(Reading time: 16 - 31 minutes)

16. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

ள்ளே நுழைந்தவளுக்கு அடுத்து என்ன நடக்குமோ என்ற பயம் மனதை ஆட்கொள்ளாமல் இல்லை… ஏற்கனவே வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பவன், இன்று ஆடி தீர்க்காமல் விட மாட்டான் என்பதில் எள்ளளவும் அவளுக்கு ஐயமில்லை…

“என்ன்….ன…ங்….க…. காபி….” என்ற குரலில் திரும்பியவன் அவளை முறைத்தபடி நின்றான்…

“காபி….” என அவள் நீட்டியதும் அதை தட்டிவிட, அது கீழே விழுந்து உடைந்து சிதறியது….

சட்டென்று உடல் முழுவதும் அதிர, அப்படியே விரல் நடுங்க நின்றிருந்தவளின் கரத்தை பிடித்துக்கொண்டவன்,

“எனக்கு அவனைப் பிடிக்காதுன்னு உனக்கு தெரியுமா தெரியாதா?...” எனக் கேட்க, அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்…

“சொல்லு…. தெரியுமா தெரியாதா?...” வார்த்தைகளில் தெரிந்த அழுத்தம் அவளது கரத்தைப் பிடித்திருந்த அவனது கரங்களிலும் தெரிய, அவளுக்கு லேசாக வலிக்க ஆரம்பித்தது…

“தெ……. தெரியும்…”

சிக்கித்திணறி அவளும் பதில் சொல்லிவிட,

“அப்போ என்ன பேச்சுவார்த்தை வேண்டியிருக்கு உனக்கு அவங்கிட்ட?...” என காட்டமாக கேட்டான் அவன்….

“இல்லங்க… வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு சொல்லவேண்டாமா?...”

எந்த தைரியத்தில் அப்படி பேசினால் என்று சரயூவிடம் கேட்டால் சத்தியமாய் தெரியாது என்று தான் சொல்லியிருப்பாள்…

“அப்பா இருந்தார் தான?... அவர் கேட்டிருப்பார் தான?…”

“வாங்கன்னு சொன்னதுல என்னங்க தப்பு இருக்கு?...”

“அதோட நிறுத்தியிருந்தா தப்பில்லை… அவங்கிட்ட உனக்கு என்ன பேச்சு அதும் சிரிச்சு சிரிச்சு?... பத்தாததுக்கு அவன் கொடுத்தான்னு பெரிய கவர் வேற வாங்கிட்டு நிக்குற?...”

“இல்லங்க… நான் வேண்டான்னு தான் சொன்னேன்… அர்னவ் தான் உங்க தம்பியா? நான் இல்லையான்னு கேட்டார்… என்னால அதுக்குப்பிறகு மறுக்க முடியலை…”

“ஓஹோ…. அந்த அளவுக்கு போயாச்சா?...”

“இல்லங்க… நான்….” என சொல்ல முயன்றவளை தடுத்தவன்,

“ஊரும் உலகமும் அப்படி நினைக்காது…. உன்னை மத்தவங்க தப்பா பேசுறதுல எனக்கு விருப்பம் கிடையாது… உனக்கு புரியும்னு நினைக்கிறேன்…” என பூடகமாக அவன் சொல்ல, அவன் எங்கு ஆரம்பித்து எங்கு வருகிறான் என தெளிவாக புரிந்து போனது அவளுக்கு…

“இவன் இதை விடவே மாட்டானா?...” என நொந்து போனாள் அவள்…

அவனை நொந்து தான் என்ன பிரயோஜனம்?... அவன் மாறப்போகிறானா?... இல்லையே… பின் எதற்கு அவள் வருந்தி, வீணாக அவளது உடம்பையும் கெடுத்துக்கொள்ள வேண்டும் என மூளை யோசனை சொன்னாலும் மனதிற்கு அது நடைமுறைப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை…

என்ன செய்தாலும் அனைத்தும் அந்த ஒரு இடத்தில், வந்து முடிவது போலவே இருக்க, அவளால் அதை சட்டென தூர ஒதுக்கி வைக்க முடியவில்லை…

நடப்பது நடக்கட்டும்… சரி அந்த பாதையில் செல்லலாம் என அவள் எண்ணும் வேளையே திலீப்பின் குணங்கள் பூதாகரமாய் கண் முன்னே நிழலாடும்… அவ்வளவுதான் அதோடு அந்த பாதை பற்றிய சிந்தனையை மூடி வைத்திடுவாள் அவள்…

எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தவளை, அவன் நிஜத்தில் பிடித்து உலுக்க, சட்டென தன்னுணர்வு பெற்றாள் சரயூ….

“என்ன யோசனை பண்ணிட்டிருக்குற?... நான் சொன்னது புரிஞ்சதா?...”

மெதுவாக வெளிவந்தவனின் குரலில் இருந்த அமைதியும், தன்மையான குழைவும் அவளது அடிவயிற்றில் புளியை கரைத்தது…

“கா….பி…. கொட்டிடுச்சு…. நான் வேற எடுத்துட்டு வரேன்…” என்றவள் அவனது பதிலை கூட எதிர்பாராது வெளியேற சட்டென முகம் வெளிறிப் போனது திலீப்பிற்கு…

“சே…” என இயலாமையுடன் அவள் சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்…..

அவனிடமிருந்து விலகி வந்தவளுக்கு மூச்சுவிடுவது கூட சிரமமாகி போனது சிறிது நேரம்… அவளது நிலையைக் கண்ட விசாலம் அவளிடம் என்ன ஏது என்று தோண்டித் துருவாமல் அமைதியாக அவளையே கவனிக்க, அவள் விசாலம் இருந்ததை கவனிக்காமல் தன்னை ஆசுவாசப்படுத்துவதிலேயே இருந்தாள்…

தண்ணீர் எடுத்து மடமடவென அவள் குடிக்க அது தொண்டைக்குள் போவேனா என அடம்பிடித்தது… வலுக்கட்டாயமாக அதை அவள் உள்ளே தள்ள, அவளது பதட்டம் சற்றே குறைந்தது….

தன்னிலைக்கு வந்ததும், சீரான சுவாசம் அவளிடமிருந்து வர, தலையைப் பிடித்துக்கொண்டாள் சரயூ… ஒவ்வொரு நரம்பும் தெறித்து விடுவது போல் இருக்க, விண் விண் என்று தலைவலி எடுக்க ஆரம்பித்தது அவளுக்கு….

சமையலறையிலிருந்து வெளியேறி நேரே ஹாலுக்கு ஓடினாள்… அங்கிருந்த அலமாரியில் இருந்து மாத்திரைகளை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டு சோபாவில் சுருங்கி படுத்துக்கொண்டாள் அவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.