(Reading time: 19 - 37 minutes)

20. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

"லது காலை எடுத்து வைச்சு உள்ளே வாங்கோ" என்று சாரதா, புது மணமக்களை வீட்டிற்குள் அழைக்க,

சாரதாவும், ரஞ்சனியும் முறையாக ஆரத்தி எடுத்தப் பின், மஹதியும், அஜய்யும் வீட்டுக்குள் நுழைந்தனர்.

திருமணம் முடிந்த கையோடு அன்றே சத்திரத்தை காலி செய்ய ஏற்கனவே முடிவெடுத்திருந்தது படி, மதிய திருமண விருந்து முடிந்த கையோடு, அன்றே நல்ல நாளாக இருப்பதால், கிரஹப் பிரவேசம் செய்வதற்காக தன் பிறந்த வீட்டுக்கே மறுபடியும் அஜய்யுடன் வந்தாள் மஹதி.

vasantha bairavi

அஜய்க்கு பெற்றோர் இல்லாத பட்சத்தில், தங்களது வீட்டுக்கே புது மணமக்களை அழைத்து வந்து விட்டனர் சாரதா-ராமமூர்த்தி தம்பதியர்.

புது மண தம்பதியருக்கு பாலும் பழமும் கொடுத்து உபசரித்து, மஹதியை சுவாமி விளக்கேற்ற சொல்லிவிட்டு அஜய்யை சற்று நேரம் மஹதியின் அறையில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, சாரதா கையில் எடுத்து வந்திருந்த சாமான்களை ஒழுங்கு படுத்துவதில் முனைந்தார்.

அதற்குள்ளாகவே அனைவரும் சத்திரத்தை ஒழித்துக் கொண்டு கட்டு சாத மூட்டையுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

பைரவி, குடும்பத்தவர் அனைவருக்கும் சூடாக காப்பியை கலந்து உபசரித்துக் கொண்டிருந்தாள்..

வரவேற்பறையில் உட்கார்ந்து கொண்டிருந்த மூத்த மாப்பிள்ளை சிவகுமார், மெல்ல பேச்சை துவக்கினான்.

"ஏன் ரஞ்சனி, உங்கப்பா தான் இப்போ புதுசா மஹதிக்கு வேறு ஒருத்தனை பார்த்து கல்யாணமும் பண்ணிட்டார்..  அந்த பையன் அஜய்யோ அமெரிக்காவில் இருக்கப் போறார்.. இன்னும் கொஞ்ச நாள் தான் இந்தியா வாசம்ன்னு சொல்லிட்டார்.. எல்லாம் சரிதான், இனிமே அந்த காரை வைச்சிண்டு என்ன பண்ண போறாளாம்?.. உனக்கு ஏதாவது விஷயம் தெரியுமா?.. உங்கம்மா ஏதாவது உங்கிட்ட சொன்னாளா என்ன?"

அங்கே உட்கார்ந்து கொண்டிருந்த ராமமூர்த்தி தன் மகளை பார்க்க, ரஞ்சனியோ, உள்ளே சமையலறையில் அப்பொழுது எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்த தன் தாயாரை அழைத்தவள்,

"அம்மா, இங்கே சித்த வந்துட்டுப் போ.. உன் மாப்பிள்ளை என்னவோ கேட்கிறார் பார்" என குரல் கொடுக்க,

'கல்யாணம் முடிந்த கையோட ஆரம்பிச்சிட்டா.. இப்பதான் கொஞ்சம் வீடு சந்தோஷமா இருக்கு.. அந்த மனுஷனுக்கு அது பொறுக்காதே.. மூக்குல வியர்த்திடும்.. யாரும் நிம்மதியா இருக்கப்படாது.. அடுத்து என்ன கேட்கப் போறாளோ?"  என்று நினைத்தபடியே சமையலறையில் இருந்து வெளியே வந்தார் சாரதா.

"என்னம்மா காதுல விழுந்ததா?"

"நன்னா திவ்யமா கேட்டுது..  ஏன் இப்ப அந்த காரை பத்தி என்ன?.. அது மஹதிக்குன்னு பைரவி கிப்ட் பண்ணா.."

"அதுகில்லை ரஞ்சு.. அவா கிப்ட் பண்ணா , அதெல்லாம் ஓ.கே. தான்.. அவளே இன்னும் கொஞ்சம் நாள்ல அமெரிக்காவுக்கு ஆத்துக்காரரோட பறந்து போயிடுவாளே?..அப்புறம் அதை வைச்சிண்டு இவா என்ன பண்ணுவா? அதான் கேட்டேன்.. யானைக்கு தீனி போட்டு கட்டுபடியாகுமா என்ன?.. பெட்ரோல் விக்கிற விலையில இதெல்லாம் இவாளுக்கு கட்டு படி ஆகுமா?.. அதான் கேட்டேன்."

சாரதா, ராமமூர்த்தியை பார்க்க,

"மாப்பிள்ளை, அஜய்யும், மஹதியும் இங்கே இருக்கறவரை காரை யூஸ் பண்ணட்டும்.. அப்புறம் என்ன செய்யரதுன்னு பார்க்கலாம்.. அது அவாளோட கிப்ட்.. அவா இஷ்டம்" என முடித்து விட,

"இல்லை, ஒரு வேளை அவா விக்க நினைச்சா நான் வாங்கிக்கலாமேன்னு தான்.. எப்படியும் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கனும்னு பார்க்கிறோம்.. இப்ப என் தம்பி என்னோட பிசினஸ் பாட்னரா ஜாயின் பண்ணிட்டான்.. எங்களுக்குன்னு மாருதி சுவிஃப்ட் இருந்தாலும் இன்னும் ஒன்னு அவனுக்கு தனியா இருந்தா சௌகரியமா இருக்குமே.. ஒரு ஐஞ்சாயிரமோ, பத்தோ கொடுத்தால் போச்சு,..  அது ஆக்சுவலா பார்த்தா அம்பத்தூருக்கு வர வேண்டியது கார்தானே.. என்ன புரியாம பாக்கறேள்.. அம்பத்தூருக்கு என் தம்பியை கல்யாணம் பண்ணிண்டு வர வேண்டிய பொண்ணு, இப்ப அமெரிக்காவுக்கு போகப் போறா.. நல்ல யோக ஜாதகம்"  என்று "ஹி ஹீ என்று இளித்து வைத்தான் சிவகுமார்.

அங்கே அப்பொழுதுதான் அஜய்யுடன் ரூமிலிருந்து வெளியே வந்த மஹதி தன் அத்திம்பேரை முறைக்க, "நீ முறைத்தால் நான் பயந்திடுவேனா' என அவளை லட்சியம் செய்யாமல் சிரித்தபடி பதில் பார்வை பார்த்தான் சிவகுமார்.

எங்கே புது மாப்பிள்ளை முன் தங்கள் குடும்ப மானம் சந்தி சிரிக்க போகிறதே என்று ராமமூர்த்தி, "அதை அப்புறம் பார்க்கலாம்" என்று முடித்து விட்டார்.

இவற்றை எல்லாம் பார்த்து கொண்டு தான் இருந்தான் அஜய்.. ஒன்றும் பேசாமல் லேசாக சிரித்து விட்டு, "மஹதி, சூடாக காஃபி ப்ளீஸ்' என

மஹதி சிரித்தபடி உள்ளே செல்ல, அவள் புது மணப்பெண் என்று அவளை தடுத்து விட்டு பைரவி தானே அஜய்க்கு காப்பி எடுத்து வர உள்ளே சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.