(Reading time: 21 - 41 minutes)

டேய் இந்தக் கதைல இப்படி ஒரு கேரக்டரை சேர்க்கற ஐடியாவே இல்லை. போனாப் போகட்டும்ன்னு உள்ள விட்டிருக்கோம்.  மரியாதையை காப்பாத்திக்கோ”

“அடப்போங்க மாமா.  என்ன மாதிரி ஆளுங்களுக்குதான் இப்போலாம் கிளாமர் ஜாஸ்தி தெரிஞ்சுக்கோங்க.  IPS, ஆறடி உயரம், அழகிய புருவம்,  கிரேக்க சிலைன்னு வர்ணிச்சு கவிதை எல்லாம் எழுதுவாங்க தெரியுமா”, மதி பேச அவனின் தற்பெருமையில் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் தேவியும், வரதனும்.  

“என்ன ஒரே சிரிப்பு சத்தமா இருக்கு.  ஓ மதி இங்கதான் இருக்கியா.....  அதான்.  வடிவேலு இருக்கற இடம் கலகலக்கத்தான் செய்யும்”, மதி தன்னை சிங்கம் சூர்யா லெவலில் பேச, ரவியோ, அவனை மருதமலை வடிவேலுவாக டமால் எனத் தரை இறக்கினான்.

“ரவி அண்ணா இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்.  ஒரு சிங்கத்தை இப்படி அசிங்கப்படுத்தறீங்களே”, என்று அழமாட்டாதக் குறையாக கூற, சிங்கமா எங்க எங்க என்று தேடுவதுபோல் பாவ்லா செய்தான் ரவி.  அதைப் பார்த்து மீண்டும் வரதனும், தேவியும் சிரித்தார்கள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்...

“சரி சரி விடுங்க.  ஏதோ என் டாலு தேவி சிரிச்சதால உங்க மொக்க ஜோக்கை மன்னிச்சு விடறேன்”

“டேய் கீழ விழுந்தாலும், மீசைல மண்ணு ஒட்டாத மாதிரியே ஃபீல் கொடுக்கிறியே.  எப்படிடா”

“காதலித்துப் பார்.  உனக்கே புரியும்... உன்னை சுற்றி ஒளி  வட்டம் தெரியும்,  காக்கை கரைவது  கூட  கானமாகும்.  நாயும், நரியும் நண்பனாகும்.  மந்தியும் தந்தி வேலை செய்து தூதுவனாகும்”, என்று யாருக்கும் புரியாத வகையில் வைரமுத்து குரலில் மதி பேச தேவியால் என்ன முயன்றும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஆக மொத்தம் லவ் பண்ணினா இருக்கற மொத்த அனிமல்சும் ஃபிரின்ட் ஆகிடும்ன்னு சொல்ற,  வேண்டவே வேண்டாம்.  எனக்கு இப்போதைக்கு ப்ளூ கிராஸ்ல சேருகிற ஐடியா இல்லை.  அதனால ஆளை விடு”

“ரவி அண்ணே, கவிதை சொன்னா அனுபவிக்கனும், ஆராயக் கூடாது”

“எது.... நீ இப்போ சொன்னது கவிதையா.   ஏம்மா தேவி, பாரு உன்னை லவ் பண்றேன்னு சாதுவா இருந்த பையன் கொஞ்ச கொஞ்சமா சேதுவாகிட்டே வர்றான்.  முழுக்க அவன் பைத்தியமா மாறும் முன்னாடி ஓகே சொல்லிடும்மா”, என்று காமெடி போலவே ரவி சொல்ல, தேவி என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று  அவளைப் பார்த்தார்கள் வரதனும், மதியும்.  தேவி எதுவும் கூறாமல் மறுபடி ஜன்னல் வழியே வெளியில் பார்க்க இது வேலைக்காகாது என்று மதியிடம், ‘நீ பேசு’, என்று ஜாடை காட்டியபடியே வரதனும், ரவியும் ரூமிற்கு வெளியில் சென்றார்கள்.  அவர்கள் சென்ற உடன் தவிப்புடன் தானும் ரூமை விட்டு வெளியில் செல்ல ஆரம்பித்தாள் தேவி.  ஆனால் கதவை மூடி அதன் மீது மதி சாய்ந்து நிற்க அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் அந்த இடத்திலேயே நின்றாள் தேவி. 

“உக்காரு தேவி.  இன்னைக்கு நான் உன்கூட பேசியே ஆகணும்”

“என்ன பேசணும் உங்களுக்கு.  எதுவா இருந்தாலும் கதவைத் திறந்து வச்சுட்டு பேசுங்க.  வெளில அம்மா, சார்லாம் இருக்காங்க.  தப்பா நினைக்கப் போறாங்க”

“அவங்க எல்லாருக்கும் உன்னையும், என்னையும் நல்லாத் தெரியும்.  அதனால தேவை இல்லாம ஸீனைப் போடாம போய் அந்த சேர்ல உக்காரு.  இன்னும் அரை மணி நேரம் நாம பேசி முடிக்கற வரை நீ எழும்பல சொல்லிட்டேன்”

“இங்க பாருங்க ACP சார்.  இதெல்லாம் நல்லா இல்லை.  எனக்கு உங்கக்கிட்ட பேச எதுவும் இல்லை.  நீங்க மொதல்ல வழி விடுங்க.  நான் வெளில போகணும்”

“உனக்கு என்கிட்ட பேச எதுவும் இல்லை.  ஆனால் எனக்கு ஏகப்பட்ட விஷயம் இருக்கு.  அதைப் பேசி முடிக்கற வரை வழி விடறதா இல்லை.  உன்னை இப்படியே விட்டு விட்டு எனக்கு வயசு போனதுதான் மிச்சம்.  உன்னோட பேசாம இப்படியே விட்டேன்னா அறுபதாம் கல்யாணம் கூட இல்லை.  எண்பதாம் கல்யாணம்கூட நடக்குமான்னு சந்தேகம்தான்”, மதி பேச நீ சொல்வதை சொல், நான் அதைக் கேட்கப் போவதில்லை என்பது போல் சென்று நாற்காலியில் அமர்ந்தாள் தேவி.  மதி உஷாராக தன் நாற்காலியை இழுத்து கதவருகிலேயே போட்டு அமர, அவனின் முன்னெச்சரிக்கையை பார்த்து தேவியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.  இருந்தாலும் அவனுக்கு நேராக சிரித்து இன்னும் அவனுக்கு வழி ஏற்படுத்தக் கூடாது என்று வாயை இறுக மூடி சிரிப்பை கட்டுப்படுத்த முயன்றாள்.

“சிரிப்பு வந்தா சிரிச்சுடனும் தேவிம்மா.  இப்படி கஷ்டப்பட்டு அடக்கக்கூடாது.  சரி விடு.  நான் உன்னை எட்டு வருஷமா லவ் பண்றேன்னு உனக்குத் தெரியும்.  உன்னை எப்போ முதன் முதலா பார்த்தேனோ அப்போலேர்ந்து லவ் பண்றேன்.  இன்ஃபாக்ட் நீ அப்போ +2 பரிட்சைக்கு தயாராகிட்டு இருந்த.  இருந்தாலும் பரவா இல்லைன்னு, நான் என் லவ்வ உன்கிட்டயும், மாமாக்கிட்டையும்  சொன்னேன்.  அஃப்கோர்ஸ் நான் சொன்ன உடனே நீ மயக்கம் போட்டு விழுந்த.  இந்த மாமாவோட அழகு அப்படி, அதை விடு அது வேற விஷயம்.  அப்போலேர்ந்து நானும் வித விதமா உன்கிட்ட என் காதலை சொல்லிட்டு இருக்கேன்.  சினிமாலக் கூட அத்தனை டெக்னிக் யூஸ் பண்ணி இருப்பாங்களா தெரியலை.  வரதன் மாமாக்கூட நீ சின்னப் பையன்.  ரெண்டு பேரும் படிக்கற வயசு.  அதனால இந்த மாதிரி பெனாத்திட்டு இருக்காம படின்னு சொன்னாரு.  நானும் சரின்னு சின்னப்பொண்ணு படிக்கட்டும்ன்னு  சும்மா இருந்தேன். அப்போக்கூட மாமாக்கிட்ட உன்னை வேற யாருக்கும் கல்யாணம் பண்ணித் தரக்கூடாதுன்னு பேப்பர்ல எழுதி சைன் வாங்கிட்டுதான் விட்டேன்.   சரி அப்பறம் மேடம் வக்கீல்க்கு படிக்கணும்ன்னு சொன்னதால தொந்தரவு பண்ணலை”, அவன் சின்னப்பிள்ளை போல புகார் சொல்லும் குரலில் காரணங்களைக் கூற அதை உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியில் முகத்தை கடினமாக வைத்திருந்த தேவி அவனின் கடைசி வரியில்  முறைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.