(Reading time: 19 - 37 minutes)

பொதுவாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது..

இரண்டாவது மாப்பிள்ளை கார்த்திகேயன் தன் பெற்றோர்களுடன் கல்யாணியையும் குழந்தைகளையும் மாத்திரம் விட்டு விட்டு திருவள்ளூருக்கு திருமணம் முடிந்த கையோடு சென்று விட்டான்.

"என்னப்பா அஜய், இந்தியா வந்தே..  நல்லா சிக்ஸர் அடிச்சே.. அதான்பா, லட்டு மாதிரி மஹதியை பிடிச்சியே அதைத்தான் சொல்லறேன்.. சோ, உன்னோட பிளான் என்ன.. மஹதியோட தனிக்குடித்தனமா? இல்லை மாமானார் வீட்டில டேராவா?.. அமெரிக்கா பழக்கம் என்ன?"

எப்பொழுதும் யாருடனாவது வம்புக்கு போகும் சிவகுமாரை அடக்க எண்ணி "அதெல்லாம் இந்தியாவில் தான் கல்யாணம் பண்ணிக் கொடுத்து பெண்ணை அனுப்பினாலும், எத்தனை வருஷம் ஆனாலும் மாப்பிள்ளை என்று பந்தா செய்துண்டு வீட்டில் தங்குவது எல்லாம்.. அமெரிக்காவில், ஒரு வயதுக்கு மேல் பெற்றவர்களை யாரும் இப்படி டிஸ்டர்ப் செய்வதில்லை.. அவரவர் வாழ்க்கை அவரவர்களுக்கு.. அதிலும் நான் அங்கேயே பிறந்து வளர்ந்தவன்.. எனக்கெல்லாம் தனிக் குடித்தனம் தான் பெட்டர்.. இன்னும் ஒரு ஆறு மாதம் தான் இங்கே இருப்பேன்.. அது வரை இந்தியாவில் தங்க வேண்டும்.. மஹதியிடம் இன்னும் இது பற்றி டிஸ்கஸ் செய்யவில்லை.. அதுவுமில்லாமல் இதெல்லாம் எங்கள் பெர்சனல் மேட்டர்.. இப்படி பொதுவாக டிஸ்கஸ் செய்வது எனக்கு பிடிக்காது , சாரி"  என அவனது மூக்கை உடைத்தான் அஜய்.

முகம் சிவக்க, கோபமாக ஏதோ சொல்ல வந்தவன், ரஞ்சனியின் பார்வையில் தன்னை அடக்கிக் கொண்டான் சிவகுமார்.

அதற்குள் காஃப்பி வந்து விட, அவனை கண்டு கொள்ளாமல், பைரவி கொடுத்த காப்பியை வாங்கி உறிஞ்சினான் அஜய்.

ராமமூர்த்தியே, "அஜய் , தப்பாக நினைக்கலைன்னா ஒன்று சொல்கிறேன்" என்றவர்,

"நீயும், மஹதியும் வேண்டுமானால் இனி பைரவி இருந்த அந்த இரண்டு ரூம் செட்டில் தங்க்கிக் கொள்ளுங்கள்.. கொஞ்சம் வசதி குறைச்சல் தான்.. பைரவி, நம்மாத்துல மஹதியோட அறையில் தங்கட்டும்.. அதுவும் அட்டாச்சுடு பாத்ரூம் வசதியோட இருக்கு.. நீங்க தங்கியிருந்த அறையில் வசந்த் இருக்கட்டுமே" என சொல்ல,

"உ ம்.. இது நல்ல ஐடியாவா இருக்கே.. மஹிக்கு ஓ.கேன்னா எனக்கும் ஓ.கே தான்..  வித் ஒன் கண்டிஷன்.. நீங்க அந்த வீட்டுக்கு வாடகை வாங்கிக்கனும்.. இல்லைன்னா நாங்க வேறு வீடு பார்க்க வேண்டும்"  என்ற அஜய்க்கு,

வேறு வழியில்லாமல் தலையாட்டினார் ராமமூர்த்தி.

"ம்.. கொடுத்து வைச்சவடி மஹி.. கல்யாணம் பண்ணிண்ட பின்னாலேயும் அம்மாவாத்துக்கு பக்கத்துலேயே இருக்கப் போறே.. மாமியார், மாமனார், புதுசா எல்லாரோடையும் போய் அட்ஜஸ்ட் பண்ணனும்னுஎதுவும் இல்லை.. எல்லாத்துக்குமே ஒரு கொடுப்பினை வேணும் போல"  என பொறாமையுடன் சொன்னாள் ரஞ்சனி.

"அப்பா தப்பா நினைக்கலேன்னா ஒன்னு கேக்கறேன்.. ஏம்ப்பா,மஹதிக்கு புது குடுத்தனம் வைக்கறது, அது இதுன்னு இனிமே செலவு இருக்காது.. அவாளும் இனிமே வாடகை கொடுத்துண்டு கொஞ்சம் நாள் இருக்கற போறா.. நீங்க ஏன் இந்த வீட்டை அந்த கான்ட்ராக்டர்கிட்ட கொடுத்துட்டு ஒரு வீட்டை நீங்க வைச்சிண்டு, மீதி கேஷா வாங்கி எங்க எல்லாருக்கும் ஒரு பங்கு கொடுக்கக் கூடாது.. இப்ப எங்களுக்கு கடை ஸ்டார்ட் செய்ய பணம் வேண்டியிருக்கு.. பத்து லட்சம் போல வேணுப்பா.. சமயத்துல நீங்க ஹெல்ப் பண்ணலைன்னா எப்படி, அப்புறம் பொறந்தாத்து மனுஷான்னு இருந்து என்ன ப்ரயோஜனம் சொல்லுங்கோ?"....

"இதோ, பார் ரஞ்சனி திரும்ப திரும்ப இப்படி பணம் கொடுன்னா நாங்க எங்கே போறது.. இப்போ தான் உன் தங்கை கல்யாணம் முடிஞ்சு ஆத்துக்குள்ளே வந்து அக்கடான்னு உட்கார்ந்து இருக்கோம்.. கொஞ்சம் கூட நிம்மதியா இருக்க விடாம எங்களை பிடிங்கி எடுத்தா எப்படி.. முதலும் கடைசியுமா உனக்கும், உங்க ஆத்துக்காரருக்கும் சொல்லறேன்.. என்னாலே ஒரு குந்துமணி காசு கூட கொடுக்க முடியாது.. எங்கிட்ட இல்லை.. வீட்டை எல்லாம் இப்ப எதுவும் விக்கற ஐடியா எனக்கு இல்லை.. முதல்ல வசந்த் தலை எடுக்கட்டும்..  இது பரம்பரையா வந்த சொத்து இல்லை.. இப்பவே பாகம் பிரிச்சு கொடுன்னு நீ கேக்கறதுக்கு.. என் சொந்த சம்பாதியத்தில் கட்டினது.. எனக்கு எப்ப எல்லாருக்கும் கொடுக்கனும்னு தெரியும்.. இனி இது பற்றி பேசாதே"  என ராமமூர்த்தி முடித்து விட,

"சரிப்பா.. நீங்க சொல்லறது ஒரு வகையில நியாயம் தான்.. இன்னும் வசந்த் தலை எடுக்கலை.. உங்களுக்கும் இந்த ஒரு சொத்து தான் இருக்கு.. இதன் மேலேயும் கொஞ்சம் கடன் இருக்குன்னு தெரியும்.. சரி ஒத்துக் கொள்கிறேன்.. ஆனா உங்க பரம்பரை நிலத்திலிருந்து வந்த பணத்துலே தான் மஹதிக்கு கல்யாணத்துக்கு செலவழிச்சிருக்கிங்க.. எல்லாம் ஓ.கே தான்.. ஆனா அம்மாகிட்ட தான் அவாத்து நில குத்தகை பணம், அதோட அவா பரம்பரை வீட்டை விற்ற பணம்ன்னு எனக்கு தெரிஞ்சு ஒரு இருபது லட்சமாவது இருக்கும்.. நாலு நாளைக்கு முன்னாலே அந்த குத்தகைக்காரன் கணக்கு சொல்லிட்டு இரண்டு லட்சம் பணமும் கொடுத்ததா கல்யாணத்துக்கு வந்தவன் எங்க ஆத்துக்காரர்கிட்ட சொன்னானாம்"..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.