(Reading time: 17 - 33 minutes)

01. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai

                 

காட்சி -1

சென்னைக்கு புறப்படும் அந்த பேருந்தில் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாக ஆரம்பிக்கவும், வேகமாய் ஏறி ஜன்னல் அருகே இருந்த சீட்டில் அமர்ந்து கொண்டான் வெற்றி. தற்பொழுது அவனுக்கு ஆறுதல் அளித்த ஒரே விஷயம் அந்த ஜன்னல் சீட் தான். கிடைத்த வரை மகிழ்ச்சி தான் என்று நினைத்தவன் ஜன்னல் வழியே வெளியில் நடப்பதை சில நிமிடங்கள் ரசித்தான். அவனின் கவனத்தை கலைக்கவே சிணுங்கியது அவனது செல்ஃபோன். “விஹாஷினி” திரையில் அவள் பெயரை பார்த்ததுமே சந்தோஷமும் எரிச்சலும் ஒன்றாய் எழுந்தது அவனுக்குள்.

“ வெற்றி”

“ம்ம் சொல்லு விஷா”

“கிளம்பிட்டிங்களா?”

“ம்ம்ம் பஸ்ல இருக்கேன்.. சாப்பிட்டியா?”

“ம்ம் சாப்ட்டேன்.. நீங்க?”

“ ம்ம் ஆச்சு..”

“ம்ம்”

“ வேறென்ன?”

“அ… ஆங்.. வீட்டுல என்ன சொன்னாங்க வெற்றி?” கேள்வியும் ஏக்கமுமாய் கேட்டாள் விஹாஷினி. அவளுக்கே தெரியும் அவனின் பதில் என்னவாக இருக்கும் என்று. இருப்பினும் மூத்த மகன் வீட்டை விட்டு செல்கிறானே என்ற தவிப்பில் கடைசி நிமிடத்திலாவது அவனுக்கு ஆதரவாய் ஒருவர் கூட பேசி இருக்க மாட்டார்களா? என்று எதிர்ப்பார்த்திருந்தாள் அவள்.

“ம்ம்ஹ்ம்ம் நிச்சயமாய் இது நடக்காது” என்று அறிந்திருந்த வெற்றிக்கோ அவளின் கேள்வி எரிச்சலைத் தந்தது. எதை எதிர்ப்பார்க்கிறாள் இவள் ? “அப்பா நான் டைரக்டர் ஆகப்போகிறேன்” என்று இஞ்சினியரிங் முடித்தப்போதே கூறி இருந்தான் வெற்றி. வீட்டில் பிரளயமே வெடித்தது. கடைசிவரை ஆதரவு மட்டும் கிடைக்கவே இல்லை. பெற்றவர்களின் பேச்சை எதிர்க்க முடியாமல் ஒரு வருடம் படிப்பிற்கேற்ற வேலையை தேடிச் செய்தான் தான்..! ஆனால், அவனின் இயக்குனராகவும் கனவு அவனை நிம்மதியாய் விடவில்லையே.. பிடித்ததை விடுத்து கிடைத்ததை அவனால் முழுமனதோடு செய்ய முடியாமல் போனது.

வேலையை விட்டான். பேனாவும் கையுமாக வீட்டில் முடங்கினான்.  வீட்டில் எதிர்ப்புகளும் மேலோங்கிக் கொண்டுத்தான் இருந்தது. இப்போதும் எதிர்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது ! இதை எல்லாம் அறியாதவளா அவனின் காதலி விஹாஷினி ? தெரிந்துமே கேள்வி கேட்பவளை என்னவென்று சொல்வது ? இருந்தும் தனது கோபத்தை அடக்கிக் கொண்டான்.

“ எப்பவும் போலத்தான் பேசினாங்க விஷா.. அவங்க கிட்ட இருந்து எப்போதுமே எனக்கு ஆதரவு கிடைக்காது. பொய் சொல்லி உன்னை நான் ஏமாற்ற விரும்பல. நீயும் என் வீட்டு ஆளுங்கக்கிட்ட எதையும் எதிர்ப்பார்த்து கனவு காணாதே!”

“ அய்யோ ஏங்க இப்படி அவநம்பிக்கையா பேசுறிங்க ? நீங்க கூடிய சீக்கிரம் நல்ல டைரக்டர் ஆகிடுவிங்க.. அப்போ எல்லாமே மாறிடும்” என்றாள் விஹாஷினி அவனின் கவலைக்கு மருந்தாகி. அவளின் நம்பிக்கையான பேச்சை கேட்டு ஏளனமாய் புன்னகைத்தான் வெற்றி. அவனுக்குமே தெரியும் அவள் சொல்லும் வார்த்தைகள் அவனை சமாதனப்படுத்த உதிர்த்தது அல்ல! தன்னைத்தானே சமாதானப்படுத்தி கொள்கிறாள் என்று.

“ வெற்றீ ஈஈஈ..” தயக்கமாய் அவன் பெயரை அழைத்தாள் விஹாஷினி. அவள்  சொல்ல வந்ததை ஆரம்பித்தாள். அவனுக்கு தெரியும் அவள் என்ன சொல்வாள் என்று .. மூன்று வருட காதலில் இதை கூடவா தெரிந்து கொள்ளாமல் இருப்பான் அவன்?

“ம்ம்ம் சொல்லு”

“ நீங்க கண்டிப்பா டைரக்டர் ஆவிங்க”

“ம்ம்”

“அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை”

“ம்ம்”

“ஆனா, அப்படி எதுவும் செட் ஆகலைன்னா என்னை பொண்ணு கேட்க வரும்போது வேற ஏதாவது வேலையை தேடிக்கிட்டு வாங்க.. நம்ம கல்யாணத்துக்கு பிறகு நீங்க வேலைவிட்டு நின்னுட்டு மறுபடியும் சினிமால காண்சன்ரேட் பண்ணாலும் ஓகே தான்.. நான் தடுக்க மாட்டேன்..! என் அப்பாவை சமாளிக்கனும்.. அதற்காகத்தான் கேட்குறேன்” என்று திக்கி திணறி மனதில் இருந்ததை சொன்னாள்.

“ இது பாரு விஷா.. உங்க எல்லாருக்கும் நம்பிக்கை இருக்கோ இல்லையோ..எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு.. நான் டைரக்டர் ஆகின பிறகுதான் கல்யாணம் பண்ணிப்பேன்.. அப்போத்தான் பொண்ணும் கேட்பேன்.. அதுவரைக்கும் உன்னால முடிஞ்சா வைட் பண்ணு..இல்லன்னா உங்கப்பா யாரை கைக்காட்டுறாரோ அவனை கட்டிக்கோ”

“ வெற்றி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.