(Reading time: 28 - 55 minutes)

காரை ஓட்ட ஆரம்பித்ததிலிருந்து சாலையைப் பார்ப்பதும்,  பிறகு தன்னைப் பார்ப்பதுமாக இருந்த மதியைப் பார்த்த தேவிக்கு சிரிப்பு வந்தது.

“நீங்க என்ன யோசிக்கறீங்கன்னு எனக்குத் தெரியும்....”, தேவி சொல்ல மதி திரு திருவென்று முழித்தான்.

“அச்சச்சோ தெரிஞ்சு போச்சா.  ஓவர் குளிரா இருக்கே.  இப்போ நச்சுன்னு நீ ஒரு கிஸ் இந்த மாமாக்கு கொடுத்தா எப்படி இருக்கும்ன்னு நினைச்சேன்.  அதைக் கண்டுபிடிச்சுட்டியா”, ஓவராக பயந்தார்போல நடித்துக்கொண்டே மதி கேட்க, ஹாங் என்று வாயைப் பிளந்தாள் தேவி.

“சும்மா பேச்சை மாத்தாதீங்க.  அந்த ஆளை என்ன பண்ணினீங்க”

“எந்த ஆளைக் கேக்கற.  இளநி விக்கறேன்னு, அதுக்குள்ள நாட்டு சரக்கை மிக்ஸ் பண்ணி வித்துட்டு இருந்தானே அவனையா, கந்து வட்டிங்கற பேருல கடன் வாங்கினவங்க கடைசி துணி வரைக்கும் பரிச்சானே அவனையா.....”, என்று வரிசையாக தேவி கேட்கும் ஆளைத் தவிர மற்ற அனைவரைப் பற்றியும் சொல்ல.... கடுப்பானாள் தேவி.

“விளையாடாம பதில் சொல்லுங்க சார்.... அந்த நல்லதம்பியை என்ன பண்ணினீங்க”

“நீ என்னை ஒரு முறை மாமான்னு சொல்லு... நான் அவனை என்ன பண்ணினேன்னு    சொல்றேன்.  நீ சார்ன்னு சொல்றதைக் கேட்டாலே வயத்தைப் பிரட்டி ஒரே வாந்தி வாந்தியா வருது.  காக்க காக்க சூர்யா, ஜோதிகா மாதிரி ரொமாண்டிக் ஜோடியா என்னோட ஜீப்ல  போலாம்ன்னு பார்த்தா...  இப்படி சார்ன்னு கூப்பிட்டு என் பிஞ்சு மனச உடைக்கற”, என்று சென்டிமென்ட்டல் வசனம்  பேச தேவி முடிந்த வரை முறைத்தாள்.

“சரி சரி நெற்றிக்கண்ணைத் திறக்காத.  நீ ஹாஸ்பிடல்ல இருந்து வந்த பிறகு யாரைப் பார்த்தாலும் பயப்படுவ.  அத்தையைத் தவிர ஒருத்தர் கூடவும் பேச மாட்ட.  ஞாபகம் இருக்கா”, மதி கேட்க தேவி அந்த நாட்களை நினைத்து வேதனையுடன் தலையசைத்தாள்.

“முதல் முறையா உன்னைப் பார்த்ததுல இருந்தே எனக்கு பாதிப்புதான்....”, மதி சொல்ல, படிக்கற வயசுல இதென்ன நினைப்பு என்பது போல் பார்த்தாள் தேவி.

“என்ன பாக்கற... நீதான் அப்போ சின்னப் பொண்ணு.  நான் காலேஜ் படிச்சுட்டு இருந்தேன் இல்லை.  அதனால லவ் பண்ற அளவுக்கு வளர்ந்த பெரிய பையன்தான்”, என்று கூற முடியல என்பது போல் தலையசைத்தாள் தேவி.

“ஓகே.... ஓகே.... ரொம்ப பீல் பண்ணாத.  நான் மாமாக்கிட்ட அப்போவே எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்.  அவருக்கு செம்ம கோவம்.  இந்த வயசுல இதெல்லாம் என்னடான்னு நல்லாத் திட்டிட்டாரு.  அவர்கிட்ட இப்போதைக்கு  உன்கிட்ட எதுவும் சொல்லப் போறதில்லை,  வாழ்க்கைல நீயும் நானும் நல்லபடியா செட்டில் ஆன பிறகுதான் என்னோட ப்ரோபோஸல் பத்தி சொல்லப் போறேன்னு சொன்னதுக்குப் பிறகுதான் திட்டுறதை நிறுத்தினார்.   உனக்கு என்ன ஆச்சு  ஏன் இப்படி இருக்கேன்னு மாமாக்கிட்ட கேட்டதுக்கு மொதல்ல வேற ஏதோ கதை சொன்னவர், அப்பறம் வற்புறுத்திக் கேட்டதுக்குப் பிறகு  உன்னைப் பத்தி எல்லாம் சொன்னார்”

“ஓ.... கேட்டதும் ஏண்டாப்பா இந்தப் பொண்ணை லவ் பண்ணினோம்ன்னு தோணி இருக்குமே”

“இப்படி கேட்டதுக்காகவே உன்னை அடிச்சிருக்கணும்.  விளையாட்டா கூட உன்னை அடிக்கக் கூடாதுன்னு ஒரு கொள்கையோட இருக்கேன்.  அதனால விடறேன்.  அப்படி தோணி இருந்ததுன்னா  எதுக்கு உன் பின்னாடி இன்னும் சுத்திட்டு இருக்கப்போறேன்.  எப்பவோ என் அம்மா சொல்ற பெண்ணை கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேனா”

மதி கோவத்துடன் கேட்க, “சாரி, நியாயமில்லாம பேசிட்டேன்.  நீங்க இதைப் பத்தி பேச ஆரம்பிச்ச உடனே பழசு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு. அதான்.... அப்பறம் என்ன ஆச்சு சொல்லுங்க”

“ஹ்ம்ம் சரி விடு.  மாமா சொன்ன உடனே எனக்கு அந்த மொத்த கும்பல் மேலயும் செம்ம கோவம்.  நல்ல காலம் உங்க அப்பாவையும், அண்ணனையும் அவங்களே போட்டுத் தள்ளிட்டாங்க.  இல்லைனா நான் அவங்களை கொன்னுருப்பேன்”, மதி கோவத்தில் சிவந்த விழிகளுடன் கூற, முதல் முறையாக தேவி தன் கையை அவன் கையில் வைத்து ஆறுதல்படுத்தினாள்.  அந்த நாளின் தாக்கத்தில் அதைக் கூட உணர முடியாத கோவத்தில் இருந்தான்  மதி.

“அதுக்குப் பின்னாடி கேஸ் நடந்து... உங்கண்ணனுக்கு இருந்த முன் விரோதம் காரணமாத்தான் உன்னைப் பழி வாங்கினாங்கன்னும், அவங்களைக் கொன்னாங்கன்னும்  சொல்லி வேற ரெண்டு பேரை அர்ரெஸ்ட் ஆக வச்சு அவனுங்க எல்லாம் ஈஸியா வெளிய வந்துட்டாங்க  அதே மாதிரி அந்த கேஸ்ல அர்ரெஸ்ட் ஆனவங்களும் கொஞ்ச நாள்ல ஜாமீன்ல வெளிய வந்துட்டாங்க”, மதி சொல்ல இதுதான் எனக்கேத்  தெரியுமே என்பது போல் பார்த்தாள் தேவி.

“இந்த விஷயமெல்லாம் உனக்கு ஏற்கனவே தெரியும்.  இந்தக் கேஸ் ஆரம்பிக்கும்போதே மாமாக்கிட்ட நானும், ரவி அண்ணாவும் நாங்களே அவனுங்களைப் பார்த்துக்கறதா சொன்னோம்.  கேஸ் எல்லாம் வேண்டாம்... அந்த ஆள் அரசியல்ல நல்ல செல்வாக்கான இடத்துல இருக்கான்.  இந்தக் கேஸை ஒண்ணும்  இல்லாம பண்ணிடுவான்னு.  ஆனா மாமாதான் எதையுமே சட்டப்பூர்வமா அணுகணும்ன்னு சொல்லி  என்னையும், அண்ணாவையும் அடக்கி வச்சுட்டார்.  கடைசில நாங்க சொன்ன மாதிரிதான் ஆச்சு.  மாமாவால அவனுங்களை ஒண்ணும் செய்ய முடியலை.  அவனுங்க அப்படி ஈஸியா தப்பிச்சதை எங்களால ஜீரணிக்கவே முடியலை.  அவங்களை எப்படியாவது தண்டிக்கணும் அப்படின்னு முடிவு பண்ணினோம்,  நான் உன்னை விரும்பறேன் அப்படிங்கறது ரெண்டாம் பட்சம்தான்.  ஒரு சின்னப் பொண்ணை எப்படி ஆக்கிட்டானுங்க அப்படிங்கற கோவம்தான் அதிகமா இருந்தது”, கோவம் சிறிதும் விலகாமல் தொடர்ந்தான் மதி. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.