(Reading time: 17 - 34 minutes)

க்கீம்  இரவு பகல் என பாராமல் மார்க்கட்டில் கடுமையாக வேலை செய்துகொண்டிருந்தான். என்றும் இல்லாத அளவுக்கு அன்று காய் வரத்து சற்று அதிகம் தான் என்றாலும், அவன் அவ்வளவு நேரம் வேலை செய்ததைப் பார்த்து சக தொழிலாளர்களே ஆச்சரியப்பட்டார்கள்.

"ஹக்கீம் வேலை செஞ்சது போதும். நீ ஓய்வெடுத்துக்க" என்றார் ஒரு பெரியவர் பரிதாபப்பட்டு.

"பரவால்ல தாத்தா, பஹீரா ரொம்ப நாளா உடுத்திக்க புது துணி கேட்டுட்டு இருக்கா. இன்னும் ஐம்பது மூட்டை இறக்கிட்டேனா அவளுக்கு புது துணி எடுத்திடுவேன்.

அதற்கு மேல் அந்த பெரியவரால் ஒன்றும் பேச முடியவில்லை . பஹீராவின் மீது பாசம் என்பதையும் தாண்டி தன் உயிராகவே பஹீராவை நினைக்கின்றான் என்பதைப் புரிந்துகொண்ட மற்றவர்களும் எதுவும் பேசாமல் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தினர்.

சிறிது நேரத்தில் வேலையெல்லாம் முடித்த ஹக்கீம் கூலியைப் பெற்றுக் கொண்டு தனது தங்கைக்கு துணி எடுக்க கடைவீதிக்குச் சென்றான். பல கடைகளில் ஏறி இறங்கியும் பஹீரா கேட்ட டிசைனிலும் கலரிலும் துணி இல்லை. கடைசியாக ஒரு கடையில் அவள் கேட்ட துணி கிடைத்தது. மகிழ்ச்சியோடு அதை வாங்கியவன், அவளுக்குப் பிடித்த இனிப்பு பண்டங்களையும் வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

சில நாட்களாகவே, அவன் வாங்கி வரும் இனிப்புப் பண்டங்களை பஹீரா சாப்பிட மறுத்தாள். ஏனென்று கேட்டால், தனக்கு அந்த சுவை பிடிக்கவில்லை என்று கூறினாள். ஆனால், சிறு வயதில் இருந்தே அந்த இனிப்புப் பதார்த்தங்களை விரும்பி உண்பவள் திடீரென மாறக் காரணம் என்னவென்று அவனுக்குப் புரியவில்லை.

பஹீராவின் நடவடிக்கைகள் அவனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தின. இன்று, விலை உயர்ந்த இனிப்புப் பதார்த்தத்தை வாங்கி இருக்கிறோம், நிச்சயம் அவளுக்குப் பிடிக்கும் என எண்ணியபடியே நடந்து சென்றான் ஹக்கீம்..

பஹீரா பள்ளி முடிந்து வேகமாக நடந்து வந்துகொண்டிருந்தாள் . அவளுடன் பல சிறுமிகள் நடந்து வந்தாலும், அவளது நடை ரொம்பவே வேகமாய் இருந்தது. அவளது கண்கள் அடிக்கடி பின்னால் வருபவர்களைப் பார்த்தன. படபடப்போடு காணப்பட்டாள்.

சிறிது தூரம் நடந்து வந்தவள், மாலிகாவின் வீட்டை அடைந்து உள்ளே சென்றாள். அவள் உள்ளே செல்லும் முன், வீதியின் இருபுறமும் நோட்டமிட்டபடி சென்றாள்.

மாலிகாவின் பாட்டி படுக்கையில் அமர்ந்துகொண்டு வானொலியில் செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

"பாட்டி, மாலிகா எங்கே?" என்றாள் பஹீரா.

"யாரு பஹீராவா? .எப்படி இருக்க குழந்தை?"

"நல்லா இருக்கேன் பாட்டி. மாலிகா எங்கே?"

"இங்க தான் விளையாடிட்டு இருப்பா. ஏய்! மாலிகா! மாலிகா!"

"இங்க தான் இருக்கேன் பாட்டி" என்று ஓர் அறையில் இருந்து நொண்டியபடி வந்தாள் மாலிகா.

"உன்னை தேடி பஹீரா வந்திருக்கா பாரு"

பஹீரா மாலிகாவின் அருகில் சென்று எதையோ பேசினாள்.மாலிகா, "சற்று பொறு" என்று கூறிவிட்டு உள்ளே சென்று ஒரு பொட்டலத்தை எடுத்துக்கொண்டு பஹீராவையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

வெளியே வந்த பஹீரா தன் அண்ணன் வந்து விடுவானோ என்ற பதட்டத்தில் "சீக்கிரம் சீக்கிரம்" என்று மாலிகாவை அவசரப்படுத்தினாள்.

"பொறு பொறு" என்று கூறிய மாலிகா பொட்டலத்தினுள் கையை விட்டு இனிப்புப் பதார்த்தங்களை வெளியே எடுத்தாள். அதை எடுத்து வேகமாய் சுவைக்க ஆரம்பித்தாள் பஹீரா. அவளது கண்கள் அவ்வப்போது நாலாபுறமும் சுழன்றன.

"இந்த இனிப்பு ரொம்ப அருமையா இருக்கு"

"அந்த அமெரிக்ககாரர் நேத்து தான் இந்த இனிப்பை கொடுத்தாரு. இரண்டு நாள் கழிச்சு வேற இனிப்பு தரேன்னு சொல்லிருக்காரு"

"அப்படியா?" என்று கேட்டுக்கொண்டே வேகமாய் இனிப்பை விழுங்கிக் கொண்டிருந்தாள் பஹீரா.

போன வாரம் எதேச்சையாய் மாலிகாவை வீட்டில் சந்தித்த பஹீரா, மாலிகாவின் கடும் வற்புறுத்தலால் ஜான்சன் மாலிகாவிற்கு கொடுத்த இனிப்பை சாப்பிட்டாள்..அதன் ருசி அவளுக்குப் பிடித்துவிடவே தினமும் மாலிகாவை சந்தித்து தன் அண்ணனுக்கு தெரியாமல் தின்பண்டங்களை சாப்பிட்டு வருகிறாள்.

திடீரென, அமெரிக்க ஜீப் வருவதைக் கண்ட பஹீரா ஓடிச் சென்று மாலிகாவின் வீட்டிற்குள் ஒளிந்துகொண்டாள்.ஜீப்பில் ராணுவ வீரர்களோடு இருந்த ஜான்சன் மாலிகாவைப் பார்த்து கையசைத்தான். பதிலுக்கு மாலிகாவும் கையசைத்தாள்.

இதை ஒளிந்திருந்து கண்ட பஹீரா, ராணுவ ஜீப் மறைந்த பிறகு வெளியே வந்தாள்.

"எங்க ஓடிட்ட நீ?" என்றாள் மாலிகா.

அதற்கு பதில் சொல்ல விரும்பாத பஹீரா, "நான் நாளைக்கு வரேன்" என்று கூறி விடைபெற முயற்சித்தாள்.

"ஏய்! இரு, இந்த பதார்த்தத்தை வாங்கிக்க. நல்லா இருக்கும்" என்று கூறி பஹீராவின் கைகளில் கொடுத்தாள் மாலிகா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.