(Reading time: 21 - 41 minutes)

22. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

சாவித்ரி தன் கணவன் போதை மருந்து விற்கிறான் என்று கூறியதை விட அதிர்ச்சியாக இருந்தது இப்பொழுது அவர் கூறியது.  தன் அக்காவா இப்படி என்பதுபோல சாவித்ரியைப் பார்த்தாள் ரூபா. தேவியால் சாவித்திரி கூறியதை ஜீரணிக்கவே முடியவில்லை.

“அம்மா நீங்க சொல்றது நிஜமா?  அக்காவா  அப்படி  பண்ணினா.  இருக்காதும்மா.  நீங்க எதையோ பார்த்துட்டு சொல்றீங்கன்னு நினைக்கறேன். அக்கா அந்த அளவு மோசம் கிடையாதும்மா”

“நானும் அப்படித்தான் நினைச்சேன் ரூபா.  ஆனால் அவ கடைசி வருஷம் படிக்கும்போது  காலேஜ்ல குரூப் போட்டோ எடுத்தாங்க இல்லை அப்பறம் அவ ஆபீஸ்ல எல்லாரும் சேர்ந்து குன்னூர் போனாங்களே அங்க போட்டோ எடுத்தாங்க இல்லை.  அதுல இருந்த சில பொண்ணுங்க அந்த போட்டோல இருந்தாங்கம்மா”, என்று கூறி சாவித்ரி அழ,  ரூபாவும்  கண் கலங்க ஆரம்பித்தாள்.

Vidiyalukkillai thooram

“சாவித்ரிமா எனக்கு என்ன சொல்லன்னே தெரியலை.  உங்க பொண்ணு பண்றது பெரிய தப்பு.  இதை இனி போலீஸ்க்கு கொண்டு போகாம இருக்க முடியாது”,வரதன் கூற புரிந்ததற்கு அறிகுறியாக தலை அசைத்தாள் சாவித்ரி.

“எனக்குப் புரியுது சார்.  என்னதான் என் பொண்ணுன்னு பாசம் இருந்தாலும், அவ அளவில்லாம  தறிகெட்டு ஓடும்போது தடுக்கத்தானே வேணும்.  இத்தனை நாளா அவங்க திருந்திட்டாங்கன்னு நானும் எல்லா விஷயத்தையும் மூடி மறைச்சேன்.  ஆனா இந்த விஷயம் பார்த்தப்பறம் அவங்க திருந்தற ஸ்டேஜ் எல்லாம் தாண்டிட்டாங்கன்னு தோணுது.  அதுவும் நான் சொல்லி இனி அவ மாறுவான்னு எதிர்பார்கிறது  எல்லாம் வேஸ்ட்.  நீங்க என்ன நடவடிக்கை எடுக்கணுமோ எடுங்க”

“இங்க பாருங்கம்மா இப்போ ஒரு உணர்ச்சி வேகத்துல சொல்லிட்டு அப்பறம் பின் வாங்கக் கூடாது.  நல்லா யோசிச்சுக்குங்க.  உங்களால முடியாட்டாலும் நாங்க இதை சும்மா விடறதா இல்லை.  உங்க வழியா இல்லாம வேற வழில அவங்க பண்ற தப்பை கண்டு பிடிச்சுடுவோம்”

“இல்லை சார், இனி எப்பவும் பின் வாங்க மாட்டேன்.  அந்த போட்டோ எல்லாம் பார்த்தப்பறம் எனக்கு பொண்ணுங்கற பாசமே விட்டுப்போச்சு.  அப்படியும் நேத்து அவங்கக்கிட்ட சும்மா பேசிப்பார்த்தேன், இன்னும் மேல மேல எப்படி தப்பு பண்ணலாம்னுதான் பேசறாங்களேத் தவிர திருந்தறா மாதிரித் தெரியலை.  நான் என்னைப் பத்திக் கவலைப்படலை சார்.  ஆனால் ரூபாவோட எதிர்காலத்தை நினைச்சாதான் கவலையா இருக்கு.  நாளைக்கு இந்த விஷயம் வெளிய வந்தப்பறம் இவளை யார் கல்யாணம் பண்ணிப்பா”

“அம்மா, முதல்ல இருக்கற பிரச்சனையை முடிப்போம்.  இப்போ என் கல்யாணம்தான் முக்கியமா.  நான் அப்படி ஒண்ணு பண்ணிக்கறதாவே  இல்லை.  சார், மேடம் நீங்க அப்பா மேலயும், அக்கா மேலயும் என்ன நடவடிக்கை எடுக்கணுமோ எடுங்க.  எங்க அம்மாவால முடியாட்டாலும் நான் சாட்சி சொல்ல வரேன்.  விமலாவைப் பத்தி அம்மா சொல்லும்போது பணத்துக்காக இத்தனை கேவலமா நடந்துக்கறது எங்கக்காவான்னு இருக்கு.  அவ திருந்தாட்டாலும் அட்லீஸ்ட் மேல மேல தப்பு பண்ணாம செய்யலாமே”

“ரெண்டு பேருமே உணர்ச்சி வசப்பட்டு பேசறீங்க.  கடைசி வரை மாறாம இருந்தா சரி.  விமலா இந்த அளவு தப்பு செய்யறான்னா கண்டிப்பா அவளுக்கு பின்னாடி பெரிய லெவெல்ல ஹெல்ப் இருக்கணும்.  இல்லைன்னா இத்தனை தைரியம் இருக்காது.  சாவித்ரிம்மா அந்த போட்டோ விஷயத்துக்குப் பின்னால இருக்கறது யாருன்னு உங்களுக்குத் தெரியுமா, அவ எந்த நோக்கத்தோட அதை எடுத்து இருப்பான்னு....  ஐடியா இருக்கா உங்களுக்கு.  ரெண்டாவது இதுல உங்க கணவரும் சம்மந்தப்பட்டிருப்பாருன்னு நினைக்கறீங்களா?”

“எனக்கு ஒண்ணுமே புரியலை  சார்,  இவ இந்த மாதிரி கேவலமான வேலை எல்லாம் பண்றான்னு அதைப் பார்க்கலைன்னா  சத்தியமா நம்பி இருக்க மாட்டேன்.  ஏன் பண்றா, எதுக்கு பண்றான்னு ஒண்ணும் தெரியலை.  அதே மாதிரி அவருக்கும் இதுல தொடர்பு இருக்கான்னும்  தெரியலை”, என்று சொல்லி மறுபடி அழ ஆரம்பித்தார்.

“வருத்தப்படாதீங்கம்மா, அடுத்து என்ன செய்யன்னு யோசிக்கலாம்.  இப்போ நீங்க சொல்ற விஷயம் ஸ்ரீதர்க்கு தெரியுமான்னு தெரியணும், அதேப் போல அவங்க என்ன எல்லாம் ஆதாரம் உங்க கணவர்க்கிட்ட கொடுத்தாங்கன்னும்  தெரியணும்.  அதுக்கப்பறம்தான் நாம மேல எப்படி ப்ரோசீட் பண்றதுன்னு யோசிக்கணும்”,என்று கூறிய வரதன், ஸ்ரீதரை அழைத்து வீட்டிற்கு வருமாறு கூறினார். 

“தேவிம்மா நீ நம்ம மதிக்கு போன் போட்டு வர சொல்லேன்”

“அவரு எதுக்கு சார்?”

“இல்லைம்மா, நாம போலீஸ் வழியா மூவ் பண்ணினாதான் சரியா வரும்.  இந்தக் கேஸ் ஆரம்பிக்கும்போது இது ஏதோ வக்கீல் நோட்டீஸ்க்கு பதில் நோட்டீஸ் அனுப்பி வழக்கு நடத்தினா போதுங்கறா மாதிரி இருந்துது.  ஆனா இப்போ போதை மருந்து, பெண்கள் போட்டோ அப்படின்னு தோண்ட தோண்ட புதுசு புதுசா விஷயங்கள் வருது.  இது பின்னாடி கண்டிப்பா பெரிய நெட்வொர்க் இருக்கணும்.  சோ முடிஞ்சவரை நாம ரகசியமாத்தான் கண்காணிக்கணும்”

“அது சரிதான் சார், ஆனா நாம யாரானும் லேடி போலீஸ் கூப்பிடலாமே.  நம்ம லேகாக்கூட  இருக்கா.  நமக்கு எல்லா விதத்துலயும் உதவி செய்வா.  அதுவும் இல்லாம லேடின்னா இவங்களுக்கும் பேச கொஞ்சம் ஈஸியா இருக்கும்”

“நீ சொல்றது ஒரு விதத்துல சரிதான் தேவி.  ஆனா நம்ம மதிக்கு மேல் இடத்துல இருக்கற influence லேகாக்கு கிடையாது.  அதுவும் இல்லாம மதி ACP, லேகா இன்ஸ்பெக்டர்.  அவ ஸ்டேஷன் இருக்கற ஏரியா வேற.  அவ வந்தாலும் இந்தக் கேஸ்ல நேரடியா ஈடுபட முடியாதும்மா”, என்று விளக்கமாக சொல்ல வேறு வழி இல்லாமல் மதிவண்ணன் ACPயை அழைத்தாள் தேவி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.