(Reading time: 14 - 28 minutes)

"சொல்லு சாரதா, கூப்பிட்டயாமே..எதுவாக இருந்தாலும் சொல்லு", என்று ஊக்கினார் டாக்டர். மாலதி.

"டாக்டர்..இதை சொல்லறதுக்கு எனக்கு வாய் வரலை.. ஆனாலும் எனக்கு சொல்லாம இருக்க முடியலை.. திரும்பவும் அதையே தான் சொல்லப் போறேன்..உங்களாலே முடிஞ்சா எனக்கு ஒத்தாசை பண்ணுங்கோ டாக்டர்..எனக்கும் என் குழந்தைக்கும் விஷம் ஏதாவது குடுத்துடுங்கோ.. போய் சேரறேன். எனக்கு தெரியலை இந்த நிலையில் என்ன யோசிக்கறதுன்னு.", என்று விம்மினாள் சாரதா.

மெல்ல அவள் தலையை தடவிக் கொடுத்த டாக்டர்.. "சாரதா உயிரை காப்பாத்தறதுக்குத்தான் நாங்க படிச்சு வந்துருக்கோம்.. அதை எடுக்க யாருக்கும் உரிமை கிடையாதும்மா.. பெண்கள் அந்த அம்பாளோட அவதாரம்னு உனக்கு நான் சொல்லியாத் தெரியணும்.. பெண்ணை பெத்தவா எல்லாரும் இப்படி யோசிக்க ஆரம்பிச்சா.. இந்த பிள்ளைகளை பெத்துக் குடுக்கறது யார்?.. இது இயற்கையின் நியதி..நீயோ நானோ என்ன மாற்ற முடியும்.. சரி ஒரு பேச்சுக்கு சொல்லறேன்..நீயே எதையாவது பண்ணிண்டு போய் சேர்ந்துட்டா.. அப்போ மட்டும் உன் பிரச்சனை தீர்ந்துடுமா?..உன்னோட மத்த மூணு குழந்தைகள் கதி.. அதுகளும் பெண்தானே.. ரெண்டுகெட்டான் வயசிலே உன் பெண்களை விட்டுட்டு போறது உனக்கு சரின்னு தோனறதா.. அதை உங்க வீட்டிலே நன்னா பார்த்துப்பாளா?.. சொல்லும்மா", என்று கனிவுடன் கேட்டார்.

"சொல்ல முடியா துக்கம் மனதை அடைக்க..கண்கள் தன் போக்கில் நீரை வெளியேற்றியபடி இருக்க.."தெரியலையே டாக்டர்.. நான் என்னன்னு சொல்லறது.. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் இந்தக் குழந்தையோட என்னால அந்த வீட்டுக்கு போக முடியாது.. அவ்வளவுதான் என்னோட வாழ்க்கை..", என்று விசும்பினாள்.

"சரிம்மா நீ ஏன் அங்கே போகனும்?.. உன்னை அவங்க மதிக்கலை.. உன் குழந்தைய ஏத்துக்கவும் தயாரா இல்லை.. இந்த நிலையில் உனக்கு எதுக்கு அந்த புருஷன்?", நீயும் படிச்சிருக்க ஏதோ பாட்டு சொல்லித்தரேன்னு அம்மா சொன்னா..உன்னாலே தனியா நிக்க முடியாதா உன் குழந்தையை வெச்சுண்டு?", என்று வேறு ஒரு பரிமானம் தந்தார் டாக்டர் அவள் வாழ்க்கைக்கு..

"டாக்டர் என்ன சொல்லறேள் நீங்க?.. என்காத்துலே இதுவரை வாழாவெட்டியா யாரும் வந்தது கிடையாது..", என்று பதறினார்கள் தாயும் தந்தையும்.

"இன்னமும் எங்க குலத்துலே ரொம்ப குறுகிய மனசு படைச்சவா நிறைய பேர் இருக்கா.. என்பிள்ளை ஒரு அமெரிக்கா வெள்ளைக்காரியை இழுத்துண்டு போனதையே இன்னமும் சொல்லி காட்டி எங்களை வதைக்கறா.. நல்ல வேளை இவளுக்கு கொஞ்சம் முன்னாடியே கல்யாணம் ஆயிடுத்து இல்லாட்டி அப்படியே கல்யாணம் ஆகாம நின்னுருப்பா..", என்று கண்கள் கலங்கினாள் சாரதாவின் தாய்.

"மாமி.. நீங்க சொல்லறதும் சரிதான் .. ஒன்னு மட்டும் நிச்சயம் உங்களால் சொல்ல முடியுமா?..அவங்க நிச்சயம் இவளை ஏத்துக்கா மாட்டான்னு....அதை உங்களாலே கேரண்டி குடுக்க முடியுமா?..காலம் மாறலாம் இல்லையா?",  என்ற மாலதியை,

"இல்லை டாக்டர் நிச்சயம் அதுக்கு நானே கியாரண்டி குடுக்க முடியும்.. அவா ரொம்ப மோசம்..  என் ஆத்துக்காரர் ரொம்ப நல்லவர் ஆனா முதுகெலும்பு கிடையாது.. மாமியார் ஒன்னு சொன்னா மீற முடியாது.. இப்போ கூட பாருங்கோ என்னை அட்மிட் பண்ணினதுலேந்து ஃபோனை கூட எடுக்கலை மாமியார்.. அப்படியும் ஆளனுப்பி பார்த்ததிலே வீடு பூட்டியிருக்குன்னு சொல்லறா... இவாளை நான் எப்படி நம்ப முடியும் மாறுவான்னு, அதான் உங்களை நான் கேக்கறேன் ஏதவாது பண்ண முடியுமான்னு?..", என்று மீண்டும் தலையிலடித்து கொண்டு பெரிதாய் அழ ஆரம்பித்தாள் சாரதா.

"நிறுத்து சாரதா.. நீ இப்படியெல்லாம் பண்ணி ஏதாவது வரவழைச்சுக்காதே.. கொஞ்சம் இரு ஒரு வழி எனக்கு தோனறது சொல்லறேன்.. நீ ஏன் குழந்தையை யாருக்காகவாது தத்து கொடுக்கக் கூடாது?.. எத்தனையோ பேர் ஒரு குழந்தைக்கு கூட வழி இல்லாம இருக்கா..அவாளுக்கு ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தலும் சரி.. முழு மனசோட தனக்குன்னு ஒரு குழந்தை வேணும்னு ஏங்கிண்டு இருக்கறவா நிறைய பேர் இருக்கா.. இதை நீ யோசி..முட்டாள்தனமா உன் உயிரை கொடுத்து குழந்தையை அனாதையாக்காம இரு, என்ன மாமி நான் சொல்லறது சரிதானே.. உங்க பேத்தி எங்கேயோ கண்காணாத இடத்துலே தன்னை வேணுங்கிறவா கிட்ட நல்லா வளருவா", என்று முடித்து அவர்களை கேள்வியாய் பார்த்தார்.

"அம்மாடி நீ அந்த மாதிரி ஏதாவது ஏற்பாடு பண்ணா நான் காலம் முழுதுக்கும் உனக்கு நன்றிக் கடன் பட்டு இருப்பேன் மா.. குழந்தையை எங்களாளே தனியா வளர்க்கவும் முடியாது.. எங்க கிட்ட குழந்தையை விட்டுட்டு அவ மாத்திரம் அங்கே போய் இருக்க அவளுக்கும் மனசு எப்படி ஒப்பும்?, இங்கேயும் மனசில்லாம அங்கேயும் மனசில்லாம மதில் மேல் பூனையா இருக்க முடியாது.. நீங்க சொல்லறது தான் சரி.. எங்கேயோ கண் காணா இடத்துலே நல்லபடியா ராஜத்தியா கொண்டாடறவாகிட்ட இந்த குட்டி போச்சுன்னா அதை விட வேறு என்ன வேணும்?.. நீ கொஞ்சம் யோசிச்சு யாராவது இருந்தா சொல்லும்மா.. இன்னமும் மாப்பிள்ளை கிட்ட கூட விஷயம் தெரிவிக்கலை..", என்றார் சாரதாவின் தந்தை.

தடுப்பின் மறைவிலிருந்து கமலாவின் குரல் ஹீனமாக வெளி வந்தது.. "டாக்டர் இங்கே வாங்கோ..", என்று..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.