(Reading time: 28 - 55 minutes)

நீ நினைக்கறது சரிதான் தேவி.  அந்த நல்லதம்பி இப்போ உயிரோட இல்லை.  ரெண்டு வருஷம் ரேபிஸ் நோயால அவஸ்தைப்பட்டு கடைசி காலத்துல நாய் மாதிரியே மாறி உயிரை விட்டான்.  உன்னை அவன் படுத்தின பாட்டுக்கு வாழ்க்கை முழுக்க அவஸ்த்தைப்படணும்ன்னு நினைச்சேன்.  ஆனா கையையோ, காலையோ எடுத்தா அவனுக்கு இருக்கற வசதிக்கு ரொம்ப சுலபமா செயற்கை கை, கால்ன்னு வச்சுட்டு மறுபடி ஆட ஆரம்பிச்சுடுவான்.  அதுதான் இப்படி ஒரு தண்டனை.  அவன் மத்த பொண்ணுங்களுக்குப் பண்ணின பாவம், அவன் பெண் காலேஜ் போயிட்டு வர்ற வழில நாலைந்து பேரால கற்பழிக்கப் பட்டு கொலை செய்யப்பட்டா.  இப்போலாம் கடவுள் கொஞ்சம் லேட் பண்ணினாலும் தண்டனையை கொடுத்துடராறு. தன்னோட பொண்ணுக்கு ஆன நிலைமையைப் பார்த்த நல்லதம்பி மனைவிக்கு பராலிஸஸ் வந்து ஒரு பக்கம் கையும், காலும் விளங்கலை.  இதெல்லாம் தீர்ப்பு வந்து அடுத்த ரெண்டு வருஷத்துல நடந்துடுச்சு.  உனக்கு அநியாயம் பண்ணினவங்கள்ல நல்லதம்பியோட மச்சான்களைத் தவிர எல்லாரும் தண்டனை அடைஞ்சுட்டாங்க.  அரசியல்ல பெரிய லெவல்ல இருந்ததால எங்களால அவங்களை நெருங்க முடியலை.  நான் ACPயா போஸ்ட் ஆகி வந்ததுல இருந்து அவங்க  மேல ஏதானும் குற்றம் சுமத்த முடியுமான்னுதான் பார்த்துட்டு இருந்தேன்.  அதுக்குள்ள இந்த போதை மருந்து கடத்தல் கேஸை என்கிட்ட கொடுத்துட்டாங்க.  சரி இதை முடிச்சுட்டு அவனை கவனிச்சுக்கலாம்ன்னு நினைச்சேன்.  அதுக்குள்ள நீ அப்படி எல்லாம் வெயிட் பண்ண வேண்டாம் ராஸா நானே வாலன்டியரா வந்து மாட்டிக்கறேன்னு மாட்டிக்கிட்டான்”, மதி கூறி முடிக்க தேவியால் என்ன முயன்றும் அழுகையை அடக்க முடியவில்லை. ஆனால் இந்த முறை தேவி அழுதது சந்தோஷத்தால். 

கடவுள் என்ற ஒருவர் இல்லவே இல்லை.  அப்படி இருந்து இருந்தால் ஒரு குற்றமும் செய்யாத தன்னை எதற்காக இந்த அளவுக்கு வருந்த விட்டார் என்று எப்பொழுதும் நினைத்துக்கொள்வாள் தேவி.  அதுவும் நல்லதம்பிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தவுடன் அவளிற்கிருந்த கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கையும் போய் விட்டது.  ஆனால் மதி பேசப் பேச கடவுள் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து அவளுக்கு நியாயம் செய்து விட்டதாகவே தோன்றி விட்டது.  தெய்வம் மனுஷ்ய ரூபேணா என்பது மிகச்சரி என்ற முடிவுக்கு வந்து விட்டாள்.  ரவியும், மதியும் அவளுக்கு கடவுளின் அவதாரமாகத்தான் தோன்றினார்கள்.  இவர்கள் இருவருக்காகவும் நான் என்ன செய்தேன், மாட்டிக் கொண்டிருந்தால் அவர்கள் முழு எதிர்காலமே வீணாகப் போய் இருக்கும்.  அதுவும் மதி அப்பொழுது  சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு முழு மூச்சாக படித்துக் கொண்டிருந்த நேரம்.  தேவி அழுவதைப் பார்த்த மதி வண்டியை சாலையின் ஓரமாக நிறுத்தினான்.  சிறிது நேரம் அழுதுவிட்டு அவளே சரி ஆகி விடுவாள், என்று சற்று நேரம் சும்மா இருந்தான் மதி.  நேரம் ஆக ஆக தேவியின் அழுகை கூடிக் கொண்டே சென்றது.  இது வேலைக்காகாது என்று தேவியை சட்டென்று இழுத்து இறுக அணைத்தான்.  அவன் அணைத்த அதிர்ச்சியில் தேவியின் அழுகைத் தானாக நின்றது.

“வெரி குட்.  நான் கட்டிப் பிடிச்சா உன் அழுகை தானா நின்னுடுதா.  இனி லைஃப் ஃபுல்லா கட்டிப்பிடி வைத்தியம்தான்.  நீயும் வாழ்க்கை முழுக்க அழாம இருப்ப”, அவளின் மனநிலையை மாற்ற எண்ணி அவன் கூற தேவியும் சிறிது வெட்கத்துடன் சிரித்தாள்.

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சா....”, சார் என்று கூற ஆரம்பித்த தேவி மதி முறைத்த முறைப்பில் நாக்கைக் கடித்துக்கொண்டு பாதியிலேயே நிறுத்தினாள்.

“அடுத்த முறை உன் வாய்லேர்ந்து சார் அப்படிங்கற வார்த்தை வந்துது எந்த இடம், யார் இருக்காங்கன்னு எல்லாம் பாக்க மாட்டேன், அப்படியே இழுத்து வச்சு கிஸ் அடிச்சுடுவேன்”, என்று மிரட்டலாகக் கூற, பயத்துடன் சரி என்று தலை அசைத்தாள்.

“எதுக்கு இப்போ ஓகே சொன்ன, முத்தத்துக்கா...”

“ஹாங் இல்லை இல்லை.  இனிமே சார்ன்னு சொல்ல மாட்டேன்.  ஆனா உடனே மாமா வராது.  நீங்கதான் ஆறு மாச டைம் கொடுத்து இருக்கீங்க இல்லை.  அதுக்குள்ள கூப்பிட ட்ரை பண்றேன்.  இப்போ நீங்க உங்க எதிர்காலத்தைக் கூட யோசிக்காம எனக்காக பண்ணின எல்லாத்துக்கும் தேங்க்ஸ்”

“ஹலோ மேடம், நீங்கதான் என்னோட எதிர்காலமே, அப்பறம் எப்படி உனக்குப் ஹெல்ப் பண்ணாம இருப்பேன்”, மதி விளையாட்டாக கூற தேவி முகம் சிவந்தாள்.

“தேவி இப்போதான் முகம் சிவந்து, வெக்கப்படற அளவுக்கு improvement வந்துடுச்சு இல்லை, இதே ஃப்ளோல மாமாவப் பார்த்து I Love You சொல்லிடேன்.  நீ சொல்லி கேக்க எத்தனை வருஷமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்”

“அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது.  அதான் ஆறுமாச டைம் இருக்கே.  அதுக்குள்ள என்ன  அவசரம்.  மெதுவா அஞ்சு மாசம் இருபத்து ஒன்பது நாள் முடியும்போது சொல்றேன்”,என்று தடாலடியாகக் கூற மதி அவளின் மனமாற்றத்தில் மகிழ்ந்தபடியே காரை எடுத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.