(Reading time: 5 - 10 minutes)

21. கிருஷ்ண சகி - மீரா ராம்

சுற்றிலும் கண்ணைக் கவரும் வகையில் மரங்கள்… அதில் சிறு சிறு பறவைகள் அங்கும் இங்கும் பறந்து சத்தமிட்டுக்கொண்டு இருந்தது…

அனைத்தையும் இன்முகத்துடன் ரசித்துக்கொண்டே வந்தாள் கிருஷ்ண ப்ராணாதிகா தனது குட்டி கண்களை உருட்டி வேடிக்கைப் பார்த்தபடி…

“அங்க என்ன பார்க்குற?... வண்டியில வரும்போது கவனம் ரோட்டுல இருக்கணும்… உனக்கு எத்தனை தடவை தான் சொல்லுறது?..” என சேஷாத்திரி அதட்டலுடன் கூடிய கேள்வி கேட்க, அவள் அமைதியாக இருந்தாள்…

krishna saki

“என்ன நான் சொல்லுறது காதுல விழுகுதா இல்லையா?...” என அவர் மீண்டும் ஒரு அதட்டல் போட,

“ஹ்ம்ம்…” என்றாள் பயத்துடன்…

“என் அம்மாகிட்ட மட்டும் வாய் நீளும்… நான் எதும் கேட்டா ஹ்ம்ம் மட்டும் சொல்லு… சே… உன்னோட எனக்கு ப்ராணன் தான் போகுது…” என்று அவர் நொந்து கொள்ள,

அவரின் பின்னால் வண்டியில் அமர்ந்து வந்தவளுக்கு கண்ணீர் குளமாக கெட்டி நின்றது கண்களில்…

அந்த கண்ணீர் அவளின் கன்னங்கள் எட்டினாலோ, இல்லை அது விசும்பலாக மாறி சேஷாத்திரியின் காதுகளை எட்டினாலோ அவள் தொலைந்தாள்…

அதனால், தனக்குள்ளேயே அடக்கினாள் அழுகையை…

பள்ளிக்கு செல்ல ஒரு தெரு இன்னும் இருக்கும்போதே, அவளை இறக்கிவிட்டவர், அவளுக்கு டாட்டாவும் சொல்லவில்லை… அவள் முகம் என்ன நிலையில் இருக்கிறது என்றும் அவர் கவனிக்கவில்லை…

தூரத்தில் புள்ளியாய் மறையும் வரை அவரையேப் பார்த்திருந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்து தரை எட்டியது…

“ஏண்டி லூசு அழற?... உன் தோப்பனார் இன்னைக்கு நேத்தா இப்படி இருக்குறார்?... விடுடி… ஃபர்ஸ்ட் கண்ணை துடை… யாராச்சும் பார்த்தா உன்னை அழுமூஞ்சி சொல்லமாட்டாங்களா?...” என தனக்குத் தானே சொல்லிக்கொண்டு பள்ளியை நோக்கி நடக்க துவங்கினாள் அவள்…

சில அடிகள் நடந்து சென்றவளை யாரோ பின் தொடர்வது போல் இருக்க, மெல்ல திரும்பி பார்த்தாள்… யாரும் இல்லை…

“என்ன இது… பிரம்மையா?... இல்லையே யாரோ வர்ற மாதிரி தான தெரிஞ்சது?... ஒரு வேளை பிள்ளை பிடிக்குறவனா இருக்குமோ… அய்யோ…” என பயந்தவள் வேகமாக நடக்க தொடங்கினாள்...

அப்போது சட்டென அவளின் முன் வந்து நின்றான் ராகேஷ்… அவளுடன் கூட படிக்கும் சிறுவன்…

அவன் எதிரே வந்து நின்றதும் பயந்து நின்றாள் அவள்… ஆனால் அது சில விநாடிகள் தான்… பின்னர் சுதாரித்தவள்,

“ஏய்… ராகேஷ்… உனக்கு அறிவு இல்லையா?... இப்படியா வந்து முன்னாடி நிப்ப?...” என திட்ட

“உனக்கு அறிவு இருக்கா முதலில்… நீ என்னை திட்டுற?...” என்றான் அவன் அவளை வம்பிழுத்தபடி…

“உன்னை விட ஜாஸ்தியா தான் இருக்கு…” என்றாள் அவளும் பதிலுக்கு…

“அப்படி நீயே சொல்லிட்டா நான் நம்பிடுவேனா?...”

“நம்பாத… உன்னை யாரு நம்ப சொன்னா?... ஆனா உன்னைத் தவிர நம்ம கிளாஸ்ல எல்லாரும் நம்புவாங்க… உன்னை விட அறிவு எனக்கு அதிகமா தான் இருக்குன்னு…”

“ஆமா இவ பெரிய அறிவாளி… சரிதான் போ…”

“பெரிய அறிவாளி இல்ல தான்… ஆனா, உன்னை விட அறிவு அதிகம் தான்… சந்தேகமா இருந்தா நம்ம க்ளாஸ் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேளு, அப்படியும் உனக்கு சந்தேகம் தீரலைன்னா, உன் ரேங்க் கார்ட் எடுத்துப் பாரு… அப்பவாச்சும் உன் மரமண்டைக்கு புரியாதான்னு நான் பார்க்குறேன்…” என அவள் சொல்லிவிட்டு நிற்காமல் நடக்க,

“ஃபர்ஸ்ட் ரேங்க வந்துட்ட திமிருல பேசுறீயா?... அடுத்த தடவை உன்னை நான் தோற்கடிக்கலை என் பேரு ராகேஷ் இல்ல…”

“திமிரு எனக்கு இல்ல… உனக்கு தான்… எப்ப பாரு என் கூட வம்புக்கு வர்றதே உனக்கு வேலையாப் போச்சு… சே… பேரு தான மாத்தி வச்சுக்கோ… ராகேஷ்…. சோகேஷ்…” என அவனுக்கு பதிலடி கொடுத்துவிட்டு அவள் செல்ல,

அவள் பின்னாடியே சென்றவன்,

“என்னை சோகேஷ்-னா சொல்லுற?.. போடீ… திமிரு பிடிச்ச ராத்த்த்த்திகா…..” என அவள் பக்கத்தில் போய் அவன் சொல்ல

அவளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது…

“போடா.... சோகேஷ்… கோகேஷ்…” என சொல்லியவளை.

“ராத்த்த்த்திகா…..” என சொல்லியபடி தள்ளிவிட்டுவிட்டு ஓடியே விட்டான் ராகேஷ்…

“கண்ணா….” என அலறியபடி விழுந்தாள் அவள்…

அருகில் இருந்த செடியில் கொடி சுற்றி கீழே கிடந்தவள் எழுந்து கொள்ள சிரமப்பட்ட போது,

“பார்த்தும்மா… மெதுவா… எந்தி… பார்த்து… பார்த்து…” என அவளின் கைப் பிடித்து தூக்கினான் சற்றே வளர்ந்த பையன் ஒருவன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.