(Reading time: 28 - 55 minutes)

நீங்க நிஜமாவே ரொம்ப உயர்ந்தவங்க சாவித்ரிமா.  முடிஞ்ச வரை தன் வீட்டுல நடக்கற தப்பை மூடி மறைக்கத்தான் இந்த உலகத்துல எல்லாரும் பார்ப்பாங்க.... ஆனா நீங்க இதால உங்க பெண்ணோட எதிர்கால வாழ்க்கையே பாதிக்கப்படும்ன்னு  தெரிஞ்சும் அதைப்  பத்தி யோசிக்காம வந்து உண்மைய சொன்னீங்க.   நாங்க என்னதான் குற்றவாளிகளை பிடிச்சிருப்போம் அப்படின்னாலும்...... நீங்க வந்து சொல்லலைன்னா இத்தனை சீக்கிரம் அவங்களை நெருங்கி இருக்க முடியாது.   வரதட்சணை கேட்டாங்கன்னு  ஆரம்பிச்ச கேஸ் எங்க வந்து நின்னிருக்கு”, தேவி கூற அனைவரும் அதை ஆமோதித்தனர்.

“சாவித்ரிமா விமலாவோட லேப்டாப், அவளோட ஃபோன் அப்பறம் உங்க கணவரோட செல்ஃபோன் எல்லாம் எடுத்திட்டுப் போறேன்.  நாளைக் காலைக்குள்ள உள்ளூரிலேயே எல்லாரும் இருந்தாங்கன்னா  அர்ரெஸ்ட் பண்ணிடுவோம்.   அவங்க வெளியூர்ல இருந்தாங்கன்னா கஷ்டம்.  எப்படியும் நாளை மாலைக்குள்ள அத்தனையும் முடிஞ்சுடும்.   ஆனா அதுக்குள்ளே விமலாவும் அவங்க அப்பாவும் மத்தவங்களுக்கு தகவல் கொடுத்து அவனுங்களை தப்பிக்க விடாம இருக்கணும்”

“எப்படி சார் அவங்களுக்குத் தெரியாம பார்த்துக்கறது.  காலைல முழிக்கும்போதே விமலாவும், அப்பாவும்  ஃபோன் மூஞ்சிலதான் முழிப்பாங்க  சார்.  அது இல்லைன்னு தெரிஞ்ச உடனேயே உஷார் ஆகிடுவாங்க”

“ஹ்ம்ம் புரியுது.  நான் நேத்து வரை அவங்களுக்குத் தெரியக்கூடாதுன்னு நினைச்சதுக்கு காரணம் எங்கத் தெரிஞ்சா ஆதாரத்தை எல்லாம் மறைச்சு வச்சுடுவாங்களோன்னுதான்.  இப்போதான் எல்லாம் நம்மக் கிட்ட கிடைச்சுடுச்சே.  இனிமே கவலை இல்லை.  நான் நம்பகமான ரெண்டு இன்ஸ்பெக்டர்ஸ அனுப்பி வைக்கறேன்.  அவங்க இங்க வீட்டுக்குள்ளயே விமலாவையும் அவங்க அப்பாவையும் கஸ்டடில வச்சுப்பாங்க.  அதே மாதிரி அவங்களை மஃப்டில வர சொல்றேன்.  அக்கம் பக்கத்துல இருக்கறவங்களுக்கும் அதனால எந்த சந்தேகமும் வராது.  ஸ்ரீதர் நீங்களும், அகிலும் தேவியை வரதன் மாமா வீட்டுல விட்டுட்டு கிளம்புங்க.  நான் இப்படியே கமிஷ்னர பார்க்க கிளம்பறேன்”

“நான் அந்த இன்ஸ்பெக்டர்ஸ் வர்ற வரை இவங்களுக்குத் துணையா இருக்கேன் சார்.   அகில் நீங்க வேணா கிளம்புங்க”

“இல்லை ஸ்ரீதர்.  நான் போய் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அவங்க வந்துடுவாங்க.  திடீர்ன்னு நான்கு ஆண்கள் ஒரு வீட்டுக்குள்ள இருக்காங்கன்னா அக்கம் பக்கத்துல இருக்கறவங்களுக்கு சந்தேகம் வரும்.  விமலாவையும், அவங்க அப்பாவையும் கைது பண்ணினாலும்.... சாவித்திரி அம்மாவும், ரூபாவும் இங்கதான் இருந்தாகணும்.  தேவை இல்லாம அவங்க எதுக்கு மத்தவங்க வாய்க்கு அவலாகணும்”

“அதைப் பத்தி எல்லாம் நான் கவலைப்படப் போறதில்லை  சார்.  நாளைக்கு இவங்க அர்ரெஸ்ட் ஆகும்போது எப்படியும் எல்லாருக்கும் விஷயம் தெரியத் தானே போகுது.  எனக்கு என்னைப் பத்திக் கூட கவலையில்லை.  என் கவலை எல்லாம் ரூபா பத்திதான்.  இத்தனை கெட்டப் பேர் இருக்கற குடும்பத்துல இருந்து யார் பொண்ணை எடுப்பாங்க”, சாவித்ரி கண் கலங்க ஆரம்பித்தார்.

“சாவித்திரிம்மா நீங்க கலங்காதீங்க.  எங்களுக்கு எத்தனை பெரிய உதவி செஞ்சிருக்கீங்க.  அதுக்கு ஒரு சின்ன பதிலுதவி.  உங்கப் பொண்ணை பத்தியோ, உங்க கணவரைப் பத்தியோ எந்த விஷயமும் வெளிய வராது.  அவங்களுக்கு வேண்டிய தண்டனை கிடைக்கும்.  ஆனா அவங்க பேர் வெளிய வராம பார்த்துக்கறேன்.  நீங்களும், உங்க பெரிய பொண்ணு டிவி வரைக்கும் போனதை  கண்டிச்சு அதுக்கு மறுப்பு தெரிவிக்க சொன்னதால  அவங்க ரெண்டு பேரும் உங்களை விட்டு போய்ட்டா மாதிரி சொல்லிடுங்க”

“ஹ்ம்ம் சரிங்க சார்.  அது எல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்.  தம்பி நீங்க எங்களைப் பத்தி கவலைப்படாதீங்க.  நீங்களும் அகில் தம்பியும் கிளம்புங்க.  இன்னும் கொஞ்ச நேரம்தானே நாங்க சமாளிச்சுப்போம்”, சாவித்திரி சொல்ல அனைவரும் கிளம்பத் தயாராகினர்.  கடமை தவறாத காவலாளி அவர்கள் அனைவரும் திரும்ப வாயிலைக் கடக்கும்பொழுதும் தூங்கிக் கொண்டுதானிருந்தார்.  சத்தம் செய்யாமல் அனைவரும் வெளியில் வந்து இரண்டு தெரு தள்ளி  நிறுத்தி இருந்த காரை நெருங்கினர்.

“ஓ ஸ்ரீதர் நீங்க ரெண்டு பேரும் வண்டில வந்தீங்களா.  அப்போ சரி நானே தேவியைக் கொண்டு போய் விட்டுட்டு அப்பறம் கமிஷனரைப் பார்க்க போறேன்.  எல்லா வேலையும் முடிச்சுட்டு நானே உங்களுக்கு கூப்பிடறேன் ஸ்ரீதர்.  அதுக்கு நடுவுல  ஏதானும் ரொம்ப முக்கியமான விஷயம் இருந்தா மட்டும் காண்டாக்ட் பண்ணுங்க.  அதே மாதிரி சாவித்ரி அம்மாக்கும் நீங்க கால் பண்ணாதீங்க.  முடிஞ்ச வரை இதுல நீங்க இன்வால்வ் ஆகாத மாதிரியே இருக்கட்டும்.  Infact  விமலாவுக்கும் அவங்க அப்பாக்கும் சாவித்திரி அம்மாதான் இதுல மெயின் சாட்சி அப்படின்னு கூட நாங்க சொல்லப் போறதில்லை.  பிற்காலத்துல அவங்க சேர்ந்து இருக்கற நிலை வந்தா இந்த விஷயம் முள்ளா இருக்கக்கூடாது”

“கண்டிப்பா சார்.  நான் யாருக்கும் கால் செய்ய மாட்டேன்.  அதே நேரம் உங்களுக்கு ஏதானும் விஷயத்துக்கு என்னோட உதவி தேவைப்பட்டுதுன்னா எந்த நேரம்னாலும் சொல்லுங்க”, என்று கூறிவிட்டு ஸ்ரீதரும் அகிலும் கிளம்ப, மதி தேவியிடம் தலை அசைத்து காரில் ஏற சொன்னான்.

ஆஹா ஒரு ஃப்ளோல நல்லதம்பிக்கு கொடுத்த தண்டனை பத்தி வாயை விட்டுட்டோமே, இந்த தேவி அதை கவனிச்சாளா தெரியலையே.  அப்படி கவனிச்சிருந்தா கேள்வி மேல கேள்வியா கேப்பாளே. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.