(Reading time: 23 - 46 minutes)

மனதோர மழைச்சாரல்... - 09 - வத்ஸலா

'டாடி.....' மறுமுனையில் அந்த பிஞ்சு குரல் ஒலிக்க உடல் முழுவதும் சிலிர்த்தது சஞ்சாவுக்கு.

'பட்டு செல்லம்.... எப்படி டா இருக்கே?'

'எனக்கு டாடி வேணும். இங்கே இருக்க வேண்டாம்' சொன்னது அந்த அரும்பு. உயிர் துடித்தது சஞ்சாவுக்கு. 

Manathora mazhai charal

'வந்திடுவேன்டா செல்லம்' கனிந்து உருகிக்கிடந்த குரலில் சொன்னான் சஞ்சா. .'இன்னும் டூ டேஸ். டாடி உன்கிட்டே ஓடி வருவேனாம். அதுக்கப்புறம் செல்லம் என் கூடவே இருப்பீங்களாம். அப்புறம் என் செல்லத்துக்கு நிறைய சாக்லேட், ஐஸ் கிரீம் எல்லாம் சரியா? ஒன்லி டூ டேஸ் சரியாடா செல்லம்'

'ஒன்லி டூ டேஸ்.....' அவன் சொன்னதை திருப்பி சொன்னது அந்த மொட்டு.

'ஆமாம் டா பட்டு..... ஒகேயா '

'ம்.... ஒகே.... .' என்ன புரிந்திருக்கும் அந்த பிஞ்சுக்கு புரியவில்லை அவனுக்கு. பேசி முடித்துவிட்டு கண் மூடி கட்டிலில் சாய்ந்தான் சஞ்சா. இன்னும் இரண்டே நாட்கள். அதன் பிறகு இங்கே அள்ளிக்கொண்டு வந்துவிட வேண்டும் அந்த பூச்செண்டை.

அவன் நினைவுகள் எங்கெங்கோ தாறுமாறாக சுற்ற துவங்கின.

அஹல்யா!!!! அவனுடைய அஹல்யா!!!!

அவளுடன் அவன் நடித்தது இரண்டு படங்கள். அதில் இரண்டாவது படம். அவனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற படம். விருதுகள் வாங்கி தந்த படம். அதையெல்லாம் விட அவன் மனதுக்கு மிக நெருக்கமான படம். அந்த படத்தில் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாகவே நடித்திருப்பார்கள்.

முதலில் சாதாரணமாகத்தான் துவங்கியது அவர்கள் நட்பு. அவள் நடிப்புக்கு எப்போதுமே ரசிகன் சஞ்சீவ். அந்த படத்தில் ஒரு காட்சியில் அவர்களது குழந்தையையுடன் சிரித்து விளையாடிக்கொண்டே ஓடி வந்து அவன் நெஞ்சில் சரிந்து விழுவாள் அவள். அந்த நேரத்தில் அப்படியே அவன் நெஞ்சுக்குள்ளும் விழுந்திருந்தாள் அஹல்யா.

அது எப்படி என்றே தெரியாமல், கேமரா முன்னால் என்று இல்லாமல் மற்ற நேரங்களிலும் அவளை மனதால் மனைவியாகவே பார்க்க ஆரம்பித்தான் சஞ்சீவ். கடைசியில் வில்லன்களால் சுடப்பட்டு அவள் துடிக்கும் காட்சியில் இவன் கதறி துடித்தது நிஜம்.

அந்த திரைப்படம் வந்த பிறகு எத்தனை முறை தனிமையில் அந்த திரைப்படத்தை அவன் பார்த்து ரசித்திருக்கிறான் என்று அவனுக்கே தெரியாது.

'இமோஷனல் ஃபூல்' இப்படிதான் ரிஷியை எப்போதும் திட்டுவான் சஞ்சீவ். ஆனால் இவன் மிகப்பெரிய 'இமோஷனல் ஃபூலாக' இருந்திருக்கிறான் என்பதை அப்போது உணரவில்லை சஞ்சீவ்.

அவனுடைய அன்பு அவளை ஈர்த்ததும் நிஜம். அவனுடன் அவள் மனதார பழக ஆரம்பித்தும் நிஜம். அவனது வீட்டிலும் எல்லாருக்குமே அஹல்யாவையும் பிடித்துப்போனது. அவனது அக்காவுக்கு குழந்தை பிறந்திருந்த நேரம் அது. அதை பார்க்க வந்திருந்தாள் அஹல்யா .குழந்தைகள் என்றால் சஞ்சாவுக்கு உயிர். கை கால் முளைத்த மலர் செண்டாக தொட்டிலில் படுத்திருந்த அந்த தேவதையை பார்க்க பார்க்க சலிக்கவில்லை சஞ்சாவுக்கு.

'இது மாதிரி ரெண்டாவது வேணும் நமக்கு. ரெடியா இருந்துக்கோ' அவள் காதருகில் கிசுகிசுத்தான் அவன்.

அதுக்கு வேறே ஆளப்பாரு' படீரென பதில் வந்தது அவளிடமிருந்து. 'நாம கல்யாணம் வேணுமானா பண்ணிக்கலாம். இந்த பிள்ளை பெத்துக்கற பிசினஸ் எல்லாம் கிடையாது. எனக்கு எப்பவும் ஃப்ரீயா இருக்கணும் சஞ்சா. நெனைச்ச நேரத்திலே நினைச்சதை பண்ணனும். பிள்ளைங்களை கட்டிட்டு காலம் பூரா அலைய முடியாது. நான் சொல்லிட்டேன் இப்போவே.  நீ யோசிச்சு முடிவு பண்ணிக்கோ.' சொல்லியே விட்டாள் அவள்.

அங்கே தான் பிரச்சனை ஆரம்பித்ததோ???? ஆனால் அவளை மனதிலிருந்து நீக்கி விட முடியவில்லை அவனால். வயதின் வேகத்தில் பேசுகிறாள். காலம் போகும் போக்கில் எல்லாம் சரியாகும் என்பதே அவன் நம்பிக்கையாக இருந்தது.

அந்த நேரத்தில் இருவருக்கும் வந்து குவிய துவங்கின பட வாய்ப்புகள். நிற்க நேரமில்லாமல் திசைக்கொருவராக சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில், எப்படி நுழைந்தான் என்று தெரியாமல் இருவருக்கும் இடையில் நுழைந்தான் அவளுடன் ஒரு படத்தில் நடித்தக்கொண்டிருந்த  ஒரு கதாநாயகன்.

எந்த  தேசத்தில் படப்பிடிப்பில் இருந்தாலும் அவளுடன் ஒரு நாளுக்கு ஒரு முறையாவது பேசி விடுவதே அவன் வழக்கம். ஆனால் நாட்கள் கடக்க கடக்க அவள் தன்னிடமிருந்து விலகுவதை உணர ஆரம்பித்தான் சஞ்சீவ்.

அவனது அழைப்புகளை தவிர்க்க ஆரம்பித்திருந்தாள் அவள். அதற்கான காரணமும் அரசல் புரசலாக அவனை அடைய ஆரம்பித்திருந்தது . அவளை எந்த நிலையிலும் இழக்க தயாராக இல்லை அவன்.

அப்போது வந்தது அவனது ஒரு திரைப்படத்தின் வெற்றி விழா. அவளும் அந்த விழாவுக்கு வந்திருந்தாள். அவளை தனது உரிமையாக, மனைவியாக பார்த்தது தான் அவன் தவறா?  அவள் அவனுக்கானவள் என்ற அழுத்தமான நம்பிக்கையை அவள் மீது வைத்ததுதான் தவறா?

அத்தனை பத்திரிக்கையாளர்கள், பிரபலங்கள் முன்னிலையில் அவள் மறுக்க மாட்டாள் என்ற ஒரு நம்பிக்கையில் அறிவித்தான் சஞ்சீவ் 'இன்னுமொரு சந்தோஷமான விஷயம் கூடிய சீக்கிரம் எனக்கும், அஹல்யாவுக்கும் கல்யாணம் நடக்க போகுது.'

'கல்யாணமா யாருக்கும் யாருக்கும்?' சரேலென எழுந்து அவனிடமிருந்து மைக்கை பிடுங்கியவள் அதிரடியாக கேட்டாள். 'மிஸ்டர் சஞ்சீவ் யாரை கேட்டு இந்த அன்னௌன்ஸ்மென்ட்? எனக்கு இந்த கல்யாணத்திலே இஷ்டம் இல்லை.' சொல்லிவிட்டு அவன் முன்பு ஒரு முறை பரிசளித்த சங்கிலியை எல்லார் முன்னிலையிலும் கழற்றி வீசி எறிந்து விட்டு நடந்தாள் அஹல்யா.

உலகமே அவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க ஒரே நிமிடத்தில் எல்லாம் மாறிப்போயிருந்தது. மிக தைரியமாகத்தான் எதிர்க்கொண்டான் அந்த சூழ்நிலையை. யாரிடமும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அவன்.

ஆனால் சஞ்சாவுக்கும் அழுகை வருமென ரிஷியின் தோள்களுக்கு மட்டுமே தெரியும். வீட்டுக்குள் வந்து அவாமானமும், உடைந்து போன மனமுமாய் சரிந்து விழுந்தவனை தாங்கிக்கொண்டான் ரிஷி. தோழனாய், தாயாய், அண்ணனாய் எல்லாமுமாய்.....

மனம் கேட்காமல் ஒரு நாள் அவளை அழைத்தும் விட்டான் சஞ்சா 'ஏன் அஹல்யா?'

'உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்படியும் ஒரு நாள் நீ குழந்தை பெத்துக்க சொல்லுவே. அவன் அப்படி சொல்ல மாட்டான். அதனாலே அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்..' என்றாள் நிதானமாக.

அதன் பிறகு அவனை அவள் திருமணம் செய்து கொண்டாள் என்று கேள்விப்பட்டான் சஞ்சீவ் . ஆனால் ஒரே மாதத்தில் அவர்கள் இருவரும் பிரிந்தது தான் சஞ்சாவுக்கு மிகபெரிய அதிர்ச்சியாக இருந்தது. இவன் நினைவுகளில் நீந்தியபடி படுத்துக்கிடக்க அங்கே.....

ம்மாவின் மடியிலேயே கிடந்தான் ரிஷி.

'ரிஷி...'  இப்போது அழைத்தது அப்பா. 'குச் தோ லோக் ககேங்கே... லோகோங் கா காம் ஹை கஹ்னா.... ராஜேஷ் கண்ணா பாட்டு கேட்டிருக்கியா நீ.???

'மனிதர்கள் ஏதாவது சொல்வார்கள்.

சொல்வது தான் அவர்கள் வேலை..

தேவை இல்லாத வார்த்தைகளை விட்டு விடு.

வாழ்கையை இதில் தொலைந்து விட வேண்டாம்....

'உனக்கு முன்னாடியே இதை நான் சொல்லி இருக்கேன். எல்லாத்தையும் தலையிலே போட்டுக்காதே. சந்தோஷமா இருக்க பாருடா....... அம்மாவுக்கு சரியான ஜோடி அப்பா. இப்படிதான் பேசுவார்.

'என்னாலே கண்டிப்பா உங்களை மாதிரி எல்லாம் இருக்க முடியாது பா ' பெருமூச்சுடன் சொன்னவன் கண்களை திறக்கவே இல்லை.

ஐந்து நிமிடங்கள் அம்மாவின் மடியிலேயே கரைந்த பின்பு கொஞ்சமான தெளிவு பெற்றவனாக கண் திறந்தான் ரிஷி. கன்னத்தில் கை வைத்துக்கொண்டு அம்மாவின் மடியில் கண் மூடி கிடக்கும் அவனையே பார்த்திருந்தாள் பெண்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.