொல்லிட்டாளா?”

“அதை நான் பார்த்துப்பேன்….அவ படிப்பு பாதியில நிக்றதால உங்களுக்கு எந்த நட்டமும் இருக்கா என்ன? எப்டியும் அவளை வேலைக்கு அனுப்ப நான் சம்மதிக்கப் போறது இல்ல…”

“அதுக்கு இல்ல….இது அவ ஆசைப் பட்டு ஜாய்ன் செய்த கோர்ஸ்….அது நான் இங்க இருக்கேன்ற ஒரு காரணத்தால நிக்றது எனக்கு சரியா படலை…எனக்கு இன்னும் ஸ்டடீஸ் 6 மந்த்ஸ்தான் இருக்குது…அதுக்கு பிறகு நான் சென்னைல இருக்குற என் வீட்டுக்கு போய்டுவேன்…அந்த 6 மந்த்ஸ்ம் நான் காலேஜ், ஐ ஏ எஃஸ் எக்‌ஆம்ஸ்னு படு பிசியாதான் இருப்பேன்….”

“உங்களை நம்பின்னு இல்லை….ஆனா உங்களுக்கே அவ ஆசைபட்ட படிப்பை நிப்பாட்ட கூடாதுன்னு இருக்கிறப்ப எனக்கு இருக்காதா….? 6 மாசம்தானே நாங்க இங்க வீடை மாத்திட்டு வந்துடுறோம்…”

இத்தனை நேர உரையாடலில் மதுரனுக்கு முதல்முறையாக சிரிப்பு வந்தது.

“ஓகே அப்ப நான் கிளம்புறேன்….” மதுரன் உரையாடலை முடித்துவிட்டு நகர முற்பட

“கிளம்புறேன் மாமான்னு சொல்லுங்க…மொட்டை மொட்டையா பேசாம முறை சொல்லி பேசுங்க…அப்பதான் எனக்கும் மரியாதை உங்களுக்கும் கௌரவம்”

மதுரன் மனதில் செங்கிஸ்கான் என்ற வார்த்தை நியாபகம் வந்தது.

ன்று பெங்களூரு நோக்கி கிளம்பும் முன் மதுரனை எப்படியும் சந்திக்க வேண்டும் என பார்த்திருந்தாள் நல்லிசை. இவள் மொபைல் வேறு அப்பாவிடம் இருந்தது. மதுரனிடம் பேசிவிட்டு வந்தபின்தான் மகள் காதல் பற்றி அவர் அறிந்ததையும் மதுரனிடம் பேசியதையும் இவளிடம் கூறினார். அப்படி எல்லாம் சம்மதமாக பேசினாலும்  ஏனோ இன்னும் இவள் மொபைலை இவளிடம் தரவில்லை அவர்.

மதுரனிடம் பேச வேண்டும் என சொல்லி எப்படி அப்பாவிடம் மொபைலை கேட்க என்றும் இவளுக்கு புரியவில்லை. ஆக மதுரன் வந்திருந்த கார் மீது கண் வைத்திருந்தாள். அவன் இவளது அறை பக்கம் பார்த்தவாறேதான் காரை நோக்கி சென்றான்.

ஹை என் டெம்ப்ரரி சாமியார்க்கு கூட என்னை தேடுது

நினைத்தபடி அவனை நோக்கி ஓடினாள் நல்லிசை.

கையில் ஒரு ட்ரை ஜாமூன். ஓடிச் சென்று அவன் வாயில் அதை திணித்தவள் அவன் முகம் கொண்ட ஆச்சர்யம் மகிழ்ச்சி நிம்மதி எல்லாம் கண்டவள் ஒரு நொடி தயங்கிவிட்டு சட்டென அவனை அணைக்கப்போனாள்.

“ஏய் உங்க அப்பா…” அவனது வார்த்தையில் இவள் கை கால்கள் அட்டென்ஷன்.

“எங்க இருந்தாவது பார்துட்டு இருப்பாங்கன்னு சொல்ல வந்தேன்…”

முகம் சுழித்து, இதழ் இழுத்து பழிப்பம் காட்டினாலும் அவ்வார்த்தைகளின் உண்மை உறைக்க அடங்கிப் போனாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.