(Reading time: 17 - 34 minutes)

வர்களை எங்கேயோ பார்த்திருக்கிறோமே. எங்கே ? எங்கே? என சில நொடிகள் தீவிரமாக யோசித்தாள். அவளின் நினைவுகள் வில்லியம்சின் புகைப்பட ஆல்பத்தை நோக்கி விரைந்தன. அதில் ஒரு புகைப்படத்தில் காதலர்களுக்கு பின்னால் மேகலாவும் நிலாவும் இருப்பதை கண்டிருக்கிறாள்.

ஆம்! ஆம்! அந்த புகைப்படத்தில் இருந்த பெண்ணின் ஆடை வித்தியாசமாக இருக்கிறதே என்றும் தைக்காத ஆடையை அவள் எப்படி லாவகமாக அணிந்திருக்கிறாள் என்றும் வியந்தோமே அதே பெண் தான் இவர். அப்புகைப்படத்தில் கண்களை உருட்டியவாறு ஒரு மழலைச் சிறுமியின் காதைப் பிடித்து திருகுவாரே , அந்த குட்டிப்பெண் தான் இவள்/. 

ஆஹா!  இது என்ன விந்தை! புகைப்படத்தில் தான் கண்ட பெண் இங்கே எப்படி? தான் காண்பது கனவா ? என்று மேகலாவையும் அவள் உடுத்தியிருந்த சேலையையும் நோக்கினாள். பின்னர் அருகில் நின்றுகொண்டிருந்த நிலாவையும் நோக்கினாள். நிலா புகைப்படத்தில் இருப்பதை போலவே இருந்தாலும் சிறிது வளர்ந்திருப்பதைக் கண்டாள்.

மேகலாவையும் நிலாவையும் பார்த்து புன்னகைத்த அமேலியாவை வசந்தும் நாராயணனும் ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

"இவளை உனக்கு தெரியுமா?" என்றார் நாராயணன்.

"இல்லப்பா"

அமேலியா வசந்தையும் நாராயணனையும் பார்த்தாள். அவளது புன்னகை மறைந்தது.

"அப்போ, ஏன் ஏற்கனவே பாத்து பழக்கபட்டபோல பாக்குறா"

"எனக்கு தெரியலப்பா" என்ற மேகலா அமேலியாவை பார்த்து "who are you ?" என ஆங்கிலத்தில் கேட்டாள் .அமேலியா திரு திருவென விழித்தாள்.

" உன் பேரு என்ன? எந்த ஊரு? இங்க எப்படி எங்க வீட்டுக்குள்ள வந்த? " என்று கேள்விகளை அடுக்கினாள் மேகலா. ஆனால், எதற்கும் அமேலியாவிடம் பதில் இல்லை.

"நீ பேசுறது அவளுக்கு புரியலைனு நினைக்கிறேன்" என்றான் வசந்த்.

அவர்கள் தன்னைப் பற்றி ஏதோ விசாரிக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்ட அமேலியா உருதுவில் படபடப்போடு பேசினாள். "உங்களை பார்த்தால் நல்லவர்கள் போல் தெரிகிறது. நான் எப்படியோ இந்த நாட்டிற்கு வந்துவிட்டேன். எனது நாடு ஈராக்  நான் மீண்டும் எனது நாட்டிற்கு செல்லவேண்டும்  நீங்கள் எனக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும்" என்றாள் கலங்கிய கண்களோடு.

வசந்த் திரு திருவென விழித்தான். "என்ன சொல்றான்னே புரியலையே. ஈராக் னு சொன்னது மட்டும் புரிஞ்சிது. ஒருவேளை இவ ஈராக்கை சேர்ந்தவளா இருப்பாளோ?"

தான் சொன்னது அவர்களுக்கு புரியவில்லை என்பதை உணர்ந்த அமேலியா என்ன செய்வதென்று குழம்பினாள். அவர்களையும் சுற்றியும் நோட்டமிட்டாள். அப்போது வசந்தின் மொபைலிற்கு அழைப்பு வர அதை எடுத்து பேசியவன், ஃபைலை காரின் மீது வைத்தான். ஆனால், ஃபைல் நழுவி அமேலியாவின் அருகில் கீழே விழுந்தது.

அதிலிருந்த பேப்பர்களைக் கண்ணுற்ற அமேலியாவிற்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது. எழுதவேண்டும் என்பது போல சைகை காட்டினாள். இவள் எதையோ எழுதி காட்ட நினைக்கிறா போல என்று எண்ணிய மேகலா நிலாவிடம் இருந்து பென்சிலை வாங்கி அமேலியாவிடம் கொடுத்தாள்.

தான் வந்த பாதையை விளக்க எண்ணிய அமேலியா அதை ஓவியமாக தீட்டினாள்.

'அழகான ஊர், அதில் பெற்றோருடன் வாழும் மகள், அவர்கள் வீட்டின் அருகே மசூதி, அவள் மேல் தாக்குதல், பீரங்கியினுள் மயங்கிய நிலையில் கப்பலில் அமெரிக்கா பயணம்'

குறுகிய நேரத்தில் தன் நிலையை தத்ரூபமாய் ஓவியமாக தீட்டினாள்அமேலியா. அதை மேகலாவிடம் கொடுத்தாள். மேகலாவிடம் இருந்து ஓவியத்தை வாங்கிய வசந்த், ஆரம்பத்தில் ஒன்றும் புரியாமல் குழம்பினான். ஆனால்,  இறந்துபோன ராணுவவீரர்களின் உடல்களையும் சேதமடைந்த பீரங்கிகளையும் ஏற்றும் காணொளியை செய்தியில் பார்த்தது வசந்தின் நினைவிற்கு வந்தது. உடனே, தனது லேப்டாப்பை திறந்து அமெரிக்க ராணுவக் கப்பலின் புகைப்படங்களைக் காட்டினான்.

அதைக் கண்ட அமேலியா, சைகை மொழியில், இது போன்ற கப்பலில் தான் வந்ததாய் 'ஆம்' என்பது போல தலையசைத்து வசந்திற்கு புரிய வைத்தாள். 

"அக்கா இவ ஈராக்கை சேர்ந்தவ. சட்ட விரோதமா அமெரிக்காக்குள்ள வந்திருக்கா. இவ இங்க இருந்தா நம்ம எல்லாருக்குமே பிரச்சனை"

வசந்த் கூறியவற்றைக் கேட்டு எல்லோரும் திகைத்தார்கள்.

"இவளை எப்படியாவது வெளிய அனுப்பிடுங்க. சீக்கிரம் . எனக்கு ஆபீஸ்க்கு நேரம் ஆகுது"

"மாமா நான் ஓவியம் வரைஞ்சா மட்டும் திட்டுற. இப்போ இந்த அக்கா உன் ஃபைல்ல ஓவியம் வரைஞ்சிருக்காங்க.  அவங்களை ஒண்ணுமே சொல்லல"

:அடிப்பாவி! இதை இப்போ சொல்றியே. அவ எல்லா பேப்பர்லயும்  ஓவியம் வரைஞ்ச அப்புறம் சொல்லவேண்டியது தான" என்று அமேலியாவை முறைத்தவன், "அட கடவுளே ! இன்னைக்கு ஏன் எல்லாமே ஏடாகூடமாவே நடக்குது . தயவு செய்து இவளை வெளிய அனுப்பிடுங்க" என்று கூறி காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் வசந்த்.

"டேய்! நிலாவை விட்டுட்டு போறியேடா"

"ஹையா! ஜாலி! இன்னைக்கு எனக்கு ஸ்கூல் லீவு" என நிலா சந்தோஷத்தில் குதித்தாள்.

நாராயணனும் மேகலாவும் அமேலியாவை எப்படி வெளியே அனுப்புவது என புரியாமல் நின்றுகொண்டிருந்தார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.