அப்போது ஒலித்தது அந்த அறையில் இருந்த இண்டர்காம். அவள் கொஞ்சம் குழப்பத்துடன் எழுந்து அவனை விட்டு விலகி அமர ,எழுந்து போனை எடுத்தான் அவன்.
'சாரிப்பா.... டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.' எதிர்பக்கம் அவனது அப்பா. 'ஏதோ சத்தம் கேட்டது. அதான். ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையேபா?'
'அதெல்லாம் ஒண்ணுமில்லை பா. நீங்க தூங்குங்க' சொல்லிவிட்டு போனை வைத்தவன் விளக்கை போட அப்போதுதான் நடந்தது முழுவதுமாக புரிந்தது அவளுக்கு. மெதுவாக எழுந்து நின்றாள் அவள். அவளுக்கு எதுவும் அடி பட்டு விடவில்லையே என்பதே அவனது முதல் கவலையாக இருந்தது.
தயக்கத்துடன் கட்டுடன் இருந்த அவள் கையை தொட்டுப்பார்த்தான் அவன் . அவள் முகத்தில் வலியின் அறிகுறி எதுவும் தென்படவில்லை. கொஞ்சம் நிம்மதியுடன் அவன் நிமிர அவள் அதையே பார்த்தபடி நின்றிருந்தாள். அங்கே அவர்கள் படுத்திருந்த கட்டிலின் ஒரு பக்க கால்கள் இரண்டும் முறிந்து போய் ஒரு பக்கமாக சாய்ந்துகிடந்தது!!!
மெதுமெதுவாக விழி நிமிர்த்தினாள். கொஞ்சம் கொஞ்சமாக அவன் உதடுகளில் சிரிப்பு மிளிர கலகலவென சிரிக்க துவங்கினான் ரிஷி. 'நாளை காலை வீட்டு வேலைக்காரர்கள் உட்பட எல்லார் பார்வையும் இவர்கள் இருவர் மீதும் எப்படி பதியும்? என்ன என்ன எண்ண ஓட்டங்கள் ஓடும்.???' நினைக்க நினைக்க சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை அவனால்.
'இப்போ எதுக்கு சிரிக்கறே நீ???' புரியவில்லை அவளுக்கு.
'ரிஷி..... ' ம்ஹூம் சிரிப்பை நிறுத்த முடியவில்லை அவனால்.
சில நொடிகள் யோசித்த பின்பு தான் மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது அவளுக்கு. சிரித்து சிரித்து ஓய்ந்து அவள் பக்கம் திரும்பியவனை ஈர்த்தன அவளது முகத்தில் இருந்த வெட்க கோடுகளும், சின்ன புன்னகையும். அவனையும் அறியாமல் அவள் வெட்கத்தை ரசிக்க ஆரம்பித்தன அவன் கண்கள்.
அடுத்த இரண்டாம் வினாடி அவனை நோக்கி பறந்து வந்தது ஒரு தலையணை 'பேசாம படுத்து தூங்கு...'
இன்னும் கொஞ்சம் புன்னகை மிச்சமிருக்க அவள் படுப்பதற்கு அங்கே இருந்த சோபாவை சரி செய்து கொடுத்து விட்டு தரையில் படுக்கையை விரித்து படுத்தான் அவன். அவளுக்கு ஏனோ தூக்கம் வரவே இல்லை.
அவன் இப்படி சிரித்து அவள் இதுவரை பார்த்ததில்லை. இறுக்கமெல்லாம் தளர்ந்து மழையென பொழியும் சிரிப்பு. சிந்தாமல் சிதறாமல் அந்த சிரிப்பை தனக்குள்ளே பொத்தி வைத்திருந்தாள் அவள். காலையில் அவன் இருந்த மன நிலைக்கு இப்போது அவன் இப்படி சிரித்தது கொஞ்சம் மன நிறைவாகவே இருந்தது. அவளுக்கு.
இப்படி திரும்பி, அப்படி திரும்பி படுத்து பார்க்கிறாள், எதுவும் பலிக்கவில்லை. எண்ணங்களும் பார்வையும் அவனிடமே சென்று தஞ்சம் அடைகின்றன. 'உன்னை எப்படி காயப்படுத்தி இருக்கிறான் அவன். ஒன்றும் வேண்டாம் பேசாமல் இரு' மிரட்டி பார்த்தும் கேட்க மறுக்கிறது உள்ளம்.
அரை மணி நேரம் இப்படியே செல்ல, எதற்கும் கட்டுப்படாத மனம் அவளை செலுத்த எழுந்து, மெது மெதுவாக நடந்து அவனருகில் வந்து அவன் அசந்து உறங்கிக்கொண்டிருக்கிறான் என்று உறுதிப்படுத்திக்கொண்டு, அவனருகில் அமர்ந்தாள் அருந்ததி.
அவன் இதழோரம் இன்னும் கொஞ்சம் சிரிப்பு ஒட்டிக்கொண்டிருந்தது போலே தோன்றியது அவளுக்கு. சிரித்து விளையாடி விட்டு உறங்கும் குழந்தையை ரசிக்கும் அம்மாவின் ரசனை அவள் முகத்தில்.
இந்த நேரத்தில் அவள் கோபங்கள் எல்லாவற்றையும் புறம் தள்ளி இருந்தது அவள் நேசம். மெல்ல குனிந்து அவன் நெற்றியில் இதமாக இதழ் பதித்தாள் அருந்ததி. சரியாக மூன்று நொடிகள்.
அவள் கொஞ்சமாக விலகிய அந்த நொடியில் மெதுவாக கண் திறந்தான் ரிஷி.!!!! அவன் முகத்துக்கு மிக நெருக்கமாக அவள் முகம்.!!!! அவன் கண்விழித்ததில் திடுக்கிட்டுத்தான் போனாள் அவள்.
கொஞ்சம் அதிர்ச்சியும் திகைப்பும், அதனோடு கூடவே நிறையவே வெட்கமும், காதலும் கலந்த கண்கள் அவன் கண்களுக்கு மிக அருகில். அவள் கண்களுக்குள் அவன் மொத்தமாக வழுக்கி விழுந்த தருணம் அதுவாகவே இருந்தது!!!!!.
எப்படியாம்? எப்படியாம் இது? வியந்து போனவன் உண்மையில் அந்த கணத்தில் அவளிடம் மொத்தமாக தன்னையே தோற்றிருந்தான். எங்கே போனதாம் இவள் கோபம்.??? எப்படி காதலிக்க வேண்டும் என்பதை இவளிடம் தான் கற்க வேண்டுமா? எவ்வளவு காயப்படுத்தி இருக்கிறேன் நான்? எல்லாவற்றையும் ஒரே நொடியில் மறந்து விட முடிகிறதே அவளால். இந்த நேசத்திற்கு பதிலாக நான் என்ன தரப்போகிறேன் அவளுக்கு???
அவள் திகைப்புடன் விலகி அமர அவளை இமைக்காமல் பார்த்தபடியே எழுந்து அமர்ந்தான் ரிஷி. அவன் இதழ்களில் குறுநகை. எதுவும் பேசவில்லை அவன்.
'இல்லையடி ரோஜாப்பூ. என் அன்பால் உன்னை தோற்கடிக்காமல், உன்னிடமிருந்து 'வசி' யை ஜெயிக்காமல் நான் உன்னிடம் பேசுவதாக இல்லை'
'அய்யோ... இப்படியா ஒரே இரவில் தோற்றுப்போவேன் இவனிடம்????? திருடன்...... தூங்க வில்லையா அவன்?.' அவன் பார்வையை சந்திக்க கூட முடியவில்லை அவளால். வெட்கத்தில் மூழ்கிக்கிடந்தாள். சுவாசம் கூட சீராக கிடைக்கவில்லை அவளுக்கு.
'நா.... நான்... தூ... தூங்கணும்....' சொல்லிவிட்டு அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் ஓடி விட்டிருந்தாள் சோஃபாவுக்கு. புன்னகையுடன் படுத்துக்கொண்டான் ரிஷி.
தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள் அவள். 'ச்சே..... வெட்கம் கெட்ட மனமே.... இனி அவனிடம் சண்டை கூட போட முடியாது'. தன்னை தானே திட்டிக்கொண்டு இரவு முழுதும் உறக்கம் இன்றிக்கிடந்தாள் அவனது ரோஜாப்பூ.
மறுநாள் எழுந்ததும் அவளைத்தான் தேடினான் அவன். மாலை வரை அவன் கண்ணில் சிக்காமல் சுற்றிக்கொண்டிருந்தாள் அருந்ததி.
.மாலை சஞ்சீவ் தங்கையின் திருமண வரவேற்பு.. தனது வீட்டிலிருந்து கிளம்பிக்கொண்டிருந்தாள் அஹல்யா. அந்த திருமண பத்திரிக்கை கைக்கு வந்த போது மனதில் இருந்த உற்சாகம் இப்போது துளியும் இல்லை.
வீட்டை விட்டு இறங்கும் முன் அம்மாவின் அறைக்கு சென்றாள் அவள். அவளுடைய அம்மா. பெண்ணின் நல் வாழ்கையை தவிர வேறே எதை பற்றியும் கவலை படத்தெரியாத அப்பாவி அம்மா.
'அம்மா.... உன் மடியிலே படுத்துக்கவா மா?' அம்மாவின் விரல் தலை கோத கண் மூடிக்கொண்டாள் அஹல்யா. செய்த தவறுக்கெல்லாம் இன்று பிராயசித்தம் செய்து விடும். ஒரு தீர்மானம் அவளிடம். சில நிமடங்கள் கழித்து எழுந்தாள் 'நான் வரேன் மா....' திருமண மண்டபம் நோக்கி விரைந்தாள்.
திரை நட்சத்திரங்களும், பிரபலங்களும், உறவினர்களும், நண்பர்களும், பத்திரிக்கையாளர்களும் நிறைந்திருக்க, ஜொலித்துக்கொண்டிருந்தது அந்த மண்டபம். உற்சாகத்தின் எல்லை என்று ஒன்று இருந்தால் அங்கே தான் இருந்தான் சஞ்சீவ்.
சஞ்சீவ் எதிர்பார்த்திருந்து போலவே ஒரு பத்திரிக்கையாளரிடமிருந்து கேள்வி 'சார்... வாட்ஸ் ஆப்லே .... உங்களையும் அஹல்யாவையும் சேர்த்து வெச்சு... அது யாரோ உங்களை கவுக்க பிளான் பண்ணி பண்றதா சொல்றாங்க ..... அதை பத்தி '
'சார் என் தங்கச்சி கல்யாணம். முடியட்டும். நாளைக்கு காலையிலே பத்து மணிக்கு உங்க எல்லாருக்கும், உங்களோட எல்லா கேள்விகளுக்கும் நான் தெளிவா பதில் சொல்றேன். நன்றி....' அங்கிருந்து நகர்ந்தான் அவன்.
அதே நேரத்தில் செங்கல்பட்டிலிருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்தது அந்த சிகப்பு நிற கார். அதில் இருந்தது சஞ்சாவையும், ரிஷியையுமே கூட வீழ்த்தக்கூடிய மிகப்பெரிய ஆயுதம்!!!!
தயாராகி வெளியே வந்தாள் அருந்ததி. கையில் அடிப்பட்டிருந்த படியால் அவள் கிளம்புவதற்கு அம்மாவும் உதவி செய்துக்கொண்டிருந்தார்.
'இந்தாடா.... உன் பொண்டாட்டி ரெடி. கூட்டிட்டு போ' அம்மாவின் குரல் கேட்டு திரும்பினான் . இளம் நீல நிற சேலையில், காதோரம் ஊஞ்சலாடும் நீளமான ஜிமிக்கிகளும், தோகையாய் விரிந்திருந்த கூந்தலில் முல்லைச்சரமுமாக நின்றிருந்தாள் அருந்ததி. கொஞ்ச நேரம் இமை தட்ட மறந்து தான் போனான் ரிஷி.