(Reading time: 22 - 44 minutes)

 

டாக்டரிடம் விடை பெற்ற சகோதரர்கள் இருவரும் தங்கள் வீடு நோக்கி திரும்பும் பயணத்தின் பொழுது, மீண்டும் சிந்தனயிலாழ்ந்த கரணை, சரண்,

"டேய், கரண் வாடகைத் தாய்க்கு என்ன செய்ய போகிறாய்? எங்கு போய் தேடுவது இதற்கான பெண்ணை? நமக்கோ நேரம் மிக குறைவாக இருக்கிறது.. இதில் நாம் விளம்பரம் என்று கொடுத்தால் கூட அவ்வளவு சீக்கிரம் நமக்கு ஆள் கிடைப்பார்களோ என்னவோ? இந்த முயற்சி அவசியம் செய்யத்தான் வேண்டுமா? எதற்கும் மீண்டும் ஒரு முறை ஆலோசனை செய்"

"இல்லை டா, சரண் எப்படியாவது வாடகை தாயை ரெடி செய்யத்தான் வேண்டும்"

"சரி டா.. நான் ஒன்று சொல்வேன் கேட்பாயா?" என்றவனைப் பார்த்த கரண்,

"நீ சொல்லவே வேண்டும்.. காருண்யாவிடம் இது பற்றி பேசிப் பார் என சொல்ல நினைத்தால் .. என் பதில் இது தான் நிச்சயம் 'நோ… உனக்கே தெரியும் அவள் பேராசை பிடித்த குணம் பற்றி.. நானும் நினைத்தேன் , திருமணத்திற்கு பின் அவளை நம் வழிக்கு கொண்டு வந்து, திருத்தி நம் குடும்பத்திற்கு தகுந்தாற் போல் மாற்ற எண்ணியிருந்தேன்.. ஆனால் நேற்று என்ன நடந்தது தெரியுமா? என தான் செவிமடுத்த அந்த கேவலமான நிகழ்ச்சியைக் கூறி முடித்தவன்,

"இப்பொழுது சொல், .. அவளா என் குழந்தைக்கு தாயாக வேண்டும் ? அதற்கு நான் இந்த ஐடியாவையே டிராப் செய்து விடலாம். ஏன் அவள் வேண்டாம் என்று நான் சொல்லுகிறேன் என்றால், இப்பொழுது பணத்திற்கா இதை செய்ய சம்மத்திதாலும், நாளை என் பணம் கைக்கு வந்தவுடன், பின்னர் குழந்தையை சாக்கிட்டு நம் மொத்த சொத்துக்களையும் அபகரிக்கும் அளவுக்கு கை தேர்ந்தவள் அவள்.. அதனால் அவள் இதற்கு பொருந்த மாட்டாள்.. மற்றும் இந்த மாதிரி குணாதியசங்களுடன் உடைய ஒரு பெண்ணின் வழியே என் குழந்தை உருவாகுவதை நான் விரும்ப வில்லை.. சற்று பொறுத்து பார்ப்போம்..காலம் பதில் சொல்லும்" என்றான் கரண்.

மேலும் இரண்டு நாட்கள் மெல்ல ஊர்ந்து கழிந்தது.. மருத்துவமனையில் இருந்து விட்டு அன்றுதான் பாட்டியை டிஸ்சார்ஜ் செய்து, வீட்டுக்கு மாமா, மாமி உதவியுடன் அழைத்து வந்திருந்தாள் துளசி. மருந்து, மாத்திரைகளின் உதவியுடன், எளிய உணவை உண்டு விட்டு, அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார் பாட்டி.

வெளி முற்றத்தில் கூடை நாற்காலியில் அமர்ந்திருந்த துளசி, தன்னையறியாது உறங்கி விட்டாள்.. இரண்டு நாட்களாக ஆஸ்பத்திரி , வீடு, சென்னை பயணம் என்று ஒரேடியாக அலைந்தால் ஓய்விற்காக ஏங்கிய உடம்பு தன்னையறியாமல் அவளை கண் அயர வைத்து விட்டது.

"துளசி! அம்மாடி துளசி !" என்று அழைத்துக் கொண்டே வந்த மாமியின் குரலில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள் மலங்க மலங்க விழித்தாள்.

"வாசல் கதவு திறந்தே கிடக்கிறது.. என்னம்மா தூங்கிக் கொண்டிருந்தாயா? எழுப்பி விட்டேனா?.. ரொம்பவும் களைப்பாக தெரிகிறாயே?" என்று கூறியவர் அவள் எதிரில் அமர்ந்தார்.

"இல்லை.. மாமி ஏதோ சற்று கண் அயர்ந்து விட்டேன்.. இதோ, வந்து விட்டேன்" எனக் கூறி கொல்லை பக்கம் விரைந்தவள், கிணற்றில் இருந்து நீர் சேந்தி முகம் கழுவி துடைத்தபடி வந்து மாமியின் அருகில் அமர்ந்தார்.

"துளசி! டாக்டர், கிரிதரன், மாமாவின் செல்லுக்கு ஃபோன் செய்து இருந்தார்.. உன்னை அர்ஜெண்டாக பார்க்க வேண்டுமாம்.. ஒரு வேளை அந்த சென்னை டாக்டர் ஏதாவது தகவல் கூறி இருப்பாரோ என்னவோ? .. சற்று சென்று என்னவென்று பார்க்கிறாயா?

"இதோ மாமி , உடனே செல்லுகிறேன்.. மாமி பாட்டியை சற்று பார்த்துக் கொள்ளுங்கள்.. நான் விரைவாக சென்று வருகிறேன்", என்றவள், தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கிச் சென்றாள்.

டாக்டர். கிரிதரன் அறைக்குள் நுழைந்தவள், "வணக்கம் டாக்டர்.. அழைத்தீர்களாமே", என்று கேட்டபடியே அவர் எதிரில் அமர்ந்தாள்.

"வாம்மா துளசி.. டாக்டர் பாலாஜி மீண்டும் உன்னைப் பார்க்க விரும்புகிறார்.. இன்று காலையில் தான் எனக்கு போன் செய்தார்.. பாட்டியைப் பற்றி பேச வேண்டுமாம்.. ஏதோ உதவி கிடைத்து விட்டது மாதிரி தான் பேசினார்.. என்னிடம் முழுவதும் கூறவில்லை நாளை நீ அவரை சென்னையில் சந்திக்க வேண்டுமாம். எதற்கும் நீ நாளைக்கு சென்னை மீண்டும் செல்கிறாயா? அவர் என்ன சொல்லுகிறார் என்று கேள்.. ஒரு முயற்சி செய்து பார்ப்போம்.. பின்னர் என்று கைகளை வானோக்கி காண்பித்து , அவன் விட்ட வழி"

நாளை அவள் மீண்டும் டாக்டர் பாலாஜியை சென்னையில் சந்திப்பதாக ஒப்புக் கொண்டு அதை அவருக்கு போன் மூலம் தெரியப்படுத்தி விடுமாறு கூறி டாக்டர் கிரிதரனிடம் விடை பெற்றாள் துளசி.

வீட்டில் பாட்டியின் அருகே அமர்ந்திருந்த மாமிக்கு, விஷயத்தைச் சொன்னவள், அடுத்த நாள் விடியலிலேயே தான் சென்னைக்கு பயணம் செய்வதாக கூறினாள்.

று நாள் சென்னைக்கு பயணமானவள், டாக்டர் பாலாஜியின் மருத்துவமனைக்கு சென்றாள்.. அந்த நிலையிலும் மருத்துவமனையின் அழகும், தூய்மையையும் நேற்று போலவே வியந்த படி டாக்டரின் அறைக் கதவை தட்டினாள் துளசி.

உள்ளே வரச் சொன்ன டாக்டர் பாலாஜியின் அழைப்பிற்கு கதவை திறந்து சென்றவள், அவர் எதிரே அமர்ந்த துளசி, "இன்று வரச் சொனீர்களாமே டாக்டர்" என்று கேள்வியாய் நோக்கினாள்".

ஒன்றும் பேசாமல் அவளைப் பார்த்து கொண்டு இருந்தார் டாக்டர். பாலாஜி. 'எப்படி இவளிடம் சொல்லுவது.. இதற்கு இந்த சின்ன பெண் ஒப்புக் கொள்ளுவாளா?'

'பாட்டியின் அறுவை சிகிச்சைக்காக இந்த செயலை செய்ய துணிவாளா? முதலில் நமக்கு கேட்பதற்கே கஷ்டமாக இருக்கிறதே? நமக்கும் இவள் வயதில் ஒர் மகள் இருக்கிறாளே, அவளுக்கு இப்படி என்றால் எப்படி இருக்கும்? சே..ஏன் தான் இந்த கரணுக்கு இப்படி புத்தி போயிற்றோ? இவனோடு அடுத்தவரையும் துன்புறுத்தி பார்க்க நினைக்கிறானோ?' பணம் இருந்தால் என்ன வேண்டுமானால் செய்யலாமா? அவனால் இன்னொரு பெண்ணின் வாழ்க்கை அல்லவா வீணாகிப் போகிறது! கொஞ்சம் கூட யோசிப்பதில்லை.. எல்லாவற்றிலும் அவசரம் தான் அவனுக்கு.. தன்னை பற்றி மட்டுமே சிந்தனை.'

"டாக்டர்" என்ற துளசியின் குரலில் நிமிர்ந்து அமர்ந்தவரை பார்த்து,

"என்னவாயிற்று? பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லையா? பரவாயில்லை டாக்டர். எங்கள் கஷ்டம் எங்களுடன் போகட்டும்.. நீங்கள் மட்டும் என்ன செய்ய முடியும்? பாட்டியிடம் நான் இன்னும் ஆபரேஷன் குறித்து எதுவும் பேசவில்லை.."

"நடப்பது நடக்கட்டும்.! இவ்வளவு தூரம் நீங்கள் எங்களுக்கு உதவ முயன்றதே பெரிய விஷயம்.. மிகவும் நன்றி," என்றவள் தன் இருக்கையில் இருந்து எழப் போனாள்.

"துளசி, உட்காரம்மா.. நீ நினைப்பது போல இல்லை! உன்னிடம் நான் முக்கியமாக சில விஷயங்கள் பேச வேண்டும்."

சின்ன நம்பிக்கையுடன், மீண்டும் அமர்ந்தாள் துளசி..

"துளசி, முதலில் நான் சொல்லப் போவதை நீ சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.. என்ன தான் காலம் மாறி இருந்தாலும், மருத்துவ அறிவு முன்னேறி இருந்தாளும், இதை கேட்பவர்கள் ஏதோ குற்றம் செய்த்தது போலவே பார்பார்கள்.. இதுவும், ரத்த தானம் போல் ஒரு தானம் தான்.. நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துவது.. என்ன ஒன்று நம்மையே தியாகம் செய்வது போலாகிறது."

ஏதேதோ பேசியபடி இருந்த டாக்டர் பாலாஜியை ஒன்றும் புரியாமல் விழித்து பார்த்தாள் துளசி.

'ஏதோ தானம் பற்றி பேசுகிறாரே, இந்த கிட்னி கிட்னி தானம் கேட்கிறாறோ? பரவாயில்லை, பாட்டிக்காக நான் எதை வேணுமானால் இழக்கத் தயார்' என்று நினைத்தாள்.

டாக்டர் பாலாஜியை குழப்பமாக பார்த்தாள் துளசி.

"என்னம்மா, குழப்புகிறேனா? ஒன்றும் புரியவில்லையா? சரி நேராக விஷயத்திற்கு வருகிறேன். துளசி, நான் கூறப் போவது இது தான்.. உன் கருப்பையை சிறிது நாட்களுக்கு தானமாக தர முடியுமா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.