(Reading time: 22 - 44 minutes)

மனதோர மழைச்சாரல்... - 10 - வத்ஸலா

ஞ்சா பேசப்பேச மண்டபத்தை நிறைக்க துவங்கியது கை தட்டல். .'இருங்க இருங்க.....ஒரு நிமிஷம். நான் பேசி முடிச்சுக்கறேன்' தொடர்ந்தான் சஞ்சா.......

'நாமெல்லாம் எத்தனை தடவை கேட்டோம். ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா? லவ் பண்றீங்களான்னு? ரெண்டு பேரும் எதுவுமே சொல்லாமே இருந்திட்டு திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. நம்ம எல்லாரையும்  விட அவங்க ரெண்டு பேரோட அப்பா அம்மாவுக்கு இந்த கல்யாணத்தை பார்க்கணும் ரொம்ப ஆசை இருக்கும் இல்லையா? அதனாலே..... கேன் ஐ வெல்கம் ரிஷி அண்ட் ரிஷி பத்தினி ஆன் ஸ்டேஜ் ப்ளீஸ்.....'  கரகோஷங்களின் மத்தியில் சத்தமாக ஒலித்தது சஞ்சாவின் குரல். மெல்ல திரும்பி அருகில் அமர்ந்திருந்த அருந்ததியை பார்த்தான் ரிஷி.

அவளின் இசைவை எதிர்ப்பார்க்கும் பாவம் அவன் முகத்தில். எழவில்லை அவள். வேறு ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்புடன் இதழோரம் தேங்கி இருந்த மிக சின்னதான சிரிப்புடன் விழி தாழ்த்தி விரல் ஆராயும் படலம் அவளிடத்தில். ஒரு நினைவு மின்னல் அவனுக்குள். எப்போதோ அவள் பேசிய வார்த்தைகளின் எதிரொலி.

Manathora mazhai charal

'எங்களுக்கு கல்யாணமே வந்தாலும் சரி, நான் மேடை ஏறமாட்டேன். அவன் கூப்பிடணும் என்னை. ' நீ வா அருந்ததின்னு கூப்பிடணும்...' பார்க்கலாம். எனக்கும் வாய்ப்பு வரும். அப்போ எல்லார் முன்னாடியும் நான் ஸ்ட்ரைக் பண்றேனா இல்லையா பாரு சஞ்சா....

அவனது ஒரு பிறந்தநாளின் போது நடந்தது இது. அப்போது இவர்கள் இருவரும் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்துக்கொண்டிருந்தது. அவள் அவனுடன் இருக்கும் முதல் பிறந்தநாள் அது. அவனுக்கான பரிசுகளுடன் இரவு பன்னிரெண்டு மணிக்காக காத்திருந்தாள் அவள். அவனது படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று அவன் புகழின் உச்சியை தொட்டிருந்த  நேரம் அது. அவர்கள் தங்கியருந்த அந்த மிகப்பெரிய ஹோட்டலின் முன்பாக கூடி இருந்தது அவனது ரசிகர் கூட்டம்.

சரியாக 11.59க்கு தனது அறையை விட்டு பளீர் சிரிப்புடன் வெளியே வந்தான் ரிஷி. எப்போதும் போல் அவனுடன் சஞ்சா.. முதல் வாழ்த்து தனதாக இருக்க வேண்டுமென்ற ஆவலில் அவனருகில் ஓடினாள் அருந்ததி. அவளை கவனிக்கவே இல்லாததது போல் அவள் பக்கம் கூட திரும்பாத விறுவிறு நடையுடன் அவன்.

'எப்போது அவளை கவனித்திருக்கிறான் இப்போது கவனிக்க?' இருப்பின் பெண் மனம் கேட்கிறதா என்ன ?

'மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் வசி' அவன் முன்னால் பூங்கொத்துகளுடன் பரிசுடனும் நின்றாள் அவள்.

'தேங்க்யூ...' எந்த பாவமும் வெளிப்படாத ஒரு தொனியில் பதில்.

'உன்னைய லவ் பண்ணதுக்கு ஒரு குரங்கை லவ் பண்ணி இருந்தா கூட கொஞ்சம் ரியாக்ட் பண்ணும் ...' மனதுக்குள் அவளையும் மீறி ஒரு புலம்பல். புன்னகையை வரவழைத்துக்கொண்டு பரிசை அவனிடம் நீட்டினாள்.

'நான் யார்கிட்டேயும் கிஃப்ட் எல்லாம் வாங்குறதில்லே அருந்ததி. வேண்டாம். தேங்க்ஸ்...'  அவனுக்கும் அவளுக்கும் சம்மந்தமே இல்லை என்பதை போன்றதொரு பதில்.

'டேய்... இதெல்லாம் ரொம்ப ஓவர்டா டேய்...  பாவம்டா அது.... ரொம்ப நேரமா காத்திருக்கு ......' --- இது சஞ்சா.

பதில் பேசாமல் பரிசை வாங்கிக்கொண்டு அங்கே அருகில் இருந்த ஒரு நாற்காலியில் அதை வைத்தான் அவன்.

'ரொம்ப ஆசையா பார்த்து பார்த்து வாங்கி இருக்கேன் வசி. அப்புறமா பிரிச்சு பார் ப்ளீஸ்..' கெஞ்சலாக அவள் சொன்னதை அவன் காதில் வாங்கியாதாகவே தெரியவில்லை. விறுவிறுவென நடந்தான் அவன்.

வெளியே ரசிகர்களின் வேட்டுக்கள், ஆரவாரங்கள், 'ஹாப்பி பர்த்டே ரிஷி....' என அந்த ஹோட்டலே அதிரும் கூச்சல்கள்.. பால்கனியிலிருந்து எல்லாருக்கும் புன்னகையுடன் கை அசைத்துக்கொண்டிருந்தான் ரிஷி.

You might also like - Kanaamoochi re re... A romantic comedy...

'அது எப்படி இத்தனை பெரிய கூட்டத்தை வசீகரித்து வைத்திருக்கிறான் அவன்?' அவனையும் அந்த ரசிகர் கூட்டதையும் புன்னகையுடன் மாறி மாறி ரசித்துக்கொண்டிருந்தாள் அவள்.

அடுத்து அந்த ஹோட்டலில் இருந்த ஒரு மேடையில் ஏற்பாடு ஆகி இருந்தது இவனது பிறந்தநாள் கேக் வெட்டும் படலம். அந்த ஹோட்டலில் தங்கி இருந்த ரசிகர்கள், முக்கியமாக ரசிகைகள், அந்த படத்தில் அவனுடன் நடிக்கும் நடிகைகள் என எல்லாரும் அவனை சூழ்ந்திருக்க கேக் வெட்டிக்கொண்டிருந்தான் அவன். மேடையின் மீது ஏறக்கூட இல்லை அருந்ததி. நடப்பவைகளை பார்த்துக்கொண்டே கீழே அமர்ந்திருந்தாள் அவள். சுற்றி இருந்தவர்கள் அவனுக்கு ஊட்டி விடுவதும், பரிசுகள் கொடுப்பதும்...

''நான் யார்கிட்டேயும் கிஃப்ட் எல்லாம் வாங்குரதில்லே அருந்ததி. வேண்டாம். தேங்க்ஸ்...'  பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு. அவனை பொறுத்தவரை அவளுக்கென்று மட்டும் ஒரு தனி சட்டம்.

மேடையில் ஆட்டமும் பாட்டமும். எதிலும் பங்குக்கொள்ள வில்லை அவள். சில நிமிடங்கள் கழித்து அவற்றை பார்க்க முடியாமல் எழுந்தே விட்டாள் அவள். தனது அறையை நோக்கி அவள் நடக்க, அந்த நாற்காலி கண்ணில் பட்டது. சற்று முன் அதன் மீதுதான் அவள் வாங்கி தந்த பரிசை வைத்தான் ரிஷி. இப்போது அந்த பரிசு அங்கே இல்லை. பூங்கொத்து மட்டுமே கிடந்தது. 'யாராவது எடுத்துக்கொண்டு போயிருக்க கூடும்' அந்த நொடியில் மனம் கொஞ்சம் தளர்ந்துதான் போனது.

'அது வைரங்கள் மின்ன முகப்பில் 'வி.ஏ' என்ற இரண்டு ஆங்கில எழுத்துக்களும் பதிக்கப்பட்ட அழகானதொரு ப்ரேஸ்லெட். ரசித்து ரசித்து வாங்கி  இருந்தாள் அதை.' புரியவில்லை அவனுக்கு!!!! என் அன்பின் மதிப்பு புரியவில்லை அவனுக்கு!!! பொங்கியது உள்ளம். சில நிமிடங்கள் அங்கேயே நின்று தான் விட்டாள் அவள்.

எல்லாம் முடிந்த பிறகு அவள் அவள் அருகில் வந்தான் சஞ்சா. அவனுடன் தான் நின்றிருந்தான் ரிஷி.

ஏன்டா? கீழேயே உட்கார்ந்திட்டே. மேலே வர வேண்டியது தானே?' கேட்டான் சஞ்சா.

'வேண்டாம்னுதான் வரலை. நான் வந்தாதான் சாருக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே அதான். சந்தோஷமா அவங்க எல்லாரோடையுமே இன்னும் கொஞ்ச நேரம் ஆட்டம் போட சொல்லு அவனை. வேணும்னே பண்றான் சஞ்சா அவன்' உதடுகளும், உள்ளமும் துடிக்க சொன்னாள் அவள்.

சஞ்சா ரிஷியை திரும்பி பார்க்க இமைக்காமல் அவள் முகக்தை ஆராய்ந்துக்கொண்டிருந்தான் ரிஷி.

'நான் எதுக்கு மேடைக்கு வரணும்? என்னை கூப்பிட்டானா அவன்? வரமாட்டேன்' எங்களுக்கு கல்யாணமே வந்தாலும் சரி, நான் மேடை ஏறமாட்டேன். அவன் கூப்பிடணும் என்னை. ' நீ வா அருந்ததின்னு கூப்பிடணும்...' எனக்கும் வாய்ப்பு வரும் சஞ்சா.. அப்போ நான் ஸ்ட்ரைக் பண்றேனா இல்லையா பாரு.... இன்னைக்கு அவன் செஞ்சதுக்கு அதுதான் தண்டனை.' ரிஷியை பார்த்துக்கொண்டே உதடுகள் துடிக்க, கோபம் பொங்க பொங்க அவள் சொன்ன வார்த்தைகளின் எதிரொலி இப்போது அவனுக்குள்ளே.

ஆனால் அவள் கோபங்களின் ஆயுள் எப்போதுமே குறைவுதானே? ஒன்றிரண்டு நாட்களில் அவன் செய்ததை மறந்து மறுபடி அவனிடமே தஞ்சமாகியிருந்தது உள்ளம். இப்போது அவள் நினைவலைகளும் அதே புள்ளியை தொட்டிருக்க வேண்டுமோ என்னவோ. எழவில்லை அவள். விழிகளை கூட நிமிர்த்தவில்லை. அவளது விரல் ஆராயும் படலமே தொடர்ந்தது.

அவள் பேசியது சஞ்சாவுக்கு நினைவிருக்க நியாயம் இல்லை. 'அட மேலே வாங்கப்பா ரெண்டு பேரும்...' மறுபடி அழைத்தான் அவன்.

'எழுந்தான் ரிஷி!!!! அவள் முன்னால் நின்றவன், அவளே எதிர்ப்பார்க்காத நொடியில் சட்டென அவள் முன்னால் மண்டியிட்டிருந்தான்!!!  விருட்டென எழுந்து விட்டாள் அருந்ததி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.