(Reading time: 21 - 41 minutes)

23. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

Vidiyalukkillai thooram

வாங்க ஸ்ரீதர்.  மதி வந்துட்டே இருக்கான்.  இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல இங்க இருப்பான்.  தேவி…… அம்மாக்கிட்ட  குடிக்க ஏதானும் எடுத்துட்டு வர சொல்லு”

“இருக்கட்டும் சார்.  வீட்டுல டின்னர் சாப்பிட்டுத்தான் கிளம்பினோம்.  இவர் ராமு, அப்பறம் இவர் அவனோட மாமா பையன் அகில்”, இருவரையும் ஸ்ரீதர் வரதனுக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது  உள்ளே நுழைந்தான் மதி.

“சாரி ஸ்ரீதர்.  வந்து நேரம் ஆச்சா. டிராபிக்ல மாட்டிக்கிட்டேன்”

“இல்லை சார், இப்போதான்  ஒரு பத்து நிமிஷம் ஆச்சு”, என்று கூறியபடியே ராமுவையும், அகிலையும் மதிக்கு அறிமுகப்படுத்தினான் ஸ்ரீதர்.

“மதி சாப்பிட்டியா?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“இல்லை மாமா, இன்னைக்கு மாத்தி மாத்தி செம்ம வேலை.  மதிய சாப்பாடே நாலு மணிக்குத்தான் சாப்பிட்டேன்”, என்று கூற தேவியை அழைத்து அவனுக்கு சாப்பிட  எடுத்து வர சொன்னார் வரதன்.

“இப்போ எதுவும் வேணாம் மாமா.  நான் கிளம்பறதுக்கு முன்னாடி சாப்பிடறேன்.  எனக்கு ஜூஸ் மட்டும் கொண்டு வா தேவி”, என்று அவளைப் பார்த்துக் கூற, வேறு வழியின்றி அவனிடம் தலை அசைத்து சென்றாள் தேவி.

“சொல்லுங்க அகில்.  நீங்க ஏதோ டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிக்கப்போறதா ஸ்ரீதர் சொன்னார்.  ஆரம்பிச்சுட்டீங்களா.... நீங்க இங்கதான் இருக்கீங்களா?”

“எனக்கு சொந்த ஊர் மதுரை சார்.  அங்கதான் இருக்கேன்.  டிடெக்டிவ் ஏஜென்சி இன்னும் ஆரம்பிக்கலை.  இப்போதைக்கு ‘மூன் ஸ்டார்’ துப்பறியும் நிறுவனத்துல வேலைக்கு சேர்ந்திருக்கேன்.  கொஞ்சம் அனுபவம் கிடைச்ச பிறகு தனியா ஆரம்பிக்கலாம்ன்னு ஐடியா”

“மூன் ஸ்டார்ன்னா பழனிதானே அங்க ஹெட்டா இருக்கறவர்”

“ஆமாம் சார், உங்களுக்குத் தெரியுமா?”

“நல்லாத் தெரியும் அகில்.  கேஸ் விஷயமா அவர் ரெண்டு, மூணு வாட்டி என்னை மீட் பண்ணி இருக்கார்”, இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு பெரிய கிளாஸ் முழுக்க ஆப்பிள் பழச் சாருடன் வந்தாள் தேவி.  அந்த டம்ளர் சைஸ் பார்த்தவுடன் ஜெர்க் ஆனான் மதி.

“தேவிம்மா, உனக்கு என்மேல அன்பு இருக்க வேண்டியதுதான்.  அதுக்குன்னு அதை இப்படி ஜூஸா என் வயத்துக்குள்ள ஊத்தி காமிக்கத் தேவை இல்லை”, என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் மெதுவாகக் கூற,  அவன் கூறியதைக் கண்டு கொள்ளாமல், மற்றவர்களுக்கு குடிக்க மோர் கொடுத்தாள் தேவி.  வரதன் நக்கலாக மதியைப் பார்க்க அவன் சட்டையில் இல்லாத தூசியைத் தட்டினான். 

அனைவரும் குடித்து முடித்தவுடன், அகிலிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தான் மதி.

“அகில் நீங்க முன்ன ஸ்ரீதர்க்கிட்ட கொடுத்த ஆதாரம் எல்லாம் இப்போ உங்ககிட்ட இருக்கா?”

“சார் வீடியோ ஆதாரம் இல்லை சார்.  ரெகார்ட் பண்ணினத காப்பி  பண்ணி ஸ்ரீதர் கிட்ட கொடுத்தேன்.  பட் அந்த ஒரிஜினல் SD Card  எங்கியோ மிஸ்   ஆகிடுச்சு.  அதை நான் கம்ப்யூட்டர்ல போடாம விட்டுட்டேன்.  இப்போ அவசரமா கிளம்பி வந்ததால ரொம்பத் தேட முடியலை.  நான் திரும்பவும் தேடிப் பார்க்கறேன் சார்.  மத்தபடி அவங்க பேங்க் டீடைல்ஸ் எல்லாம் இருக்கு.  அதோட காப்பி இந்தாங்க”, அகில் கொடுக்க அதை வாங்கிப் பார்த்துவிட்டு வரதனிடம் தந்தான் மதி.  வரதனும் அவரருகில் இருந்த தேவியும் அதைப் பார்க்க தேவியின் முகத்தில் யோசனை வந்தது.

“இதுல அவங்க பெரிய அளவுல பணம் பண்ணினா மாதிரி தெரியலையே சார்.  மாசத்துக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் வந்திருக்கு அவ்வளவுதான்”

“தேவி இது பெரிய நெட்வொர்க்.  கொடுக்கற கமிஷன் பல கை மாறிதான்  கடைசியா இவங்களுக்கு வருது.   அவங்க கடன் வாங்கித்தானே அந்தக் கடை ஆரம்பிச்சு இருக்காங்க.  அதுக்கு வட்டி கட்டணும், அதுவும் தவிர அப்போ விமலா படிச்சுட்டுதான் இருந்து இருக்கா.  அவங்க படிப்பு செலவு அது, இதுன்னு போய் இருக்கும் இல்லையா.  நீ கவனிச்சுப் பார்த்தா தெரியும்.  விமலா வேலைக்குப் போன பிறகு பணம் ஏறி இருக்கு பாரு”, மதி சொல்ல அதை ஆமோதிப்பதுப்போல் தலை அசைத்தாள் தேவி.

“அகில் உங்களுக்கு விமலா அப்பா போதை மருந்து சப்ளை பண்றார்ன்னு எப்படி டவுட் வந்தது”

“ராமு வந்து சொன்னவுடனே நான் யோசிச்சது காதல் விவகாரம் அப்படின்னுதான் சார்.  விமலாவும், அந்த ஆளும் பேசிட்டு இருந்ததை ராமு போட்டோ எடுத்து இருந்தான்.  நான் விமலாவை கண்காணிக்க ஆரம்பிச்சு ஒரு ரெண்டு நாள்ல அந்த ஆள் திரும்ப அவங்களை மீட் பண்ணினான்.  அப்போ அவன் விமலாக்கிட்ட ஒரு பாக்கெட் மாதிரி ஏதோ கொடுத்தான்.  அவங்க ரெண்டு பேரும் கிளம்பின உடனே  விமலா மீட் பண்ணின ஆளை தொடர்ந்து போனேன்.  அவன் போனது கொஞ்சம் ஒரு மாதிரி ஏரியா.  அங்க நடக்காத தப்பே இல்லை.    அங்க போன அந்த ஆள் பேசினது போதை மருந்து விக்கற ஆளோட.  அவன் கிட்ட இருந்து விமலாக்கிட்ட கொடுத்தா மாதிரியே இன்னொரு பொட்டலம் வாங்கிட்டுப் போய் இன்னொரு காலேஜ் பையன்கிட்ட கொடுத்தான்”

“ஓ இந்தக் கும்பலோட டார்கெட் முழுக்க காலேஜ் பசங்க போல இருக்கு.  நீங்க investigation லைன்ல இருக்கீங்க அகில்.  அப்பறம் எப்படி இப்படி ஒரு தப்பு நடந்ததை போலீஸ் பார்வைக்கு எடுத்துட்டு வராம விட்டீங்க.  ஸ்ரீதர் அப்பா பயப்பட்டார் அப்படின்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கு.  ஆனா நீங்க  இந்த விஷயத்தை சாதாரணமா விட்டது ரொம்பத் தப்பு அகில்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.