(Reading time: 20 - 40 minutes)

04. நனைகின்றது நதியின் கரை - அன்னா ஸ்வீட்டி

ருவரை ஒருவர் கண்டதும் இருவரின் நிலையும் நினைவும் வேறாகிப் போனது. அனவரதன் சொன்ன சங்கல்யா இவளாக இருப்பாள் என்று கற்பனையில் கூட ப்ரபாத் நினைத்திருக்கவில்லை.

அவன் இவளை சில காலமாய் சில விதமாய் அறிவான். அவளது ஒவ்வொரு முகமும் ஒரு ரகம். இன்றும் அப்படியே. அடுத்த வினோதம்.

அவளை ப்ரபாத் முதன் முதலில் பார்த்த அந்த நிகழ்வு….

Nanaikindrathu nathiyin karai

அன்று மட்டும் அவள் இவன் கையில் கிடைத்திருப்பாளாயின் நிச்சயம்  சிறு பெண் என்றும் பாராமல் அடித்து துவைத்திருப்பான்.

அப்பொழுது அவன் கல்லூரி முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தான். தமிழ்நாட்டு கிரிகெட் டீமில் இடம் பெற்றிருந்தான். ரஞ்சி ட்ரோபி போட்டிக்காக டெல்லி செல்ல வேண்டும். ட்ரெயினில் டிக்கெட் முன்பதிவு செய்யப் பட்டிருந்தது.

இவன் ஸ்டேஷன் வந்து சேர்ந்த பொழுது ப்ளாட்பார்மில் ட்ரெய்ன் நகர தொடங்கி இருந்தது. இவன் கொஞ்சம் லேட். தோளில் மாட்டியிருந்த தனது பெரிய பேக்குடன் ஓடிப்போய் ஏறமுடிந்த கம்பார்ட்மென்டில் ஏறிக் கொள்ளலாம், அடுத்து தன் கோச்சை தேடி போய் கொள்ளலாம் என நினைத்து இவன் தாவி ஏறிய கம்பார்ட்மென்ட் கதவை உள்நோக்கி தள்ள முயல யாரோ அதை உள்ளே தாழிடும் சத்தம். இதற்குள் புகைவண்டி வேகமெடுத்திருந்தது.

இனி இறங்குவதை பற்றி நினைத்து கூட பார்க்க முடியாது. “என்னங்க கதவை திறங்க….நான் ஸ்டெப்ஸ்ல நிக்றேன்…” இவன் அலறுகிறான்.

அலட்சியமாக வருகிறது பதில் “இது லேடீஸ் கம்பார்ட்மென்ட்…”

இப்பொழுது ட்ரெய்ன் முழு வேகம் கண்டிருந்தது.

“ஏங்க….திறங்க….என்ட்ட டிக்கெட் இருக்குது…..நான் அடுத்த கோச் போய்டுவேன்…”

“அப்டில்லாம் திறக்க முடியாது.”

புகை வண்டி வேகத்தில் பேக் இவனை பின்னோக்கி இழுக்கிறது. பறந்து போய் விழுந்துவிடுவான் போலும்.

“கதவை திறங்கங்க….” நிச்சயமாய் இவன் கெஞ்சினான். கதவு ஜன்னலில் கண்ணாடி வழியாக உள்ளே பார்க்க முயலுகிறான் உள்ளே அவள் ஒரு 13 அல்லது 14 வயது மதிக்க தக்க அவள் எந்த அக்கறையும் இல்லாமல் திரும்பி சென்று கொண்டிருந்தாள்.

கொதித்துப் போனான் ப்ரபாத்.

அடுத்த ஸ்டேஷன் வரையும் ப்ரபாத் மூடிய கதவுக்கு வெளியே படிக்கட்டில் தான் பயணம் செய்தான். கோடி முறை மரணத்தை மனதில் பார்த்திருந்தான். அடுத்த நிறுத்தத்தில் இவன் அடுத்த கதவின் வழியாக தேடி போனது அவளைத்தான் அத்தனை வெறித்தனமான கோபம்.

ஆனால் அவன் உள்ளே நின்று தேடிக்கொண்டிருக்க அவள்  ஜன்னலுக்கு வெளியே. கீழே இறங்கி இருந்தாள்.

அவள் வயதொத்த ஒருத்தி கேட்கிறாள் அவளிடம்…” ஏன்பா இப்டி செய்த…பார்த்திருந்தா நானாவது திறந்து விட்றுப்பேன்….எவ்ளவு ரிஸ்க் தெரியுமா…கீழ விழுந்தா ஆள் காலி…”

இவள் அலட்சியமாக சொல்லிக் கொண்டு போகிறாள்…”செத்தது ஒரு பையன்னா நாட்டுக்கு நல்லது நடந்திருக்குன்னு நினைச்சுகிட்டு போய்ட வேண்டியதான்…”

இறங்கிப் போய் அவளை….

ஆனால் மீண்டும் ட்ரெயினுக்கு லேட்டாகி படியில் தொங்க விருப்பம் இல்லை, தன் கம்பார்ட்மென்டை தேடிப் போய் அமர்ந்து கொண்டான். அவன் மனம் தான் ஆறவில்லை. மிருகம், ராட்சசி, பிசாசு….அதுதான் அப்போதைய அவள் முகம்.

னால் சில நாள் கழித்து நடந்த அடுத்த சந்திப்பில் அவன் பார்த்தது அவளது இன்னொரு முகம். டெல்லியில் காலை கடும் குளிரில் இவன் ஜாகிங் போய் கொண்டிருந்தான். அப்பொழுது சற்று தொலைவில் சாலையோரத்தில் ஒரு சிறு கும்பல், கூக்குரல், அலறல்.

இவன் சற்று அருகில் போகவும் புரிந்துவிட்டது. ஒரு மனநிலை பாதிக்கப் பட்ட பெண்ணிற்கு யாரோ எதோ செய்ய முயலுகிறார்கள்.

“ஏய் வாடி போகலாம்…..அது எப்டி கோப்பட்டு கத்துது பாரு….பயமா இருக்கு…”

“ப்சு….ஒரு பொண்ணை போய் பார்த்து பயந்துகிட்டு…அவங்களும் நம்ம மாதிரிதான…எப்டி குளிருது…அதுவும் இப்டி பாதி ட்ரெஸ் இல்லாம…ஒரு பொண்ணை இப்டி விடலாமா…நீ வந்து இவங்க கைய பிடி…நம்ம அம்மா மாதிரிதான அவங்களும்…”

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….

இரண்டு மூன்று பேர் கும்பலில் இருந்து விலகி வெளியே ஓடி வருகின்றனர்…

“ஏய் அது கடிக்குதுடி…..ஏய் பாரு ரத்தம் வருது உனக்கு…”

இப்பொழுது இவன் வேகமாக ஓட ஆரம்பித்தான் அவர்களை நோக்கி.

“ஏய் லூசு கவி ஒழுங்கா இங்க வந்து நில்லு…நீயும் தான் ராகி………ஒழுங்கா பின் செய்து முடிக்கிற வரைக்கும் சுத்தி நில்லுங்கப்பா…ரோட்ல போற ஜென்ட்ஸ் லாம் பார்ப்பாங்கல்ல..”

“நீ தான்டி லூசு…உனக்கு கழுத்துல இருந்து இரத்தம் வருதுபா….”

“ஏய்ய்ய்……..விடுறீ அவளை…..” அந்த விலகி நின்ற கவிதாவும் ராகியும் மீண்டுமாய் கும்பலாய்…

“அதட்டாத ராகி அவங்கள….சுய நினைவுல இருந்தா இப்டியா செய்ய போறாங்க…?”

“ஏன்டி நீ இப்டி இருக்க….உன் கைல இருந்தும் ரத்தம் வருது…எத்தனை கடி வாங்குவ….”

இப்பொழுது இவன் வெகு அருகில் போய்விட்டான் தான் ஆனால் உதவப் போகலாமா கூடாதா என்ற ஒரு குழப்பம்.

‘நம்ம அம்மா மாதிரிதான அவங்களும்’ அவனை உதவ உந்தினாலும் மற்றவர்கள் எப்படி உணர்வார்களோ…சுற்றிலும் இருப்பது டீன் ஏஜ் சிறுமிகளாயிற்றே…

அவன் அந்த இடத்தை அடைந்த போது அந்த கும்பல் விலகி வந்திருந்தது. அந்த மன நிலை பாதிக்கப் பட்ட பெண் ஒரு வுல்லன் ஷாலால் புதுவிதமாக சுற்றப்பட்டிருந்தாள். அங்காங்கு பின் கொண்டு அந்த ஷால் கழன்றுவிடாதபடி பிணைக்கப் பட்டிருந்தது.

பாராட்டும் முகமாக அந்த கும்பலை பார்த்தால் கையிலும் கழுத்திலும் ரத்தம் வடிய அந்த ட்ரெயின் மிருகம் ராட்சசி…அவளை சுற்றி சிலர்…

“இங்க இவங்களை எந்த ஹோம்ல சேர்க்கலாம்னு கண்டு பிடிச்சு அவங்களுக்கு கால் செய்யனும்…அப்டி செய்ற ஹோம்ஸ் எல்லா ஸிட்டியிலும் இருக்கும்…” அவள் இவனை பார்க்கவே இல்லை தன் கூட்டத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“அதுக்கு முன்னால ஹாஸ்பிட்டலுக்கு போடி அறிவுகெட்டவளே…” அவள் தோழி ஒருத்தி அவளை சொல்வது இவன் காதில் கேட்கிறது…இவன் அவர்களை கடந்து ஓடிக் கொண்டிருந்தான். இனி இங்கு இவன் செய்வதற்கு என்ன இருக்கிறது?

இந்த ட்ரெய்ன் லூசு ஏன் இப்டி இருக்குது…? ஆனா கண்டிப்பா இவ ராட்சசிதான்…எல்லாத்திலும் அதிதீதம்….

தன் பின் அவளை அவன் பார்க்கவில்லை. உண்மையில் சொன்னால் இப்பொழுதுதான் பார்க்கிறான். ஆனால் இடைப்பட்ட காலத்தில் அவளைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறான்.

முதலில் அவனது அம்மா சொல்லத்தொடங்கிய போது அது அந்த ராட்சசி என அவனுக்கு தெரியாது.

அன்று மாலை இவன் வீட்டிற்கு வரும் போதே அம்மா எதையோ நினைத்து சிரித்தபடி சமையலறையில் நிற்பது தெரிந்தது.

“என்னமா….உங்க ஸ்டூடண்ட்ஸ் கூட சேர்ந்து ஒரு ரேஞ்சா டெவலப் ஆகிட்டு போறீங்க போல…தனியா சிரிக்ற அளவுக்கு வந்திருக்கீங்க….”

“உங்கூட இருந்தே எனக்கு ஒன்னும் ஆகலையாம்…அவங்க கூட சேர்ந்தா எதாவது ஆகிடப் போகுது…இது வேற கதை…”

அம்மா தந்த டிஃபனை வாங்கிக் கொண்டு ஹால் சோஃபாவில் உட்கார்ந்தான் கதை கேட்கும் ஆர்வத்துடன்.

“இன்னைக்கு ஈவ்னிங் வீட்டுக்கு வர்றப்ப பஸ்ல ஒரு காமடி…” அம்மா ஆரம்பித்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.