(Reading time: 14 - 28 minutes)

"கொஞ்சம் இருங்கோ கமலாவை பார்த்துட்டு வரேன்", என்று விரைந்தார் டாக்டர்..

அந்தப்பக்கம் கமலாவின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது..

"டாக்டர்.. யாருக்கோ தத்து கொடுக்கறதை எனக்கு தரச் சொல்லுங்கோ.. நானே எடுத்துக்கறேனே எனக்கு தாங்க முடியலை.. இந்த குழந்தையும் தங்காதுன்னிட்டேள்.. நான் என்ன பண்ணுவேன்..இனிமேல் குழந்தை பிறக்கவும் வாய்பில்லைன்னு எனக்கு தெரியும்.. எனக்குள் இருக்கும் தாய்மை உணர்வை கட்டு படுத்த முடியாமல் தான் கேக்கறேன்.. எனக்கே குடுத்துடுங்கோளேன்.. அந்த குழந்தையை என் பொண்ணா நான் வளர்த்துக்கறேன்.. எனக்கு ஒரு பற்றுகோல் வேணும் இனிமேல்..", என்றவளை,

தடுத்த விஸ்வனாதன், " கமலா நீ இப்போ அதிக உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவை எடுத்துருக்கேன்னு நினைக்கிறேன்.. அது அவ்வளவு ஈசி கிடையாதும்மா... நாளைக்கே நம்ப குழந்தை பிழைச்சுட்டா.. அடுத்தது.. சாரதாவின் கணவருக்கு என்ன பதில் சொல்ல முடியும்?..குழந்தை எங்கேன்னு கேட்டா?"

"விசு நீங்க சொல்லறது சரி.. இதெல்லாம் வேற யோசிக்கணும்..", என்ற டாக்டரை பார்த்த கமலா,

"என் குழந்தை பிழைச்சாலும் சரி பிழைக்காட்டாலும் சரி.. இந்த குழந்தையை நான் கை விட மாட்டேன்.. அவளை எனக்கு கிடைச்ச வரமா தான் நான் யோசிக்க முடியறது.. எனக்காகவே சாரதா இங்கே வந்தாளோன்னு தோனறது.. ரெண்டையும் நானே வளர்த்துக்கறேனே.. என்னை சாரதா கிட்ட கூட்டிண்டு போங்கோ நான் கேக்கறேன் அவ கிட்ட", என்று இறைஞ்சினாள் கமலா.

"விசு  கொஞ்சம் யோசிக்கலாம் நாம்..வா இவளை சாரதா கிட்ட கூட்டிண்டு போலாம்.", என்றாள் மாலதி.. அவரும் பெண்தானே ஒரு தாயின் வேதனை புரியாதா என்ன?

மெல்ல கமலாவை தாங்கி பிடித்தபடி சாரதாவின் அருகில் அழைத்து சென்றார்கள்..

சாரதாவின் அருகில் அமர்ந்தவள், சாரதாவின் கைகளை பிடித்துகொண்டு, "சாரதா நிச்சயம் இது உனக்கு ரொம்ப கஷ்டமான முடிவுதான்.. நீ வேண்டாம் என்று நினைத்தால் அதை வரமாக எண்ணி ஏந்திக் கொள்ளக் காத்திருக்கும் எனக்கு மடிபிச்சையாகத் தருவாயா உன் குழந்தையை?", என்று கதறினாள்.

கமலாவைப் பார்த்தது கதறி அழத் துவங்கினாள் சாரதா.. "ஐய்யோ என்ன நான் பண்ணுவேன்.. ரோஜாப்பூபோலே ஒரு குழந்தையை கொடுத்துட்டு பகவான் அதை என்னாலே பார்த்து அனுபவித்து போஷிக்க முடியாம பண்ணிட்டாரே.. இதுக்கு தான் நான் சொன்னேன் நான் மஹாபாவி.. கையிலே ஒரு புதையலை கொடுத்திருக்கார் பகவான்.. ஆனா அதை ஆண்டு அனுபவிக்க பாத்யதையை கொடுக்கலே.. தெய்வ சங்கல்பம் இது தானோ.. உனக்கும் எனக்கும் என்ன பந்தமோ.. அதுனாலே தானோ என்னமோ நீ இங்கே வந்திருக்கே.. நிச்சயம் என் குழந்தை நன்னா உன் கிட்ட இருக்கும்னு எனக்குத் தெரியும்..ஒரு தாயோட ஏக்கமும், வலியும் வேதனையும் அதை அனுபவிச்ச இன்னொருத்திக்கு தானே தெரியும்..", என்று சிறிது நேரம் கமலாவின் கைகளைப் பிடித்தபடி கண்ணீர் வழிய அமர்ந்திருந்தவள்.. சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவளாய் குழந்தையை எடுத்து மெல்ல தடவி உச்சி மோர்ந்து ஒரு முத்தத்தை பதித்து கமலாவின் கைகளில் கொடுத்து விட்டாள்.

சில நொடிகள் யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை..

பின் டாக்டர் மாலதி, "எல்லாம் சரிதான் கமலா உனக்கு ஒரு குட்டி ராணி கிடைச்சாச்சு.. ஆனா இப்போ சாரதாவின் கணவருக்கு என்ன பதில்.. குழந்தை பிறந்ததை சொல்ல வேண்டுமே?.."

"ஆமாம் டாக்டர்.. என் மாப்பிள்ளைக்கு என்ன பதில் சொல்ல முடியும்?.. இவள் பாட்டுக்கு குழந்தையை கொடுத்து விட்டாள்.. நாளைக்கே விஷயம் தெரிந்து வந்து குழந்தை எங்கே என்று கேட்டால்?....", என்று பதறினாள் சாரதாவின் தாயார்.

அதற்குள் நர்ஸ் அவசரம் அவசரமாக அங்கே வந்தவள்," டாக்டர் குழந்தை மூச்சு விட ரொம்ப கஷ்டப் படுகிறது.. என்னால் ஆன வரை ஆக்சிஜன் பம்ப் செய்து பார்த்துவிட்டேன்.. திணறல் அதிகமாயிடுச்சு", என்று பதட்டத்துடன்  கூறினாள்.

மாலதி, "நான் கொஞ்ச நேரம் கழித்து வரும் போது மற்றவை பேசலாம்.. விசு க்விக்..நீங்களும் வாங்க", என்று அவரையும் கையோடு கூடி சென்றாள்.

கமலாவோ கிடைத்த குழந்தையை நெஞ்சோடு அணைத்து கொண்டு..நான் திரும்பவும் கொடுக்க மாட்டேன்.. இது எனக்குத்தான் இனி..இவள் என் மகள்..", என்று ஏதோ தனக்குத்தானே பேசியபடி அமர்ந்து விட்டாள்.

"அம்மா.. கமலாவுக்கு நான் குடுத்தாச்சு.. இனிமேல் இந்த குழந்தை அவளுடையது.. இதை சொல்ல மனசு இல்லை தான் ஆனால் காலத்தின் கட்டாயம் என்னை சொல்ல வைக்கிறது.. உன் மாப்பிள்ளை வந்து கேட்டால் குழந்தை செத்து போச்சுன்னு சொல்லிடு", என்று சொல்லிவிட்டு முகத்திலடித்து கொண்டு அழத் தொடங்கினாள்.

அடுத்த ஒருமணி நேரம் அழுகையிலேயே கரைந்தது.

"அம்மாடி கமலா.. நீயே கொஞ்சம் யோசி.. நாளை பின்னே சாரதா ஆத்துக்காரர் வந்து கேட்டா நாங்க என்ன சொல்ல முடியும்.. அவ தான் என்னமோ சொல்லறா.. நீயாவது கொஞ்சம் யோசிம்மா..", என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டாள் சாரதாவின் தாயார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.