(Reading time: 21 - 41 minutes)

மாமா,  இது இவங்க ரெண்டு பேர் மட்டும் பண்ற விஷயம் இல்லை.  நானுமே இந்த ஒரு மாசமா போதை மருந்து கேஸ்லதான் ரொம்பத் தீவிரமா ஈடுப்பட்டு இருக்கேன்.  நீங்க என்னைக் கூப்பிட்டு நல்ல காரியம் பண்ணினீங்க.  இப்போ எல்லாம் இந்த போதை மருந்து கடத்தறது, விக்கறது  இதெல்லாம் பண்றவங்க… இந்த மாதிரி நம்ம  சந்தேக லிஸ்ட்ல விழாத  ஆட்களாகத்தான் தேர்ந்தெடுக்கறாங்க.  அதுவும்  மிடில் கிளாஸ் குடும்பத்துல இருக்கற பெண்கள்னா கண்டிப்பாவே நாம சந்தேகப்பட மாட்டோம்னு அவங்களுக்குத் தெரியும்.  இவங்களும் ஈஸியா அவங்க வலைல விழுந்துடறாங்க.இல்லை அவங்க கொடுக்கறதா சொல்ற பணம் விழ வச்சிடுது.   ஸ்ரீதர், நீங்க எப்படி விமலா தப்பு பண்ணினான்னு கண்டுபிடிச்சீங்க?”

“என்னோட வேலை செய்யற ராமு, எங்க நிச்சயத்துல எடுத்த போட்டோவை அவங்க வீட்டுல காட்டி இருக்கான்.  அதைப் பார்த்த அவனோட தங்கை விமலாவைத் தனக்குத் தெரியும்ன்னு சொல்லி இருக்கா.  விமலா படிச்ச காலேஜ்ல தான் அந்தப் பொண்ணு இப்போ படிக்குது.  அவக்கூட படிக்கற பொண்ணோட அக்காவும், விமலாவும் ஒரே கிளாஸ்.  அந்தப் பொண்ணுக்கிட்ட விமலாக்கு நிச்சயம் ஆனதை சொல்லலாம்ன்னு  போட்டோ  காப்பி பண்ணிட்டு போய் காட்டி இருக்கா.  அதுக்கு அந்தப் பொண்ணு விமலா தப்பு வழில போறா மாதிரித் தெரிஞ்சதால அவங்க அக்கா அவளோட பேசறதை நிறுத்திட்டதா சொல்லி இருக்கு.  ஆனா அவளுக்கும் எந்த மாதிரித் தப்புன்னு தெரியலை.  இதை வந்து வீட்டுல சொல்ல, ராமு எங்கிட்ட வந்து சொன்னான்.  அவன் பெண்ணைப் பத்தி நல்லா விசாரிச்சியான்னு கேட்டான்.  எங்களுக்கு ஒரு மேரேஜ் பீரோ வழியாத்தான் விமலா ஜாதகம் வந்தது.  மத்தபடி அவங்களப் பத்தி எதுவும் தெரியாது.  அப்படி எல்லாம் இருந்தும் நான் ராமு சொன்னதை நம்பலை”

“ராமுங்கறவர் இன்னமும் உங்க கூடதான் வேலை செய்யறாரா? இந்தக் கேஸ் விஷயமா ஏதானும் ஹெல்ப் வேணும்னா பண்ணுவாரா?”, மதி ஸ்ரீதரைக் கேட்க, கேஸ் என்று வந்துவிட்டால் அவனின் விளையாட்டுத்தனமெல்லாம் ஒரு நொடியில் எங்கே போகிறது என்ற ஆச்சர்யத்துடன் பார்த்தாள் தேவி. 

“ஆமாம் சார், ராமு இங்கதான் இருக்கான்.  கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவான்.  ப்ரோக்ராம் வந்த உடனேயே என்கிட்டே வந்து நேரா அந்த தொலைகாட்சி நிலையத்துக்குப் போய் நியாயம்  கேக்கலாம்ன்னு சொன்னான்.  நான்தான் அதெல்லாம் வேண்டாம்ன்னு சொல்லி நிறுத்தி வச்சேன்”

“ஓ சரி, நீங்க மேல சொல்லுங்க”

“ராமு விமலா வீட்டைப் பத்தி விசாரிக்க்கலாம்னு சொன்னதை மறுத்துட்டு அந்த விஷயத்தையே மறந்துட்டேன்.  ரெண்டு மூணு நாள் கழிச்சு ராமு மறுபடி வந்து விமலா யார் கூடவோ காபி ஷாப்ல ரொம்பத் தீவிரமா பேசிட்டு இருந்ததா சொன்னான்.  இந்தக் காலத்துல லவ் பண்றேன்னு வீட்டுல சொல்ல முடியாம  கல்யாணத்தன்னைக்கு காலைல மண்டபத்த விட்டு ஓடிப் போகிற விஷயம் ரொம்ப சர்வ சாதாரணமா நடக்குது.  அதனால அந்த மாதிரி அவமானமெல்லாம் நமக்கு வேண்டாம், நீ என்ன சொன்னாலும் சரி, என்னோட மாமாப் பையன் டிடெக்டிவ் ஏஜென்ஸி ஆரம்பிக்கற ஐடியால இருக்கான்.  அவனுக்கு இது ஒரு அனுபவமா இருக்கட்டும், அவங்க மேல எந்தத் தப்பும் இல்லைனா நீயும் முழு மனசோட கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லைன்னு சொல்லி அவன் மாமாப் பையனைக் கூப்பிட்டு விமலா போட்டோ, அவங்க குடும்ப போட்டோ, அவளைப் பத்தி முழு டீடைல்ஸ் கொடுத்து விசாரிக்க சொன்னான்.  அவன் வழியாதான் விமலா போதை மருந்து விக்க உதவி செய்து இருக்கான்னு தெரிய வந்தது.  அவன் போதை மருந்து வாங்கறா மாதிரி அவக்கிட்ட பேசி அவ வழியாவே அவங்க அப்பாக் கடைக்குப் போய் அங்க அதை வாங்கறா மாதிரி பக்காவா பிளான் போட்டு அதை செயல்படுத்தி முழுக்க ரெகார்ட் பண்ணி எங்கக்கிட்ட கொடுத்தான்.  அதைத் தவிர, அவங்களோட பேங்க் அக்கௌன்ட் டீடைல்ஸ்,   விமலாவும், அவங்க அப்பாவும் யார் யார்க்கிட்ட பேசாறாங்க அப்படிங்கற டீடைல்ஸ் இப்படி எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிக் கொடுத்தான்”

“சூப்பர் போங்க.  லட்டு மாதிரி அவங்களை அர்ரெஸ்ட் பண்ண அத்தனை விஷயமும்  உங்கக்கிட்ட இருந்து இருக்கு.  நீங்க நேரா போலீஸ்க்கு போய் இருக்கலாமே ஸ்ரீதர்”

“நான் அந்த முடிவுலதான் சார் இருந்தேன்.  ராமுவும், அவன் மாமா பையனும் இந்த விஷயத்தை ஆபீஸ்ல வச்சுப் பேச வேண்டாம்னு வீட்டுக்கு வந்தாங்க.  அந்த நேரம் அப்பாவும், அம்மாவும் வீட்டுலதான் இருந்தாங்க.  ராமு வந்து சொன்னதைக் கேட்டு எங்க எல்லாருக்கும் செம்ம அதிர்ச்சி.  நான் ஏதோ லவ் விஷயம் இருக்கும் அப்படின்னுதான் யோசிச்சேனேத் தவிர, இந்த மாதிரி ஒண்ணை எதிர்பார்க்கவே இல்லை.  மொதல்ல எங்களுக்கு அவன் சொன்ன விஷயத்துக்கு எப்படி ரியாக்ட் பண்ணன்னேத் தெரியலை.  ராமு சொல்ல சொல்ல, அடுத்து என்ன பண்ணன்னுக்கூட யோசிக்க முடியலை.  அதுவும் அவன் விமலா அப்பாவோட நண்பரைப் பத்தியும், அவருக்கு இருக்கற ஆள்பலம் பத்தியும் எல்லாம் சொல்ல, அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ரொம்ப பயமா போய்டுச்சு.  அவங்க கிராமத்துல ரொம்ப அமைதியா வாழ்ந்தவங்க.  அவங்களாலே இதை எல்லாம் ஜீரணம் பண்ண முடியலை.  ராமுவும், அவனோட மாமாப் பையனும்  எல்லா எவிடன்ஸையும் எங்கக்கிட்ட கொடுத்துட்டு மறுநாள் போலீஸ் ஸ்டேஷன் போலாம்ன்னு சொல்லிட்டு, கிளம்பிட்டாங்க.  ஆனா போற வழில  கீழ விழுந்து அடி பட்டுடுச்சு.  அதனால அவங்களை ஒரு ரெண்டு நாளைக்கு ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு அப்பறம் போலாம்ன்னு சொன்னேன்.  ராமு  என்னை மட்டும் போகத்தான் சொன்னான். ஆனா அவனோட மாமாப் பையன்தான் என்னைத் தனியா போகவேண்டாம், அவங்க ஏதாவது கேள்வி கேட்டாலும் அவன் இருந்தான்னா பதில் சொல்ல வசதியா இருக்கும்னு சொல்லி நிறுத்திட்டான்.  நானும் ரெண்டு நாள்ல என்ன ஆகிடப் போகுதுன்னு விட்டுட்டேன்”

“ஓ, அந்த ராமுவோட மாமாப் பையன் இப்போவும் இந்த டிடெக்டிவ் வேலை எல்லாம் பண்றாரா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.