(Reading time: 19 - 38 minutes)

வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 08 - வத்ஸலா

Varthai thavarivitten Kannamma

கார் நகர்ந்துக்கொண்டிருக்க... அலையடித்து கொண்டிருந்தது அபர்ணாவின் மனம்.

'அவன்தான் சொன்னான் என்றால்...... அவன் எண்ணங்களை என் மீது திணிக்க பார்க்கிறான் என்றால்... எனக்கு எங்கே போனதாம் அறிவு??? நான் இந்த உடைகளை அணிந்துக்கொண்டு இங்கே வந்திருக்க கூடாது... என் மனதை அவனுக்கு புரிய வைத்திருக்க வேண்டும்...'  அவள் மனம் அவளையே குறை சொல்லி குட்டியது.

சில நிமிடங்கள் கழித்து எண்ண அலைகளில் இருந்து விடுபட்டு மெல்ல பரத்தின் பக்கம் திரும்பினாள் அபர்ணா. ஏதோ யோசனையில் மூழ்கிப்போனவனாக காரை செலுத்திக்கொண்டிருந்தவனை கலைத்தது அவள் குரல்

'தேங்க்ஸ் பரத்...'

'எதுக்குமா??? என்றான் யோசனைகளில் இருந்து சட்டென வெளிவந்து. 'உன்னை கார்லே கொண்டு விடறதுக்கா??? நீ வேறே... என் கார்லே நீ ஏறினதுக்கு நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்...' இதழ்களில் மென்னகை ஓட சொன்னவனிடம் சில நொடி மௌனம். பின்னர் தொடர்ந்தான்...

'உனக்கு தெரியுமான்னு தெரியலை அபர்ணா...... சில வருஷம் முன்னாடி உனக்கு அடி பட்டதும் நான் உன்னை ஹாஸ்பிடல் கொண்டு போனப்போ என் கையிலே காசு கிடையாது. சரியா சொல்லணும்னா.. பிச்சைகாரன்... ஆனா... இன்னைக்கு அதே அபர்ணாவுக்கு ஒரு பிரச்சனைன்னு வந்ததும் என் சொந்த கார்லே கூட்டிட்டு போற அளவுக்கு வளந்திருக்கேன்.... இன்னைக்குதான் நான் ஜெயிச்சிட்டேன்னு எனக்கு தோணுது... இது எல்லாம் உன்னாலேதான் உனக்காகதான் அபர்ணா..' அவன் குரல் நிறைய சந்தோஷம்.

இமை தட்ட மறந்து பார்த்தாள் அவனை. பிரமிப்பாகதான் இருந்தது அவளுக்கு. இமாலய வளர்ச்சி ஆயிற்றே இது!!! அவன் முன்பு ஒரு நாள் சொன்னது போல் ஜெயித்து விட்டு வந்து நிற்கிறானே என் முன்னே??? எல்லாவற்றுக்கும் காரணம் அவன் என் மீது கொண்ட காதலா? காதல் இப்படி எல்லாம் ஜெயிக்க வைக்குமா???

'என்ன அபர்ணா... அப்படி பார்க்கிறே...' அவள் முகம் பார்த்து புன்னகைத்தான் அவன்.

இன்னமும் அதே ஜீன்ஸ் டி ஷர்டிலேயே தானே இருக்கிறாள் அவள்??? ஆனால் சற்று முன் ஹோடேலில் அமர்ந்திருந்த போது இருந்த அசௌகரியத்தை அவன் அருகிலேயே அமர்ந்திருந்தும் உணரவில்லை அவள். முகத்தை மட்டுமே பார்த்து பேசும் அவனது பார்வையில் இருந்த கண்ணியத்தை நன்றாகவே உணர்ந்திருந்தது பெண் மனம்.

'இதெல்லாம் போதாது. இன்னும் நிறைய நிறைய ஜெயிக்கணும் நீங்க...' குளிர் புன்னகையுடனும் நிறைந்து போன மனதுடனும் சொல்லியே விட்டாள் அவள். .

'அப்படியா???.' அழகாய் சிரித்தபடியே அவள் முகம் பார்த்தான் அவன். ஒரு பெருமூச்சுடன் அவள் கண்களை அவன் பார்வை அவள் கண்களை துழாவ... அவன்  சொல்லாமல் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் அவளை தைக்க தவறவில்லை.

'அதெல்லாம் நீ என் அருகில் இருந்தால்தான் நடக்கும் என்கிறானோ???'

சட்டென ஒரு முக மாற்றம் அவளிடம். அருண் மீது அடி மனதில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும், பரத்தின் காதலின் ஆழம் புரிந்தே இருந்தாலும் நிச்சியமாய் இவனை ஏற்றுக்கொள்ளும் எண்ணமெல்லாம் இல்லை அவளிடம். அவளுக்கு வாழ்கை என்றால் அது அருணுடன்தான். சட்டென திரும்பிக்கொண்டாள் பெண்

அவன் பேசாமல் காரை செலுத்திக்கொண்டிருக்க... சில வினாடிகள் அப்படியே நகர... அவனை பார்த்து கேட்டாள் அவள்....

'ஏன்??? உலகத்திலே நான் மட்டும்தான் பொண்ணா??? இல்லை நான் என்ன பெரிய க்ளியோபட்ராவா??? நானெல்லாம் ரொம்ப அவரேஜ். நீங்க நினைச்சா உங்களுக்கு தேவதை மாதிரி பொண்ணுங்க கிடைப்பாங்க.. அதிலே ஒரு பொண்ணை........' அவள் முடிக்கவில்லை

'அபர்ணா ப்ளீஸ்...' கொஞ்சம் உயர்ந்தே ஒலித்தது அவன் குரல். அவன் கண்களில் தீவிரம்.

'என் தேவதை நீ தான்... புரியுதா? இனிமே இப்படி எல்லாம் பேசாதே...... எனக்கு பிடிக்காது...' என்றான் சற்றே அழுத்தமாக.

'நீங்க ஏன் மறுபடி மறுபடி.??? எனக்கு அருணைதான் பிடிச்சிருக்குன்னு நான் தெளிவா சொல்லிட்டேனே... அதுக்கு அப்புறமும் நீங்க... அருண் என் மேலே உயிரையே வெச்சிருக்கார்... எனக்கு ஒண்ணுன்னா அவர் துடிச்சு போயிடுவார் தெரியுமா???'

சற்று முன் அருணை அவனிடம் விட்டுக்கொடுத்து விட்டோமோ என்று ஒரு தவிப்பும் மேலிட..... பரத்தை எப்படியாவது தள்ளி நிறுத்தி விடவேண்டுமென்ற எண்ணத்தில் .... அவள் படபடவென பேசி முடிப்பதற்குள் ஒலித்தது அவள் கைப்பேசி.

'ருண்தான்...' என்றபடியே அழைப்பை ஏற்றாள் அவள்.

'ஹேய்... எங்கே இருக்கே நீ???'

'இல்லை... நான் கிளம்பிட்டேன் அருண். எனக்கு கொஞ்சம் அன்கம்ஃபர்டபிளா இருந்தது அங்கே. அதனாலே நான்..கிளம்பிட்டேன் ' பரத்தை ஓரக்கண்ணால் பார்த்தபடியே சொன்னாள் அவள்.

அருணுக்கு தன்மீது நிறையவே காதல் என்பதை பரத்திடம் நிரூபித்து விடும் அவசரம் அபர்ணாவுக்கு. அருணிடமிருந்து அழைப்பு வந்தவுடன் பரத்தை ஜெயித்து விட்ட பாவம் அவள் முகத்தில். ஆனால்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.