(Reading time: 28 - 55 minutes)

கேஸ் முடிஞ்சு கொஞ்ச நாள் நாங்க பொறுமையா இருந்தோம்.   ஆனா அந்த நல்லதம்பியை எங்க கண் பார்வையிலேயே வச்சுட்டு இருந்தோம்.  அவனும் அவனோட மச்சான்களுக்கு பயந்துட்டு கொஞ்ச நாள் ஒழுங்கா இருந்தான்.  எந்தப் பொண்ணு பின்னாடியும் போகாம வால சுருட்டிட்டு வயல் வேலை மட்டும் பார்த்துட்டு இருந்தான்.  ஆனா ஆறு மாசத்துக்கு மேல தாக்கு பிடிக்க முடியலை.  மெல்ல மெல்ல பெண்கள் சகவாசம் மறுபடி ஆரம்பிச்சுது.  உன்னை மாதிரியே இன்னொரு ஸ்கூல் படிக்கற பொண்ணு மாட்டினா”

மதி சொல்ல அதுவரை அவன் சொல்வதை அமைதியாகக் கேட்ட தேவி, தன்னைப் போலவே இன்னொரு அப்பாவிப்  பெண்ணும் அவனிடம் மாட்டிக் கொண்டாள் என்று கேட்டவுடன் நடுங்க ஆரம்பித்தாள்.

“ஹேய் ரிலாக்ஸ்.  அந்தப் பொண்ணுக்கு ஒண்ணும் ஆகலை.  அவளைக் காப்பாத்தியாச்சு. அந்தப் பெண்ணோட குடும்பமும் ரொம்ப கஷ்டப்படற குடும்பம்.  உனக்கு நடந்த கொடுமை எல்லாம் உங்க ஊருல யாருக்குமே தெரியலை.  கேஸ் நடந்ததும் சென்னை அப்படிங்கறதால அதைப் பத்தின விஷயமும் ஒருத்தருக்கும் தெரியலை.  நீங்க எல்லாம் வேலைக்காக சென்னைக்குப் போய்ட்டதாதான் உங்க ஊருல எல்லாரும் நினைச்சுட்டு இருந்தாங்க”

“அது கரெக்ட்தான்.  எனக்கு நடந்த கொடுமைல நான் அந்த ஊரையே மறந்துட்டேன்.  Infact என்னோட சித்தி, பாட்டி எல்லாம் அங்கதான் இருந்தாங்க.  அவங்ககிட்ட கூட சொல்லலை.  அந்த ஊரை விட்டு வந்த உடனேயே எல்லாரோட தொடர்பும் விட்டு போச்சு.  நான் நல்லா ஆனதுக்கு பிறகும் என்னவோ எனக்கு அவங்களைத் தொடர்பு கொள்ளத் தோணலை”

“அதுதான் நீ பண்ணின நல்லது.  திரும்ப உங்க ஊருக்குப் போய் இருந்தேன்னா பின்னாடி உன்னால ஏதானும் ஒரு வகைல பிரச்சனை வரும்ன்னு உன்னையும் போட்டுத் தள்ளி இருப்பானுங்க.  நல்லதம்பி மறுபடி பெண்கள் சகவாசத்தை ஆரம்பிச்சுட்டான்னு தெரிஞ்ச உடனேயே  அவனை இன்னும் உன்னிப்பா கண்காணிச்சோம்.  அப்போ எனக்கு  காலேஜ் மூணாவது வருஷம் முடிஞ்சு சம்மர் லீவ்.  நான் உன்  ஊருக்கு பக்கத்து ஊருக்கு  வேலை தேடறா மாதிரி போய் தங்கிட்டேன்.  நல்லதம்பி மனைவி இருக்கற எடத்துல அவன் வேலைய காட்ட முடியாததால அவனோட பெண்கள் சகவாசத்தை பக்கத்து ஊருலதான் நடத்திட்டு இருந்தான்.  பக்கத்து ஊருல இருக்கற காலேஜ்ல சீட் வாங்கித் தர்றதா சொல்லி அந்தப் பெண்ணை வர சொல்லி இருந்தான்.  அந்த ஊருலயும் அவனுக்கு தோப்போட வீடு இருக்கு.  இவன் ஒரு நாள் முன்னாடியே போய் அங்கத் தங்கிட்டான்.  இந்த முறை எந்த விசுவாசியையும் அவன் நம்பலை.  போன முறை அவனோட ஆளே அவனை அவன் பொண்டாட்டிக்கிட்ட போட்டு கொடுத்ததாலன்னு நினைக்கறேன்.  அந்த தோப்பு வீட்டுக்கு வந்த உடனேயே தண்ணி அடிக்க ஆரம்பிச்சுட்டான்.  அவன் அங்க வரப்போறான்னு தெரிஞ்ச உடனேயே  நான் ரவி அண்ணாக்கு மெசேஜ் கொடுத்துட்டேன்.  அவரும் உடனேயே வந்துட்டாரு. அந்தத் தோப்புக்கு ஒரே ஒரு காவல்காரன்தான்.  அவனையும் நல்லதம்பி வந்த உடனேயே வீட்டுக்கு அனுப்பிட்டான்.  எல்லாத்தையுமே எங்களுக்கு சாதகமா கடவுள் பண்றா மாதிரியே இருந்தது.  அவனுக்கு நல்ல போதை ஏறும் வரைக்கும் காத்து இருந்தோம்”, மதி சொல்ல சொல்ல அந்த நல்லதம்பிக்கு அப்படி என்ன தண்டனை இவர்கள் கொடுத்திருப்பார்கள் என்ற ஆர்வம் கூட ஆரம்பித்திருந்தது தேவிக்கு.

“ரவி அண்ணா கார்லதான் அந்தத் தோப்பு வீட்டுக்கு சென்னைலேர்ந்து வந்தாங்க.  அவங்க மட்டும் வரலை.  கூடவே ஒரு நாயையும் கூட்டிட்டு வந்தாங்க.  அதுவும் சாதாரண நாய் இல்லை....  நல்ல வெறி பிடிச்ச நாய்.  ரவி அண்ணாக்கு தெரிஞ்ச ஒரு வெட்னரி டாக்டர்  கிளினிக்ல அட்மிட் ஆகி இருந்த நாய் அது.  ரவி அண்ணா அவரோட நண்பர்கிட்ட உன்னை பத்தின முழு உண்மைய சொல்லி எதுக்காக அந்த நாய் தேவைப்படுதுன்னும் சொல்ல, அவர் கொஞ்சம் கூட யோசிக்காம நாயோட  கூட  நானும் வரேன்னுட்டு வந்துட்டாரு.  நல்லதம்பிக்கு நல்லா போதை ஏறின உடனேயே அவனை அவன் உக்கார்ந்த சேர் கூட சேர்த்துக் கட்டிட்டு அந்த நாயை விட்டு கடிக்க வச்சோம்.  அதுக்கூட ஓரளவுக்குத்தான்.  அவனோட உயிர் அத்தனை சீக்கிரம் போகக்கூடாதுங்கறதுல உறுதியா இருந்தோம்.  நல்லதம்பி முழு போதைல இருந்ததால அவனால ஒண்ணும் பண்ண முடியலை.  Infact அவன் கத்தினது கூட குழறலாதான் வந்தது.  அவன் கட்ட அவுக்காம அப்படியே மூணு பேரும் கிளம்பி வந்துட்டோம்.  ரவி அண்ணாவும், அவரோட நண்பரும் கிளம்பி சென்னை வந்துட்டாங்க.  நான் மட்டும் அங்கேயே தங்கி அவன் என்ன ஆனான்னு பார்க்கறதுக்காக இருந்தேன்.  மறுநாள் காலை வரை அவனைப் பார்க்க யாரும் வரலை.  காலைல வந்த தோட்டக்காரந்தான் நல்லதம்பி கட்டை அவிழ்த்து விட்டு அவனோட பொண்டாட்டிக்கு தகவல் கொடுத்தது”, மதி கூற அதிர்ச்சியின் உச்சத்திற்கு போனாள் தேவி.

தேவி எதை  எதிர்பார்த்திருந்தாலும் இப்படி ஒரு தண்டனையை எதிர்பார்க்கவில்லை.  என்ன ஒரு கொடூரமான தண்டனை.  அப்பொழுதே வெறிநாய் கடித்திருந்தால், நல்லதம்பி இத்தனை நாள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லையே என்ற யோசனையுடன் மதியைப் பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.