25. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்
Hello friends,
எப்படி இருக்கீங்க. சாரி, இந்தக் கதை ஆரம்பிச்சதுலேர்ந்தே எல்லா அப்டேட்ஸ்-ம் செம்ம லேட். இனி எழுதப் போற கதைகள்ல முடிஞ்ச வரை அதை avoid பண்றேன். நிறைய பேருக்கு கதையே மறந்திருக்கும்ன்னு நினைக்கறேன். இருந்தாலும், அப்படியே கொசுவர்த்தி கொளுத்தி, ஞாபகப்படுத்திக்கோங்க. இத்தனை நாள் கதையை படிச்சு கமெண்ட் பண்ணின அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி
ஒரு இடம் விடாமல் ரூமையே தலைகீழாக புரட்டிய பிறகும் மதிக்கு எதுவும் கிடைக்காமல் போக..... விமலாவின் கணிணியையும், கைப்பேசியையும் ஆராய்ந்த உடன் அத்தனை விஷயங்களும் கிடைத்தது. அதில் ஒரு புகைப்படத்தை பார்த்த மதி முதலில் அதிர்ச்சியாகி பின்னர் மலர்ச்சிக்குப் போனான். தான் காவல்துறையில் மிகப் பெரிய பொறுப்பான பதவியில் இருப்பவன் என்பதை மறந்து ஒரு நீண்ட விசிலை அடித்தான். அவனின் விசில் சத்தத்தைக் கேட்டு என்னவோ ஏதோ என்று அனைவரும் விமலாவின் அறைக்குள் வந்தனர்.
“சார் என்ன ஆச்சு. நீங்க இத்தனை சந்தோஷப்படற அளவு என்ன விஷயம் உங்களுக்கு கிடைச்சிருக்கு”, ஸ்ரீதர் கேட்க மதி கணினியை எடுத்துக் கொண்டு தேவி அருகில் சென்றான்.
“தேவிம்மா இந்த போட்டோல யார் இருக்காங்கன்னு பாரு”, மதி காட்ட, கணிணித் திரையைப் பார்த்த தேவி அதிர்ந்தாள்.
“யாருக்கு கெடுதல் செய்தேன்.... எனக்கு ஏன் இப்படி ஆச்சு..... கடவுள்ன்னு ஒருத்தர் இருக்காரா...... அப்படி இருந்தார்ன்னா அவங்களுக்கு ஏன் தண்டனை கிடைக்கலை அப்படின்னு ஒரு ஒரு வாட்டியும் புலம்புவியே. உன்னோட புலம்பலுக்கு பதில் கிடைச்சுடுச்சு பாரு. அந்த நல்லதம்பி நாயை ஒரு மாதிரி பழி வாங்கிட்டேன். அவனோட மச்சான்களை ஒண்ணுமே பண்ண முடியலையேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். வருஷம் போனாலும் கடவுளே அவனை போட்டுத் தள்ள நல்ல வழியைக் காட்டிட்டார். இந்த மொத்த கும்பலுக்கும், சௌத் தமிழ்நாடு முழுக்க போதை மருந்து சப்ளை பண்றது இந்த நாய்தான்”, மதி சொல்ல தேவியின் முகமும் மலர்ச்சிக்குப் போனது.
“உங்களுக்கு ஏதானும் information கிடைச்சுதா ஸ்ரீதர்?”
“இல்லை சார். எங்க அப்பா கொடுத்த பார்சல் மட்டும் பரண் மேல கிடைச்சுது. அது தவிர வேற ஒண்ணும் இல்லை”
“இங்க நின்னுட்டே பேச வேண்டாம்..... வாங்க எல்லாரும் ஹாலுக்கு போகலாம்”, ரூபா சொல்ல அனைவரும் சென்று ஹாலில் அமர்ந்தார்கள். விமலாவின் அன்னை அனைவருக்கும் பால் கலந்து கொண்டு வந்து கொடுக்க மறுக்காமல் வாங்கி அருந்தினார்கள்.
“ACP சார்... நீங்க சொன்ன கணக்கு பிரகாரம் இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம்தான் அவங்க தூங்குவாங்க. அதுக்குள்ள நாம அடுத்து என்ன பண்றதுன்னு முடிவு எடுக்கணும்”
“இனிமே இதுல இருக்கறவங்களைக் கைது பண்றது மட்டும்தான் எங்க வேலை ஸ்ரீதர். விமலா எத்தனையோ தப்பு பண்ணி இருந்தாலும் அது எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு நல்லது பண்ணிட்டா. அத்தனை ஆதாரமும் இதுல இருக்கு. யாராலையும் பாஸ்வோர்ட் கண்டு பிடிச்சு அவ கணிணியை நோண்ட முடியாதுங்கற நம்பிக்கைல பண்ணின வேலை, இப்போ நமக்கு சாதகமாப் போச்சு. ஓகே, டைம் இப்போ 1.30. நான் போய் எங்க மேலதிகாரிகளைப் பார்த்து விஷயத்தை சொல்லி இதுல இருக்கறவங்களை விடியறதுக்குள்ள கைது செய்யணும். விஷயம் கொஞ்சம் வெளில லீக் ஆனாக் கூட அவங்க உஷார் ஆகிடுவாங்க”
“சாவித்ரிமா இதுல இருக்கற ஆதாரங்கள் எல்லாமே மத்தவங்க செஞ்ச தப்புகள் பத்திதான் இருக்கு. அவங்க கிட்ட இருந்து பணம் transfer ஆகி இருக்கறதும் உங்க கணவரோட அக்கௌன்ட்டுக்குதான். ஆனா இது எதிலையுமே விமலா நேரடியா ஈடுபட்டதுக்கு ஒரு ஆதாரமும் இல்லை. போதை மருந்து சப்ளை பண்றவங்க ஃபோட்டோ கூட அடுத்தவங்களுக்கு கொடுக்கும்போதுதான் எடுத்து இருக்கு, அதே மாதிரி பொண்ணுங்க ஃபோட்டோவும் வேற யாரோ எடுக்கறதைதான் உங்க பொண்ணு ஃபோட்டோ எடுத்து இருக்கா. இப்போ இதை எல்லாம் காமிச்சாலும், விமலா நான் பண்ணலை, எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைன்னு சொல்லிட்டு சுலபமா வெளிய வந்துடலாம்”
“அது எப்படி சார். இந்த information எல்லாம் இருக்கறது விமலாவோட லேப்டாப்லதானே. அது ஒண்ணே அவதான் குற்றவாளின்னு சொல்லாதா”
“அவ இதை எல்லாம் எங்க அப்பாதான் செஞ்சாரு. அவரைப் பத்தி சொல்லத்தான் இதை எல்லாம் எடுத்தேன்னு கதைய மாத்திடலாம். தப்பு பண்றவங்க தான் தப்பிச்சு அடுத்தவங்களை மாட்டி விடத்தான் பார்ப்பாங்க”
“கண்டிப்பா அவ அப்படி வெளில வரக்கூடாது சார். என் பொண்ணு அவ..... அதை நினைக்கும்போது கஷ்டமாதான் இருக்கு. ஆனால் அவளால எத்தனை பேர் வாழ்க்கை நாசமாகி இருக்கு. எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்காங்க. அந்த ஃபோட்டோ எல்லாம் பார்த்த உடனே..... அவளை நானே கொன்னுடலமான்னு கூட ஒரு நிமிஷம் நினைச்சேன். ஆனா அடுத்த நிமிஷம் அப்படி எப்படி சட்டுன்னு எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாம அவ சாகறது. ரெண்டு பேருமே அவங்க செஞ்ச தப்பை உணர்ந்து வருந்தணும். அப்படியே வருந்தாட்டாலும் அதுக்கு உண்டான தண்டனை கிடைக்கணும். உங்க எல்லாருக்கும் கூட தோணலாம், இது என்ன கொஞ்சம் கூட பாசமே இல்லாம இந்த அம்மா பேசறாங்கன்னு...... என்னோட பாசத்தை அவங்க பண்ணின தப்பே மறக்கடுச்சுடுச்சு. பொண்ணு, கணவன் அப்படிங்கற இடத்துல இப்போ அவங்க ரெண்டு குற்றவாளிகளாத்தான் கண்ணுக்குத் தெரியறாங்க”