(Reading time: 14 - 28 minutes)

04. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval  

வசரமாக வரச் சொன்ன ரூபனின் ஹாஸ்டல் நிர்வாகம் அவனைக் குறித்த தகவல்கள் எதையும் முழுமையாக தெரிவித்திருக்கவில்லை.என்னவாயிற்றோ? ஏதாயிற்றோ? என்றப் பதட்டத்தோடு இரவோடு இரவாக புறப்பட்டு அதிகாலையில் வந்துச் சேர்ந்த இந்திரா , தீபன் மற்றும் தாமஸுக்கு அங்குச் சொல்லப் பட்ட விஷயங்களை நம்பவா? வேண்டாமா? என ஒன்றும் புரியவில்லை. தனது பிள்ளைகளிலேயே மிகவும் அமைதியானவன் ரூபன் தான் என்பது இந்திராவுக்கு தெரியாததா என்ன? அங்கு ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்று அவரது உள்ளுணர்வு கூறியது . ரூபனின் உடலில் இருந்த காயங்களும் அதை உணர்த்தின. அவனை அவனது அறைக்குச் செல்ல விடாமல் கல்லூரி ஆபீஸின் முன் அறையிலேயே இரவிலிருந்து நிறுத்தி வைத்திருந்தார்கள்.

 அவனிடம் அடி வாங்கியவர்கள் ஓரிருவர்கள் அவனுக்கு எதிரில் இருந்து அவனை முறைத்துக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு இருந்தது. ஆனால், ரூபனை யாரும் கண்டுக் கொண்டதாகவோ அவனுக்கு முதலுதவி செய்ததாகவோ தெரியவில்லை. அவர்களுள் மிக அதிகமாக அடி வாங்கி முன்பற்களில் நான்கை இழந்திருந்தவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பேசிக் கொண்டார்கள். 

 எல்லோருடைய குற்றம் சாட்டல்களின் சுட்டு விரலும் ரூபனை நோக்கியே நீண்டிருந்தது. ஏனென்றால், அங்கு நிகழ்ந்த களேபரத்தில் போதையில் இருந்தது அவன் மட்டுமே. தன் வீட்டினர் வரும் முன்பே போதை தெளிந்திருந்த ரூபன் நிகழ்ந்தவற்றை எண்ணிக் கூனிக் குறுகிப் போனான். 

"தானா இப்படி நடந்துக் கொண்டது?" என்று தன்னையேக் கேள்விகள் கேட்டுக் கொண்டான். தன்னால் தன குடும்பத்தினருக்கு வந்த அவமானம் குறித்து கலங்கியவனாக சுவற்றில் சாய்ந்து தன் தலையே தனக்கு பாரமானதைப் போல தலையை இருக் கரங்களாலும் பிடித்த வண்ணம் அமர்ந்து உறைந்தேப் போனான்.  

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

 அங்குள்ள மற்ற மாணவர்கள் இந்த விஷயம் குறித்துக் கேள்விப் பட்டதிலிருந்து மேலும் விபரம் அறிந்துக் கொள்ளும் ஆவலோடு ஆபீஸின் வாயில் வரை வந்துப் பார்க்க முயன்று, அனுமதிக்கப் படாததால் ஏமாற்றத்தோடு திரும்பினர். 

 இரவில் தகவல் சொன்னதோடு சரி அங்கு யாரை அணுகிப் பேச என்று இவர்களுக்கு ஒன்றும் புரியாத நிலை. எனவே, மேலும் விபரம் தெரிந்துக் கொள்ளவும் சமரசம் பேசி பிரச்சினைகளைத் தீர்க்கவும் தீபனும் , தாமஸும் கல்லூரி பொறுப்பாளர்களையும் தேடி இங்குமங்குமாக அலைய, இந்திரா தன்னுடைய மகனுடன் அமர்ந்துக் கொண்டார். தாய்க்கும், மகனுக்குமிடையே வார்த்தைகளே இல்லாத சூன்ய மணித்துளிகள் அவை. பேச்செழாத மௌனம் அங்கு நிலவியது. 

 சண்டையில் தன்னுடைய நான்கு பற்களை இழந்து மருத்துவமனையில் இருப்பவன் தனக்கு ஒரு வகையில் தூரத்துச் சொந்தம், மற்றும் அவர்கள் மிகவும் பெரிய செல்வந்தர்கள் எனத் தெரிய வரும் வரையில் தான் தாமஸ் இவர்கள் சார்பாக இருந்தார். தாமஸும் தீபனும் அவர்களுடன் சமரசம் பேசச் செல்ல, அங்கே மேல் உதடு கிழிந்து, மேல் நாடியிலுள்ளப் பற்களை இழந்து முக அழகு குலைந்து மருத்துவ கவனிப்பில் இருந்தவன் மனதில் மென்மேலும் வன்மம் கூடிக் கொண்டு இருந்தது. ஆம் அவன் ரூபனுக்கு அவமானத்தை ஏற்படுத்த எண்ணித் திட்டம் தீட்டி அவனுக்கு தன் நண்பன் மூலமாக மது அருந்தக் கொடுத்தவன் தான்.

 தன்னுடைய திட்டத்தின் படியே எல்லாம் நடந்துக் கொண்டிருக்கையில், இவன் என்னச் செய்து விடுவான் என்ற அலட்சியம் தூண்ட, கிடைத்தது வாய்ப்பு என்றெண்ணி அத்தனை நாட்களாக தன் மனதில் வைத்துக் கொண்டிருந்த கசடுகளையெல்லாம் தேவையில்லாமல் வெளியேற்றியது தான் அவன் செய்த பிழை. ரூபனின் குடும்பத்தை கேவலமாக பேச ஆரம்பித்த அவனை பொறுத்துக் கொள்ள இயலாமல் ரூபன் தாக்க, சண்டை வலுத்தது. அவனைக் காப்பாற்றச் சென்ற மற்றவர்களுக்கும் அடி விழுந்தது. அனைவரும் ரூபனை திருப்பித் தாக்கவும் அவனுக்கும் காயங்கள் ஏற்பட்டன. அதற்குள் மற்றவர்கள் வந்துச் சேர அந்த சண்டை முடிவிற்கு வந்து அவரவர் பெற்றோர்க்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.

 தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை தனக்கு பிடிக்காதவனுக்கு இரண்டுக் கண்களும் போக வேண்டும் என்று குரூரமாக எண்ணும் மனிதர்களை நாம் பார்த்திருப்போமல்லவா? அதுப் போலவே தனது பற்களை பறிக் கொடுத்த நிலையிலும் அவனுடைய மனதில் இன்னும் என்னவெல்லாம் செய்து ரூபனை அவமானப் படுத்தலாம் என்றச் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.

 இத்தனை வருடங்களாக யாரையும் எதிர்த்து ஒரு வார்த்தைக் கூடப் பேசியிராத ரூபன் அன்றைய இரவில் அவர்களை இப்படி அடித்து, துவம்சம் செய்வான் என்று அவன் என்ன, யாருமே எண்ணியிருக்க வாய்ப்பில்லை

 இரவிலேயே அவனைப் பார்க்க வந்து விட்டிருந்த அவனுடையப் பெற்றோர் தங்கள் மகனின் நிலைக் கண்டுக் கொதித்துப் போயினர், அதிலும் அவன் தந்தையோ தன் மகனை அடித்தவனை எப்படியாவது கல்லூரியிலிருந்து வெளியேற்றியே ஆக வேண்டும் என்ற முடிவில் கல்லூரி பெரிய தலைகளுக்கு மாறி மாறி தகவல் தெரிவித்து ஆவனச் செய்யச் சொல்லிக்கொண்டிருந்தார்.ஆனால், அவனுக்கோ அதில் விருப்பம் இல்லை, ரூபனை ஒரேயடியாக வெளியேற்றுவதில் என்ன த்ரில் இருக்கிறது?. அவனை கண்முன்னே வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அவமானப் படுத்திப் பார்த்தால்……….பார்த்தால் என்ன பார்த்தால்…தான் நினைக்கும் படி செய்தே ஆக வேண்டும் என்ற உறுதியான எண்ணம் அவன் மனதில் உருவாகியிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.