(Reading time: 24 - 48 minutes)

மீண்டும் வெகு நேரம் கழித்து அவள் விழித்த போது அது இரவா பகலா என்றே புரியவில்லை அவளுக்கு. அதே போல் அரண் மீது ஏதோ கோபத்தில் அவள் தூங்கப் போனாள் என்பதும் மனதில் இல்லை.

பின் மெல்ல சூழல் புரிய அருகில் இவளை அணைத்த வண்ணம் தூங்கிக் கொண்டிருந்த அரணை உணர்ந்ததும் தான் அது இரவு என உறுதியானது அவளுக்கு.

அதோடு அவள் என்ன நினைவில் தூங்கப் போனாள் என்பதும் மெல்ல நினைவில் வருகிறது. ஆனாலும் அணைத்திருந்த அவன் மீது கொதிப்பும் கோபமுமெல்லாம் வரவில்லை.

பயம்தான் வந்தது அவளுக்கு. அடுத்து என்ன துன்பமான நினைவு வருமோ என்ற கவலை தான் காரணம். ஏன் அவனை அருகில் பார்த்தால் துன்ப நினைவுகளும் தூக்கத்தில் தூரத்தில் அவன் பற்றி இன்ப கனவுகளும் வருகின்றன?

தன் தலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். தலைவலி எதுவும் இல்லை. மனதிலும் நிர்சலனம். மருந்தின் விளைவா? அல்லது இவ்வளவு நேரம் தூக்கத்தில் உணர்ந்த காதல் உணர்வுகளா எது காரணம் இந்த நிம்மதிக்கு?

அவள் மயங்கி விழும் முன் நடந்த நிகழ்வுகள் மீண்டும் மனதில் வருகின்றது. அந்த நீச்சல் குள நிகழ்வு இப்பொழுதும் மனம் வலிக்கிறது தான். ஆனால் அதைவிடவும் அந்த நினைவு வருவதற்கு சற்று முன் அரண் அவளிடம் நடந்து கொண்ட விதம் ஞாபகம் வருகிறது.

இவள் தூங்குகிறாள் என நினைத்து விது விதுக்குட்டி என எதெல்லாமோ பேசினானே? அதில் எதுவும் நடிப்பில்லையே……தூங்குகிறவளிடத்தில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லையே.

இப்பொழுதும் இத்தனைக்கு பிறகும் இவள் அருகில் தான் தூங்கிக் கொண்டிருக்கிறான். எதை இவள் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும், எதை இவள் கண்டுகொள்ளாமல் ஒதுக்க வேண்டும்?

“அன்றன்றைக்கு அதினதின் பாடு போதும். நேத்து நீ அவளை ஜெயிச்சியா? நாளைக்கு நீ என்னதா இருக்கப் போற…இதெல்லாம் மறந்துடு சுகா…இப்ப இந்த நிமிஷம் இந்த கேமை நீ எப்டி விளையாடப் போற…உன் ஆப்பனொன்ட் எப்டி விளையாடுறா…? அதுக்கு உன் ஸ்ட்ரடஜி  என்ன? அதைப் பத்தி மட்டும் யோசி” சிறுவயதில்  ப்ரபு சொன்னது எப்படியோ ஞாபகம் வருகிறது. அப்போதிருந்தே அவளோட கேம் ப்ளான் அது. ஒவ்வொரு போட்டிக்கும் இது அவளுக்கு உதவி இருக்கிறது. இப்பொழுதும் இது அவளுக்கு உதவத் தான் போகிறது. தான் என்ன செய்ய வேண்டும் என தெரிந்து விட்டது சுகவிக்கு

 முன்பு இவளுக்கும் அரணுக்கும் என்ன நடந்ததோ இவளுக்குத் தெரியாது. ஆனால் இன்று இவன் இவளுக்கு என்னதாய் இருக்கிறான்? அதைத்தான் இனி இவள் கவனிக்கப் போகிறாள். உன் கேம் ப்ளனைப் பொறுத்து தான் என் ஸ்ட்ரடஜியும்...அரணிடம் மானசீகமாக சொல்லிக் கொண்டாள்.

எனக்கு ஜஸ்ட் பழசு மறந்து போயிருக்கு அவ்ளவுதான். மத்தபடி அப்ப உள்ள அறிவுதான இப்பவும் இருக்குது…அப்ப என்னால என் லைஃபை, அப்பாவை, இந்த அரணை ஹேன்டில் செய்ய முடிஞ்சா இப்பவும் அது முடியும்….

இப்பொழுது மனதிற்குள் இன்னுமாய் ஆழ்கிறது நிம்மதி. மெல்ல அரண் புறமாய் திரும்பி அவன் முகத்தில் சென்று கண்களை நிறுத்தினாள். இப்பொழுது ஏதாவது மோசமானது நியாபகம் வந்துவிடுமோ என்ற பயம் ஏனோ காணாமல் போயிருந்தது.

ஆழ் மனம் வரை நிம்மதியும் நேசமும் தான் வருகிறது இவளுள். பர்வை நகர்ந்து அவனது தோள்ப் பகுதிக்குச் செல்கிறது. ஸ்லீவ்லெஸ் டீ ஷர்டில் சற்றே வெளித் தெரிகிறது அந்த தழும்பு.  கனவில் பார்த்த ஹாஸ்பிட்டல் சீனில் அந்த தோளில் அங்கு தானே காயம் அவனுக்கு????

அப்படியானால் அவள் கனவு நிஜம் என்று அர்த்தமா???? அவனது தூக்கத்தில் என்ன உணர்ந்தானோ அரண், அவளை இன்னுமாய் அணைத்தான் அவன். இதற்கு இவள் என்ன செய்ய வேண்டும்?

யோசிக்கும் முன் அவள் தலை அவன் மார்பில் குடியேறி இருந்தது.  

இவள் அசைவில் இப்போது அவன் விழித்துவிட்டான் போலும். “சுகவி”  தயங்கி அழைக்கிறான் அவன். பின்னே முந்திய தடவை அவன் தலையை உடைக்க ப்ளவர் வேஸை எறிந்துவிட்டு இப்பொழுது இப்படி அவனயே பில்லோவாக்கினா?

“ம்”

“தூங்கி விழிச்சாச்சா? பசிச்சா சாப்பாடு கொடுக்க சொன்னாங்க….”

“இப்பவா…? ம்ஹூம்….நான் இன்னும் விழிக்கலைனு நினைச்சுக்கோங்க”

மனதின் காதல் உணர்வுகளே அவள் வார்த்தைகளையும் ஆட்கொள்கின்றன.

“உண்மையிலேயே அப்டித்தான் தோணுதுங்க மேடம்…”

“அது… சில நேரம்….உங்கள ரொம்ப குழப்புறேன்ல…? ஒரு டைம் கோபம்…ஒரு டைம்….? சாரி…” அவள் குரல் இறங்க

“ இந்த சிட்சுவேஷனை உன்னவிட பெட்டரா யாரும் ஹேன்டில் செய்ய முடியாது விதுமா…எனக்கு உன் மேல எந்த வருத்தமும் இல்லை…சீக்கிரமே எல்லாம் சரி ஆகிடும்…” அவன் வார்த்தைகளில் ஆறுதல் குடி வந்திருந்தது.

 “உங்கட்ட ஒன்னு சொன்னா எப்டி எடுத்துப்பீங்கன்னு தெரியலை…”

“சொல்லிப் பாரேன்…தெரிஞ்சுடப் போகுது”

“ம்…உங்க பக்கத்துல வந்தாலே கெட்ட கெட்ட விஷயமா ஞாபகம் வருது…பட் தூங்குறப்ப வேற மாதிரி ஆகிடுது…” கனவுகளை தவிர்த்து, ஒவ்வொன்றாக அவளுக்கு ஞாபகம் வந்த விஷயங்களை அவனிடம் சொன்னாள் சுகவிதா.

எல்லாத்தையும் பொறுமையாக கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான் அரண்.

“சாரிடாம…உனக்கு அந்த விஷயம்லாம் இன்னும்  இவ்ளவு தூரம் ஹர்டிங்கா ஞாபகம் இருக்குது போல…வெரி சாரிமா…இதை நாம உன்னோட டாக்டர்ஸ்ட்ட டிஸ்கஸ் செய்வோம்….என்ன செய்யலாம்னு அப்போ புரியும்.. ”

அவன் எதையும் மறுக்காததை அவள் மனம் குறித்துக் கொள்கிறது. ஆக அவளுக்கு நினைவு திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

அதோடு அரண் அதற்கு எந்த விளக்கமோ, தன் பக்க நியாயமோ என எதையும் சொல்லவில்லை.  நடந்த நிகழ்வுகளுக்கு வேறு வண்ணம் பூசவும் அவன் முயலவில்லை என்பதும் சேர்த்தே புரிகிறது அவளுக்கு.

ஆனால் அதே நேரம் அவனிடம் எந்த பதற்றமும் விலக்கமும் கூட இல்லை. ஆக அவனிடம் இதற்கெல்லாம் இவள் கன்வின்ஸ் ஆகும்படி பதில்கள் இருக்கின்றனதான். அதை அவன் சொல்லாமல் இவளுக்கே ஞாபகம் வர வேண்டும் என எதிர்பார்க்கிறான். அது தான் இவள் உடல்நிலைக்கு நல்லது என்பதற்காக…

அதன் பின் அவள் எதுவும் பேசவில்லை. அவன் மார்பிலிருந்து துளியும் அசையவும் இல்லை. சென்றன சில பொழுது மௌனமாய். “ஏன் சைலண்டாகிட்டீங்க ? எதாவது பேசுங்களேன்…”

“உன் வலிய நான் வாங்கிக்க முடிஞ்சா எவ்ளவு நல்லா இருக்கும்னு தோணுது விது….” அவன் இப்பொழுதுதான் இதைச் சொல்கிறான். ஆனால் முன்பும் அவன் இதைச் சொல்லியது அவள் காதுகளில் இப்பொழுதும் கேட்பது போல் ஒரு ப்ரமை….மெல்ல விரிகிறது மனக் கண்ணில் காட்சி….

ஆப்பரேஷன் தியேட்டரா இது? எலோரும் ப்ளூ கலர் நீள அங்கியில்…. இவள் முகம் பார்த்து குனிந்திருக்கும் அரைகுறையாய் மறைக்கப் பட்டிருக்கும் அந்த முகம் அரண் தான்… சர்ஜிகல் மாஸ்க் அணிந்திருக்கிறான். இவளுக்கு கடும் வலி.

அப்பொழுதும் அவன் இதைத்தான் சொன்னான். “உன் வலிய நான் வாங்கிக்க முடிஞ்சா எவ்ளவு நல்லா இருக்கும்…?” துடித்துக் கொண்டிருந்த இவள் கையைப் பற்றியபடி சொல்லிக் கொண்டிருந்தான்….

அவன் முகமே காட்டியது அவன் அனுபவிக்கும் வேதனை இவளது வேதனைக்கு கொஞ்சமும் குறைவானது இல்லை என….தன் வேதனையை வெளிக் காண்பிக்க கூடாதோ என இவளுக்கு தோன்றுகிறது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.