(Reading time: 28 - 55 minutes)

தி, தேவியைக் கொண்டு போய் வரதன்  வீட்டில் விட்டுவிட்டு காரை எடுத்துக்கொண்டு நேராக கமிஷனரைப் பார்க்க அவர் வீட்டிற்கு சென்றான்.  அதன்பின் வேலைகள் மடமடவென்று நடந்தது.  புகைப்படங்களில் இருந்தவர்களில் முக்கால்வாசிப் பேர் ஏற்கனவே குற்றம் புரிந்தவர்கள்.  அதனால், அவர்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று அவர்களை கைது செய்ய  நம்பகமான காவல்துறை அதிகாரிகளிடம் கூறிவிட்டு, மீதி இருக்கும் முக்கிய புள்ளிகளைக் கைது செய்ய மட்டும் மதியின் தலைமையில் ஒரு குழு இரவோடு இரவாக அமைக்கப்பட்டது.  ஆளுக்கு ஒரு இடமாக சென்று அவர்களை ஒரே நேரத்தில் கைது செய்வதாக முடிவெடுக்கப்பட்டது.  மதி நல்லதம்பியின் மச்சானை கைது செய்வதை தன் பொறுப்பில் ஏற்றான். 

விமலாவின் வீட்டில் மதியும், மற்றவர்களும் சென்ற சிறிது நேரத்திற்கு எல்லாம் அவனால் அனுப்பப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் வந்து சேர, விமலாவும், அவள் தந்தையும் விழிப்பதற்காக காத்து இருந்தார்கள்.  தூக்க மருந்தின் வீரியத்தால், அவர்கள் ஏழு மணிவரை எழும்பாமல் இருக்க, இன்ஸ்பெக்டர்  சாவித்ரியை அழைத்து அவர்கள் இருவரையும் எழுப்ப சொன்னார்.

“மேடம், நாங்க அவங்க ரெண்டு பேரையும் பார்க்க வந்திருக்கறதா சொல்லி எழுப்புங்க.  உங்களுக்கு எதுவும் தெரிஞ்சா மாதிரி காட்டிக்க வேண்டாம்”,என்று கூற, சாவித்திரி அவர் கூறியபடியே அவர்கள் இருவரையும் சென்று எழுப்பி வந்தாள்.

தங்களை இத்தனை காலையில் பார்க்க வந்தவர்கள் யாராக இருக்கும் என்ற யோசனையுடன் பல் துலக்கி இருவரும் ஹாலிற்கு வந்தார்கள்.  வந்திருந்த மனிதர்களின் தோரணையைப் பார்த்த உடனேயே அவர்கள் காவல் துறையை சேர்ந்தவர்கள் என்பதை அறிந்த விமலாவும், அவள் அப்பாவும் தங்களைப் பற்றிய  விஷயம் ஏதேனும் தெரிந்து விட்டதோ என்ற ஐயத்துடனேயே வந்து அமர்ந்தார்கள்.

“சொல்லுங்க சார்.  நீங்க யாரு. என்ன விஷயமா எங்களைப் பார்க்க வந்துருக்கீங்க”, விமலாவின் தந்தை கேட்க, விமலாவோ தன் ரூமிலிருந்து மொபைலை எடுத்து வராத மடத்தனத்தை நொந்தாள். 

“போதை மருந்து கடத்திய குற்றத்திற்காக உங்களையும், உங்க மகளையும் கைது செய்ய வந்திருக்கோம்”, என்று நேரடியாக அதிகாரி கூற, சாவித்ரி, சேலையின் தலைப்பை வாயில் அடைத்து அழுகையை அடக்கினார்.

அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அதிகாரியிடம் திரும்பிய விமலாவின் தந்தை, “யாரோ உங்களுக்கு தப்பான தகவல் கொடுத்திருக்காங்கன்னு நினைக்கறேன்.  நாங்க இங்க ரொம்ப கௌரவமா வாழ்ந்துட்டு இருக்கோம்.  தயவு செய்து போய்டுங்க.  ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க.  போலீஸ் வீட்டுக்கு வந்தது தெரிஞ்சா தேவையில்லாம  கெட்டப் பேர் வரும்”

“எப்படி சார் இன்னும் இப்படி நடிப்பை மெயின்டெயின்  பண்றீங்க.  நீங்களும், உங்கப் பொண்ணும் சேர்ந்து பண்ணின தில்லு முல்லு எல்லாம் வெளிய வந்தாச்சு.  அதனால டிராமா போடறதை நிறுத்திட்டு எங்களுக்கு ஒழுங்கா ஒத்துழைப்பு கொடுங்க”

“சார்... தேவை இல்லாம பேசாதீங்க.  நான் ஒரு புகழ்பெற்ற சாப்ட்வேர் கம்பெனில வேலை செய்யறேன்.  நீங்க பாட்டுக்கு வந்து என்னல்லாமோ பேசறீங்க.  எங்களுக்கு வேண்டாதவங்க யாரோதான் எங்க மேல தேவை இல்லாம புகார் கொடுத்து இருக்காங்கன்னு நினைக்கறேன்.  அது யாருன்னு சொல்லுங்க.  அவங்க புகார் பொய்ன்னு நான் நிரூபிக்கறேன்.  அப்பா இது அந்த ஸ்ரீதர் குடும்பத்து வேலையாத்தான் இருக்கும்.  நான் உடனே நம்ம வக்கீல்கிட்ட பேசறேன்”, என்று கூறியபடியே அவளின் கைப்பேசியை எடுக்க படுக்கை அறைக்கு செல்லுவதற்கு எழுந்தாள். அவள் எழுந்த உடனேயே அவளின் இரு பக்கமும் வந்த அதிகாரிகள் விமலாவை அங்கேயே அமருமாறு கூறினார்கள்.

“இங்க பாருங்க மேடம்.  போதை மருந்து கடத்தல் பண்ணின மொத்த கும்பலையும் பிடிச்சாச்சு.  உங்களை அர்ரெஸ்ட் பண்ணி நீதிபதி முன்னாடி கொண்டு போகற வரை நீங்க யார் கூடவும் பேச முடியாது.  உங்க வீட்டுல இருக்கற அத்தனை பேரோட செல்ஃபோன், லேப்டாப் எல்லாத்ததையும் ஸீஸ் பண்ணியாச்சு.  அதனால அடங்கி ஒரு இடமா உக்காருங்க”

“சார், இதெல்லாம் அநியாயம்.  எங்க பக்கத்து நியாயத்தைக் கூட கேக்காம இப்படி உக்கார வச்சிருக்கறது.  உங்க பேர்ல நான் மனித உரிமைக் கமிஷன்ல புகார் கொடுப்பேன்”

“என்னன்னு கொடுக்கப் போறீங்க.  பொண்ணுங்களை நிர்வாணமா ஃபோட்டோ எடுத்தேன்.  அதுக்கு என்னை அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க அப்படின்னு போய் கம்ப்ளைன்ட் பண்ணப் போறீங்களா.  தாராளமா பண்ணுங்க.  அதுக்கப்பறம் அவங்க யார் மேல நடவடிக்கை எடுக்கறாங்கன்னு பார்க்கலாம்”, காவல்துறை அதிகாரி சொல்ல, விமலா இந்த விஷயம் எப்படி வெளியில் வந்தது என்பதுபோல் அதிர்ந்து பார்க்க, சாவித்ரி இப்பொழுது சத்தமாகவே அழ ஆரம்பித்து விட்டாள்.  ரூபா விமலாவை முறைத்தபடியே அவள் அம்மாவை சமாதானப்படுத்தினாள்.

விமலாவும், அவள் அப்பாவும் அடுத்து தங்கள் வக்கீலைப் சந்திக்கும் வரை தங்களால்  எதுவும் செய்ய முடியாது.  அதுவரை அமைதியாக இருப்பதே மேல்.  அதுவும் தவிர, இதில் சம்மந்தப்பட்டிருப்பவர்கள் அனைவரும் பெரிய புள்ளி, அதனால் எப்படியும் வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவார்கள்.  தாங்களும் சுலபமாக வெளியில் வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் விமலாவை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார் அவளின் அப்பா.  

அன்று மாலை ஐந்து மணி அளவில் போதை மருந்து கடத்திலில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டுவரப்பட்டார்கள்.  சாவித்ரிக்கு வாக்களித்தபடி விமலாவையும், அவள் தந்தையையும் காவல் துறை வாகனம் அல்லாத சாதாரண காரில் ஏற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.