(Reading time: 22 - 44 minutes)

'நான்சென்ஸ். யாரவன்? என்றபடி விறுவிறுவென வாசலுக்கு விரைந்தான் சஞ்சா.. அவன் அருகில் செல்லவில்லை என்றாலும் சற்று தூரத்தில் இருந்தே அங்கே அமர்ந்திருந்தவனை சஞ்சாவுக்கு அடையாளம் தெரிந்தது. ஓரிரு முறை பார்த்திருக்கிறான் அவனை. அவன் மடியில் தீக்ஷா. நேற்று அவனிடம் பேசிய அதே தேவதை.

நடந்துக்கொண்டிருக்கும் எல்லாவற்றையும் தாண்டி குழந்தையை பார்த்தவுடன் உள்ளம் பதறியது அவனுக்கு  'குழந்தை உறங்கிக்கொண்டிருக்கிறாளா? இல்லை மயங்கிக்கிடக்கிறாளா? என்ன செய்து வைத்திருக்கிறார்கள் அவளை?. 'எனக்கு இங்கே இருக்க வேண்டாம்' நேற்று சொன்னாளே குழந்தை??? இதனால் தானா?  இறைவா....."

விருட்டென சென்று குழந்தையை அள்ளிக்கொள்ள துடித்தது மனம். செய்ய முடியவில்லை அவனால். சுற்றி நிற்கும் எல்லாருடைய கவனமும் அவன் மீதே. அதற்குள் நெருங்கி விட்டிருந்தனர் சில பத்திரிக்கையாளர்கள்.

'சார்... இதை பத்தி நீங்க என்ன சொல்றீங்க? அவன் முன்னால் நீண்டது ஒரு மைக்.

You might also like - Rose and Thorn... Free English romantic story 

பதில் சொல்லாமல் இடம் வலமாக தலை அசைத்தபடி உள்நோக்கி நடந்தான் அவன். நேற்று அவன் பரந்தாமனுடைய கைபேசியில் பேசிய பிறகு நிகழ்வுகள் திசை மாறி இருக்கின்றன. இப்படி ஒரு திசையில் அவன் யோசிக்கவே இல்லையே??? ' யோசித்தபடியே அவன் மண்டபத்துக்குள் நுழைந்தான்.

அதற்குள் ரிஷியை எட்டி இருந்தது செய்தி. அவனருகில் திகைப்புடன் நின்றிருந்தாள் அருந்ததி. அவளுக்கு தெரிந்ததை அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் அஹல்யா. எரிமலையின் சீற்றம் அவனிடத்தில்.

'உங்களையும் சஞ்சாவையும் குறி வெச்சுத்தான் நடக்குது ரிஷி. நானும் வந்ததிலேர்ந்து இதை சொல்லணும்னு பார்க்கிறேன். சஞ்சா என்கிட்டே பேச விரும்பலை. உங்க மொபைல் நம்பர் எனக்கு தெரியலை.' சொன்னாள் அஹல்யா.

அப்போது அவர்கள் அருகில் வந்தார் இயக்குனர். 'என்ன நடக்குது ரிஷி. புரியலை. ஒரு வேளை மேகலா ஏதாவது பண்றாளா? '

இருக்காது அங்கிள். அவங்க இவ்வளவு தூரம் இறங்குவாங்கன்னு தோணலை. என்றவன் 'யார் வேலை இதெல்லாம்...'? அஹல்யாவை பார்த்து தீவிரமான குரலில் கேட்டான் ரிஷி.

அவள் சொன்ன பதில் எதிர்ப்பார்த்திராத ஒன்று இல்லைதான். விளையாடுவது யாரென புரிகிறது, நோக்கமும் தெரிகிறது, ஆனால் விளையாட்டு போகும் திசை???

அந்த குழந்தை யாரோடது அஹல்யா? கேட்டான் ரிஷி. தீக்ஷாவை பார்த்ததில்லை அவன்.

'அது பத்தி தெரியலை ரிஷி எனக்கு. எங்கிருந்தோ கூட்டிட்டு வந்திருக்காங்க அவங்களை.' என்றாள் அவள்.

ரிஷியும், அருந்ததியும் இங்கே பேசிக்கொண்டிருக்க அங்கே ஒரு ஓரத்தில் என்ன நடக்கிறது என்பது சரியாக புரியாமல் குழப்பத்துடன் நின்றிருந்தனர் சந்திரிக்காவும் ராமனும். அவர்கள் அருகில் வந்து நின்றான் சஞ்சா. அவன் முகத்தில் கொஞ்சம் கலவர ரேகைகள். அவர்களிடம் பேசியே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவனாக.......

'அப்பா... உங்க ரெண்டு பேர் கிட்டேயும் நான் கொஞ்சம் தனியா பேசணும் பா. அந்த ரூமுக்கு வரீங்களா' என்றான்.

அறைக்குள் வந்தனர் மூவரும். 'அப்பா... வந்திருக்கிறது யார் தெரியுமா? அந்த குழந்தை யாருன்னு தெரியுமா? சஞ்சா கேட்க பதில் தெரியவில்லை அவர்களுக்கு.

ஒரு பெருமூச்சுடன் அவர்களிடம் சொல்ல துவங்கினான் சஞ்சா. சஞ்சா பேசப்பேச இருவர் முகமும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கொண்டது. சந்திரிக்காவின் முகத்தில் பரவியது கலவரமா? கவலையா? தவிப்பா? புரியவில்லை அவனுக்கு. சஞ்சா பேசி முடிக்க கொஞ்ச நேரம் சிலையாக அமர்ந்திருந்தனர் இருவரும்.

'உனக்கு இந்த விஷயம் எப்போ தெரியும் சஞ்சா?' சுதாரித்துக்கொண்டு கேட்டார் அப்பா.

'ஒன்றரை வருஷம் முன்னாடி. ...' சஞ்சா சொல்ல திகைப்புடன் நிமிர்ந்தார் சந்திரிகா. 'அந்த குழந்தை எனக்கு முன்னாடியே பழக்கம்பா. ஒரு ஷூட்டிங் நடந்தபோது நான் அவங்க வீட்டுக்கு போயிருந்தேன்  அப்போதான் இந்த விஷயம் எனக்கு தெரிஞ்சது.' 

'அப்புறம் ரிஷிகிட்டே ஏன்டா சொல்லலை?'

'எதுக்குப்பா அவன் கிட்டே சொல்லிக்கிட்டு.? இது முடிஞ்சு போன விஷயம். இப்போ எதுக்கு  உங்க எல்லாரையும் குழப்பிகிட்டுன்னு நினைச்சேன். இப்போ அவங்களோட தேவை பணம். அது நான் நிறைய கொடுத்திட்டுதான் இருக்கேன்'

ஒரு பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டார் சந்திரிகா.

'அப்புறம் அந்த குழந்தை அனாதையா கஷ்டபடுது. அவங்களாலே அதை வளர்க்க முடியலை.  அந்த குழந்தைக்கு ஒரு அப்பா வேணும். அது ஏன் நானா இருக்க கூடாதுன்னு தோணிச்சு. ஏன்னு புரியாமலே அந்த குழந்தை மேலே நிறைய பாசம் வெச்சிட்டேன் பா. அதனாலே இந்த கல்யாணம் முடிஞ்சதும் குழந்தையை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடலாம்னு நினைச்சேன்பா. அதுக்குள்ளே விளையாடிட்டானுங்க.'

பேசிக்கொண்டே போனவனை வியப்புடன் பார்த்திருந்தார் ராமன். 'எப்படிப்பட்ட நண்பன் இவன்? இல்லை இல்லை எப்படி பட்ட மனிதன் இவன்.?'

'பிளான் பண்ணி விளையாடுறானுங்கபா. உங்கள, அம்மாவ, ரிஷியை எல்லாரையும் மொத்தமா தோற்கடிச்சிடலாம் பாருங்க. அதான்'

ஒரு நொடி அவர்  மனைவியை திரும்பி பார்க்க சந்திரிகாவின்  முகத்தில் கொஞ்சம் கலவர ரேகைகள் பரவியது நிஜம். மனைவியை இப்படி பார்த்ததில்லைதான் அவர். கொஞ்சம் தொண்டையை செருமிக்கொண்டு நிதானமான குரலில் கேட்டார் ராமன். 'ரிஷிகிட்டே சொல்லிடுவோமா வைதேகி?'

'ம்?' கேட்டார் அம்மா. அதிர்ச்சியில் விழுந்து கிடந்தார் அவர் என்றே சொல்லவேண்டும். அதிலிருந்து சட்டென்று மீண்டு விட முடியவில்லை சந்திரிகாவால்.

'வேண்டாம்பா' அவசரமாக குறுக்கிட்டான். சஞ்சா. 'நாம எதுவும் சொல்ல வேண்டாம். ஒரு வேளை அது தன்னாலே தெரிய வந்தா தெரியட்டும். அப்போ பார்த்துக்கலாம் இப்போதான் கல்யாணம் பண்ணி இருக்கான். ரொம்ப நாள் கழிச்சு சந்தோஷமா சிரிக்கறான். இதை சொன்னா தாங்க மாட்டான்பா அவன்'

'அதுக்கில்லை சஞ்சா....'

'அப்பா ப்ளீஸ்... நான் சொல்றேன் இல்ல. நான் பார்த்துக்கறேன். அது தன்னாலே தெரிய வந்தா அப்போ அவனை நான் சமாதான படுத்திக்கறேன். விஷயம் உங்களுக்கு தெரியாம இருக்க கூடாதுன்னு தோணிச்சு அதான் சொன்னேன்.' என்றான் சஞ்சா.

என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் அப்பாவும் அம்மாவும் ஒருவரை பார்த்தபடி மௌனமாகவே அமர்ந்திருந்தனர்.

'நீங்க இங்கேயே இருங்கப்பா. நான் தங்கச்சியை பார்த்திட்டு வந்திடறேன். அது பயந்து போயிருக்கும். அப்படியே சம்மந்தி வீட்டிலேயும் பேசி சமாளிச்சிட்டு வரேன். அவன் வந்தா ஒண்ணும் சொல்லாதீங்க. நான் வந்து பேசிக்கறேன். அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணுவோம்.' சொல்லிவிட்டு நகர்ந்தான் சஞ்சா.

அதே நேரத்தில் வெளியே நடக்கும் காட்சிகள் அந்த தொலைகாட்சி சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அதையே பார்த்துக்கொண்டிருந்தார் மேகலா. அவருக்குமே எதுவும் புரியவில்லை. தன்னை அழைத்திருந்த அந்த  எண்ணை மறுபடியும் அழைத்தார்.

'என்ன நடக்குது அங்கே? எனக்கு ஒண்ணுமே புரியலை.'

மறுமுனையில் சிரிப்பொலி. 'உனக்கே இப்படி இருந்தா அவங்களுக்கெல்லாம் எப்படி இருக்கும்?' ஆனா அந்த சஞ்சீவ் பயலுக்கு விஷயம் தெரியும். அடுத்து அவன் என்ன செய்ய போறான்னு பார்க்கணும்.

'அதெல்லாம் இருக்கட்டும்... என்ன நடக்குது அங்கே? எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்.'

எதிர்முனை சொல்ல சொல்ல மேகலாவிடம் நிறையவே திகைப்பும், கொஞ்சம் சந்தோஷமும் பரவியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.