(Reading time: 23 - 46 minutes)

விருட்டென எழுந்து அமர்ந்தான் அவன். இத்தனை நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டிருந்த மூளை வேலை செய்ய துவங்கியது போன்றதொரு உணர்வு அவனுக்கு .'எப்படி அழைத்து வந்தேன் அவளை.???' இப்போதுதான் நடந்தது உறைத்தது அவனுக்கு.

திருமணம், அது முடிந்து பெண்ணை வீட்டுக்கு அழைத்து  வருவது என்பதெல்லாம் எத்தனை இனிமையான, அழகான தருணங்கள்.?? கேலியும், கிண்டலும் .வெட்கமும்  கலந்து  நடக்க வேண்டியவை வலியும், ஆத்திரமும், சண்டைகளும் கலந்து நடந்து போனால் எப்படி இருக்கும் ஒரு பெண்ணுக்கு.???

அவனது விழி அகலாத பார்வையில் அவள் தடுமாறிய வேளையில் அம்மா இடை புகுந்து காப்பாற்றினார் 'கல்யாணம் ஆகி முதல் முதலா வீட்டுக்கு வந்த பொண்ணை அப்படியே உட்கார்த்தி வெச்சிருக்கோம் பார். ஏதாவது சாப்பிடறியா மா நீ?

ஒரு நொடி தடுமாறியவள் 'இல்ல ... இல்ல...மா.... எனக்கு எதுவும் வேண்டாம்' என்று சொல்ல அவள் வைதேகியை அம்மா என்று சொன்ன விதத்தில் எல்லார் முகத்திலும் நிறைவின் பிரதிபலிப்பு.

'எல்லாருமே சாப்பிடலாம் வாங்கம்மா. பாதி சாப்பாட்டிலே உங்களை எல்லாம் இழுத்திட்டு வந்திட்டேன்' எழுந்தான் ரிஷி.

அடுத்த சில நிமிடங்களில் மேஜையில் உணவு தயாராக இருக்க, நான் பாத்துக்கறேன் பரிமாற வந்தவர்களை உள்ளே அனுப்பினான் ரிஷி. மறுப்பு சொல்லாமல் வந்து அமர்ந்தாள் அருந்ததி. யாருக்குமே சாப்பிடும் மன நிலை இல்லாத போதும் ரிஷிக்காக வந்து அமர்ந்தனர்.

பரிமாற ஆரம்பித்தான் அவன். தட்டை எங்கே பார்த்தாள் அவள்.??? அவன் முகத்தைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அசந்து போயிருந்தாள் அவள்!!!! .அவளுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதை பார்த்து பார்த்து எடுத்து அவள் தட்டில் வைத்துக்கொண்டிருந்தான் அவன்.

ஒவ்வொன்றாய் பரிமாறுவதும் அவள் முகம் பார்ப்பதுமாக இருந்தான் அவன். அவள் மனம் குளிருமாறு  ஏதாவது செய்து விட வேண்டுமென்ற தவிப்பு அவனிடத்தில். ரிஷி என்ற காதலனை கண்ணெதிரே பார்க்கும் பரவசம் அவளுக்குள்ளே.

இதழ்களில் பரவ துடித்த புன்னகையை கஷ்டப்பட்டு உள்ளே தள்ளிக்கொண்டாள். அவள். 'இதுக்கெல்லாம் நாங்க கவுந்திடுவோமா என்ன?' என்பதை போன்றதொரு பார்வை அவளிடத்தில்.

எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பதெல்லாம் எப்படி தெரியுமாம் அவனுக்கு?' படப்பிடிப்பு நேரங்களில் கவனித்து இருக்க வேண்டுமோ??? அவன் செய்கையில் உள்ளமெங்கும் குளிர் தென்றல் வீசிய போதும் எதையும் வெளிக்காட்டிகொள்ளாமல் எதுவுமே பேசாமல் சாப்பிட்டு முடித்தாள் அருந்ததி.

அதே நேரத்தில் சில நிமிடங்களுக்கு முன்னால் அவன் பட்ட அவமானம் அவளை இன்னும் வருத்திக்கொண்டு தான் இருந்தது. அதனோடு இதற்கு ஒரு வகையில் தானும் காரணமோ என்ற உறுத்தலும் சேர்ந்திருந்தது. ' நான் அன்றே அவனுடன் வந்திருந்தால் அவன் அங்கே வரும் தேவையே இருந்திருக்காதோ?

இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்பதை அம்மாவும், அப்பாவும் கவனித்துக்கொண்டிருந்த போதும் இப்போது எதையும் கேட்டுக்கொள்ள விரும்பவில்லை அவர்கள். மாலைக்குள் அவளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உடைகளை வரவழைத்திருந்தான் ரிஷி. 

இரவு மணி பத்தை தாண்டிக்கொண்டிருக்க அவனது அறைக்குள் வந்தாள் அருந்ததி. அவர்களுக்கு அடுத்த அறையில் அம்மாவும் அப்பாவும்.

மாலையில் மற்ற ஏற்பாடுகள் பற்றி அப்பா மெல்ல துவங்க, அவன் நாசூக்காக மறுத்து விட்டிருந்தான் ' அப்புறம் பார்த்துக்கலாம் பா. அவளுக்கு உடம்பு குணமாகட்டும்'

கதவை சாத்திவிட்டு அவள் திரும்பும்போதே சில நாட்களுக்கு முன்  இதே அறைக்குள் அவள் வந்த போது நிகழ்ந்த நிகழ்வுகள் அவள் நினைவை தொட்டு செல்லாமல் இல்லைதான். நிச்சயமாக அந்த நினைவுகள் அவளை வந்தடையும் என்று அவன் அறியாமலும் இல்லை.

கட்டிலின் ஒரு ஓரத்தில், டி. வி. ரிமோட்டை இயக்கியபடி  படுத்திருந்தான் அவன். பார்வை மட்டும் அங்கிருந்த தொலைக்காட்சியில் பதியாமல் அவளையே பின் தொடர்ந்தது.

இன்னொரு பக்கத்தில் அவள் படுத்துக்கொள்ள வசதியாக, உடைந்திருந்த அவளது கைக்கு அணைப்பாக, அவர்கள் இருவருக்கும் இடையில் என தலையணைகளை அடுக்கி படுக்கையை தயார் செய்து இருந்தான்  அவன்

அதை பார்த்து ஒரு முறை அவள் புருவங்கள் உயர்ந்து இறங்கின. கட்டிலில் வந்து அமர்ந்தாள் அவள். கண்கள் அவனிடம் தன்னாலே தஞ்சம். அவன் இதழ்களில் சிறு கீற்றாக மென் சிரிப்பு. கனிந்து போயிருந்தது அவன் பார்வை.

காலையில் அவள் கையை பிடித்து தன்னுடன் இழுத்து வந்த காட்சி தலைக்குள்ளே மறு ஒளிபரப்பானது அவனுக்கு. அவள் கொஞ்சம் தயங்கி இருந்தாலும் அவனது தன்மானம் காணாமல் போயிருக்கும்.. அவன் மீது ஆயிரம் வருத்தங்கள் இருந்த போதும் அந்த சூழ்நிலையில் அவனை கொஞ்சம் கூட விட்டுக்கொடுத்து விடாமல் அவள் நடந்துக்கொண்ட விதம் அவனை நெகிழ்த்தி இருந்தது..

மெல்ல கண்களை தாழ்த்திக்கொண்டாள் அவள். எல்லா நினைவுகளும் அவளை அலைக்கழிப்பதை அவனால் நன்றாக உணர முடிந்தது. காதலுடனும் கோபத்துடனும் உள்ளுக்குள் போராடி முடித்து கடைசியில் 'சாரி ....' மெதுவாக வெளிவந்தது அவள் குரல். கேள்வியாக உயர்ந்தன அவனது புருவங்கள்.

'இல்லை காலையிலே நடந்ததுக்கு நானும் ஒரு வகையிலே காரணம்தான். ஹாஸ்பிட்டலேர்ந்து அப்படியே உன்கூட வந்திருந்தா இது நடந்திருக்கதோ என்னவோ. உன்னை வீட்டுக்கு வர வெச்சது நான் தானே???. தப்புதான்......  ரொம்ப ரொம்ப சாரி.....  '

ரிமோட்டை வைத்து விட்டு எழுந்து அமர்ந்து, கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் அவளை. ஊன்றி பார்த்தான் ரிஷி.

'நான்... சாரி சொன்னேன்'

..................

அவன் பதிலே பேசாமல் இருக்க, ஒரு நொடி புரியாமல் பார்த்தவளுக்கு சுருக்கென நினைவுக்கு வந்தன அவள் பேசிய வார்த்தைகள். 'பேசமாட்டானாமா? நான் 'வசி' என்று அழைக்கும் வரை பேசமாட்டானாமா?' சரேலென திருப்பிக்கொண்டாள் பார்வையை. ஏனோ சுறுசுறுவென மறுபடியும் பொங்கியது அவளுக்குள்ளே. '

'சார் என் கூட பேச மாட்டீங்களோ? வேண்டாம். பேச வேண்டாம்.  நான் என் கோபத்தை வெளிப்படுத்தின விதம் வேணுமானால் தப்பா இருக்கலாம் ஆனால் என் கோபம் தப்பில்லை. கூப்பிட மாட்டேன். இந்த ஜென்மத்திலே உன்னை 'வசி' ன்னு கூப்பிட மாட்டேன். பார்க்கலாம். இது எவ்வளவு தூரம் போகுதுன்னு பார்கலாம்.' படபடவென பொரிந்துவிட்டு சட்டென திரும்பி அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள் அருந்ததி.

சத்தியமாய் வலிக்கத்தான் செய்தது அவனுக்கு. கைகெட்டும் தூரத்தில் தவிப்பில் அவனது ரோஜாப்பூ 'அப்படியே அவளை இழுத்து தோள் சாய்த்துக்கொள்ள, தலைகோதி விட, தன்னோடு இறுக்கிக்கொள்ள  துடித்த உள்ளதை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டான் ரிஷி.

அவன் தொடுவதை எப்படி எடுத்துக்கொள்வாள் அவள்? புரியவில்லை. அவளை எந்த வகையிலும் மறுபடியும் புண்படுத்திவிடக்கூடாது என்பதே இப்பொது முக்கியமாக பட்டது அவனுக்கு.  டி.வி.யை நிறுத்தி விட்டு விளக்கை அணைத்து விட்டு படுத்துக்கொண்டான் ரிஷி.

நேரம் இரவு பன்னிரெண்டை தாண்டி இருந்தது. ஏதேதோ நினைவுகளில் நீந்திவிட்டு உறக்கத்தை தொட்டு விட மிக சிரமப்பட்டு முயன்று இருவரும் அசந்து உறங்கிவிட்ட அந்த நேரத்தில் நிகழ்ந்தது அது. சற்றே பெரியதாக ஏதோ ஒரு சத்தம்.

நல்ல உறக்கத்தின் பிடியில் இருந்தவனுக்கு இரவு விளக்கின் அரை குறை வெளிச்சத்தில் தன்னை சுற்றி ஏதோ  நடக்கிறது என்று மட்டும் புரிய, சுதாரிப்பதற்குள் தரையில் விழுந்திருந்தான் அவன். அடுத்த மூன்றாவது நொடியில் அவன் மீது விழுந்திருந்தாள் அருந்ததி.

அடுத்த வினாடி ரிஷியை அடிக்க ஆரம்பித்திருந்தாள் அருந்ததி 'விடு ரிஷி .. எனக்கு பிடிக்கலை. என்னை விடு. எனக்கு தெரியும் நீ இப்படிதான் பண்ணுவேன்னு..'

அதற்குள் நடந்ததை புரிந்துக்கொண்டு விட்டிருந்தான் ரிஷி. சிரிப்புதான் பொங்கியது அவனுக்கு 'என்ன தெரியுமாம் அவளுக்கு.???' அடிகளை வாங்கியபடியே அப்படியே படுத்திருந்தான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.