(Reading time: 17 - 34 minutes)

அமேலியா - 09 - சிவாஜிதாசன்

Ameliya

ன்றைய காலைப் பொழுது அவ்வளவு ஒன்றும் விசேஷமாக இல்லை வசந்திற்கு. எப்பொழுதும் போல அலாரத்தின் அதே எரிச்சலூட்டும் ஓசை. என்றாவது ஒரு நாள் அந்த கடிகாரம் சுவற்றில் அடிபட்டு சுக்குநூறாக உடையப்போகிறது என்று மனதில் எண்ணியபடியே படுக்கையில் இருந்து எழுந்து சோம்பலை முறித்தான் வசந்த்

அவனது கண்கள் கடிகாரத்தை நோக்கின. மணி சரியாக ஆறு என காட்டியது. தான் வேலை பார்க்கும் விளம்பரக் கம்பனியின் புது மேனேஜர் போட்டிருக்கும் மிலிட்டரி ரூல்ஸை நினைவு கூர்ந்தான். புதிதாக வருபவர் செய்யும் அதே அரைவேக்காட்டுத்தனம் தான். என்ன செய்வது என்று தன்னைத்தானே நொந்துகொண்டான்.

இன்னும் சிறிது தூங்கினால் நன்றாக இருக்குமே என்று அவன் மனம் சொன்னது. இருந்தும் வேண்டாவெறுப்போடு எழுந்து காலைக் கடன்களை முடித்தான். குளித்துவிட்டு குளிரில் நடுங்கியபடி தன் உடையைத் தேர்ந்தெடுத்து உடுத்தியபடியே தொலைக்காட்சியை ஓட விட்டான்.

ஈராக் போரில் வீர மரணம் அடைந்த போர்வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தும் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே தனது வேலைகளை ஒவ்வொன்றாக முடித்து இறுதியாக முக்கியமான கம்பெனி ஃபைலை தேடினான்.

'இந்த வீட்டுல ஒரு பொருள் வச்ச இடத்தில இருக்குதா' என்று முணுமுணுத்தபடி மாடிப்படியில் கீழிறங்கியபடியே "அக்கா! அக்கா! " என அழைத்தான்.

பூஜை அறையில் மணி ஓசை கேட்டது. அவனது குரல் அடங்கியது. பூஜையின் போது எந்த குறுக்கீடும் இருக்கக்கூடாது என்பது அவன் தந்தையின் வழக்கம்.

சமையலறையில் இருந்து அவனது அக்கா மேகலா வெளியே வந்தார். "என்னடா காலைலயே கத்திட்டு இருக்க"

"இங்க தான் சேவல் இல்லையே. அதனால காலைல சத்தமா கத்தி எல்லோரையும் எழுப்பிட்டு இருக்கேன்.  என்னுடைய மேஜைல இருந்த முக்கியமான ஃபைலை காணோம்  அது மட்டும் கிடைக்கலனா, என்னுடைய வேலை போயி உன் கூட சேர்ந்து மதிய உணவு தயாரிக்கணும்"

"இங்க எங்கயாச்சும் தான் இருக்கும். நிலா உன்னுடைய அறைல எதையோ தேடிட்டு இருந்தா.  அவ எடுத்திருக்கலாம் " 

"ஐயோ! .அதுல முக்கியமான பேப்பர்ஸ் இருக்கு.  அவ பாட்டுக்கு எதையாச்சும் பண்ணித் தொலைக்கபோறா" என்று பதறினான் வசந்த்.

அவனது அப்பா நாராயணன் பூஜை அறையில் இருந்து கற்பூர தட்டோடு வெளியே வந்தார். மேகலா பயபக்தியோடு கற்பூர தீபத்தை கும்பிட்டு விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டார்.

வசந்தும் கடமைக்கு தீபத்தை கண்களில் ஒற்றிக்கொண்டு "நிலா நிலா"  என கத்தினான்.

நாராயணன் விபூதியை எடுத்து வசந்தின் நெற்றியில் திலகமிட முற்பட்டார்.

"அப்பா! ப்ளீஸ், இது அண்ணா நகர் இல்ல, அமெரிக்கா.இதை வச்சிட்டு போனா எல்லோரும் ஒரு மாதிரி பாக்குறாங்க. ஏன் நெத்தில பெயிண்ட் பண்ணிருக்கனு கேக்குறாங்க. சங்கடமா இருக்கு"

"ஸ்வாமி பிரசாதத்தை என் பையனுக்கு கொடுக்குறது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். உனக்கு பிடிக்கலைன்னா வாசலைத் தாண்டி போகும் போது அழிச்சிடு" என்று கூறியபடி நெற்றியில் திலகமிட்டார் நாராயணன்.

"நிலா! எங்கே இருக்க நீ?" என்று வீட்டில் அங்கும் இங்கும் தேடினான் வசந்த்.

ஓர் அறையில் அமர்ந்துகொண்டு மெய்மறந்து ஓவியத்தை வரைந்துகொண்டிருந்தாள் நிலா. அங்கு வந்த வசந்த், "நிலா, என்னுடைய பைலை நீ எடுத்தியா?" என்று கேட்டான்.

ஆனால், நிலா பதிலேதும் பேசவில்லை. அவளது கவனம் முழுவதும் ஓவியத்திலேயே இருந்தது. என்னதான் அவள் வரைகிறாள் என்று வசந்தும் பார்த்துக்கொண்டிருந்தான்.

"நிலா"

"கொஞ்சம் அமைதியா இரு மாமா"

ஒருவழியாக அவள் ஓவியத்தை முடித்துவிட்டு.வெற்றிப் புன்னகையை முகத்தில் ஓடவிட்டபடி வசந்தை நோக்கினாள்

"மாமா .இது என்ன ஓவியம் சொல்லு பாப்போம்"

வசத்தால் அந்த ஓவியத்தை அடையாளம் காணமுடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

"அடையாளம் தெரியாத ஜந்து ஒன்னு எதையோ தின்னுட்டு இருக்கு. அதை விடு. என் ஃபைலை எடுத்தியா?"

"அந்த ஜந்து பேரு என்னனு சொன்னா தான் .ஃபைலை தருவேன் "

'கடவுளே! இது என்ன சோதனை!' .வசந்த் தன்னுள் இருந்த கோபத்தை அடக்கிக்கொண்டு ஓவியத்தை மீண்டும் பார்த்தான்

"ஐ திங்க், இது ஒரு பூனையோட படம்னு நினைக்குறேன்.அந்த பூனைக்கு ரொம்ப பசிக்குது போல  உருண்டையா எதோ திருடிட்டு போகுது"

"ஓ காட்!  நான் வரைஞ்ச கொரில்லா உனக்கு பூனை போலவா தெரியுது. இன்னைக்கு ஸ்கூல்ல எனக்கு பயங்கரமான திட்டு இருக்கு. உன்ன போல அவங்களும் புரியாம பார்க்க போறாங்க. எல்லாரும் சிரிக்க போறாங்க"

"நிலா, அத விடு. என் ஆபீஸ் ஃபைலை குடு"

"அது உன் கையில தானே இருக்கு மாமா"  என்றாள் குறும்புப் பார்வையுடன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.